1 மே, 2010

வடக்கில் மீளக்குடியமர்வோருக்கு புலம்பெயர்ந்தோர் உதவ முன்வர வேண்டும் பிரதியமைச்சர் முரளிதரன்






வடக்கில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்கவும் வாழ்வாதார உதவிகள், விவசாய ஊக்குவிப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் புலம்பெயர்ந்துள்ள மக்கள் முன்வர வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

2003 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த காலகட்டத்தில் இறுதியாக பிரபாக ரனுக்குத் தெரியாமல் கிளிநொச்சியை விட்டுவந்த பின்னர் முதல் முறையாக கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி நகருக்கு பிரதியமைச்சராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) சென்றிருந்தார்.

குறிப்பாக மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக பார்வையிடுவதற் காகவே அவர் இந்த விஜயத்தை மேற் கொண்டார். மீளக்குடியமர்த்தப்பட்ட 10 குடும்பங்களுள் ஏழு குடும்பத்தில் குடும்பத்தலைவன் இல்லாத அவல நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கணவனை இழந்து பிள்ளைகளுடன் நிற்கும் இவ்வாறான குடும்பங்களுக்கு நிரந்தர வருவாயை ஈட்டித்தரும் விதத்தில் வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

விவசாயம் செய்பவர்களாயின் அதற்கான உதவிகளைப் பெற்றுக்கொடுக்கவும் பிள் ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவிகள் பெற்றுக்கொடுக் கப்படல் வேண்டும்.

முதலில் இவர்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும். இதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்வதே எனது அடுத்தகட்ட நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

கிளிநொச்சியை விட்டு தான் இறுதியாக வரும் போது கண்ட வளமுள்ள நவீன கட்டடங்கள் நிறைந்த நகராக மீண்டும் மாற்றப்பட வேண்டும். இப்போது சோபை இழந்து போன கட்டடங்களைக் காணும் போது வேதனையாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்துள்ள மக்கள் இனியாவது உண்மை நிலையை உணர்ந்து அந்த மக்களின் துயர்துடைக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்றம் செவ்வாயன்று கூடுகிறது




பாராளுமன்றம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 க்கு மீண்டும் கூடுகிறது. அரசாங்க தரப்பு பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுகிறது.

ஜனாதிபதி தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் முதலாவது அமைச்ச ரவைக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இடி, மின்னல் தாக்கம்; 12 பேர் உயிரிழப்பு முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவதான நிலையம் அறிவுறுத்தல்





இடி, மின்னல் தாக்கம் காரணமாக ஒரு மாத காலத்தில் பன்னிரெண்டு (12) பேர் உயிரிழந்திருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டிஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 14ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குட்பட்ட காலப் பகுதியில் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இம் மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நேற்று முன்தினம் நொச்சியாகமவிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

ஆகவே இடி, மின்னல் பாதிப்புக்களி லிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ் வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் மக்கள் மேம்பாடு; மீள் குடியேற்றம்; பாதுகாப்பு செயலர் நேரில் ஆராய்வு துரித செயற்பாடுகளுக்கு அறிவுறுத்தல்





யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ யாழ். குடா நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள், மக்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தார்.

29ம், 30ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அவர், யாழ். குடாநாட்டிலுள்ள பல்வேறு பிரதேசங்களுக்கும் ஆனையிறவு பகுதிக்கும் உத்தியோகபூர்வமாக விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் மதிப்பீடு செய்தார்.

பலாலி விமானத் தளத்தை வந்தடைந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக்குழுவினரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய வரவேற்றார்.

யாழ். பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்துக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளரை யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க வரவேற்றார். அதனைத் தொடர்ந்து அங்கு அவருக்கு விசேட மரியாதை

அணி வகுப்பு நடத்தப்பட்டது. யாழ். பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட பாதுகாப்புச் செயலாளர் யாழ். குடாநாட்டின் நிலைமைகள் தொடர்பாக விளக்கமாகக் கேட்டறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னெடுக் கப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள், யுத்தத்திற்கு பின்னரான நிலைமைகள், மீள் குடியேற்றம், கண்ணிவெடி அகற்றும் பணிகள், புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களின் முன்னேற்றம், இராணுவம் மற்றும் சிவில் மக்களுக்கு இடையிலான உறவு களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக் கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க பாதுகாப்புச் செயலாளருக்கு விரிவாக விளக்கமளித்தார்.

சகல விடயங்களையும் கேட்டறிந்து கொண்ட அவர், மக்கள் நலன் கருதிய பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

வட மாகாண கடற்படைத் தலைமை யகத்துக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளரை வட மாகாண கடற்படைத் தளபதிரியர் அட்மிரல் எஸ். எம். பி. வீரசேகர வரவேற்றதுடன் கடற்பரப்பில் முன்னெடுக் கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

புலிகளின் செயற்பாடுகளால் எந்தவித செயற்பாடும் இல்லாமல் இருந்த காங் கேசன்துறை துறைமுகத்தின் இறங்குதுறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்து வைத்தார்.

இந்த இறங்குதுறை மீண்டும் ஆரம்பிக் கப்பட்டதன் மூலம் இதுவரை திருகோண மலையில் செய்து வந்த கப்பல் திருத்தப் பணிகளை காங்கேசன்துறையிலேயே மேற்கொள்ள முடியும் என்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

யாழ். கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர் படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அவர்களின் சுக நலன்களையும் விசாரித்தார்.

இதே வேளை, நயினாதீவு நாகதீப விகாரைக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் மத வழிபாடுகளிலும் ஈடு பட்டார்.

வன்னி மனிதாபிமான நடவடிக் கையின் போது 2009 ஜனவரி மாதம் 10ம் திகதி ஆனையிறவு படையினரால் கைப் பற்றப்பட்டு வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான சுதந்திர நடமாட்டத்திற்கு வழிவகுத்ததை நினைவு கூரும் முகமாக ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய நினைவு தூபியை பாதுகாப்புச் செயலாளர் திறந்து வைத்தார். இலங்கையை அனைவரும் தாங்கி நிற்பது போன்றும் வட பகுதியில் மலர் மலர்ந்தது போன்றும் சித்தரிக்கும் வகையில் நினைவு தூபி அமைக் கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு ஆனையிறவு பிரதேசம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் சளைக்காது நாட்டை கட்டியெழுப்புவோம்



அரசுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு
எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் அவற்றுக்கு சளைக்காது ஈடுகொடுத்து நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லுவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

இந்த நாட்டை கட்டியெழுப்பவும், அபிவிருத்தி செய்யவுமென எதிர்க்கட்சிகள் பேதங்களை மறந்து அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் ‘வேலைத் தளத்திற்குச் சக்தி, தொழிற்சாலைக்குப் பலம், தாய் மண்ணுக்கு சமாதானம்’ என்ற தொனிப் பொருளில் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று பின்னேரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று தொழிலாளர் தினத்தை நாம் பெருமையுடனும், கெளரவமாகவும் கொண்டாடுகின்றோம். முப்பது வருட காலப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதன் பலனே இது. யுத்தம் நிலவிய காலத்தில் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இதனை நாமறிவோம்.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து இந்தப் பாரிய வெற்றியைப் பெற அடித்தளமிட்டவர்கள் தொழிலாளர்கள் தான். மனிதாபிமான இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சமயத்தில் வேலைத் தளத்தில் என்ன தான் பிரச்சினைகள் இருந்த போதிலும் அவற்றைப் பேசித் தீர்த்துக்கொள்வதற்குத் தொழிலாளர்கள் பெரிதும் ஒத்துழைப்பு நல்கினார்கள். அரசாங்கம் அவர்களுக்கு உரிய சந்தர்ப்பங்களில் சம்பள உயர்வுகளையும் வழங்கியது.

கடந்த கால ஆட்சியாளர்கள் அரசாங்க நிறுவனங்களில் தொழிலாளர்களை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு உடன்படிக்கை மூலம் இணங்கி இருந்தார்கள். அப்படி இருந்தும் நாம் பதவிக்கு வந்ததும் அதனைச் செய்யவில்லை. அரசாங்கத் துறைக்கு ஆட்சேர்ப்பு செய்து அரச துறையை வலுப்படுத்தினோம். அரச சொத்துக்கள் எதனையும் நாம் தனியார் மயப்படுத்தவில்லை.

உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் லட்சக் கணக்கானோர் தொழில்களை இழந்தனர். வங்கிகள் வீழ்ச்சி அடைந்தன. இருந்தும், எமது எந்தவொரு வங்கியும் வீழ்ச்சி அடையவோ, எவரும் தொழில் இழக்கவோ இடமளிக்கவில்லை. நிதி நெருக்கடிகளிலிருந்தும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் நிறுவனங்களையும் வங்கிகளையும் நாம் பாதுகாத்தோம். நாம் நீண்ட காலம் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்பட்டு வந்ததன் பயனாகவே இதனைச் செய்துகொள்ள முடிந்தது.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து ஐக்கியப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்தது போல் பிரிந்துள்ள உள்ளங்களை மீண்டும் ஐக்கியப்படுத்தவும் தொழிலாளர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். நாட்டைப் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அதனை நான் எதிர்பார்க்கின்றேன். பொருளாதார அபிவிருத்திப் போராட்டத்தின் வீரர்கள் தொழிலாளர்கள் தான். இதற்கு நீங்கள் முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தொழிலாளர்கள் பலம் மிக்க சக்தி கொண்டவர்கள். அவர்களால் எந்தச் சக்தியையும் இறங்கி வரச் செய்ய முடியும். அதனால் தொழிலாளர்கள் தங்கள் பலத்தை பிழையான வழியில் பயன்படுத்தி அதனை வீணடித்து விடாது பாதுகாக்க வேண்டியது தொழிற்சங்க தலைவர்களின் பொறுப்பாகும்.

நாம் ஒரே நேரத்தில் ஐந்து துறைமுகங்களை அபிவிருத்தி செய்கின்றோம். இதேபோல், உட்கட்டமைப்பு துறைகளையும் மேம்படுத்தி வருகின்றோம். இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பின்புலத்தை ஏற்படுத்த நாம் ஒருபோதும் பின்நிற்க மாட்டோம். இந்நாட்டில் அச்சம், பீதியின்றி வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவது எமது பொறுப்பு. அமைச்சர்கள் தம்மை விடவும் நாட்டையும், நாட்டு மக்களையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை எதிரணியினருக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன். நாட்டைக் கேலி செய்யாதீர்கள் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்ளுகின்றேன். இந்நாட்டின் அபிவிருத்திக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தாதீர்கள் என்றும் அவர்களுக்குக் கூறுகிறேன். நாட்டு மக்கள் எமக்கு தெளிவான ஆணையை வழங்கியுள்ளார்கள். இதனை எதிரணியினர் புரிந்துகொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும்.

இம்மேதினக் கூட்டத்தில் ஐந்து யோசனைகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பிரதமர் டி. எம். ஜயரட்ன, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேம ஜயந்த, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரன் தாயார் -நீதிமன்றத் தீர்ப்பு






விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் இந்தியா வந்து சிகிச்சை பெற விரும்புவதாகத் தெரிவித்தால், அது குறித்து மத்திய அரசு முடிவு தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பிரபாகரனின் தாயாரின் கடிதம் பெறப்பட்டு இரு வாரங்களுக்குள் மத்திய அரசுக்கு அக்கோரிக்கையை அனுப்பிவைக்கவேண்டும், மத்திய அரசு அதன் பின் 4 வாரங்களுக்குள் அதன் மீதான முடிவினை தெரிவித்துவிடவேண்டும் என வெள்ளிக் கிழமை நீதிமன்றம் உத்திரவிட்டது.

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இரவு மலேசியாவிலிருந்து, உரிய விசா பெற்று சென்னை வந்த பார்வதி அம்மாள் குடியேற்றத்துறை அதிகாரிகளால் மீண்டும் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று தமிழ்நாட்டின் முதல்வர் மு கருணாநிதி கூறியிருந்தார்.

தமக்கு முன்பு தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஜெ ஜெயலலிதா, பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று 2003 ஆம் ஆண்டில் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தில் இருந்த நடுவணரசு அதிகாரிகள் பார்வதியம்மாளை திருப்பியனுப்பியதாக தமக்கு தெரிய வந்திருப்பதாகவும் கருணாநிதி கூறியிருந்தார்.

பார்வதியம்மாள் சென்னையில் சிகிச்சை பெற விரும்பினால், அவர் இந்தியா வர அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் தாம் கோரத்தயார் என்றும் கருணாநிதி சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்த பின்னணியில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கருப்பன் பார்வதி அம்மாளை சிறப்பு விமானத்தில் தமிழகம் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரி பொது நலவழக்கொன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

2003 ஆம் ஆண்டு தமிழக அரசு விடுத்த வேண்டுகோள்படியே பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவித்த மத்திய அரசு, மாநில அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டால், சிகிச்சைக்காக பார்வதி அம்மாளை அனுமதிக்கத் தயார் என்று கூறியது.

இன்று அவ்வழக்கு நீதிபதிகள் இலிபி தர்மாராவ் மற்றும் கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கறிஞர் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற விளக்கத்தினை படித்துக்காட்டினார்.

மத்திய அரசு வழக்கறிஞரும் மாறியிருக்கும் சூழலில், மீண்டும் கோரிக்கை வந்தால் பார்வதியம்மாள் சிகிச்சை பெற இந்தியா வர அனுமதிக்கத் தயார் என்று தெரிவித்தார். அதன்பேரில் சிகிச்சை பெறுவதற்காக பார்வதிஅம்மாள் மீண்டும் விண்ணப்பித்தால் மத்திய மாநில அரசுகள் விரைந்து அதன் மீது நடவடிக்கை எடுக்க்வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஆனால் இது இடைக்கால உத்தரவுதான். வழக்கறிஞர் கருப்பன் பார்வதி அம்மாள் அரசு செலவில் இங்கே அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்வும் கோரியிருந்தார். அக்கோரிக்கைகள் கோடைவிடுமுறைக்குப் பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரன் தாயார் கருணாநிதிக்கு கடிதம்: முசிறியில் தங்கி சிகிச்சை பெற கோரிக்கை






விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சை பெறுவதற்காக சமீபத்தில் சென்னை வந்தபோது அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

ஈவு, இரக்கமற்ற சிங்கள ராணுவம் கூட அவர் சிகிச்சை பெறட்டும் என்று இலங்கையில் இருந்து வெளிநாடு செல்ல அனுமதித்த நிலையில், தமிழ்நாட்டில், பார்வதியம்மாள் சிகிச்சை பெற அனுமதிக்காதது உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது.

பார்வதி அம்மாளை மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியது பற்றி சட்ட சபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய முதல்- அமைச்சர் கருணாநிதி, பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற விரும்பினால் கடிதம் எழுதலாம். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து பார்வதி அம்மாள் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள டமாய் மருத்துவமனையில் இருந்து அவர் கைரேகை பதித்து அந்த கடிதத்தை எழுதி உள்ளார்.

சென்னையில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றுக்கு இந்த கடிதம் வந்துள்ளது.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் நீண்ட காலமாக பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வலது காலும், கையும் செயலற்ற நிலையில் உள்ளது. முன்பு நான் தமிழ்நாட்டில் தங்கி இருந்தபோது முசிறி டாக்டர் ராஜேந்திரனிடம் சிகிச்சை பெற்றேன்.

2003-ல் இலங்கை சென்றதால் அந்த சிகிச்சையை தொடர முடியவில்லை. தற்போது எனது உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நான் முசிறி டாக்டர் ராஜேந்திரனிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

தயவு செய்து நான் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வர உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் விசா தர உதவவும் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உதவியை என்றும் மறக்கமாட்டேன். நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

நன்றியுடன் தங்கள் உடன் பிறப்பு- பார்வதி.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் எழுதி உள்ளார்.

மனிதம் அறக்கட்டளை அக்னி சுப்பிரமணியனுக்கு இந்த கடிதம் வந்துள்ளது. அவர் அந்த கடிதத்தை நேற்று முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு வக்கீலும், மத்திய அரசு வக்கீலும் ஒரு வழக்கில் ஆஜராகி கூறுகையில், பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க தயார் என்று கூறினார்கள். முதல்- அமைச்சர் கருணாநிதியும் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க முறைப்படி உதவிகள் செய்யப்படும் என்று சட்டசபையில் உறுதி அளித்துள்ளார்.

எனவே பார்வதி அம்மாளை தமிழகம் அழைத்து வர முதல்வர் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி நிர்வாகிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க யோசனை






அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யுஎன்பி), தனது கட்சிக்கான நிர்வாகிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க உள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் விக்கிரமசிங்க உள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் நிலை அமைப்புக்கான நிர்வாகிகள் அக் கட்சியின் ஊழியர்களில் இருந்து நியமிக்கப்படுகின்றனர். இந்த முறையை மாற்றி, தேர்தல் மூலம் கட்சி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரமசிங்கவை கட்சியின் மூத்த உறுப்பினரும், மறைந்த இலங்கை அதிபர் பிரேமதாசவின் மகனுமான சாஜித் பிரேமதாச சந்தித்து இந்த யோசûûயைத் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்கான சில யோசனைத் திட்டங்களை விக்கிரமசிங்கவிடம் விளக்கிக் கூறியதாக சாஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கட்சி நிர்வாகிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது, மக்களின் தேவைகள், குறைகளைக் களையும் விதத்தில் கட்சியின் கொள்கைகளில் திருத்தம் செய்வது உள்ளிட்ட யோசனைகளும் இதில் அடங்கும் என்றார் சாஜித் பிரேமதாச.

பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் கட்சியில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

இதனிடையில், நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்ததற்கு கட்சியில் நிலவும் ஒற்றுமையின்மைதான் காரணம் என்று அந்தக் கட்சியின் வேறு சில தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சீர்திருத்தங்கள் கொண்டு வருகிறோம் என்கிற பெயரில், கட்சியில் மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்திவிடக் கூடாது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் கூட்டணி 144 இடங்களைக் கைப்பற்றியது. இத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 60 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இக் கட்சி 82 இடங்களைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்.பருத்தித்துறை கொழும்புக்கிடையிலான பஸ் சேவை ஆரம்பம்


யாழ். பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ முகாமையாளர் மு. குலவால் செல்வம் தெரிவித்தார்.

பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்குமான பஸ் சேவை இன்று முதல் தினமும் காலை 7 மணிக்கு இடம்பெறும் இதற்கென இரண்டு புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அம்பாறைக்கும் தம்புள்ளைக்கு இடையிலான புதிய பஸ் சேவை ஒன்றை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இந்த புதிய பஸ் சேவையும் இன்று முதல் அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தம்புள்ளை டிப்போ முகாமையாளர் நு.மு.சரத் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த பஸ் அம்பாறையில் இருந்து 2.30 அளவில் மீண்டும் தம்புள்ளை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தஞ்சம் கோரி மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்


அரசியல் தஞ்சம் கோரிய 75 இலங்கையர்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் பொருட்டு அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மலேசியாவுக்கான பிரதி இலங்கை உயர்ஸ்தானிகர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குப் படகில் சென்று கொண்டிருந்த போது மலேசியப் பொலிஸாரால் இவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு, முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காகப் மலேசியாவுக்கான பிரதி இலங்கை உயர்ஸ்தானிகர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 6 பெண்களும் 8 சிறுவர்களும் உள்ளனர்.

இவர்கள் சில தினங்களுக்கு முன்னர் மலேசியக் கடற்பகுதியில் சேதமடைந்த படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த போது அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரி பயணித்ததாக மலேசிய பொலிஸாரிடம் அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ் கடத்தல் சம்பவகள் எம் மீது சேறு பூசும் நடவடிக்கைகள்:டக்லஸ்




யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வரும் கடத்தல் நடவடிக்கைகள் அனைத்தும் எங்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைள் என பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஒரு சில கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுகின்றது எனினும் இச்சம்பவங்கள் எம்மீது சேறு பூசும் நடவடிகைகளாக சிலர் திட்டமிட்டு மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு படையினர் பலரும் யாழ் நகரில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சில தமிழ் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ் நகரில் அதிகரித்து வரும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே டக்லஸ் தேவானந்தா இதனை எமது எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

சகல சவால்களையும் வெல்ல உழைக்கும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்-ஜனாதிபதி



பயங்கரவாதத்தினால் தடைப்பட்டிருந்த சகல அபிவிருத்தி மார்க்கங்களும் இன்று எமது நாட்டு மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. இலங்கையின் உழைக்கும் மக்கள் இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினத்தை நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான சூழ்நிலை குறித்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

சர்வதேச தொழிலாளர் தினமான இன்று உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களோடு பெருமையோடு இணைந்து கொள்ளும் எமது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு நான் இவ்வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது நாட்டுக்கும் அதன் உழைக்கும் மக்களுக்கும் மிகப்பெரும் சவாலாக இருந்து வந்த பயங்கரவாதத்தை நாம் தற்போது வெற்றி கொண்டுள்ளோம். இச்சவாலை வெற்றி கொள்வதில் எமது நாட்டின் உழைக்கும் மக்கள் பாரியதொரு பக்கபலமாக இருந்தார்கள் என்பதை பெருமையோடு குறிப்பிட வேண்டும்.

பயங்கரவாதத்தினால் தடை செய்யப்பட்டிருந்த சகல அபிவிருத்தி மார்க்கங்களும் இன்று எமது நாட்டு மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. இலங்கையின் உழைக்கும் மக்கள் இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினத்தை நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான சூழ்நிலை குறித்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.

உழைக்கும் மக்களின் தாராளமான உதவியோடு தலைமைத்துவத்தை அடைந்து கொண்டு ஒரு தலைவர் என்ற வகையில் உழைக்கும் மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாப்பதற்கு முடிந்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. அதேபோன்று உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக எப்போதும் அவர்களோடு மிக நெருக்கமாக இருந்து, அவர்களது கஷ்ட நஷ்டங்களை அறிந்து கொள்ள முடிந்தமை எமது வெற்றியின் இரகசியம் என நான் கருதுகின்றேன். நாட்டின் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்காக இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை எம்மை மென்மேலும் பலப்படுத்தியுள்ளது.

அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தியில் உழைக்கும் மக்களின் பங்குபற்றுதலை உறுதி செய்யும் வகையில் எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு மென்மேலும் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. எமது முன்னேற்றப் பாதையிலே தடையாகவிருக்கும் எல்லாச் சவால்களையும் வெற்றி கொள்வதற்கு உழைக்கும் மக்களின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

உழைக்கும் மக்களின் பங்குபற்றுதலுடன் அடையப் பெறும் தேசிய அபிவிருத்தியின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றியமைக்க முடியும் என இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் உறுதி கொள்கின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

அவசரகாலச் சட்டம், பொன்சேகா விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை



இலங்கையில் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ காவலில் வைத்துள்ளமை ஆகியன குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது. ஆனாலும், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது ஒன்றியத்தின் நோக்கமல்ல என்று ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுத் தலைவர் பேர்னாட் செவேஜ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது இலங்கையை பொறுத்தவிடயம்.

ஆனால், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்திவிடுவதென ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. மனித உரிமைகள், தொழில் உரிமைகள், ஊடக சுதந்திரம் ஆகியவற்றைப் பொறுத்த மட்டில் இலங்கை ஒழுங்காக நடந்து கொள்ளுமானால் அதன் பின்னர் ஒன்றியம் அதன் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யக்கூடும் அதன் மூலம் இலங்கை அந்த சலுகையை மீண்டும் பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் போன்ற இலங்கை தொடர்பக்ஷிக எதிர்மறையான போக்கினை கடைப்பிடிப்பதாக கூறப்படுவது குறித்து செவேஜ்ஜிடம் கேட்டபோது , அது ஒரு வியாபார ரீதியான உறவுமுறையாகும். பொது அபிப்பிராயம் குறித்து தம்மால் கருத்து தெரிவிக்க முடியாது என்று அவர் பதிலளித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

எவ்வாறாயினும், இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்கு சுயாதீனமானது. ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான உயர் பிரதிநிதி அஷ்ரன் ஏப்ரல் மாத பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிருவாகம் பற்றிய அபிப்பிராயத்தை தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அஷ்ரன் தனது அறிக்கையில் , தேர்தல் வெற்றி குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவை பாராட்டியதுடன் புதிய அரசாங்கத்துடன் ஜனாதிபதி ஒத்துழைப்பதோடு நல்லிணக்கம் உட்பட இலங்கையின் நீண்டகால தேவையான அரசியல் தீர்வையும் கவனத்தில் எடுப்பாரென நம்பிக்கை தெவித்தார். அரசியலமைப்பை மீறாமலும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியதாகவும் இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வருவதில் பிரச்சினை எதுவும் கிடையாது என்று கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்.பொதுமக்களின் காணிகளிலிருந்து படையினர் விரைவில் வெளியேறுவர்-பாதுகாப்பு செயலாளர்



யாழ்.குடாநாட்டில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் கட்டிடங்க ளில் தங்கியிருக்கும் இராணுவத்தினர் அவற்றிலிருந்து வெகு விரைவில் வெளியே றுவதுடன் அவற்றை உரிமையாளர்களிடம் உடன் கையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு தரப்பு உயரதிகாரிகளுடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறினார்.

முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் சகிதம் நேற்று முன்தினம் யாழ் குடாநாட்டுக்கு விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையில் ஆணையிறவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள படையினரின் நினைவுத்தூபியைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைவர் மத்தியிலும் உரையாடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயம்

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியும் விமானப் படைத் தளபதியுமான எயார் ஷீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு உயரதிகாரிகள் சகிதம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குடாநாட்டின் கள நிலைவரம் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.

நேற்று முன்தினம் காலை பலாலி சென்றடைந்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை யாழ். படைகளின் தளபதி மேஜர்.ஜெனரல் மகிந்த ஹத்துரு சிங்க வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பலாலி தலைமையகத்தில் நடைபெற்ற மாநாட்டில், குடாநாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தளபதியினால் பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அதன் பின்னர் காங்கேசன்துறைக் கடற்படை முகாமுக்குச் சென்ற அவர், வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எம்.பீ.வீரசேகரவினால் வரவேற்கப்பட்டதுடன் அவருடன் கலந்துரையாடி நிலைமைகளைக் கேட்டறிந்தார். அத்துடன் காங்கேசன்துறை கடற்படைத் துறைமுகத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள கடற்படையினரின் கப்பல்கலைத் திருத்தும் பிரிவினையும் திறந்துவைத்தார்.

பின்னர் யாழ். நகருக்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ். நாக விகாரை ஆகியவற்றுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் யாழ். கோட்டை மற்றும் நகரப் பகுதி ஆகிய இடங்களுக்கும் சென்று நிலைமைகளை அவதானித்தார். அத்துடன் யாழ். நகர சிவில் அலுவலகத்தில் படை அதிகாரிகள் மற்றும் படையினருடன் கலந்துரையாடி அவர்களின் சேம நலன்களைக் கேட்டறிந்தார். மேலும் யுத்தத்தின் பின்னரான நிலைமை, மீள் குடியேற்றம், இராணுவம் மற்றும் பொதுமக்களுக்கிடையிலான உறவு குறித்தும் அவர் கேட்டறிந்தார். இதேவேளை நேற்று முன்தினம் மாலை நயினாதீவு விகாரைக்குச் சென்ற கோத்தபாய அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இந்நிலையிலேயே ஆனையிறவு முகாமில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் நினைவுத் தூபி நேற்றுக் காலை பாதுகாப்பு செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது அங்கு உரையாடிய அவர் யாழில் பொதுமக்களின் காணிகளில் தங்கியுள்ள படையினர் விரைவில் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...