2 செப்டம்பர், 2010

அரசிலமைப்பு திருத்தச் சட்டம் நீதியான தேர்தலை நடத்த விடாது : கஃபே

அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கும் உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஊடாக நாட்டில் நீதியான, நேர்மையான தேர்தலை நடத்த முடியாது என கஃபே அமைப்பு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர் என அரசியலமைப்பு திருத்த ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஜனாதிபதியின் நியமனங்கள் சுதந்திரமான தேர்தல்களை நடத்த விடாது தடுத்துவிடும் என்று கஃபே அமைப்புச் சுட்டிக் காட்டியுள்ளது.

குறிப்பாகத் தேர்தல் நாளின்போது, தேர்தல் திணைக்கள ஊழியர்கள், பொலிஸ் , ஏனைய அரச அதிகாரிகள் அனைவரும் அமைச்சரவையின் பொறுப்பிலேயே இருப்பர் என்று மேற்படி திருத்தச் சட்டத்தில் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருப்பது, இத்தகைய பாதகமான சூழ்நிலைக்கே இட்டுச் செல்லும் என்றும் கஃபே சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மறு குடியமர்வு பணிகளில் இந்தியர்களை ஈடுபடுத்தமாட்டோம்: நிருபமா ராவ் மறுப்பு

இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கான பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்தமாட்டோம் என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார்.

உதவிகள் அனைத்தும் இலங்கை மூலமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் மறு குடியமர்வு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்த இருப்பதாக இலங்கை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை நிருபமா திட்டவட்டமாக மறுத்தார்.

இலங்கையில் உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானப் பணிகள் உள்பட அனைத்து நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ், தற்போது வடக்குப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் அவதிப்படும் தமிழர்களை நேரில் பார்வையிட்டு வருகிறார். செவ்வாய்க்கிழமை வவுனியா செட்டிகுளத்தில் உள்ள முகாமை பார்வையிட்டார். புதன்கிழமை முல்லைத் தீவில் உள்ள அகதி முகாம்களை அவர் பார்வையிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இறுதிக்கட்டத்தில் முல்லைத் தீவு மக்கள் பட்ட துயரங்களை, துன்பங்களை நினைவுகூர்ந்த அவர், அப்படிப்பட்ட துயரத்திலும் நெஞ்சுறுதியோடு இருந்த முல்லைத்தீவு மக்களை அவர் பாராட்டினார். உங்கள் உறுதி இரும்பைப் போன்றது என்று அவர் வர்ணித்தார்.

முல்லைத்தீவில்÷போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்து மறு குடியமர்வு செய்து அவர்களது வாழ்வாதாரத்துக்கான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றார் அவர். அப் பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். முல்லைத் தீவு மாவட்ட அதிகாரிகளிடமும் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் திரிகோணமலைக்கு சென்று கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையனைச் சந்தித்தார். அம் மாகாணத்தில் இந்தியா சார்பில் வீடுகளை கட்டிக் கொடுப்பது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

விதவைகள், வயோதிகர்கள், ஊனமுற்றோர் என போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். திரிகோணமலைப் பகுதியில் உள்ள திருகோனேஸ்வரம் கோயிலுக்குச் சென்று அவர் வழிபட்டார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை வடக்கு ஓமந்தை என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் 3 வலுவான பதுங்கு குழிகளை அவர் பார்த்தார். வெடிக்காத கண்ணி வெடிகள், வெடிகுண்டுகளை இலங்கை ராணுவ அதிகாரிகள் நிருபமாவிடம் அப்போது காண்பித்தனர். அப் பகுதியில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களுக்கு விவசாய உபகரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் அவர் வழங்கினார். அகதி முகாம்களில் சிரமப்படும் தமிழர்களுக்குத் தேவையானவற்றை இலங்கை அரசு செய்துதரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவருடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா, துணைத் தூதர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கை அதிகாரிகளும் சென்றனர்.

ராஜபட்சவுடன் சந்திப்பு: வியாழக்கிழமை இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ்ûஸ நிருபமா சந்திக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஜேவிபி துண்டுப் பிரசுரம்


அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாக நாடு முழுவதும் நேற்று வியாழக்கிழமை 20 லட்சம் துண்டுப்பிரசுரங்களை ஜே.வி.பி.விநியோகித்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒருவர் இரு தடவைகளே வகிக்க முடியுமென தற்போதைய அரசியலமைப்பில் விதிமுறை தெரிவிக்கின்றது.

எனவே அப்பதவி எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காகக் கொண்டு வரப்படும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாகவே இந்தத் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜே.வி.பி.விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்தத் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பிரதான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடைபெற்றது. இதில் ஜே.வி.பி.தலைவர்கள் பலர் பங்கெடுத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகராக ஜோன் ரெக்கின்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராக ஜோன் ரெக்கின் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகராக உள்ள பீட்டர் ஹெய்ஸுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள ஜோன் ரெக்கின் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு திருத்தம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகரிடம் ஒப்படைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதவான் ஷிராணி பண்டாரநாயக்க தலைமையிலான ஐவர் அடங்கிய நீதவான் குழு இந்த மனுவை பரிசீலனை செய்தது.

அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி உயர்நீதிமன்றின் பரிந்துரைகளைக் கோரியிருந்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி இந்த யோசனைத் திட்டம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகர் சமால் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்படுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

நிரூபம ராவ் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபம ராவ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து இன்று உரையாடினார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இந்திய உயர்ஸ்தனிகர் அசோக் காந்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்திய தரப்பிலும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோர் இலங்கை சார்பிலும் கலந்து கொண்டனர்.

இன்றைய குறுகிய நேர சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி சிறைச்சாலை கைதிகளை சந்திப்பார் : ஆணையாளர்

சிறைச்சாலை கைதிகளையும் அதிகாரிகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார் என சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ. ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.

கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு இடம்பெறும் திகதி குறித்து இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

தமக்குத் தெரிந்த வகையில் அரச தலைவர் ஒருவர், கைதிகளையும், சிறைச்சாலை அதிகாரிகளையும் சந்திப்பது இதுவே முதல் தடவை என அவர் குறிப்பிட்டார்
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச அரசில் அமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த அரசியல் சாசனத் திருத்தங்களினால் நாட்டின் ஜனநாயகத்திற்கு குந்தகம் ஏற்படும் என மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கத்தின் அரசியல் சாசனத் திருத்தங்களை பரிசீலனை செய்யும் ஐவர் அடங்கிய நீதவான்கள் குழாமே இந்த மனுக்களையும் பரிசிலனை செய்கின்றது.

உச்ச நீதிமன்ற நீதவான்களான ஷிராணி பண்டாரநாயக்க, பீ.ஏ. ரத்நாயக்க, என்.ஸ்ரீபவன், கே.இமான் மற்றும் சுரேஸ் சந்திரா ஆகியோர் இந்த மனுக்களை விசாணை செய்கின்றனர்.

பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெற்றாலும் மக்களின் அபிலாஷைகளை அறிந்து கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிறைவேற்று ஜனாதிபதியின் தவணைக் கால வரையறையை நீக்குதல் உள்ளிட்ட சில முக்கிய திருத்தங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இவை ஓர் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நாட்டை இட்டுச் செல்லக் கூடும் எனவும் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி ஆட்சி நிலவும் நாடுகளான சிம்பாப்வே, உகன்டா, கியூபா போன்ற நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுவிடக் கூடிய சாத்தியம் இருப்பதாக சிரேஸ்ட சட்டத்தரணி டாக்டர் ஜயம்பதி விக்ரமதுங்க நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முயற்சி நாட்டின் ஜனநாயகத்தை பாதிக்கக் கூடிய வகையில் அமையப் பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் உள்ளிட்ட ஏழு தரப்பினர் உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு எதிராக நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

17 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக மக்களின் இறைமையான்மையை உறுதிப்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் காணப்பட்ட போதிலும், தற்போதைய அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் அவையும் பறிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனத் திருத்தங்களின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட முடியாத போதிலும், பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அதிகாரம் காணப்படுகின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனத் திருத்தங்களில் பாரிய தவறுகள் காணப்படுவதாக சிரேஸ்ட சட்டத்தரணி ஜே.சீ. வெலியமுன தெரிவித்துள்ளார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனத் திருத்தங்களின் மூலம் பாராளுமன்ற சிறப்புரிமை பாதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...