14 ஜூலை, 2010

அமிர்தலிங்கம் நினைவு வழிபாடும் புத்தக வெளியீடும்


நேற்றையதினம் கனடாவில் அமரர் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் நினைவாக ஆத்மசாந்தி பூஜையுடன் கூடிய நினைவுதின கூட்டமும் புத்தக வெளியீடும் இடம்பெற்றது. கூட்டணியின் கனடா கிளை முக்கியஸ்தர் கதிர்காமநாதன் என்பவரது தலைமையில் கடந்த 20 ஆண்டுகளிற்கு மேலாக பல்வேறு இடைஞ்சல்களிற்கு மத்தியிலும் நடைபெற்று வருகின்றது.

அமரர் அமிர்தலிங்கம் நினைவாக இடம்பெற்ற மேற்படி நினைவுதின வழிபாட்டில் அமரர் அமிர்தலிங்கத்தின் சகோதரர் மைத்துணர் உறவினர்கள் என குடும்பமாக பங்கு கொண்டு சிறப்பித்தனர். இவ் நினைவுதின வழிபாட்டில் தமிழரசு கட்சி த.வி.கூ ஆரம்பகால உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் புளொட் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சட்டத்தரணி கனக மனோகரன் தலைமையில் இடம்பெற்ற நினைவஞ்சலி கூட்டத்திலும் “சத்தியங்களின் சாட்சியம்” எனும் நூல் வெளியீட்டிலுமாக கலந்து கொண்டு உரையாற்றிய மலையகத்தை சேர்ந்த சந்திரசேகரன் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி பழைய மாணவர் அழகராஜா உட்பட பேசிய பலரும் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பண்பாட்டினையும் ஒழுக்க வழக்கங்களையும் தமிழ்மக்களின் உரிமைக்காக ஆற்றிய பங்கினையும் மக்களின் உரிமை பிரச்சினை குறித்து அவர் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்திய முறைமைகளையும் இந்திரா காந்தி அம்மையார் அவர்களுடன் இருந்த உறவினையும் அதன் மூலம் சர்வதேச ஆதரவை திரட்டிய திறனையும் சுட்டிக்காட்டி பேசினர்.

கதிர் பாலசுந்தரம்பிள்ளை அவர்களினால் எழுதி நேற்றையதினம் வெளியிடப்பட்ட சத்தியங்களின் சாட்சியங்கள் எனும் நூலின் முதல் பிரதியை சட்டத்தரணி கனக மனோகரன் வெளியிட்டு வைக்க அமிர்தலிங்கம் அவர்களின் சகோதரர் திகம்பரலிங்கம் பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை புளொட் அமைப்பின் சார்பாக கண்ணன் பவன் ஆகியோர் பெற்றுக்கொள்ள மூன்றாவது பிரதியை ஈ.பி.டி.பி சார்பாக மகேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இவ் புத்தகம் குறித்த கருத்துரையை மலையகத்தை சேர்ந்த ஆசிரியர் சந்திரசேகரன் அவர்கள் சிறப்பாக வழங்கினார். றிச்மன்ட் ஹில் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற நினைவுதின வழிபாட்டு பூஜை நினைவுதின கூட்டம்இ புத்தக வெளியீடு என்று இனிதே நிறைவுபெற்றது.

-சுப்பிரமணியம்
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி மீள்குடியேற்ற மக்கள் - ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது கிளிநொச்சி விஜயத்தின் போது மீள்குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக சற்று முன்னர் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் குழுவினர் இணைந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

கிளிநொச்சி நகரத்தில் இதுவரை ஒரு லட்சம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

நாவலப்பிட்டியில் இன்று திடீர் வீதி சோதனை!

கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி நகரூடாகச்சென்ற சகல போக்குவரத்து வாகனங்களிலும் பயணிக்கும் மக்களை இன்று முற்பகல் முதல் பாதுகாப்புப் பிரிவினர் சோதனைக்குட்படுத்தி வருகின்றனர்.

ஹட்டன் மற்றும் கொழும்பிலிருந்து கினிகத்தேனை நகரூடாக நாவலப்பிட்டி நோக்கி வந்த சகல பயணிகள் போக்குவரத்துப் பஸ்களும் ரம்புக்பிட்டிய பஸ்பாகே கோரளை பிரதேச சபை பணிமனைக்கு அருகில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிக சோதனை சாவடிக்கு அருகில் நிறுத்தப்பட்டன.

வாகனங்களில் பயணித்த அனைவரும் இறக்கப்பட்டு, அவர்களின் தேசிய அடையாள அட்டைகளை இராணுவத்தினர் பரிசோதனைக்குட்படுத்தினர். அதே போன்று பத்தனை, திஸ்பனை, மாவெலிகம பகுதிகளிலிருந்து வந்த பயணிகள் போக்குவரத்துப் பஸ்களில் வருகின்றவர்கள் இம்புல்பிட்டிய பாலத்துக்கு அருகிலும்-

கண்டி மற்றும் ஹப்புகஸ்தலாவ வழியாக நாவலப்பிட்டி நோக்கி வருகின்றவர்கள் நாவலப்பிட்டி நகர நுழைவாயிலுக்கு அருகிலும் பாதுப்புப்பிரிவின் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

சாரதிகளிடம் லஞ்சம் பெறும் மன்னார் போக்குவரத்து பொலிஸார்

மன்னாரில் வீதி போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸார் தேவையற்ற காரணங்களை கூறி தம்மிடம் லஞ்சம் அறவிடும் செயற்பாடுகள் தற்போது அதிகரித்து வருவதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் தற்போது வீதிப் போக்குவரத்து பிரிவு பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் வாகனங்களில் வருபவர்களை இடைமறித்து அவர்களின் ஆவணங்களைப் பரிசோதனை செய்கின்றனர்.

சில நேரங்களில் அவர்களது வாகனங்களில் உள்ள ஒரு சில குறைபாடுகளைக் காட்டி 500 ரூபா முதல் 1500 ரூபா வரை லஞ்சமாக பணமாக பெற்றுக் கொள்ளுகின்றனர்.

பணம் பெற்றுக் கொண்டதும் அதற்கான பற்றுச் சீட்டு எதுவும் வழங்குவதில்லை. ஒருசில அதிகாரிகள் செய்யும் தவறு அனைவருக்கும் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடும்.

இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கவனம் செலுத்துமாறு வாகன உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

நடிகர்,நடிகைகள் இலங்கை செல்வது குறித்து ஆலோசனை : சரத்குமார்



தென்னிந்திய நடிகர், நடிகைகள் இலங்கை செல்வது பற்றி செயற்குழுவில் ஆலோசிப்போம் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளளார்.

இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்த போது நடிகர் சங்கம் கண்டித்தது. அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டியும் அனுப்பி வைத்தது. இலங்கை அரசைக் கண்டித்து படப்பிடிப்புக்காக, அந்நாட்டுக்கு செல்லக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.

தற்போது அங்கு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமது உடைமைகளை இழந்து முகாம்களுக்குள்ளே முடங்கியுள்ளனர். போரில் பெற்றோரை இழந்த தமிழ்க் குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் 'ரெடி' படப்பிடிப்புக்குச் சென்ற அசின் இரு தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை நேரில் சந்தித்தார்.

இலங்கை சென்ற அசின் மீது, நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்,

"நடிகர், நடிகைகள் அனைவரும் இலங்கை செல்வது பற்றி நடிகர் சங்க செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஈழத் தமிழர்களுக்கு நேரில் வந்து உதவிகள் செய்யும் படி எனக்கு நிறைய கடிதங்கள் வந்துள்ளன. அவற்றை நடிகர் சங்க செயற்குழுவில் சமர்ப்பிப்பேன்.

தமிழ் நடிகர், நடிகைகளுக்கு உலகளாவிய அளவில் அங்கீகாரம் உள்ளது. இலங்கையில் நடந்த சர்வதேச படவிழாவுக்கு செல்லக்கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டது.

அசின் தொழில் ரீதியாகத்தான் இலங்கை போயிருக்கிறார். எனவே நடவடிக்கை எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம் "என்று கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் எரிபொருள் விலை குறைப்பு:அமைச்சரவை தீர்மானம்

யாழ். மாவட்டத்தில் பெற்றோல்,டீசல் மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலைகள் லீற்றர் ஒன்றுக்கு 3 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்க





மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த வைகோ,நெடுமாறன் கைது




சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூடக்கோரி, இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

"பல லட்சம் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். ஐ.நா. விசாரித்தால் உண்மைகள் வெளியாகி சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட நேரும் என்ற அச்சத்தில் இலங்கை அரசாங்கம் எல்லைமீறி செயல்படுகிறது. மேலும், தமிழக மீனவர்கள்இலங்கைக் கடற்படையினால் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள்" போன்றவற்றை முன் வைத்தே தூதரகத்தை மூடுமாறு இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசுக்கு தமிழக மக்களின் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.

அதன்படி ஆர்ப்பாட்டம் மயிலை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாக நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், பெரியார் திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் சிலர் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவி உருவ பொம்மையை எரித்தனர்.

பின்னர் அனைவரும் இலங்கைத் தூதரகத்தை மூடுவதற்காக செல்ல முயன்றனர். பொலிசார் தடுத்தும் எவரும் நிற்கவில்லை.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, பழ.நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

காங். சிமெந்து ஆலை எவருக்கும் வழங்கப்பட மாட்டாது : அமைச்சர்



காங்கேசன் சிமெந்து தொழிற்சாலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டுக்கோ அன்றி தனியார் எவருக்குமோ வழங்கப்பட மாட்டாது. வெகு விரைவில் சிமெந்து தொழிற்சாலையை இயக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.

இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அரச சொத்துடைமைகள் மற்றும் கைத்தொழில் அமைச்சர் பி.தயாரட்ன தெரிவித்தார்.

அமைச்சர் பி.தயாரட்ன, பிரதி அமைச்சர் சரத் குணரட்ன மற்றும் அமைச்சின் செயலாளர் வினிகமகே, இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா சிமெந்து லிமிட்டெட் தலைவர் சிசில பரணகம ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வீட்டில் ஊடகவியலாளர் மாநாடொன்றை பிற்பகல் 2.15 மணியளவில் இவர்கள் நடத்தினர்.

ஊடகவியலாளர்கள் தற்போதைய சிமெந்து தொழிற்சாலையின் நிலைமை பற்றி கேட்ட போதே அமைச்சர் தயாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வெகு விரைவில் சிமெந்து தொழிற்சாலையைக் கட்டம் கட்டமாக இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கடந்த பல வருடங்களாக இந்த தொழிற்சாலை படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றது.

இந்நிலையில் உடனடியாக இதனை இயங்க வைக்க முடியாது" என்றார்.

கடந்த காலங்களில் இந்தத் தொழிற்சாலை இந்தியாவுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்பட்டதே எனக் கேட்ட போது,

"இது உண்மைக்குப் புறம்பான செய்தி. எந்தச் சந்தர்ப்பத்திலும் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையை இந்தியாவுக்கு அல்ல வேறெந்தவொரு நாட்டுக்கும் விற்கப் போவதில்லை.

அடுத்துவரும் சந்ததியும் கூட இதனைப் பயன்படுத்த வேண்டும். தற்போது கூட தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும் கூட பெரும் பகுதி இயங்கக் கூடிய நிலையில் காணப்படுகின்றது.

வெகு விரைவில் பாதுகாப்பு அமைச்சிடம் தொடர்பு கொண்டு இதனை இயக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சிமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியிலும் கூட தற்போதும் படையினரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.

இவர்களை அங்கிருந்து வேறிடத்திற்கு மாற்றிய பின்னர் தொழிற்சாலை கட்டம் கட்டமாக இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என அமைச்சர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

மட்டு. - கல்முனைப் பாதையில் பாரிய போக்குவரத்துத் தடை

மட்டக்களப்பு –கல்முனை நெடுஞ்சாலையில் பாரிய போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. பாதையின் நடுவே பாரிய பாரந்தூக்கும் இயந்திரம் ஒன்று உடைந்து விழுந்துள்ளமையே இதற்குக் காரணம் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பாதை அபிவிருத்திப் பணிகளுக்காக காத்தான்குடியில் 39 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வரவேற்பு நுழைவாயிலை உடைத்துக் கொண்டிருந்தபோதே மேற்படி இயந்திரம் உடைந்து விழுந்துள்ளது.

இதனால் பாரிய வாகனப் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் கல்முனை - மட்டக்களப்பு பாதையில் மாற்று வழி பயன்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மருத்துவத் தாதி மரணம் : சந்தேகத்தில் டாக்டர் கைது

வேலணை மருத்துவ தாதி மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் நேற்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலியிலுள்ள சுகாதார திணைக்களத்தின் விடுதியில் தங்கியிருந்த இவர் கைது செய்யப்பட்டு தற்பொது ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்தப் படுகொலையைக் கண்டித்தும் குற்றவாளியைக் கைது செய்யக் கோரியும் உரிய இழப்பீட்டை வழங்கக் கோரியும் அனைத்து குடும்ப நல மருத்துவ தாதிகளும் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளும் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டன.

யாழ்நகரில் உள்ள பிராந்திய சுகாதார திணைக்களத்தின் அலுவலகத்தை இழுத்து மூடிய அவர்கள் அதன் பணிகளை முற்றாக முடக்கினர். மதியம் வரை அங்கு பணியாளர்களோ உத்தியோகத்தர்களோ செல்ல முடியாத நிலை நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான மருத்துவ தாதிகள் மற்றும் பணியாளர்கள், பொது சுகாதார பணியாளர்கள் என பலரும் அங்கு திரண்டிருந்து கோஷங்கள் எழுப்பினர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுகாதார திணைக்களத்தின் நால்வர் கொண்ட உயர்மட்ட குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சகல கட்சிகளுடனும் அரசியலமைப்பு திருத்தம் குறித்துப் பேச்சு:ஐ.தே.க

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் அதேவேளை ,பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

சிறுபான்மை இனப் பிரதிநிதித்துவம் குறையாத வகையிலான தேர்தல் முறை மாற்றத்துக்கே ஐ.தே.க. ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார். கொழும்பில் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

நிறைவேற்று அதிகார முறைமையுடனான பிரதமர் பதவி, அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பாக ஐ.தே. கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும். இப் பேச்சுக்களின் போது 17ஆவது திருத்தச் சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படுவதோடு எமது கட்சி சார்பில் அதனை வலியுறுத்துவோம்.

அதேவேளை இவ் விடயங்கள் தொடர்பாக ஐ.தே.முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுடனும் எதிர்வரும் நாட்களில் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த தீர்மானித்துள்ளார்.

இப் பேச்சுவார்த்தைகளை நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையாகவுமே நாம் நடத்துகிறோம். அதேவேளை உள்ளூராட்சி தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பாக அரச தரப்பினரை இன்று (நேற்று) சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.

இதன் போது சிறுபான்மை பிரதிநிதித்துவம் தொடர்பில் அதிக கவனத்தை செலுத்துவோம். தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறை கலந்த ஒரு திட்டத்தை தயாரிக்கவும் அதன் மூலம் சிறுபான்மை இனத்தவருக்கு அநீதி ஏற்படாத விதத்தில் நியாயம் பெற்றுக் கொடுக்கவும் ஐ.தே. கட்சி முன்னிற்கும்.

விகிதாசார முறை கைவிடப்பட்டு தொகுதி வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டால் சிறுபான்மை இன பிரதிநிதித்துவம் குறையும். இதன் போது அதனை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும் அரச தரப்பினருடன் கலந்தாலோசிக்கவுள்ளோம்.

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது வட பகுதி மக்களின் மீள் குடியேற்றம், மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனவே திருத்தங்கள் தொடர்பில் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம்.

போராட்டம் தொடரும்

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கான எதிர்ப்பு போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. வரிச் சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன. யுத்தம் முடிந்தும் மக்களுக்கு சலுகைகளை அரசாங்கம் வழங்கவில்லை.

அத்தோடு ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தும் போராட்டங்களும் அரசியலமைப்பு திருத்தங்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியும் நாடு முழுவதுமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஐ.தே. கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும் என்றார்
மேலும் இங்கே தொடர்க...

நிரந்தர இராணுவ முகாம்கள் வடக்குகிழக்கில் அமைக்கப்படும்-பாதுகாப்பு செயலாளர்

விடுதலைப் புலிகளுக்கு கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்தே ஆயுதங்களும், பயிற்சிகளும் வழங்கப்பட்டன. எனவே, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு வெளிநாடுகளில் பயிற்சிகள் பெற்ற குழுவையும் இலங்கைக்குள் ஊடுருவ இடமளிக்கப்போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். அமைவாக நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்தி புலனாய்வு துறை வலுப்படுத்தப்படும். அத்தோடு வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிரந்தர இராணுவ முகாம்களும் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வன்னி 61ஆவது பாதுகாப்பு படையணியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கை போர் சூழலை கடந்து தற்போது புதிய ஒரு சந்தர்ப்பத்தில் காலடியெடுத்து வைத்துள்ளது. பாரிய தியாகங்களுக்கு மத்தியில் நாம் பெற்றுக் கொண்ட பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியை நிரந்தர வெற்றியாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட இடமளிக்க கூடாது.

இதற்கு அமைவாக எமது பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இலங்கயில் வன்னிப் பிரதேசம் என்பது மிகவும் முக்கியமானதொரு பிரதேசமாகும். ஏனெனில் கடந்த காலங்களில் பயங்கரவாதிகள் இப்பிரதேசங்களில் காணப்படும் காட்டுப் பகுதிகளிலேயே பயற்சிகளைப்பெற்று வந்தனர். எனவே, எமது பாதுகாப்பு பிரிவுகள் இப்பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

நிரந்தர முகாம்களை அமைத்து நிலையான பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் எமது பாதுகாப்பு படைகள் மூன்று மடங்கில் வலுப்பற்றுள்ளது.தற்போது நாட்டில் போர் சூழல் இல்லாமையால் எமது படைகளை தொழில்சார் நிபுணத்துவம் உடையவர்களாக மாற்றியமைக்க வேண்டும். இராணுவச் சட்டம் தொடர்பாக கூடிய பயிற்சிகள் வழங்கப்படல் வேண்டும். தாம் எந்த சட்டத்திற்கு கீழ் செயற்பட வேண்டும் என்பதை முப்படைகளின் அதிகாரிகளும் ஏனைய சிப்பாய்களும் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் வடக்கு பிரதேசங்களில் கடமைகளில் ஈடுபடும் பொது மக்களுடன் முறையாக நடந்துகொள்ள வேண்டும். நிரந்தர முகாம்கள் வன்னி பிரதேசங்களில் அமைக்கப்பெறுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே தவிர பொதுமக்களுக்கு இடையூறாக அமையக் கூடாது. பயங்கரவாதிகளின் கடந்த கால செயற்பாடுகளையும் அவர்களின் வளர்ச்சியையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்காலங்களில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்கும், பயங்கரவாத பிரச்சினைகளுக்கும் சரியான வகையில் முகம் கொடுக்க முடியும். ஆயுதங்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவருவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஏனெனில் இவ்வாறான ஊடுருவல்களே பயங்கரவாத பிரச்சினைகளுக்கு வித்ததாக அமையும் எனக் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம்: துறைமுகத்திற்கு கடல்நீர் நிரப்பும் பணி ஜனாதிபதி முன்னிலையில் ஓகஸ்ட் மாதம்


அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக முதலாம் கட்ட நடவடிக்கைகள் நவம்பர் மாதம் நிறைவடையவுள்ளதோடு துறைமுகத்திற்கு கடல் நீரை நிரப்பும் நடவடிக்கை அடுத்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக துறைமுக அதிகார சபை கூறியது.

சீன ஹார்பர் நிறுவனம் துறைமுக நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. முதலாம் கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின் இங்கு 3 கப்பல்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும் என அதிகார சபை குறிப்பிட்டது. 2ம் கட்ட பணிகளும் நவம்பர் மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட உள்ளது. முதலாம் கட்டப் பணிகளுக்கு 437 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தரையிலே நிர்மாணிக்கப்படுவதோடு 17 அடி ஆழத்திற்கு நிலம் தோண்டப்பட்டு அதில் நீர் நிறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையம் வடபகுதி மக்களுக்கு விமோசனம்



வவுனியாவுக்கு வடக்கே எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான எரிபொருள் விநியோக உப நிலையம் நேற்று வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டது.

இதுவரை காலமும் அனுராதபுரத்திலிருந்தே எரிபொருள் விநியோகம் பெளசர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்போது ரயில் மூலம் வட பகுதிக்கான எரிபொருள் விநியோகமும் நேற்று ஆரம்பிக்கப்பட்டு ள்ளது.

பெற்றோலியத் துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையத்தை திறந்து வைத்தார். அத்துடன் வன்னி மாவட்டத்தில் 13 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கும் திட்டத்தின் கீழ் எட்டாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைச்சர் சுசில் கிளிநொச்சி நகரில் திறந்துவைத்தார்.

பெளஸர்கள் மூலம் எரிபொருள் வட பகுதிக்கு கொண்டு செல்வதால் போக்குவரத்துச் செலவுடனேயே வடபகுதி மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரயில்கள் மூலம் எரிபொருட்களை வட பகுதிக்கு கொண்டு செல்வதன் ஊடாக செலவினம் குறைக்கப்படுவதுடன் அந்த செலவினத் தொகையை நிவாரணமாக வடபகுதி மக்களுக்கே பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

1989 களில் வவுனியாவில் இயங்கிவந்த எரிபொருள் விநியோக நிலையம் கடந்த காலங்களில் கவனிப்பாரற்ற நிலையில் இருந்தது. வவுனியா குட்செட் வீதியில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியிலமைந்துள்ள மேற்படி விநியோக உப நிலையம் மீண்டும் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.

இதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புதிய எரிபொருள் நிலையங்களை அமைத்து வருகிறது.

நேற்றைய நிகழ்வின் போது அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, பிரதியமைச்சர் சரண குணவர்தனவும் கலந்துகொண்டார். அத்துடன் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் ஹரி ஜயவர்தனா, அமைச்சின் செயலாளர்,

வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் உட்பட அதி காரிகள் பலரும் கலந்துகொண்டனர். மீண்டும் இன்று (14ம் திகதி, எரிபொருள் நிரப்பிச் செல்லும் சரக்கு ரயில் வவுனியா நோக்கி புறப்படவுள்ளது. அனுராதபுரம் எரிபொருள் விநியோக உப நிலையத்திலிருந்தும் வவுனியா உப நிலையத்திற்கும் எரிபொருள் அனுப்பப்படவுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு தாக்குதல் நடத்தக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து இப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்து.

எனினும் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தாமாகவே சுய விருப்பில் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்தியாவிற்கான இலங்கைப் பிரதி உயர்ஸ்தானிகர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பான எவ்வித திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், மக்கள் பெருமளவில் நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நாளை கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டம்



அமைச்சரவையின் கூட்டம் நாளை கிளிநொச்சியில் நடைபெற உள்ளது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிக்க உள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து வட மாகாண அபிவிருத்தி குறித்த ஆய்வுக் கூட்டமொன்றும் அங்கு நடைபெற உள்ளது.

கொழும்பில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்பட்டு வந்த அமைச்சரவைக் கூட்டம் இம்முறை கிளிநொச்சியில் நடத்தப்பட உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

செனரத்கமவில் இராணுவ வீரர்களுக்கு வீடுகள் கையளிப்பு



‘நமக்காக நாம்’ (அப்பி வெனுவென் அப்பி) திட்டத்தின் கீழ் 25 வீடுகள் கண்டி செனரத்கமவில் இராணுவ வீரர் குடும்பங்களுக்கு கையளிக்கப் பட்டன.

ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி குருணாகல் வீதியில் உள்ள செனரத்கமவில் இவ் வீட்டுத் திட்டத்தை அவர் திறந்து வைத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

உகண்டா குண்டு வெடிப்பில் இலங்கை தமிழர் பலி

உகண்டா, கம்பாலவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டு வெடிப்பில் இலங்கையர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

அங்கு பணியாற்றிய கம்பாலாவில் கடமை புரிந்த ராமராஜா கிருஷ்ணா என்பவரே சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளதாக கென்யாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் ஜயந்த திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.

ராமராஜாவின் குடும்பத்தினர் இலங்கையில் இருப்பதாகவும், இத்தாக்குதல் சோமாலிய அரசாங்கத்துக்கு எதிராகச் சண்டையிடும் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றும் அவர் மேற்கொண்டு கூறினார்.

உகண்டாவில் நடந்த இந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 74 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, இரு இடங்களில் நடந்த இக்குண்டு வெடிப்பில் எத்தியோப்பியர்கள், இந்தியர்கள் மற்றும் கொங்கோலியர்கள் ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...