31 மார்ச், 2010

வடக்கின் மீள் கட்டுமானப் பணிகள்: 4 இலட்சம் சீமெந்து மூடைகள் இந்தியாவினால் கையளிப்பு






வடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்விடங்களின் மீள் கட்டுமானப் பணிகளுக்கென இந்திய அரசு 200 மில் லியன் ரூபா பெறுமதியான 4 இலட்சம் சீமெந்து மூடைகளை நேற்று கையளித்தது.

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த், தேச நிர்மான, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செய லாளர் டபிள்யூ. கே.கே. குமாரசிறியிடம் சீமெந்து மூடைகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கொழும்பு பேலியாகொடையிலுள்ள அல்ரா டெக் சிமென்ட் லங்கா நிறுவனத்தில் இக் கையளிப்பு நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றது. யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வீடு வாசல்களை இழந்தவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

மீளக் குடியமர்த்தப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 சீமெந்து மூடை கள் வீதம் வழங்க தேச நிர்மான அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்திய அரசு ஏற்கனவே 2600 மெற்றிக் தொன் கூரைத் தகடுகளை வழங்கியிருந்தது. அதற்கு மேலதிகமாகவே 20,000 மெற்றிக் தொன் கொண்ட நான்கு இலட்சம் சீமெந்து மூடைகளை வழங்க முன் வந்துள்ளது.

மீளக் குடியமர்த்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு அந்தந்த பகுதி யிலுள்ள பிரதேச செயலாளரின் சிபாரி சுகளுக்கு அமைய சீமெந்து மூடைகள் வழங் கப்படும். இந்திய அரசு இடம் பெயர்ந்த மக்களுக்கு உணவு, உடை மற்றும் சமைய லறை பாத்திரங்கள் என இலங்கை நாணயப்படி 610 மில்லியன் ரூபா பெறுமதி யான பொருட்களையும் முன்பே கையளித் திருந்தது.

மீளக் குடியமர்த்தவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்தியா தொடர்ந்தும் உதவிகளை செய்யும் என இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

16,800 மெற்றிக் தொன் நெல் ஒரு மாதத்தில் அரசு கொள்வனவு




நாளாந்தம் 50 மெ.தொ. கொள்வனவுக்கும் திட்டம்
இம்முறை பெரும் போகத்தின்போது 2.5 மில்லியன் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் அனைத்து நெல் உற்பத்தியையும் கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது வரை 16, 800 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதோடு தற்பொழுது நாளாந்தம் 50 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்படுகிறது என விவசாய அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

காவலி நிலையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்வதற்கோ விவசாயத்துறையை மேம்படுத்தவோ அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென ஐ.தே.க வும் ஜே.வி.பி யும் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் எமது அரசாங்கமே விவசாயிகளுக்கு அதிக நிவாரணங்கள் வழங்கி விவசாயத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு போகத்திற்காக விவசாயி ஒருவருக்கு ஒரு ஏக்கருக்காக 205 கிலோ கிராம் பசளையை அரசாங்கம் வழங்குகிறது. இதற்காக ஒரு விவசாயி 1435 ரூபாவே வழங்குவதோடு அரசாங்கம் 27, 500 ரூபா வழங்குகிறது. 97 வீத பசளை மானியமாக வழங்கப்படுகிறது.

இதன்படி, கடந்த 4 வருடத்தில் 8 போகங் களுக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் 5 இலட் சம் ரூபா முதல் 10 இலட்சம் ரூபா வரை பசளை மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2007-2008 ஆம் வருடத்தில் மாத்திரம் உரம் கொள்வனவு செய்ய அரசாங்கம் 6500 கோடி செலவிட்டது. ஆனால் ஐ.தே.க ஆட்சியில் உரமானியம் நிறுத்தப்பட்டதோடு விவசாயத்துறை அழிக்கப்பட்டது.

ஆனால் இன்று விவசாயத்துறை மேம்படுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்வனவு செய்வதற்காக நாடு முழுவதும் 5 ஆயிரம் நெற் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, உணவுத் திணைக்கள களஞ்சியங்கள், உரக் களஞ்சியங்கள் என்பனவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நெற் களஞ்சியங்களுக்கு கொண்டு வந்து தரப்படும் நெல்லுக்காக நாட்டரிசிக்கு 29.50 சதம் வழங்கப்படுவதோடு சம்பா அரிசிக்கு ரூபா 31.50 வழங்கப்படுகிறது. போக்குவரத்து செலவாக ஒரு கிலோவுக்கு ஒரு ரூபா 50 சதம் வழங்கி வருகிறோம். நெற் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐ.தே. க ஆட்சிக் காலத்தில் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் இன்று விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பராக்கிரமபாகுவிற்குப் பின்னர் தமது ஆட்சியிலே (2002-2004) நெல் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்ததாக ரணில் கூறி வருகிறார். தனது ஆட்சியில் நெல் சந்தைப்படுத்தும் சபைகளை மூடியதோடு உரமானியத்தை நிறுத்தியதை அவர் மறந்துவிட்டார்.

இம்முறை பல வருடங்களின் பின்னர் வடக்கிலும் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இம்முறை கூடுதல் நெல் உற்பத்தி கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

31.03.2010 தாயகக்குரல்



இலங்கையின் தலைவிதியையும் தமிழ்மக்களின் தலைவிதியையும் நிர்ணயிக்கப்போகும் பொதுத் தேர்தலுக்கு இன்னும் சிலதினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் யதார்த்தத்திற்கு அப்பால் நின்று வாக்குறுதிகளை அள்ளி விசுகின்றன.

இலங்கை அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றபின்னர் நாட்டில் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் கூர்மையடையத் தொடங்கின. இந்த இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணப்போவதாக கடந்த 60 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு இனங்களுக்கும் தலைமை தாங்கியவர்கள் வாக்குறுதி அளித்து பாராளுமன்றத்தை பிரதிநித்துவப் படுத்தி வந்தனர். ஆனால் இவர்களின் காலத்தில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகள் வளர்ந்ததே அன்றி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.

நடைபெறவிருக்கும் இந்த தேர்தல்மூலம் அமையப்போகும் புதிய ஆட்சியை தாங்கள்; பிடித்தால் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்ச்ஙீனைக்கு தீர்வு காணுவோம் என ஒவ்வொரு கட்சியினரும் வாக்குறுதியளிக்கின்றனர்.
தமது வெற்றியை உறுதி செய்துகொண்டுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியலமைப்பை மாற்றி தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்காகத்தான் போராடுகிறோம் என தெரிவிக்கிறது.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்து நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு நாட்டை வளம் மிக்க நாடாக மாற்றுவோம் எனவும், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி)தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணி, மற்றும் தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும் எனவும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு என்ற விடயத்தில் அரசிடம் தீர்க்கமானதொரு நிலைப்பாடு இல்லை. எனவே அனைத்து சமூகத்தினையும், அனைத்துக் கட்சிகளையும் பிரதிநித்துவப் படுத்தும் வகையில் தேசிய நல்லிணக்க அரசாங்கம் ஒன்றை அமைப்பதன்மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சுலபமாகிவிடும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கிறது.

தமிழ் மக்களின் இருப்பை நிலைநிறுத்தி பேரம் பேசும் சக்தியாக தமிழ் மக்கள் வரக்கூடிய வகையில் தேர்தல் அமையப்போகிறது. எனவே பேரம் பேசும் சக்தியாக எம்மை அனுப்புங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
ஏனைய பெரும்பாலான கட்சிகள் யதார்த்தமான அரசியல் நடவடிக்கைகளுடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம் எனத் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினை முதலிடத்தை வகித்தாலும் உடனடித்தீர்வாக எதிர்பார்ப்பது அகதி வாழ்க்கையிலிருந்து மீண்டு தாம் தமது சொந்த வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதேயாகும்.
தமிழ் பேசும் மக்கள் பேரம் பேசும் சக்தியாக இருக்கும் நிலை இனி வராது என்பதை கடந்த ஜனாதிபதி தேர்தல் உணர்த்திவிட்டது. எனவே இனி பேரம் பேசும் சக்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த 60 வருடங்களில் தமிழ் தலைவர்கள் பேரம் பேசும் சக்தியாக இருந்து பேரம் பேசக்கூடிய சந்தர்ப்பங்களும் கிடைத்தும் இவர்களால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியவில்லை.

கடந்த காலங்களில் தமிழ் தலைவர்களின் நடைமுறைக்கு அப்பாலான எதிர்ப்பு அரசியல் அணுகுமுறைகள் தமிழ் மக்களை மிகப் பெரிய அனர்த்தனத்துக்கு உள்ளாக்கின.
இனப்பிரச்சினையில் ஒஸ்லோ உடன்படிக்கையை பின்பற்ற வேண்டிய கடப்பாடு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை என்று ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ள கருத்துக் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எழுப்பியுள்ள கேள்வி வேடிக்கையாக உள்ளது.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளமை இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு நிலைப்பாடு இருந்தது என்று இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சான்றிதழ் வழங்குவதாகும்.

எந்தக் காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு நிரந்தர கொள்கை கிடையாது. ஒஸ்லோ உடன்படிக்கையை புலிகள் மறுத்த பின்னர் சமஷ்டி தீர்வு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி எந்தக்காலத்திலும் சமஷடியை ஏற்றுக்கொண்டதில்லை என ரணில் தெரிவித்திருந்தார்..

இராணுவ பலம் இழந்துவிட்ட தமிழ் மக்களுக்கு அரசியல் பலம் தேவை என்பதால் தமக்கு வாக்களிக்கவேண்டும் என மாவை சேனாதிராசா தெரிவிக்கிறார். 30 ஆண்டுக்கு மேலாக தமிழ் மக்கள் இவர்களுக்கு அளித்த அரசியல் பலத்தை இவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்பதால் இவர்கள்மேல் நம்பிக்கை இழந்தபின்னரே இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இன்று இவர்கள் மீண்டும் அரசியல் பலம் வேண்டி நிற்கின்றனர்.

இன்று தந்தை செல்வாவின் 112வது பிறந்த தினமாகும். செல்வாவின் பிறந்த தினம் இன்று பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. கடந்த 30 வருடங்களாக தந்தை செல்வாவை மறந்திருந்தவர்கள் இன்றாவது அவரை நினைவுகூருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். தந்தை செல்வா தனக்குபின் தமிழசுக் கட்சியை வழிநடத்துபவர்கள் தமிழ் மக்களை காப்பார்கள் எனக் கூறவில்லை. தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் எனக் கூறிச்சென்றார். அவருடைய தீர்க்கதரிசனத்திற்கு தலைவணங்குவோம்.

மேலும் இங்கே தொடர்க...

தமிழ் பிரதிநிதித்துவம் குறையலாம்'


செய்தி ஆய்வாளர் நிராஜ் டேவிட்


இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவும், வருகின்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் திட்டமிடப்பட்ட வகையில் பல சுயேச்சைக் குழுக்கள் போட்டியில் இறக்கப்பட்டிருப்பதும், அங்கு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என்கிறார் செய்தி ஆய்வாளரான நிராஜ் டேவிட்.

இதனால், இலங்கை இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் பேரம் பேசும் திறன் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறுகிறார்.

ஆயுத ரீதியாக மிகவும் பலமாக இருந்த விடுதலைப் புலிகளின் கரம், ஆயுதங்களை மௌனிக்க வைத்தன் காரணமாக இன்று அடங்கிப் போயிருக்கின்ற நிலையில், தமிழ் மக்களிடம் இருக்கும் அரசியல் பலம் கூட மழுங்கடிக்கப்படக்கூடிய நிலை இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் நிராஜ் கூறுகிறார்.

உண்மையில், ஒரு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மிகவும் ஒற்றுமையாக அரசியலைச் சந்ததிந்திருக்க வேண்டிய தமிழ் சமூகம் பிளவுபட்ட நிலையில் தேர்தலை சந்திப்பது அவர்களுக்கு இந்த தேர்தலில் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


வடக்கை விட கிழக்கு மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்படலாம்


வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் தமிழ் கட்சிகளுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும், அங்கு இருக்கும் மாவட்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஏனைய கட்சிகளில் இருக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கே போகும் வாய்ப்பு உள்ளது; ஆனால் கிழக்கு மாகாணத்தில் அத்தகைய நிலை வரும் போது அந்த பிரதிநிதித்துவம் ஏனைய சமூகங்களுக்கு சென்று விடும் என்று நிராஜ் டேவிட் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் தமிழ் கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டாலும், அப்போது ஆயுத ரீதியில் பலமாக இருந்த விடுதலைப் புலிகளின் ஆதரவு ஒரு கட்சிக்கு தெளிவாக வழங்கப்பட்டிருந்தது; அதனால் அந்தக் கட்சி அந்த தேர்தலில் கணிசமான ஆசனங்களை பெற முடிந்தது. என்று அவர் கூறுகின்றார். ஆனால் இன்று அந்த நிலை கிடையாது என்றும், தமிழ் வாக்காளர்கள் கூட அண்மைய போர் மற்றும் ஏனைய நிலைமைகள் காரணமாக குழப்பிப் போய் இருப்பதாகவும் நிராஜ் டேவிட் கூறுகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

அவுஸ்திரேலியாவில் 25 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட 3 தமிழர்கள் இன்று விடுதலை






விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்களை அவுஸ்திரேலிய நீதிமன்றம் விடுவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனம் ஒன்றின் பெயரில் இம்மூவரும் நிதி சேகரித்து விடுதலைப் புலிகளுக்கு அனுப்பியதாக அவுஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேமவுண்ட் தெற்கைச் சேர்ந்த தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் சிவராஜா யாதவன்(வயது 39)இ மவுண்ட் வவெர்லியச் சேர்ந்த அரூரன் விநாயகமூர்த்தி(வயது 35) மற்றும் சிட்னியைச் சேர்ந்த கணக்காளரான ஆறுமுகம் ரஜீவன்(வயது 43) ஆகியோரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் தலா 1மில்லியன் டொலர்களை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

இவர்களுள் விநாயகமூர்த்தி என்பவர் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கும்இ செயலிழகச் செய்வதற்குமான இலத்திரனியல் உதிரிப்பாகங்களை விடுதலை புலிகளுக்கு செய்து வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலிய மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி போல் கோங்லன் இன்று இம்மூவரையும் அவர்களின் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்துள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2007 ஆம் ஆண்டு இம்மூவரும் பயங்கரவாத முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 25 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பதுளையிலிருந்து கதிர்காமம் வரை புதிய ரயில் பாதை : ஜனாதிபதி அறிவிப்பு



பதுளையிலிருந்து கதிர்காமம் வரை புதிய ரயில் பாதை : ஜனாதிபதி அறிவிப்பு
பதுளை தொடக்கம் பிபிலை – வெள்ளவாயா ஊடாக கதிர்காமம் வரை புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் மெதகெட்டியவில் தெரிவித்தார்.

பதுளையிலிருந்து கதிர்காமத்திற்கு அமைக்கப்படும் புதிய ரயில் பாதை மாத்தறையிலிருந்து கதிர்காமத்திற்கு அமைக்கப்படும் ரயில் பாதையுடன் இணைக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தங்கல்ல, மெதகெட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். _
மேலும் இங்கே தொடர்க...

ஸ்ரீலசுக பிரசாரக் கூட்டத்தில் இசைக்கச்சேரி நடத்திய குழு விபத்தில் சிக்கி மூவர்




ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் எஸ்.பி. திசாநாயக்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இசைக் கச்சேரி நடத்திய குழுவினர் சென்ற வாகனம் ரயிலில் மோதுண்டதில் அக்குழுவைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை, கிரிபத்கும்புர பகுதியில் சிவப்பு சமிக்ஞையையும் தாண்டிச் செல்ல முற்பட்ட வேளை இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரஸ்தாப வாகனம் ரயிலில் மோதுண்டு சுமார் 500 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். - பூநகரி இடையே படகுச் சேவை அடுத்த மாதம் ஆரம்பம்


யாழ். - பூநகரி இடையே படகுச் சேவை அடுத்த மாதம் ஆரம்பம் : வ.மா. ஆளுநர்
யாழ்ப்பாணத்துக்கும் பூநகரிக்குமிடையில் படகுச் சேவை ஒன்று அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்தார் என அரச இணையத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரச ஊழியர்கள் சிரமமின்றி யாழ்ப்பாணம் சென்று வர முடியும்.

யாழ்ப்பாணத்திலிருந்து தரை மார்க்கமாக பூநகரிக்கு வந்து சேர குறைந்தது இரண்டரை மணி நேரம் செல்கின்றது. இப்பயணத்தில் ஆனையிரவு, பரந்தன், ஜயபுரம் ஆகிய இடங்களைத் தாண்டி வருவதலேயே இந்தக் காலதாமதம் ஏற்படுகிறது.

எனினும் யாழ். பூநகரி படகுச் சேவை மூலம் நேரத்தை மீதப்படுத்த முடிவதோடு, வீண் சிரமங்களையும் குறைக்க முடியும் எனவும் வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள், மாகாண சபை அதிகாரிகள், போன்றோர் இந்தப் படகுச் சேவை மூலம் நன்மையடைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மற்றும் பூநகரி மீனவர் சங்கங்களின் ஒத்துழைப்புடன் படகுகள் இச்சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில்




எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் செயலகம் அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதுடன், அச்சிடப்பட்ட 22 மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுகளும் தேர்தல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணி கடந்த 4 ஆம் திகதி அரசாங்க அச்சகத்தில் ஆரம்பமாகின. 29 ஆம் திகதி அச்சிடும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இம்முறை தேர்தலில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதில் சற்று நெருக்கடி ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நாளை மன்னாரில் தந்தை செல்வா நினைவு தின நிகழ்வுகள்



தமிழ் இனத்தின் தலைவரும் ஈழத்து காந்தி என அழைக்கப்படுபவருமான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 112 ஆவது வருட ஞாபகார்த்த தின நிகழ்வு நாளை மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.எம்.அந்தோனி மார்க் தலைமையில் மன்னார் பஸார் பகுதியில் இடம்பெறவுள்ளது.

பஸார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய சொற்பொழிவுகளை ஆற்ற பலர் வருகை தர இருக்கின்றனர்.

அதேவேளை, வவுனியா மாவட்டத்திலும் நாளை புதன் கிழமை தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வுகள் இடம் பெற இருக்கின்றன. வவுனியா காளி வேப்பங்குள்ம் அந்தோனியார் ஆலயம், வேப்பங்குளம் சூசையப்பர் ஆலயம் ஆகிய திருத்தலங்களில் தந்தை செல்வாவுக்காக இரங்கல் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும். _
மேலும் இங்கே தொடர்க...

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி அழைப்பு





இன, மத, குல, அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்காக வலுவான பாராளுமன்றத்தை அமைப்பதற்குக் கைகோர்க்க முன்வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அம்பலன்தோட்டையில் நேற்று 30ம் திகதி நடைபெற்ற, மக்கள் சந்திப்பில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாம் இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற அடையாளத்துடன் எழுந்து நிற்க வேண்டும். அதற்காகப் பேதங்களை மறந்து இலங்கையர் என்ற அடையாளத்துடன் முன்னேறுவது மிகவும் அவசியம்.

இதுவே உங்களதும், உங்களது எதிர்கால சந்ததியினரதும் வளமானதும், சுபீட்சமானதுமான எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். இதனை சகலரும் உணர்ந்துகொண்டு பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் கைகோர்ப்பது அவசியம்.

நான் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் வரையும் சுதந்திரமடைந்த காலம் முதல் இந்நாட்டினரின் தலா வருமானம் சுமார் ஆயிரம் அமெரிக்க டொலராகவே இருந்தது. இதனை நான் பதவிக்கு வந்த பின்னரான கடந்த நான்கு வருடங்களில் 2300 அமெரிக்க டொலர் வரையும் அதிகரித்துள்ளேன்.

என்றாலும் இந்நாட்டினரின் தலா வருமானத்தை நாலாயிரம் அமெரிக்க டொலர் வரையும் அதிகரிக்கச் செய்வதே எமது இலக்காகும். இதன் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரமும், பொருளாதார வசதியும் மேம்பாடு அடையும்.

மேலும் நாம் எமது எதிர்கால சந்ததியினரை உலகுடன் தொடர்புகொள்ளக் கூடிய சமூகமாகக் கட்டியெழுப்புவதற்கு விரும்புகின்றோம். அதற்காக அவர்களுக்கு மொழி அறிவு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக ஆங்கில மொழி அறிவு இன்றியமையாதது. இது எமது பிள்ளைகளின் வளமான எதிர்காலத்திற்குப் பெரிதும் உதவும். நாம் பிளவுபட்டிருந்த நாட்டை ஒன்றுபடுத்தியுள்ளோம்.

இனி எஞ்சி இருப்பது உங்களதும், உங்களது குழந்தைகளதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்யும் பணி இது. எமது பொறுப்பாகும் இதற்கான அடித்தளத்தை பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போதே இட்டோம்.

அந்த வகையில் மின்னுற்பத்தி திட்டங்கள், துறைமுகங்களின் அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் பயனாக போக்குவரத்துக்கான காலம் குறைந்துள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிதாக துறைமுகம், விமான நிலையம், சர்வதேச தரத்திலான கேட்போர் கூடம், விளையாட்டு மைதானம் என்பன அமைக்கப்படுகின்றன.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் புதிய வேலை வாய்ப்புக்களும், தொழிற்சாலைகளும் உருவாகின்றன. அதன் பயனாக வேலையின்மை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். எமது பொருளாதாரமும் மேம்பாடு அடையும்.

ஆகவே தான் நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிக்கும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து வலுவான பாராளுமன்றத்தை அமைப்பதற்காகக் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...