30 நவம்பர், 2009

வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் பிரசார வேலைகள் ஆரம்பம்


ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதன் மூலம் ஆதரவு தேடுகின்ற பிரசார வேலைகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வவுனியாவில் ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து, அந்தக் கட்சியின் வன்னிப் பிரதேச அமைப்பாளர் பி.சுமதிபாலா தலைமையில் தேர்தல் பிரசாரத்திற்கான வைபவம் நடைபெற்றது.

இதில் கட்சியின் பிரதேச தலைவர்கள், முக்கியஸ்தர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவினத்தையும் சேர்ந்த பலதரப்பட்டோரும் கலந்துகொண்டனர்.

"வட பிரதேசத்திற்கே வசந்தம். நாட்டுக்கே விடுதலை"
"எமது அரசனுக்கும் இராணுவ வீரர்களுக்கும் வடபிரதேசத்தின் மக்களின் கௌரவம்"
போன்ற தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்தைத் தாங்கிய கட்அவுட் கட்டப்பட்ட ஊர்தி முன்செல்ல பி.சுமதிபாலா தலைமையில் கட்சியினரும், ஆதரவாளர்களும் பேரணியாக வவுனியா மன்னார் வீதியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்கள்.

இந்த பிரசாரப் பணிகளின் ஆரம்ப வைபவத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னிப்பிரதேச அமைப்பாளர் பி.சுமதிபால உரையாற்றுகையில்,

"வடக்கில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி வேலைகளை வடக்கில் முன்னெடுத்திருக்கின்றார்.

வீதிகள் அமைக்கப்படுகின்றன. பாலங்கள் கட்டப்படுகின்றன. மின்சாரமில்லாத இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றது. பாழடைந்து கிடந்த நீர்ப்பாசனக் குளங்கள் புனரமைக்கப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றிற்கெல்லாம் காரண கர்த்தாவாகிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி என்பதை இங்குள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் முடிவாகத் தீர்மானித்து விட்டார்கள். இந்தத் தேர்தலில் அமோக வெற்றி அவருக்கே கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.

அவருடைய வெற்றியை உறுதி செய்வதற்காகவே இந்தப் பிரசார வேலைத்திட்டத்தை நாங்கள் இன்று ஆரம்பித்திருக்கின்றோம்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
அடம்பனில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் பகுதியில் இன்று மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் தலைமையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் பகிர்தளிக்கப்பட்டன.

இந்நிகழ்வினை இராணுவத்தினரே ஏற்பாடு செய்திருந்தனர்.மாந்தை மேற்கு பகுதியில் உள்ள மக்களில் இராணுவத்தினரால் தெரிவு செய்யப்பட்ட 325 பேருக்கு இத்துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் 300 துவிச்சக்கர வண்டிகளும், ஐ.ஓ.எம் அமைப்பின் அனுசரணையில் 25 துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் வங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் மீள்குடியேற்றப்பட்ட இம்மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.தெரிவு செய்யப்பட்டவர்களுள் ஆசிரியர்கள், மாணவர்கள், குடும்பத் தலைவர்கள், கிராம சேவகர்கள் போன்றோர் அடங்குகின்றனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் றிசாட் பதியுதீன், மன்னார் மாவட்ட அரச அதிபர் ஏ.நிக்கொலாஸ் பிள்ளை, இராணுவ உயர் அதிகாரிகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட்ரதனி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்தவிக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...
திருமலை மீனவர் கொலை : சந்தேகத்தில் கடற்படை வீரர் மூவர் கைது


சீனன்குடா பகுதியில் காணாமல் போன சிங்கள மீனவ இளைஞர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 கடற்படைச் சிப்பாய்கள் பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன இம்மீனவருக்கும் கொட்டியாகுடா கடற்படை முகாம் சிப்பாய்களுக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார் என்றும் கூறுப்படுகின்றது.

குறித்த மீனவர் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட குழுவொன்று விசாரனைகளை மேற் கொண்டதாகவும் இதனையடுத்தே மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து இரகசியப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, கடற்படையும் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெருவிக்கப்படுகின்றது.

இறந்தவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையிலான பிரச்சினை ஒன்றின் விளைவாகவும் இந்தக் கொலை இடம் பெற்றிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகக் கடற் படையினர் கூறுகின்றனர். இது தொடர்பாக சில தகவல்கள் தங்களுக்குத் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...
இணக்க அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் : டக்ளஸ்

கல்வித்துறை மட்டுமல்லாமல், பொதுமக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் இருப்பது எமக்குத் தெரியும். இந்தப் பிரச்சினைகளுக்கு இணக்க அரசியல் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்" எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கான கற்றல் மேம்பாட்டுக்கான உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் தலைமையில் வவுனியா தெற்குக் கல்வி வலய அலுவலகத் தொகுதியில் இந்த வைபவம் நடைபெற்றது.

வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 15 பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டார்கள். சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சினால் 9 லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் தேவைக்குரிய புத்தகங்கள், கணனிகள், வெள்ளைப் பலகைகள் உட்பட 9 லட்சம் ரூபா பெறுமதியான முக்கிய உபகரணங்களை இந்த வைபவத்தின்போது அமைச்சர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வைபவத்தில் அமைச்சருடன், ஈபிடிபி கட்சியின் முக்கியஸ்தர் எம்.சந்திரகுமார், வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் ரகு சிவன் சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். வவுனியா தெற்கு கல்வி வலயப் பொறியியலாளர் எஸ்.சிறிதரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நா.மாணிக்கவாசகம், பண்டாரிகுளம் விபுலானந்தா மகாவித்தியாலய அதிபர் எஸ்.ஜெயதரன் ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்ததாவது:

"அஹிம்ஸை அரசியலும் சரி, வன்முறை அரசியலும் சரி எமது மக்களுக்குப் பெரும் துன்பங்களை ஏற்படுத்தினவே தவிர, எமது அரசியல் அபிலாஷைகளுக்குத் தீர்வு தேடித் தரவில்லை. எனவே கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, இணக்க அரசியலுக்கான எமது கரங்களைப் பலப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

இணக்க அரசியலின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பது எமது நம்பிக்கை. ஜனாதிபதி ஒருவர் ஆட்சிக்கு வந்ததும் இத்தகைய நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.

அதற்குப் பல தடைகள் இருந்தன. முக்கியமாக விடுதலைப்புலிகள் ஓர் அரசியல் தீர்வுக்குத் தடையாக இருந்தார்கள். பேச்சுவார்த்தைகளில் அவர்கள் பங்கு பற்றியபோதிலும் அரசியல் தீர்வுக்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. இப்போது அந்தத் தடை நீங்கி விட்டது.

பதின்மூன்றாவது அரசியல் திருத்தச் சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு பிரச்சிகைக்குப் படிப்படியாகத் தீர்வு காணமுடியும். இந்த அரசியல் திருத்தத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டிருக்கின்றார். இந்தியா உட்பட சர்வதேச நாடுகளும் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே, இதனை ஆரம்பமாகக் கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு எமது கரங்களை அரசியல் ரீதியாகப் பலப்படுத்த வேண்டும்.

கல்வி அபிவிருத்தியைப் பொருத்தமட்டில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தில் பலகாலமாகத் தீர்க்கப்படாமலிருந்த தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

அங்கு 532 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியாவில் 64 தொண்டர் ஆசிரியர்களும், மன்னாரில் 33 தொண்டர் ஆசிரியர்களும் இருக்கின்றார்கள். இவர்களில் சிலருக்கே நியமனங்கள் வந்துள்ளன. இந்த நியமனங்கள் வழங்குவது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் போட்டி?


எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியிடக் கூடுமென பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனநயாக மக்கள் முன்னணியுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.

மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து தீர்மானம் எடுக்கப்படும் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர் தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்னும் ஒரு சில தினங்களில் ஜனாதிபதித் தேர்தலில் தமது தீர்மானத்தை அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்னசிங்கத்திடம் கேட்ட போது, ஜனாதிபதித் தேர்தலில் இரா. சம்பந்தன் போட்டியிடுவது குறித்த தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டுமானால் எழுத்து மூலம் உறுதி வழங்க வேண்டும் - கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன்


சமூகம் அரசியல் ரீதியாக சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நம்பிக்கை வரக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். அதனை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். கடந்த கால வரலாற்றுத் தவறுகள் ஏற்படாத வகையில் எங்களது சமூகத்தை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உள்ளது என்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வினாயகபுரம் வாழைச்சேனை பேச்சியம்மன் ஆலயத்திற்கான மணிக்கூட்டு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் ஆலயத் தலைவர் கு. பிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவை தொடர்ந்தும் ஆதரிப்பதற்கு எமது கட்சி பல கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளது. அவற்றுக்கான பதில்களை வாய்ப்பேச்சில் இல்லாமல் எழுத்து மூலமே நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

கிழக்கு மாகாண சபையானது எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இயங்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். மக்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். கரையோர அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்து சிரமமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். வேலை வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி தருதல் வேண்டும். வேலை வாய்ப்பில் இன விகிதாசாரம் ணேப்படல் வேண்டும். கல்வி, பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இவற்றை அவர் நிறைவேற்ற வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றேன். ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து வாக்களிக்கக் கூடிய தகுதி உங்களிடம் உள்ளது. சரியான முடிவு எடுப்பதற்கு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
இந்திய கரையோர படையினரால் இலங்கை மீனவர்கள் 68 பேர் கைது-படகுகளில் பிடித்த மீன்களும் பறிமுதல்


இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் மீன் பிடித்தமைக்காக அந்நாட்டு கரையோர காவற்படையினர் 68 இலங்கை மீனவர்களை கைது செய்ததோடு 13 படகுகளையும் அவர்கள் பிடித்த 6,600 கிலோகிராம் மீன்களையும் கைப்பற்றியுள் ளனர். சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மீனவர்கள் அவர்களது படகுகளுடன் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.

கரையோர காவற்படையின் பிரதம பொதுஜன தொடர்பு அதிகாரி கமாண்டர் ராஜேந்திர நாத் காசிமேடு துறைமுகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது, ஒருங்கிணைக்கப்பட்ட கடல் மற்றும் ஆகாய மார்க்க ரோந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையிலிருந்து கரையோர வேவுக் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட காவற்படை விமானத்தினால் தமிழ் நாட்டின் வட பகுதியிலும் ஆந்திரா பிரதேசத்தின் தென் பகுதியிலும் உள்ள இந்திய கடற்பரப்புக்குள் இந்த இலங்கை மீன் பிடிக் கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று தெரிவித்தார்.

வேவு விமானம் கரையோர காவற்கரைக் கப்பலுக்கு அறிவித்ததையடுத்து ஐ. சி. ஜி. எஸ். விக்ரம் என்ற கப்பல் அவ்விடத்திற்குச் சென்று படகுகளுடன் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை கரையோர காவற்படையினரால் மொத்தம் 553 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 106 படகுகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் கமாண்டர் ராஜேந்திர நாத் கடந்த 6 மாதங்களில் மட்டும் 69 படகுகள் கைப்பற்றப்பட்டதுடன் 359 இலங்கை மீனவர்கள் கை

து செய்யப்பட்டார்கள் என்றும் கூறினார். கைது செய்யப்பட்ட மீனவர்களில் 547 பேர் 130 படகுகளுடன் பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது 40 இலங்கைப் படகுகள் காசிமேடு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப விசாரணைகளிலிருந்து இந்த மீனவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் இந்திய கடற்பரப்புக்கள் மீன்பிடிப்பதில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்றும் தெரிய வந்துள்ளதாகவும் நாத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், தாங்கள் தவறுதலாக இந்திய கடற்பரப்புக்குள் வந்துவிட்டதாகவும் தங்களை விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர். காசிமேட்டை சேர்ந்த மீனவர் சி. சைமன் கருத்து தெரிவிக்கையில், இந்திய கரையோர காவற்படையினர் இலங்கை மீனவர்களை கைது செய்யும் போது, அவர்கள் கௌரவமாக நடத்தப்படுவதுடன் நன்கு பராமரிக்கப்படுகிறார்கள். அவர்களது படகுகளும் எங்கள் பொலிஸாரால் நன்கு பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் இலங்கை கடற்படையினர் எங்களை பிடிக்கும் போது நடப்பது வேறு. எங்களை நையப்புடைப்பது மட்டுமன்றி எங்கள் படகுகள் திருப்பித் தரப்படுவது பற்றிய பேச்சே இல்லை என்று கூறினார்
மேலும் இங்கே தொடர்க...
அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் நாளைமுதல் கட்டுப்பணங்களை செலுத்தலாமென தேர்தல்கள் செயலகம் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் பொருட்டு விண்ணப்பிக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் நாளைமுதல் கட்டுப்பணங்களை வைப்புச் செய்யலாமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் டிசம்பர் 16ம் திகதி நண்பகல்வரை கட்டுப்பணங்களைச் செலுத்தலாமென செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் 50ஆயிரம் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். அரசியல் கட்சியொன்றிலிருந்து ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் ஒருவரோ, பிறிதொருவரோ கட்டுப்பணத்தைச் செலுத்த முடியுமென்பதுடன், அதற்காக கட்சித் தலைமையகத்திடமிருந்து கடிதமொன்று எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதேவேளை சுயேட்சைக்குழு ஒன்று 75ஆயிரம் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டியுள்ளதுடன், சுயேட்சைக் குழுவிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாயின் அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்றும் தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இங்கே தொடர்க...