21 செப்டம்பர், 2009

செங்கல்பட்டு முகாமில் இலங்கை அகதிகள் காலவரையற்ற உண்ணாவிரதம்


செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 50 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் அந்நாட்டு இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்ற போது ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். இவர்களில் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் 70 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

இவர்களில் பலர் மீது பொலிஸார் எந்தவித வழக்கையும் பதிவு செய்யாமலும், சிலர் மீது பதிவு செய்யப்பட்டும் வழக்குகளைத் தொடர்ந்து நடத்தாமலும் அலைக்கழிக்கப்பட்டும் வந்ததாகக் கூறப்படுகிறது.

பொலிஸாரின் இந்தப் போக்கைக் கண்டித்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள அகதிகள் அனைவரும் கடந்த ஜூலையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இதையடுத்து இவர்களிடம் மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதில் வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருக்கும் 12 பேரை உடனடியாக விடுவிப்பதாக உறுதி அளித்தனர்.மற்றவர்கள் மீதான வழக்குகளை அடுத்த ஒரு மாதத்தில் விரைந்து முடிப்பதாகவும் உறுதி அளித்தனர்.

இதன் காரணமாக சிறப்பு முகாம் அகதிகள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர். இதன்படி வழக்கு பதிவாகாமல் இருந்த 12 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நபர்கள் விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பொலிஸ் தரப்பில் கூறப்பட்டிருந்த ஒரு மாத கால அவகாசம் முடிந்துவிட்டதை அடுத்து கடந்த 5ஆம் திகதி முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அகதிகள் அறிவித்திருந்தனர்.

பொலிஸார் தரப்பில் மேலும் 15 நாள் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, இந்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த 15 நாள் அவகாசமும் முடிந்த பிறகும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் சிறப்பு முகாம் அகதிகள் 50 பேர் (உடல் நிலை பாதிப்பு காரணமாக 8 பேர் பங்கேற்கவில்லை) மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
ஐநா பிரதிநிதி வோல்டர் கெலின் நாளை இலங்கை விஜயம்


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி வோல்டர் கெலின் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு இடம்பெயர் முகாம் நிலைமைகள் தொடர்பில் இந்த விஜயத்தின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

வவுனியா மெனிக்பாம் உள்ளிட்ட இடம்பெயர் முகாம்களுக்கு சென்று நிலைமைகளை அவர் நேரில் பார்வையிடுவார் என ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இந்த விஜயத்தின் போது வோல்டர் கெலின் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...
நிஷந்த முத்துஹேட்டிகம இன்று மீண்டும் கைது : நாளை வரை விளக்கமறியலில்


தென் மாகாண சபை தேர்தலில் சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் காலி மாவட்ட வேட்பாளர் நிஷந்த முத்துஹேட்டிகம இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் தொடர்ந்தும் பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதையடுத்துக் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மெதிவக்க தெரிவித்தார்.

சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரான நடிகை அனார்கலியின் காலி அலுவலகத்தை கும்பலோடு சென்று தாக்கி, சேதம் விளைவித்ததாக இவர் மீது இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது.

கடந்த வாரம் நிஷந்த காலி பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவரைக் கடுமையாக எச்சரித்த பிரதம மாஜிஸ்திரேட் நீதவான் 2 லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷந்தவை நாளை (22ஆந் திகதி) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
பாதுகாப்பு அச்சுறுத்தலினால் இரு மணி நேரத்தை விமான நிலையத்தில் கழித்த சந்திரிகா-சென்னை இடைத்தங்கலும் ரத்துமுன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, சிறிது நேரம் சென்னையில் தங்கியிருப்பதென எடுத்த தீர்மானத்தை இடைநடுவில் கைவிட்டு கொழும்பு திரும்பியுள்ளார். அவர் கொழும்புக்கு திரும்புவதற்கு முன் வெள்ளிக்கிழமை மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறாமல் விமான நிலையத்திற்குள்ளேயே சுமார் 2 மணித்தியாலங்கள் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கேரளாவிற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்ற திருமதி குமாரதுங்க கொழும்பு திரும்பும் வழியில் சென்னை ஹோட்டல் ஒன்றில் சிறிது நேரம் தங்கியிருக்க தீர்மானித்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கருகிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவர் தங்குவதற்கு அறையும் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டிருந்தது என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் வெள்ளிக்கிழமை காலை 10.40 அளவில் சென்னை விமான நிலையத்தில் சென்றிறங்கிய திருமதி குமாரதுங்கவை பாதுகாப்பு முகவர் நிலைய அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை.

ஈழ ஆதரவுக் குழுவினர் திட்டமிட்டிருந்த எதிர்ப்பு ஆர்பாட்டம் தடை செய்யப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களும் அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டார்கள். இதனையடுத்து பிற்பகல் 1.30 அளவில் அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்பு திரும்பினார்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கைக்கு ஈரான் மேலும் கடன் உதவி

வட்டியில்லா கடன் அடிப்படையில்
மசகு எண்ணெய் வழங்க இணக்கம்

வட்டியில்லாக் கடன் அடிப்படையில் மேலும் ஒரு வருட காலத்திற்கு மசகு எண்ணெயை இலங்கைக்கு வழங்குவதற்கு ஈரான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணியான எம். எம். ஸ¤ஹைர் ஈரானிய அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பயனாக இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈரானுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொண்டிருந்த போது ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் பயனாக 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையும் இலங்கைக்கு வட்டியில்லா கடன் அடிப்படையில் ஈரான் மசகு எண்ணெயை வழங்கியது.

இந்த வசதியை மேலும் நீடித்துச் கொள்ளுவது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் ஈரானியத் தூதுவரான ஸ¤ஹைர் ஈரானிய எண்ணெய் அமைச்சின் தேசிய ஈரானிய எண்ணெய் கம்பனி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.

இப்பேச்சுவார்த்தையின் பயனாக 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரையும் வட்டியில்லா கடன் அடிப்படையில் இலங்கைக்கு மசகு எண்ணெய் வழங்க ஈரான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை இலங்கைக்குத் தேவைப்படும் பட்சத்தில் மேலதிக சலுகை வட்டியடிப்படையில் மசகு எண்ணெயை வழங்கவும் இப்பேச்சுவார்த்தையின் போது ஈரானிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

வட்டியில்லா கடன் அடிப்படையிலான வசதி மூலம் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு முதல் ஈரானிடமிருந்து இலங்கை 1.05 பில்லியன் (110,550 மில்லியன் ரூபா) அமெரிக்க டாலர்கள் பெறுமதியான மசகு எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.

வட்டியில்லாக் கடன் அடிப்படையில் மசகு எண்ணெயை இறக்குமதி செய்யும் வசதியை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு ஈரானிலுள்ள இலங்கைத் தூதுவர் ஸ¤ஹைருடன் நிதியமைச்சு செயலாளர் சுமித் அபேசிங்கவும், பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஏ. பி. தோரதெனிய ஆகியோர் கூட்டிணைந்து செயற்பட்டனர்.மேலும் இங்கே தொடர்க...