போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக உள்ளக நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஒரே வழி என்று இலங்கைக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. புதுடெல்லி அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ""இந்து'' நாளேடு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று புதுடில்லியில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உயர் மட்டங்களுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஜி.எல்.பீரிஸ் நடத்திய பேச்சுக்களின் போதே இந்தியாவின் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா வின் அறிக்கையில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
நாம் அவர்களுக்கு கூறியுள்ள செய்தி உள்ளக ரீதியான நடவடிக்கைகளை எடுங்கள் என்பதே. அதற்கு இந்தியா உதவும். போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில் அரசியல் நல்லிணக்கம் உள்ளிட்ட பல கவலைகள் இந்தியாவுக்கு உள்ளன.
அவர்கள் உள்ளக ரீதியாக நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் வேறு இடங்களிலிருந்து அழுத்தங்கள் வரும் என்று இந்திய அரசாங்க வட்டாரம் ஒன்று கூறியுள்ளது. அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை துரிதப்படுத்துமாறு இந்திய தலைவர்கள் இலங்கையிடம் கேட்டுள்ளனர்.
13வது திருத்தத்தின் அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஒன்றை இந்தியா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் போரின் பின்னர் காணாமல் போனவர்களின் பட்டியல் ஒன்றை தயாரிக்கும் படியும், அவர்களின் மரணத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கைக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கி, அவசரக்கால சட்டத்தையும் விலக்கிக்கொள்ளுமாறும் இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும் இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...