23 செப்டம்பர், 2010

காஷ்மீரில் வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள்: ஐ.நா.



கடந்த 4 மாதங்களாக காஷ்மீரில் தொடரும் வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட அந்த மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது அவசியம் என்று ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். காஷ்மீரில் தொடரும் வன்முறை தொடர்பாக பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்விதம் கேட்டுக்கொண்டுள்ளார்.

காஷ்மீரில் நடந்த வன்முறையில் இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர். இது கவலை அளிக்கக்கூடிய விசயம். இனிமேலும் காஷ்மீரில் வன்முறை தொடர இடம் தரக்கூடாது. வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அனைத்து தரப்பினரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். சமுகமான முறையில் பிரச்னையை தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். காஷ்மீரில் பிரச்னை வெடித்ததில் இருந்தே அங்கு நிலவும் சூழலை பான் கீ மூன் கூர்ந்து கவனித்து வருவதாக அவரின் செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நாகதாழ்வு கிராம மக்கள் 20 வருடத்திற்கு பின் மீண்டும் மீள்குடியேற்றம்

மாந்தை நாகதாழ்வு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 20 வருடங்களின் பின் மீண்டும் தமது சொந்த இடங்களில் இன்று மீள்குயேற்றம் செய்யப்பட்டனர்.

மன்னார் நகரப்பகுதியில் உள்ள அவர்களுடைய உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வந்த 44 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேசச் செயலாளர் ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்.

இவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டதோடு வாழ்வுதய அமைப்பினால் தற்காலிக கொட்டில்களும் அமைத்து கொடுக்கப்படுகின்றது.

மீள்குடியேறிய மக்களுக்கு இராணுவத்தினரும் பல உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இதேவேளை கடந்த 20 ஆம் திகதி 52 குடும்பங்களைச் சேர்ந்த 167 பேர் மாந்தை எள்ளுப்பிட்டி கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்: நீதவான் உத்தரவு

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரை விளக்கமறியலில் வைக்கும் படி கண்டி மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாகீயக்காவுக்கு இடையூறு விளைவித்த குற்றச் சாட்டிலே இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

தடுத்துவைத்திருத்தல், இடைஞ்சல் விளைவித்தல், அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் போன்ற குற்றங்களுக்காக பகிடி வதைச் சட்டத்தின் கீழ் 14 நாட்களுக்கு இவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் படி உத்தரவிடப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

கைக்குழந்தையை விற்பனைக்காக சிலாபத்திற்கு கொண்டு சென்ற மூவர் கைது



கண்டி- இரங்கலை பொலிஸ் பிரிவில் இருந்து சிலாபம் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்ற கைக்குழந்தை ஒன்றையும் சந்தேக நபர்கள் மூவரையும் இரங்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் தாய், குழந்தையை விலைகொடுத்து வாங்கவிருந்தவர் மற்றும் தரகர் ஆகியோரே கைது செய்யப்பட்டு தெல்தெனிய மாஜிஸ்திரேட் பிரசன்ன லியனகே முன் ஆஜர் செய்யப் பட்டபோது மேலதிக விசாரணைக்காக நால்வரையும் தடுத்து வைக்கும் படி அவர் உத்தரவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நிவித்திகலை சம்பவத்தின் பின்னணியில் தமிழ்த் தலைமைகளின் பொறுப்புக்கள்

இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகலை நகருக்கு அருகிலுள்ள குக்குலகல தோட்டம் இன்னமும் வெறிச்சோடியே கிடக்கிறது. பள்ளிப்பருவத்தில் பட்டாம்பூச்சிகளாய் துள்ளித்திரிந்த சிறுவர்களை அங்கு காணவில்லை. பறிப்பார் யாருமின்றி ஈரங்குலத்துக்கும் மேல் வளர்ந்திருக்கின்றன தேயிலைக் கொழுந்துகள்.

ஆம்! இத்தோட்டத்தில் கடந்த 11ஆம் திகதி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற அசம்பாவிதங்களால் அத்தோட்டமே அதிர்ந்துபோனது.

யாரோ செய்த தவறுக்காக, அப்பகுதி தமிழ் மக்கள் அனைவருமே தண்டனை அனுபவிக்கும் நிலை உருவானது.

நள்ளிரவு வேளை, தமிழர் குடியிருப்புகளுக்குள் புகுந்த காடையர்கள் வீடுகளை உடைத்து பொருட்களைக் கொள்ளையடித்தனர். கால்நடைகளைக் கொன்று குவித்தனர்.

கண்போலக் காத்த வீடுகளும் பொருட்களும் கண்மூடித்தனமாக உடைக்கப்பட்டபோது, கண்ணீர்விட்டழுத மக்கள் காடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

பிஞ்சுக் குழந்தைகளைக் கையிலேந்தி உண்டுறங்க எதுவுமின்றி அவர்கள் பட்ட துன்பங்களோ ஏராளம்.

தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் என்று பல தரப்பினரும் வெவ்வேறு விதங்களில் கருத்துக் கூறி வந்தார்கள்.

ஆனால் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் 'மது பாவனை' தான் என்பது புலனாகும்.

கசிப்பு விற்பனையால் வந்த விளைவு

நிவித்திகலையிலும் தேலை(தாலை என தமிழில் அழைக்கப்படுகிறது), குக்குலகலை மற்றும் நொரகல்லை ஆகிய தோட்டப் பகுதிகளில் தமிழர்களே கசிப்பு எனும் மதுசார விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதி தமிழ் மக்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

உலக வளர்ச்சிப் போக்கையறியாமல் ஒரு வட்டத்துக்குள் நின்றுகொண்டு மது மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்துகொண்டிருக்கும் பலரை நாம் அங்கு காணக் கூடியதாக இருந்தது.

இந்தக் கசிப்பு விற்பனைதான் இந்தளவு பாரதூரமான விளைவுகளுக்கும் காரணம் எனச் சொல்வதிலும் தவறில்லை. மது எனும் விஷப் பானத்தை அருந்திவிட்டு அரக்கர்களாய் மாறும் சிலர் செய்த வஞ்சக விளைவுகளால் வந்த பிரதிபலனே இது.

இதனால் அந்தத் தோட்டத்திலுள்ள 75 குடும்பங்களைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமானோர் பாதிப்படையும் நிலை உருவானது.

இளம்வயதில் கல்வி கற்க வேண்டிய மாணவர்கள் இன்னும் பாடசாலைக்குச் சமூகம் தரவில்லை. நாட்சம்பளம் பெற்று அன்றாட வாழ்க்கையை அரைவயிறு, கால்வயிறு என நிரப்பி, எத்தனையோ சுமைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் தோட்ட மக்கள் இன்னமும் தொழிலுக்குத் திரும்பவில்லை.

இதற்கு யார் காரணம்?

கசிப்பு விற்பனைப் பிரச்சினையால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் கொலையின் பிரதான சந்தேக நபரான தமிழர் ஒருவர் நேற்றுமுன்தினம் பொலிஸாரிடம் ஆஜராகியுள்ளார்.

ஒருசிலர் சுயநலனுக்காக செய்த தவறைச் சரி எனச் சொல்லிவிட முடியாது. மறுபுறம் பார்க்கையில் இவர்கள் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த தமிழர்களையும் அடக்கி ஒடுக்க முற்படுவது என்பது வேதனைக்குரியதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.

இதற்கு முறையானதொரு தீர்வு எட்டப்பட வேண்டியது அவசியமாகும். தமிழ்த் தலைமைகள் இதுகுறித்துச் சிந்திக்க வேண்டும்.

அவிசாவளை பம்பேகம தோட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் 85 குடும்பங்களைச் சேர்ந்தோர் பெரும்பான்மை இனத்தவரின் தாக்குதலினால் 3 நாட்கள் பட்டினியுடன் காட்டுக்குள் வாழ்ந்தார்கள். அவர்களின் சொத்துக்கள் அனைத்துமே சூறையாடப்பட்டன.

தொடர்ந்து அரங்கேறும் அசம்பாவிதங்கள்

இப்போதும்கூட, இவைபோன்ற சிலசில அசம்பாவிதங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

இறக்குவானை, பொத்துப்பிட்டியவில் வசிக்கும் தமிழ் மக்கள் இன்னமும் பெரும்பான்மை இனத்தவர்களின் கூலித்தொழிலாளர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

காவத்தை, எந்தானை தோட்டம் மற்றும் தலுக்கலை தோட்டப்பகுதியில் மாலை 6.00மணிக்குப் பிறகு வீதிகளில் நடமாடும் தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகிறார்கள்.

வற்புறுத்தலின்பேரில் பகிரங்கமாகத் தமிழ்பேச முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் சூரியகந்தை தோட்டப் பகுதிகளிலுள்ள மக்கள் இன்னும் ஓரிரு வருடங்களில் தாய்மொழியையே மறந்து விடுவார்களோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது.

இவ்வாறான சம்பவங்களுக்கு யார் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்கள் எனக் கேட்கிறது ஒரு தரப்பு.

தலைமைகளே ஒற்றுமையின்றி இருக்கும்போது, மக்களின் ஒற்றுமை அதுவும் தமிழ் மக்கள் பிரச்சினை குறித்து, யார், எங்கே பேசப்போகிறார்கள்? செயற்படப்போகிறார்கள் என்கிறது மற்றுமொரு தரப்பு.

எது எவ்வாறாயினும், இனம் என்ற காரணத்தைச் சொல்லி எந்த ஓர் இனமும் தண்டிக்கப்படக் கூடாது என்பதை தலைமைகள் சுட்டிக்காட்டித் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
மேலும் இங்கே தொடர்க...

கொண்டச்சி மீள்குடியேற்றப் பகுதியில் கல்வி நடவடிக்கை ஆரம்பம்

மன்னார் மாவட்டத்தில் கொண்டச்சி பகுதியில் மீள்குடியேறியுள்ள குடும்பங்களின் பிள்ளைகள் நலன்கருதி, அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான றிஷாத் பதியுதீன் புதிய தற்காலிக பாடசாலை செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் உட்பட பாடசாலை சீருடை என்பவற்றையும் அவர் வழங்கினார். இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

துருக்கி ஜனாதிபதி, ஜமேக்கா பிரதமர் ஜனாதிபதியுடன் நியூயோர்க்கில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, துருக்கி ஜனாதிபதி அப்துல்லா குல் ஆகியோர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

அதேவேளை, ஜமேக்கா பிரதமர் புரூஸ் கோல்டிங்கையும் நேற்றுச் சந்தித்த ஜனாதிபதி, தம்முடன் இருந்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, குருனாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெனுகா விதானகம, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸி. முகாம் அகதிகள் போராட்டங்களில் இறங்கலாம் என அதிகாரிகள் அச்சம்

அவுஸ்திரேலிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகள் போராட்டங்களில் இறங்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

சிட்னியில் உள்ள வில்லாவூட் தடுப்பு முகாமில் திங்களன்று ஆரம்பித்த போராட்டம் புதன்கிழøம முடிவுக்கு வந்தது. முகாமின் இரண்டு மாடிக் கட்டடக் கூரையில் ஏறியிருந்த ஒன்பது இலங்கை தமிழர்களும் கீழே இறங்க சம்மதித்தனர்.

அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணைய அதிகாரிகள் அவர்களின் அடைக்கலக் கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக வாக்குறுதி கொடுத்ததை அடுத்தே அவர்கள் ஒன்பது பேரும் கீழே இறங்கச் சம்மதித்தனர்.

அதேவேளை கூரை மீது ஏறி நின்று போராட்டம் நடத்தியவர்களுக்கு தாம் எந்த உறுதிமொழியையும் வழங்கவில்லை என்று அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தப் போராட்டம் அவுஸ்திரேலியாவில் ஏனைய முகாம்களில் உள்ள அகதிகளுக்கு முன் உதாரணமாக அமையலாம் என்றும் அவர்களும் இது போன்ற போராட்டங்களில் இறங்கலாம் என்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

இதையடுத்து அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் நேற்று கிறிஸ்மஸ் தீவு முகாமுக்குச் சென்றுள்ளார். கடந்த பல மாதங்களாகவே கொள்ளளவை நெருங்கியுள்ள கிறிஸ்மஸ் தீவு முகாமில் உள்ள அகதிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யவே அவர் அங்கு சென்றுள்ளார். குடிவரவு அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற பின்னர் இவர் கிறிஸ்மஸ்தீவு முகாமுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

துரோகத்துக்கு மன்னிப்பு கோருகிறேன் மக்களுக்காக சிறைசெல்லவும் தயார்-ரணில்

ஐக்கிய தேசிய முன்னணியில் பாராளுமன்றத்துக்கு வந்த எம்.பி.க்கள் சிலர் அரசாங்கத்துக்கு ஆதரவளித்ததன் மூலம் நாட்டு மக்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகமிழைத்து விட்டனர். இந்த நம்பிக்கைத் துரோகத்துக்காக தலைவர் என்ற வகையில் வாக்களித்த சகலரிடத்திலும் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவித்தார்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் மற்றும் ஊடகங்களை முடக்கியுள்ள அரசாங்கத்தின் சர்வாதிகாரப் பயணம் என்பவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் போராட்டத்தில் சிறைக்குச் செல்வதற்கும் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் சூளுரைத்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய இளைஞர் முன்னணியுடனான சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பு கேம்பிரிட்ஜ் ரெரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டம் புறக்கணிக்கப்பட்டு அதன் அனைத்து அதிகாரங்களும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டுள்ள ஒரு யுகத்திலேயே நாம் இருக்கின்றோம். சகல அதிகாரங்களும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டுள்ள 18 ஆவது திருத்தச் சட்டத்தினூடான சர்வாதிகார பயணத்தை தடுத்து நிறுத்தியாக வேண்டும். மக்கள் மயமான திருத்தச் சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டமாகும். குடும்ப ஆதிக்கத்துக்கான திருத்தத்தை நாம் என்றும் எதிர்க்கின்றோம்.

ஐக்கிய தேசிய முன்னணியாக செயற்பட்டு தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வந்தவர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் நின்று 18 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களித்திருந்தால் இன்றைய சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்துள்ள 18 ஆவது திருத்தச் சட்டத்தை எம்மால் தோல்வியுறச் செய்திருக்க முடியும். ஆனாலும் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவாகிய எம்.பி. க்கள் சிலர் தமது வாக்காளர்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகமிழைத்து அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். இதன் மூலம் அவர்கள் நாட்டு மக்களைக் காட்டிக் கொடுத்து விட்டனர்.

கட்சியின் மீதும் உறுப்பினர்களின் மீதும் நம்பிக்கை வைத்திருந்த மக்களை எமது உறுப்பினர்கள் ஏமாற்றியமைக்காக கட்சித் தலைவர் என்றவகையில் நான் மக்களிடத்தில் மன்னிப்புக் கோருகிறேன்.

இது ஒருபுறமிருக்க 18 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் அதற்கு எதிரான எமது போராட்டம் முடிந்தவிடவில்லை. எமது நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் மக்களுக்கான நல்லாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால் இன்றயை இளைஞர் சமுதாயம் விழிப்படைய வேண்டும். அரசாங்கத்தின் சர்வாதிகாரப் பயணத்துக்காக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ள நிலைமையைக் காணுகின்றோம். இந் நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் எதிர்காலம் கருதியதாக எமது அடுத்த கட்ட நகர்வுகள் அமைய வேண்டும். மேலும் கொழும்பு நகரில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி இங்கு சீனாவின் வர்த்தகத்தை விருத்தி செய்யும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, அரசாங்கத்தின் இத்தகைய கண்மூடித்தனமான செயற்பாடுகள் மற்றும் 18 ஆவது திருத்தத்தினூடான சர்வாதிகாரப் பயணம் ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழவதும் மக்கள் போராட்டங்களை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது. அரசாங்கத்தினால் தலைநகருக்கும் இங்குள்ள மக்களுக்கும் இழைக்கப்படுகின்ற அநீதிக்கு எதிராக வரும் ஒக்டோபர் மாதம் முழு அளவிலான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்காக இளைஞர் அணி, சிவில் அமைப்புக்கள், பொது மக்கள் என சகலரும் முன்வர வேண்டுமென கேட்கிறேன். சில வேளைகளில் எமது போராட்டங்களை முடக்குவதற்கும் அடக்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடும். அது பற்றி எமக்கு கவலையில்லை. மக்களுக்காக சிறை செல்வதற்கும் தயாராக இருக்கிறோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நாடாளுமன்ற பேரவைக்கான பெயர்கள் சபாநாயகரினால் இன்று அறிவிப்பு

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட நாடாளுமன்றப் பேரவைக்கான பெயர் விபரங்களைச் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிமை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று நாடாளுமன்ற வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

18 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் கடந்த 8ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதையடுத்து தங்களுடைய பிரதிநிதிகளின் பெயர்களை சிபாரிசு செய்யுமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பிரதமர் தி.மு. ஜயரட்ன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு 13 ஆம் திகதி எழுத்து மூலம் அறிவித்திருந்தார். பேரவைக்கான பிரதிநிதிகளின் பெயர்களைக் கடிதம் கிடைக்கப் பெற்ற ஒருவார காலத்திற்குள் சிபாரிசு செய்ய வேண்டும் என்றே அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. திருத்தத்தின் பிரகாரம் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தங்களின் பிரதிநிதிகளை தமது இனத்தை சாராத ஒருவரின் பெயரையே சிபாரிசு செய்யவேண்டும்.

நாடாளுமன்ற பேரவைக்கென எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டதரணி எம்.ஏ. சுமந்திரனின் பெயரை சிபாரிசு செய்த போதிலும் அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்து விட்டது.

இந்நிலையில் வழங்கப்பட்டிருந்த ஒருவார காலம் நேற்று புதன்கிழமையுடன் நிறைவடைந்து விட்டது. தான் சிபாரிசு செய்ய வேண்டியவரின் பெயரை பிரதமர் தி.மு ஜயரட்ன சபாநாயகருக்கு நேற்று புதன்கிழமை அறிவித்ததாக அவரது காரியாலய வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. பிரதமரினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பெயர் விபரத்தையே சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவிருக்கின்றார். நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்குக் கூடுவதுடன் அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படும்.

பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் தங்களுடைய பிரதிநிதிகளின் பெயர்களைச் சிபாரிசு செய்யாவிடின் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி நாடாளுமன்ற பேரவைக்கு இரண்டு பிரதிநிதிகளின் பெயரை சிபாரிசு செய்து நாடாளுமன்ற பேரவையை நிறுவமுடியும்.

ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதன் பின்னர் நாடாளுமன்ற பேரவையை நிறுவுவதற்கான அனுமதியை வழங்குவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மக்களின் அவல வாழ்வுக்கு தமிழ்த் தலைவர்களே காரணம் : ஈரோஸ் தலைவர்

தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் அன்று செய்த தவறின் காரணமாகவே வடக்கு, கிழக்கிலிருந்து 18 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்ததுடன் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 35 ஆயிரம் இளைஞர் யுவதிகள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான விதவைகளும் ஊனமுற்றோரும் உருவாகினர்."

இவ்வாறு ஈரோஸ் கட்சித் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன்(ஈரோஸ் பிரபா) குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு ஈரோஸ் தலைமையகத்தில் நேற்று (22.09.2010) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இக்கருத்தை முன்வைத்தார். இச்சந்திப்பில் தொடந்து பேசிய அவர்,

"எமது தலைவர்கள் காட்டிய பிழையான வழிகாட்டல்களினால் 30 வருடகால எமது கலை, கலாசாரம், கல்வி உட்பட வாழ்வாதாரமும் பின்னோக்கியுள்ளது.

அத்தகைய பிழைகளை ஒருபோதும் ஈரோஸ் அமைப்பு விடப்போவதில்லை. வெறுமனே அரசுக்கெதிராக கூச்சல் போடுவதால் தமிழ்ப் பேசும் மக்கள் எதனையும் அடைந்து விடமுடியாது. அதனால் தான் எமது கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகிறது.அதற்காக நாங்கள் அரசின் கைக்கூலிகள் அல்லர். எமக்கு அரசியல் இரண்டாம் கட்டம்தான்.

தமிழ் பேசும் மக்களின் தேசியம் வெல்லப்பட வேண்டுமென்பதுதான் எமது இலக்கு. கௌரவமான, காத்திரமான அரசியல் அதிகாரம் வேண்டும். அதற்காகவே நாங்கள் தேர்தல்களில் இறங்குகிறோம். எதிர்காலத்திலும் தேர்தல்களைச் சந்திக்க தயாராகவுள்ளோம்.

நாம் ஒருபோதும் தமிழ் மக்கள் என்று மாத்திரம் சிந்திப்பதில்லை வடக்கு கிழக்கில் எந்தத் தீர்வாக இருந்தாலும்,அது தமிழ்ப் பேசும் மக்களுக்கானதாக இருக்கவேண்டும்"என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பாதுகாப்புத் தரப்பினர் மீதான இடம்பெயர்ந்தோரின் குற்றச்சாட்டுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவில் விசாரணை

இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்புத் தரப்பினர் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழு முல்லைத்தீவில் இராணுவத்தினரிடம் திங்கட்கிழமை (20.09.2010) விசாரணைகளை மேற்கொண்டது.

புலிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தபோது தம்மை இராணுவத்தினர் தாக்கியதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் பொதுமக்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

எனவே பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து இராணுவத்தினரின் விளக்கத்தை அறிந்துகொள்ளும் முகமாக முல்லைத்தீவு 59 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஆரியசிங்க தலைமையிலான அதிகாரிகளிடம் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையிலான குழுவினர் விசாரதீ ணகளை மேற்கொண்டனர்.

தாம் தப்பி வர முயன்ற போது புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதேநேரம், இராணுவத்தினர் புலிகள் மீது நடத்திய பதில் தாக்குதலில் தாம் பாதிக்கப்பட்டதாகவும் கிளிநொச்சி, கணடாவளை, பூநகரி ஆகிய இடங்களில் நடைபெற்ற விசாரணைகளின் போது பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இராணுவத்தினரின் நிலைப்பாட்டை கேட்டுத் தெரிந்துகொண்ட ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா, தற்போது இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளைப் பாராட்டியதுடன், நேரில் வந்ததால் உண்மையைப் புரிந்துகொள்ள முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆணைக் குழுவின் தலைவரது கேள்விகளுக்குப் பதில் அளித்த கேணல் ஆரியசிங்க, ‘பொதுமக்களின் நிலைகளைத் தெரிந்துகொள்வதற்காக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதல் இலக்குகளைத் தெரிவுசெய்தோம். ஆனால், யார் யார் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுகொள்வது கடினமானது.

பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தியதால் இராணுவத்தினருக்குப் பலத்தசேதம் ஏற்பட்டது. நாம் ஜனவரி மாதம் முல்லைத்தீவைக் கைப்பற்றினோம். அப்போது 72407 பொதுமக்கள் வந்தார்கள். 4 பேர் உயிரிழந்தார்கள். பொதுமக்கள் மத்தியில் இருந்த புலிகள் நடமாடும் குண்டுத் தொழிற்சாலையை வைத்திருந்தார்கள்’ என்று குறிப்பிட்டார்.

பொதுமக்களின் சொத்துக்களை இராணுவத்தினர் பயன்படுத்துவதாக சுமத்தும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதில் அளித்த 59ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, எந்தவொரு தனியார் சொத்தையும் இராணுவத்தினர் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

முன்பு முகாமில் இருந்து மீளக்குடியமர வந்தவர்கள் மற்றுமொரு முகாமில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோதிலும், தற்போது அவர்கள் நேரடியாகத் தமது சொந்த வாழ்விடத்திற்கு வருகை தருவதாகத் தெரிவித்தார்.

மீனவர்களை ஓர் அமைப்பாக செயற்படுத்த வழியேற்படுத்தும் வகையில் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்றாலும் உள்ளூர் மீனவர்களுக்கு மட்டுமே தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் நிரந்தரமாகக் குடியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அதேநேரம், காலப்போக்கில் சந்தை வாய்ப்பு சீரானதும், ஏனையவர்களும் போட்டிபோட மீனவர்களின் உழைப்புக்கேற்ற ஊழியத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய அரசின் உதவியில் வீட்டுத் திட்டம் காணிகளை பார்வையிட இந்திய உயர் மட்டக்குழு வன்னி விஜயம்


இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள வீடமைப்புத் திட்டத்திற்கான காணிகளை பார்வையிட இந்திய உயர் மட்டக்குழு நேற்று வன்னி சென்றுள்ளது.

நேற்றுக் காலை கிளிநொச்சி பொன்னகர் பிரதேசத்தில் அறிவியல் நகர் வீட்டுத் திட்டத்திற்கான காணிகளை பார்வையிட்டு ள்ள மேற்படி குழுவினர் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், மாந்தை கிழக்கு பகுதிகளுக்குச் சென்று வீட்டுத் திட்டத்துக்கான காணிகளை பார்வையிடவுள்ளனர்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதம செயலாளர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர் மட்டக் குழுவே கிளிநொச்சிக்கும் முல்லைத்தீவிற்கும் விஜயம் செய்து மேற்படி காணிகளை பார்வையிட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 50,000 வீடுகள் வடக்கில் நிர்மாணிக்கப் படவுள்ளதுடன், முதற் கட்டமாக 2,000 வீடுகளை அமைப்பதற்குத் திட்டமிடப் பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பொன்நகர் பிரதேசத்தில் அறிவியல் நகர் வீடமைப்புக் கிராமம் 125 வீடுகளுடன் அமையவுள்ளதுடன், கண்டாவளை, பளை, பூநகரி பிரதேசங்களை உள்ளடக்கியதாக 325 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கான காணிகளும் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளதுடன் விரைவில் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் முதற் கட்டமாக 200 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. நான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இவ்வீட்டுத் திட்டம் அமையவுள்ளதுடன், துணுக்காய், மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு கரைதுறைப்பற்று பிரதேசங்களில் இதற்கான காணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தேவநாயகம் நேற்றுத் தெரிவித்தார்.

இதற்கான காணிகளையே நேற்றும் இன்றும் கிளிநொச்சியிலும் முல்லைத் தீவிலும் இந்திய உயர் மட்டக் குழுவினர் பார்வையிட்டுள்ளனர். இவ்வீட்டுத் திட்டங்களுக்கான நிர்மாணப் பணிகள் இரண்டொரு வாரங்களில் ஆரம்பமாக வுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மதவாச்சி, நாச்சியாதீவில் கடும் காற்றால் 33 வீடுகள் சேதம்






அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள மதவாச்சி மற்றும் நாச்சியாதீவு பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 33 வீடுகள் பகுதியாகச் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

இக்கடும் காற்று காரணமாக மதவாச்சி பிரதேசத்தில் 21 வீடுகளும், நாச்சியாதீவு பிரதேசத்தில் 12 வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இக்காற்றினால் சேதமடைந்துள்ள வீடுகளில் வசித்து வந்தவர்களுக்குத் தேவையான நிவாரண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சீரற்ற காலநிலை சில தினங்களுக்கு தொடரும்






தற்போதைய சீரற்ற காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்குத் தொடரும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பிரிதிக்கா ஜயக்கொடி நேற்று தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சி கொழும்பு மாவட்டத்தில் உள்ள மீகொட பிரதேசத்தில் 177.3 மி. மீ. என்றபடி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இடி, மின்னலுடன் கூடிய மழைக் காலநிலை நிலவுவதால் அதன் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தற்போதைய சீரற்ற காலநிலைக்கு தாழமுக்க நிலைமையே காரணம். இந்த நிலைமை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்க முடியும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவில் மீகொடவில் 177.3 மி. மீ., கொழும்பில் 124.3 மி. மீ. ஹங்வெல்லவில் 91.4 மி. மீ. கட்டுநாயக்கவில் 55.6 மி. மீ. என்றபடி அதிக மழை பெய்துள்ளது. என்றாலும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்துள்ளது.

தற்போது இடி, மின்னலுடன் மழை பெய்கின்றது. இச்சந்தர்ப்பங்களில் திறந்த வெளிகளில் இருப்பதையும், நடமாடுவதையும், குளங்களிலும், ஆறுகளிலும், நீராடுவதையும், உயரமான மரங்களுக்கு கீழே இருப்பதையும், மினிசாரப் பொருட்களைப் பாவிப்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேநேரம் இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது கடும் காற்று வீச முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தின் பாதிப்பு காரணமாக வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அதிக நிதி தேவை நோர்வே பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு




வடக்கு, கிழக்கு பிரதேச உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரிய நிதியை செலவிட நேர்ந்துள்ளதாகவும் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அழிவுகளே இதற்குக் காரணமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நோர்வே பிரதமர் ஜோன்ஸ் ஸ்டோல் டன்பர்க்கிற்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேற்படி சந்திப்பு இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்றுள்ளதுடன், இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தற்போது சமாதான சூழல் நிலவுவதாகவும், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் துரிதமான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை அரசாங்கம் தற்போது செயற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ள நோர்வே அமைச்சர் எரிக்சோல்ஹெய்ம், புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை நல்ல நோக்கத்துடன் பார்க்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், புலம்பெயர் தமிழர்கள் தமது நிலைப்பாட்டிலேயே தொங்கிக் கொண்டிருக்காமல் பாராளுமன்றத்திற்கூடாக ஜனநாயக ரீதியில் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பின் போது வட கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நோர்வே அரசாங்கத்தின் பங்களிப்பினை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். அதேவேளை நோர்வே அரசாங்கம் நோரூட் நிறுவனத்தினூடாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக நோர்வே பிரதமருக்கு ஜனாதிபதி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இலங்கையில் அமைதிச் சூழல் நிலவுவதுடன், நாட்டின் நெடுஞ்சாலைகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோர்வே வர்த்தக சமூகத்தினர் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பில் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீரங்கா, சஜித் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னே உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மொழி மூல பிரிவில் தம்பிலுவில் மாணவி சுபதா அகில இலங்கை ரீதியில் முதலிடம்








புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூல பிரிவில் முதலிடம் பெற்ற தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா (193 புள்ளிகள்) நேற்று தினகரனுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

தான் தினமும் அதிகாலையில் எழுந்து படித்து வருவதாகவும் தனக்கு பெற்றோரும் வகுப்பாசிரியரும் அதிகம் ஊக்கமளித்ததாகவும் சுபதா கூறினார்.

தனது வெற்றி குறித்து தினகரன் வாசகர்களுடன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட சுபதா மேலும் கூறியதாவது :-

‘அகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்றது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது பெற்றோரும், ஆசிரியர்களும், அதிபரும் தந்த ஊக்குவிப்பு காரணமாகவே என்னால் இந்த வெற்றியை அடைய முடிந்தது.

பாடசாலை படிப்புக்கு மேலதிகமாக பகுதி நேர வகுப்புகளுக்கும் சென்றேன். பாடசாலை கல்வியைப் போன்றே பகுதி நேர வகுப்புக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்தேன். தினமும் அதிகாலையில் எழுந்து படிப்பதை வழமையாகக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவியாகத் தெரிவானேன். மருத்துவராக வர வேண்டும் என்பதே எனது எதிர்கால ஆசையாகும்’ இவ்வாறு சுபதா கூறினார்.

சுபதாவின் தந்தை மகேந்திரன் மாலவன் கூறியதாவது :-

மகள் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தே இந்தப் பெறுபேற்றைப் பெற்றார். அவர் அகில இலங்கை ரீதியில் முதலிடம் வருவார் என்று எதிர்பார்த்தோம். 195 புள்ளிகளை விட அதிக புள்ளிகளை பெறுவார் என்று நினைத்தோம் ஆனால் 193 புள்ளிகள் கிடைத்தது மகிழ்ச்சியே.

சிறுவயது முதல் மகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டினார். ஏனைய பிள்ளைகளைப் போன்று மாலையில் விளையாடினார். இரவிலும் காலையிலும் படித்தார். சுபதாவின் தாயார் சிவசுப்பிர மணியம் உமையாளும் மகளின் சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

மாலவன், உமையாள் தம்பதியின் ஏகபுதல்வியே சுபதா என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வில் அரசின் செயற்பாடுகள் முழுத்திருப்தி

நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்தவிடம் ராதிகா குமாரசுவாமி பாராட்டு

ஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்த சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களின் கல்விச் செயற்பாடுகளைப் பலப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை ஐ. நா. செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி ராதிகா குமாரசுவாமி பாராட்டியுள்ளார்.

சிறுவர் போராளிகளற்ற சூழலொன்று இலங்கையில் உருவாகியுள்ளமை சிறந்த நிலையாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள் ளார். ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் சிறுவர் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரம் தொடர்பான ஐ. நா. செயலாளர் நாயகத் தின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி க்குமிடையிலான முக்கிய பேச்சுவார்த்தை யொன்று நேற்று முன்தினம் நியூயோர்க்கில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையில் யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளமை தொடர்பில் அவர் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். அத்துடன் ஆயுத மோதல்களற்ற சிறுவர் அபிவிருத்திக் கான சூழல் இலங்கையில் கட்டியெழுப்ப ப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தினால் தமது சிறுவர் பராயத்தை இழந்துள்ள சிறுவர்களின் புனர்வாழ்வு மற்றும் கல்விச் செயற்பாடுகள் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் செயற்பாடுகளுக்கு அரசு முன்னுரிமையளித்து வருவதாக இதன்போது தெளிவுபடுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இச்செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த ஐ. நா. பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி, மேற்குலக ஊடகங்கள் எத்தகைய கருத்துக்களை வெளியிட்டபோதும் இலங்கையில் சிறுவர் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் உலகில் மோதல்களில் ஈடுபட்ட நாடுகளை விட திருப்திப்படக் கூடியதாக உள்ளதாகவும் எனினும் அதனை வெளியிடுவதில் சிக்கல்கள் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி சந்திப்பில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீரங்கா எம்.பி. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஐ. நா. அமைப்பின் இலங்கைக் கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னே உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் சர்வதேசகிளைகளின் மகாநாடு









தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாடு அக்டோர்பர் 30 ,31ம் திகதிகளில் ஜேர்மன் நகர் ஸ்ருட்காட்டில் உத்தியோகப+ர்வ அழைப்பிதல் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

-மகாநாட்டு ஏற்பாட்டு குழு
தொடர்புகட்கு: 0713130722
ploteint@gmail.com
மேலும் இங்கே தொடர்க...