8 செப்டம்பர், 2009

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் காரணமாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாக நினைப்பது தவறானது-புளொட் தலைவர்.



தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வி விவரம் பின்வருமாறு:
-நேர்காணல் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கேள்வி: நடந்து முடிந்த யாழ். உள்ளுõராட்சித் தேர்தல்களில் உங்கள் கட்சி தோல்வியடைந்தது. விசேடமாக, வவுனியாப் பிரதேசம் உங்கள் கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்பட்டது. அதில்கூட உங்களால் வெற்றியடைய முடியவில்லையே?


பதில்:வவுனியாவை பொறுத்தமட்டில் நாங்கள் நகர சபையை வெல்வோம் என்று முற்றுமுழுதாக நம்பினோம். இந்தத் தோல்விக்குச் சில காரணங்கள் இருக்கின்றன. வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதற்கு விடுதலைப் புலிகள் மீது மக்கள் கொண்டிருந்த அனுதாபமே பிரதான காரணம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாகவே மக்கள் அதற்கு வாக்களித்தனர். இது தொடர்பில் அந்தப் பிரதேச மக்களுடன் கதைத்த போது இதனையே அவர்களும் தெரிவித்தனர். புலிகள் மீது மக்கள் கொண்ட அனுதாபம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குகளாகக் கிடைத்தன. இது இங்கு மட்டுமல்ல யாழ்ப்பாணத்திலும்தான். இதுவும் எங்கள் தோல்விக்குக் காரணம்.வவுனியாவில் தேர்தல் தினத்தன்று இடம்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களும் எங்களுக்குத் தோல்வியைத் தந்தன. அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட கட்சிகள் எமது ஆதரவாளர்களைப் பயமுறுத்தியதன் காரணமாக அவர்கள் வாக்களிக்கச் செல்லவில்லை.ஆனால், நாம் தோல்வியடைந்ததற்கான முழுப் பொறுப்பினையும் மற்றவர்கள் தலையில் முற்றாக சுமத்திவிடப் போவதில்லை. நாங்களும் பிழைகள் விட்டுள்”ளோம். எமது கட்சிக்கும் எமது மக்களின் தேவைகளுக்குமான பணத்தை நாம் வவுனியா வர்த்தகர்களிடமிருந்தே பெற்று வந்தோம். இதனை நாம் மட்டும் செய்யவில்லை. கடந்த காலங்களில் நாம் ஆயுதம் ஏந்தியவர்களாக இருந்தோம். இந்த நிலையில் நாம் வர்த்தகர்களிடம்” நிதி கேட்கும்போது நாம் ஆயுதபலத்தைக் கொண்டே பணம் கேட்பதாக அவர்கள் நினைத்திருக்கலாம். இதன் காரணமாக அவர்கள் அதிருப்தியடைந்து எமக்கு வாக்களிக்காமலும் விட்டிருக்கலாம். ஆகவே, நாம் இப்படி நடந்து கொண்டமை தவறாக இருக்கலாம். ஆனால்”, இவ்வாறு பெற்றுக் கொண்ட நிதி எமது கட்சிக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை, வவுனியா மக்களின் நலன்களுக்குமே பயன்படுத்தப்பட்டன. இதற்கு உதாரணமாக ஒரு விடயத்தை இங்கு கூற விரும்புகிறேன். வன்னியில் மிகப் பெரிய அவலத்துக்கு மத்தியில் அங்கிருந்து வவுனியாவுக்கு வந்த மக்களுக்குத் தேவைப்பட்ட உதவிகளைச் செய்தோம். அதற்காக செலவிடப்பட்ட பணம் வவுனியா வர்த்தகர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டதே. ஆனால் எந்த வர்த்தகரிடமிருந்தும் மிரட்டிப் பணம் பெறவில்லை.இதன் காரணமாக இன்று நாம் இருதலைக்கொள்ளி எறும்பு போல் உள்ளோம். மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதா? அல்லது வர்த்தகர்களிடமிருந்து பணம் பெறுவதா? ஆனால் நாம் எமது மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதனையே விரும்புகிறோம். எமது மக்களுக்கான உதவியில் அரசாங்கத்தை மட்டும் நாம் நம்பிக் கொண்டிருக்க முடியாது. எம்மாலானவற்றையும் செய்ய வேண்டும் என்பதே எமது விருப்பம்.இதேவேளை, நாம் எமது நிலைப்பாட்டில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய கட்டாய நிலையேற்பட்டுள்ளது. இது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். அதன் மூலம் மக்கள் எமது நிலைப்பாட்டை அறிந்து கொள்வர்.


கேள்வி: பாதுகாப்பு அமைச்சு உங்களுக்குப் பணம் வழங்குகிறதுதானே?


பதில்: இப்போது எமக்கு பாதுகாப்பு அமைச்சு பணம் தருவதில்லை. 2004 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த போதே அது நிறுத்தப்பட்டு விட்டது.


கேள்வி: உங்கள் கட்சிக்கு மட்டுமா?


பதில்: இல்லை.. இல்லை.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்திருக்கும் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்றவற்றுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டவுடன் எங்களுக்கான நிதியும் நிறுத்தப்பட்டது.


கேள்வி: உங்கள் கட்சியின் தோல்விக்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா?


பதில்: இன்னும் ஒரு சில காரணங்கள் உள்ளன. நாலாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் அவர்கள் வவுனியாப் பிரதேசத்தில் இல்லாமையேயாகும். ஆள் அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிக்க முடியாத நிலை. இவற்றின் காரணமாகவும் எமக்குத் தோல்வி ஏற்பட்டது.


கேள்வி: வன்னியிலிருந்து வெளியேறிய மக்கள் வவுனியாவுக்கு வந்து சேர்ந்த காலகட்டத்தில் அந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை உங்கள் இயக்கம் செய்து வந்தது. ஆனால், அந்த உதவிகள் திடீரென நிறுத்தப்பட்டமைக்கு என்ன காரணம்? நலன்புரி முகாம்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதா?


பதில்: வன்னியிலிருந்து பெரும் அவலத்துக்கு மத்தியில் வவுனியாவுக்கு வந்த மக்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கக் கூடிய சந்தர்ப்பம் ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்தது. அந்த மக்கள் அப்போது முகாம்களில் அல்லாமல் ஓமந்தையிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டதுடன் அங்கு செல்ல எம்மை இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் நாம் வவுனியா செயலகம் மூலம் உதவிகளை வழங்கினோம்.


கேள்வி: உங்களது கட்சி அரசுடன் இணையாவிட்டாலும் அரசு சார்புத் தன்மையைக் கொண்டது. இந்த நிலையில் நீங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிட்டிருப்பின் வெற்றி பெற்றிருக்க முடியாதா?


பதில்: எங்களது மக்களின் அடிப்படை அபிலாஷைகளை விட்டுக் கொடுக்காமல் அரசியல் ரீதியாக ஒரு சரியான அதிகாரப் பரவலாக்கம் வேண்டுமென்று போராடும் அதே நேரத்தில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் நீக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாகவும் சுயகௌரவத்துடனும் வாழும் நிலை ஏற்பட வேண்டுமென்பதில் நாங்கள் கருத்தாகவுள்ளோம்”. எமது மக்களின் பிரச்சினைகளை உணர்ச்சி பொங்கக் கூறி விட்டு, அதனையே அரசியலாக மாற்றி வியாபாரம் செய்ய நாம் தயார் இல்லை.எமது தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் சுயகௌரவத்துடன் வாழ வேண்டுமென்ற எமது இலக்கை அடையவோ அல்லது அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவோ ஒரு கட்சி வகையில் எம்மால் மட்டும் தனித்து நின்று செயற்பட முடியாது. இதற்கு அரசாங்கத்தின் உதவியும் எமக்குத் தேவைப்படுகிறது. கடந்த காலத்தில் வேறெங்கும் இடம்பெறாத அளவு அபிவிருத்திப் பணிகளை வவுனியாவில் நாம் செயது முடித்தோம். அரசுடன் நாம் வைத்திருந்த நல்லுறவே இதற்குக் காரணம். அதுமட்டுமல்ல, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முன்னெடுப்புகளுக்கும் எமது முழுமையான ஆதரவினை அரசுக்கு வழங்கி வந்துள்ளோம்.1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் ஒரு விடயத்தில் நாம் தெளிவாக இருந்தோம். தனி நாடு என்பது அடைய முடியாத ஓர் இலக்கு. இதற்காகத் தொடர்ந்து போராடுவதன் மூலம் மக்களின் அழிவைத்தான் நாம் காணப் போகிறோம். ஆகவே, ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறானதொரு தீர்வைக் காண்பதென்றால் அதற்கு அரசுடன் நல்லுறவு கொண்டு செயற்பட வேண்டும் என்ற இந்த விடயத்தில் நாம் இன்றும் தெளிவாகவே உள்ளோம். இதனை வைத்துக் கொண்டு அரசுக்கு நாம் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்குவதாக யாரும் அர்த்தம் கொள்ளக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட விடயங்களுக்கும் மற்றும் எமது பிரதேச அபிவிருத்திக்குமான உதவிகளைப் பெறும் பொருட்டே அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம். தமிழ் மக்களின் கவலையைப் போக்க முடியாத நிலையில் வெறுமனே ஓர் அரசியல் கட்சியாக இருப்பதில் என்ன பயன்?”


கேள்வி: நடந்து முடிந்த தேர்தல் மூலம் தமிழ் பேசும் மக்கள் அரசுக்குக் கூறும் செய்தி என்ன?


பதில்: நிச்சயமாக தமிழ் மக்கள் எந்தத் தெளிவான செய்தியையும் கூறவில்லை. ஒரு குழப்பமான செய்தியையே அவர்கள் தெரிவித்துள்ளனர்.


கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதாகத் தென்னிலங்கை சிங்களக் கடுங்கோட்பாளர்களைக் கொண்ட கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?


பதில்: தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் ஆயுத ரீதியாக பலமடைவதற்கு அல்லது ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன. தந்தை செல்வநாயகத்தின் தலைமையிலும்” அண்ணர் அமிர்தலிங்கம் தலைமையிலும் ஆயுதப் போராட்டம் அல்லாத சாத்வீகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பல சத்தியாக்கிரகங்கள் நடைபெற்றன. பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன் சுதந்திரத்துக்குப் பின்னிருந்தே தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளனவென்பதனையே இவை வெளிக்காட்டுகின்றன. அப்போது ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை. புலிகள் அமைப்பும் இருக்கவில்லை. இவ்வாறான ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் போனமைக்கு அன்றிருந்த சிங்கள கடும் போக்காளர்களே காரணம். பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படும் போது எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சில கருத்துகளைத் தெரிவித்தார். “கடும் போக்காளர்களின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த ஒப்பந்தம் இன்று கிழித்தெறியப்படுகிறது. ஆனால் இதன் விளைவுகளை எதிர்காலத்தில் அனுபவிக்க நேரிடும்’ என்று அவர் குறிப்பிட்டார். அவர் அன்று கூறியபடியே இன்று தமிழ் பேசும் சமூகம் மட்டுமல்ல முழு இலங்கையுமே மனிதப் பேரவலத்தையும் பேரழிவையும் எதிர்கொண்டு விட்டது. இதேவேளை, இப்போதுள்ள கடும் போக்காளர்களும் தமிழ் மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படுவதனை எதிர்க்கிறார்கள். இது பாரிய விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதனை மறுதலிப்பதன் மூலம் இந்நாட்டில் நிம்மதியற்ற ஒரு சூழ்நிலையை இவர்கள் உருவாக்க முயறசிக்கின்றனர். அன்று பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இன்று இந்தளவு அழிவுகளை இந்த நாடு எதிர்நோக்கியிருக்காது. அன்று செய்தட தவறையே இன்றுள்ள கடும் போக்காளர்களும் செய்யப் பார்க்கிறார்கள். இது இன்றைய நிலையில் முழு இலங்கைக்குமே ஆரோக்கியமான ஒன்றல்ல..இவ்வாறான கடுங்கோட்பாளர்கள் நாடாளுமன்றத்திலுள்ள பலவீனத்தை வைத்துக் கொண்டு ஜனாதிபதி மகிந்தவை முறைமுகமாக பயமுறுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலிருந்து அவரைத் தடுக்க முயற்சிக்”கின்றனர்.மேலும, தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் காரணமாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாக இவ்வாறான சக்திகள் நினைப்பதும் தவறானது.தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். இந்த விடயத்தில் அவர் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறார். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்பதனை ஜனாதிபதி மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அவர் சமஷ்டி முறையில் தீர்வு காண்பார் என்று நாம் நம்பவில்லை.ஏதாவதொரு தீர்வை வழங்க வேண்டுமென ஜனாதிபதி நினைக்கிறார். ஆனால் அவ்வாறான “ஏதோவொரு தீர்வை’ நாங்கள் ஏற்கத் தயாராகவில்லை. வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தங்களது விடயங்களை தாங்களே பார்த்துக் கொள்ளக் கூடியதான ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். இது நிறைவேற்றப்படும் வரை பிரச்சினை இருந்து கொண்டே போகும். அடுத்த ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நிலைமைகள் நிச்சயமாக மாறும். கடுங்கோட்பாளர்கள் என்று கூறப்படுவோர் சிங்கள மக்களால் நிராகரிக்கப்படுவர். அவ்வாறு நிராகரிக்கப்படும் போது நிலைமைகள் சாதகமாக அமையலாம்”.அந்த நேரத்தில் தமிழ்க் கட்சிகள் ஒரு நிலைப்பாட்டுடன் செயற்பட்டு ஆலோசனைகளை முன்வைப்போமாகவிருந்தால் அதனை முன்னெடுத்துச் செல்வதும் இலகுவாகவிருக்கும்.


கேள்வி: எவ்வாறான தீர்வெனிலும் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்குட்பட்டதாகவே அமையும். இது தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தக் கூடியதாகவிருக்குமா?


பதில்: 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்திலான அதிகாரப் பகிர்வு போதாது. அதன் காரணமாகவே இன்று 13 பிளஸ் என்று கூறப்படுகிறது. இதனையே இந்தியாவும்” தற்போது வலியுறுத்தி வருகின்றது. ஆகவே இந்தப் பிளஸ் என்பதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை நாங்களும் அரசாங்கமும் கலந்து பேசி அது குறித்து ஒரு தீ”ர்மானத்தைக் கொண்டு வரவேண்டும்.


கேள்வி: பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சிக் குழுவின் சில ஆலோசனைகளே இந்தப் பிளஸ் ஆக இருக்கலாமல்லவா?


பதில்: சர்வகட்சிக் குழுவின் ஆலோசனைகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் நல்ல பல ஆலோசனைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுடன் பலமுறை இது தொடர்பில் நான் பேசிய போது அதனை அறிந்து கொள்ள முடிந்தது. அவ்வாறான நல்ல விடயங்களும் சேர்க்கப்பட்ட நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட்டால் அதனைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் அவை முதலில் முழுமையாக வெளியிடப்படவேண்டும்.


கேள்வி: புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிந்து ஐந்து மாதங்கள் கடந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வோ அல்லது அகதி முகாம் மக்கள் மீள்குடியேற்றமோ இல்லாத இந்த நிலை தொடர்பில் உங்கள் கருத்து என்ன?


பதில்: எங்களைப் பொறுத்த வரையில் இன்று நாம் பிரதான பிரச்சினையாகக் கருதுவது வவுனியா அகதி முகாம் மக்கள் தொடர்பானதே. இது ஒரு முதன்மையான பிரச்சினையாக இன்று உருவெடுத்துள்ளது. இந்த முகாம்களில் மக்களுக்கு உயிர்ப் பயம் இல்லாத ஒரு நிலை உள்ளது என்பதனை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஒரு குறுகிய பரப்புக்குள் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை அடைத்து வைத்திருப்பதென்பது ஒரு சிறிய விடயமல்ல. அவர்கள் ஏறக்குறைய கைதிகள் போன்றே வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த மக்கள் இன்னொரு பேரவலத்தை நலன்புரி முகாம்களிலிருந்தே அந்த மக்கள் அனுபவித்தார்கள்”.இது தொடர்பில் ஜனாதிபதியை அண்மையில் சந்தித்து எனது கருத்துகளைத் தெரிவித்தேன். அடுத்த பருவகால மழை ஆரம்பிப்பதற்கு முன்னர் அந்த மக்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அவரிடம் முன்வைத்தோம். இது மட்டுமல்ல இன்னும் பல விடயங்களை ஜனாதிபதியிடம் கூறினோம்”.வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இன்னும் அந்த முகாங்களில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும். தேவைகள் காரணமாக வன்னிக்குச் சென்று அகப்பட்டுக் கொண்டவர்கள், சிறுவர்கள்,கர்ப்பிணிகள் போன்றோர்களையும் விடுவிக்கலாமென்ற ஆலோசனையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தோம். இதன் மூலம் ஆகக் குறைந்த ஓர் இலட்சம் மக்களாவது அங்கிருந்து வெளியேறக் கூடியதாகவிருக்கும். நலன்புரி முகாம்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கிறார்களென்பதற்காக இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை தொடர்ந்து அவலத்தில் ஆழ்த்த முடியாது. இதனை நாங்கள் ஜனாதிபதியிடம் தெளிவாக எடுத்து கூறினோம். இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக எம்மிடம் உறுதியளித்துள்ளார். அதனை ஜனாதிபதி செய்வாரென்று நாம் நிச்சயமாக நம்புகின்றோம்.எது எப்படியிருப்பினும் தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினையையும் நாம் அரசியல் மயப்படுத்தக் கூடாது. அது ஆரோக்கியமான செயற்பாடல்ல.. அவ்வாறு அரசியல் மயப்படுத்தினால் அது ஜனாதிபதிக்கும் சில வேளைகளில் சிக்கல் நிலையைத் தோற்றுவிக்கும். ஆகவே இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்.


கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலை உருவாகுமானால் அது இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்குக் களம் அமைக்குமா?


பதில்: ஆயுதப் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அழிவுகளையும் அவலங்களையும் வைத்துப் பார்க்கும் போது குறுகிய காலத்துக்குள் தமிழ் மக்கள் இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கு வருவார்களென்று நாம் நம்பவில்லை. அது நிச்சயமாக நடைபெறாதென்றே நம்புகிறேன்”. ஆயுதப் போராட்டத்தை மக்கள் வெறுக்கிறார்கள். அவர்களுக்கு இன்று தேவைப்படுவது அமைதியான வாழ்க்கையே. ஆனால் அரசியல் தீர்வு ஒன்று வராவிட்டால் நிச்சயமாக அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். இவ்வாறானதொரு நிலையைத் தவிர்த்துக் கொள்ள வேண்டிய கடப்பாடு அரசுக்கு மட்டுமல், பெரும்பான்மை சமூகத்துக்கும் உண்டு. இதில் எதிர்க்கட்சிக்கும் பாரிய பங்குண்டு.


கேள்வி: ஆயுதப் போராட்டமே இந்தளவு பாரிய அழிவுக்கு வித்திட்டது என்று நீங்கள் கூறுகிறீர்களா? நீங்களும் ஆயுதம் தரித்திருந்தவர்கள்தானே?


பதில்: ஆம், ஆயுதப் போராட்டமே இந்தப் பெரும் அழிவை ஏற்படுத்தியது. இந்தத் தவறு அனைவராலுமே விடப்பட்டுள்ளதென்பதும் உண்மை. இதன் பங்களிப்பை இங்கு நான் விகிதாசாரப்படுத்திப் பார்க்க விரும்பவில்லை. ஆனால் இவ்வாறானதொரு பேரழிவுக்கான காரணமாக இருந்துள்ளவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே என்பதனை நான் இங்கு குறிப்பிட வேண்டும். ஏனைய இயக்க அங்கத்தவர்களைப் படுகொலை செய்ததுடன் மட்டுமல்லாமல் தமிழ்த் தலைவர்கள், புத்தி ஜீவிகளையும் அவர்கள் கொன்றொழித்தனர். தாங்களே தமிழ் மக்களை இரட்சிக்க வந்தோர்களாகப் புலிகள் தங்களைக் காட்டிக்கொண்டனர்.எதற்காக இந்தப் போராட்டம் எதற்காக முன்னெடுக்கப்பட்டதோ அந்த இலக்கிலிருந்து அவர்கள் முற்றாக விலகிச் சென்றனர். இது பாரிய தவறாக அமைந்ததுடன் அழிவுகளையும் இன்று ஏற்படுத்தியுள்ளது.


கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களின் அரசியலில் ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதா?


பதில்: பலரும் இவ்வாறான கருத்தையே கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் நான் அப்படிக் கருதவில்லை. ஆயுதப் போராட்ட காலத்தில் ஆயுதத்தினாலேயே தலைமைத்துவம் உருவாக்கப்பட்டது. இந்த நிலை மாறிவிட்டது. இனி மக்களால்தான் தலைமைத்துவங்கள் நிச்சயம் உருவாக்கப்படும். ஆயுத ரீதியான வெற்றிடம் மட்டுமே இப்போது உள்ளது. அரசியல் ரீதியான வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்பட்டு விடும்.


மேலும் இங்கே தொடர்க...

இடைத்தங்கல் முகாம்களில் உள்ளோர் விரும்புமிடத்து உறவினர்களுடன் சென்று தங்கலாம்

வன்னியில் யுத்த சூழலில் இடம்பெயர்ந்து செட்டிகுளம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள், தாங்கள் விரும்பும் பட்சத்தில் முகாம்களுக்கு வெளியில் வாழும் அவர்களது உறவினர்களுடன் சென்று தங்கலாம் என அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியில் வாழும் உறவினர்கள் விரும்பினால் முகாம்களில் உள்ளோரை தங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி வழங்க அரசு தீர்மானித்தள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று அறிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கதிர்காமர் கொலை வழக்கு : பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்களை நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை வழக்கில் அதனுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகநாதன் சிவசங்கர் ஆகிய இருவரும் இறந்துள்ளமை உறுதி செய்யப்பட்டமையினால் அவர்களின் பெயரை வழக்கிலிருந்து நீக்குமாறு இன்று உயர் நீதி மன்ற நீதவான் குமுதினி விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தடங்கலுக்கு வருந்துகின்றோம்.

கடந்த சில நாட்களாக எமது இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப தடங்கல் காரணமாக எமது செய்திகளில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்.
புதியபாதை நிர்வாகம்
மேலும் இங்கே தொடர்க...