இந்த நாட்டில் 1988ம், 1989ம் ஆண்டுகளில் நிலவிய இருண்ட யுகத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கு சில அரசியல் கட்சிகள் முயற்சி செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அம்பாந்தோட்டையில் தெரிவித்தார்.
அப்பாவி பாடசாலை மாணவ, மாணவியரை ஏமாற்றி அவர்களைத் தவறான வழியில் இட்டுச் செல்லுவதற்கு இந்த அரசியல் கட்சிகள் சூட்சுமமான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், குறிப்பிட்டார்.
“தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் குறித்து ஒவ்வொரு பெற்றோரும் மிகுந்த அவதானத்துடன் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அவ்வாறான அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளில் சிக்கி உங்களது குழந்தைகள் தவறான வழியில் சென்று விடாது அவர்களைப் பாது காத்துக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
உள்ளூராட்சித் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அங்குணுகொல பெலஸ்ஸ பிரதேச சபைக்கான பிரதிநிதிகள் மாநாட்டை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் அவரது அங்குணுகொல பெலஸ்ஸ வளாகத்தில் நேற்று மாலை நடாத்தியது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சில அரசியல் கட்சிகள் சூட்சுமமான முறையில் ஆசிரியர்களைச் சேர்த்துக்கொண்டு அப்பாவி மாணவ, மாணவியரை ஏமாற்றி தவறான வழியில் இட்டுச் செல்ல முயற்சியில் ஈடுபடுவதாகத் தெரிகின்றது. இச்சூழ்ச்சி குறித்த பொலிஸ் அறிக்கைகளும் எமக்குக் கிடைத்துள்ளன. இந்த முயற்சி எந்தெந்த பிரதேசப் பாடசாலைகளில் இடம்பெறுகின்றன. அவற்றுக்குப் பயன்படுத்தும் மாணவ, மாணவிகள் யார் போன்ற விபரங்களும் அந்த அறிக்கையில் உள்ளன.
இக்கட்சியினர் பதினான்கு, பதினைந்து வயது மாணவ, மாணவியருக்கு பிரத்தியேக வகுப்பு, கருத்தரங்குகளை நடத்துவதாகக் கூறி இச்சூழ்ச்சியை ஆசிரியர்களை கொண்டு முன்னெடுக்கின்றனர். இவர்கள் அரசியல் கோஷங்களை கரும்பலகைகளில் எழுதவும், துண்டுப் பிரசுரங்களை ஒட்டவும் இவ் வகுப்புகளில் சொல்லிக்கொடுக்கின்றனர்.
பெற்றோர்களே! உங்களது அப்பாவிக் குழந்தைகளை அரசியல் கோஷங்களை கரும்பலகைகளில் எழுதிப் பழகவும், துண்டு பிரசுரங்களை ஒட்டும் முறைகளையும் அறிந்துகொள்ளவா பாடசாலைக்கும், தனியார் வகுப்புக்களுக்கும் அனுப்புகின்ஹர்கள் அதனால் உங்களது குழந்தைகளின் நடவடிக்கை, செயற்பாடுகள் குறித்து சிறுபராயத்தில் கவனம் செலுத்தியது போல் இப்போதும் அவர்கள் மீது கவனம் செலுத்துங்கள்.
இவர்கள் உங்களது குழந்தைகளைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லும் வகையிலான கருத்துக்களை அவர்களது பிஞ்சு உள்ளங்களில் விதைக்கின்றார்கள். இதனூடாக பெற்றோர் மீதும் ஆசிரியர்கள் மீதும், சமூகத்தின் மீதும் பகைமைகொள்ளும் மனப்பான்மை இவர்களில் வளர்க்கப்படு கின்றது. இவ்வாறான நடவடிக்கையின் ஊடாகவே 1988ம், 1989ம் ஆண்டில் இந்த நாட்டில் இருண்ட யுகம் உருவாக்கப்பட்டது. அந்த இருண்ட யுகத்தின் போது எமது இளம் பராயத்தினர் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள். முடக்கப்பட்டார்கள் என்பதை நாம் இன்னுமே மறந்துவிட வில்லை.
இவர்களது சூழ்ச்சியில் அன்று சிக்கிய மாணவர்கள் எத்தனையோ பேர் நிர்க்கதியான நிலையில் கண்ணீர் சிந்தியதை நாமறிவோம்.
அப்படியான இருண்ட யுகத்தை ஏற்படுத்தவே இக்கட்சிகள் முயற்சி செய்கின்றன. இவர்களின் ஆசை வார்த்தைகளையும் ஏமாற்று வித்தைகளையும் நம்புவதற்கு எமது இளைஞர்கள் தயாரில்லை. அதனால் தான் பதினான்கு, பதினைந்து வயது அப்பாவி மாணவ/மாணவியரை வளைத்து விட முயலுகின்றனர்.
அரசியல் செய்வதென்றால் திறந்த மனதோடு அரசியல் செய்யுங்கள். இதை விடுத்து யாதுமறியாத அப்பாவி குழந்தைகளை அரசியலுக்குள் இழுத்து அவர்களது எதிர்காலத்தை சீரழிக்காதீர்கள். இலவசக் கல்வி சீரழிவதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம்.
கடந்த காலங்களில் நகரங்கள் தான் அபிவிருத்தி செய்யப்பட்டன. இதனால் கிராம மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து வந்தனர்.
இதற்கான பிரதான காரணம் கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் வீதிகள் பாடசாலை, ஆஸ்பத்திரி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்ட மையாகும்.
ஆனால் நாம் பதவிக்கு வந்த பின்னர் நகரங்களின் அபிவிருத்தியைக் கிராமங்களுக்கும் கொண்டுசென்றுள்ளோம். இதன் விளைவாக நகரங்களுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை பெரிதும் குறைவடைந்துவிட்டது.
இப்போது கொழும்பு மக்கள் கூட கிராமங்களுக்குச் சென்று குடியேறும் நிலமை ஏற்பட்டிருக்கின்றது. நகரத்தில் கிடைக்கும் வசதிகள் கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டிருப்பதன் வெளிப்பாடுதான் இது. நாம் முழு நாட்டையும் அபிவிருத்தி செய்து வருகின்றோம்.
ஆகவே இந்த உள்ளூராட்சித் தேர்தலில் எமது ஐ.ம.சு. முன்னணி அமோக வெற்றி பெறும் அந்த வெற்றியில் நீங்களும் பங்காளர்களாகுங்கள் என்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான அருந்திக பெர்னாண்டோ, திலும் அமுனுகம, ஜே. ஆர். பி. சூரியபெரும உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...