2 ஏப்ரல், 2011

தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பின் வலிமையை அனைவரும் ஏற்க வேண்டும்: சம்பந்தன்

தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்புகளுக்கு ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் அங்கீகாரம் வழங்கத் தவறியமையே வன்செயல்கள் மற்றும் ஆயுதப் போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது.

எனவே, இனியாவது தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கள் மதிக்கப்படுவதுடன் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நிலைத்து நிற்கக்கூடியதும் நியாயமானதுமான அரசியல் தீர்வை காண்பதற்கு தமிழ் மக்களும் தமிழ் அரசியல் சக்திகளும் ஐக்கியப்பட்டு திட மான உறுதியை எடுக்க வேண்டும்.

தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பின் வலி மையினை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு கிழக்கில் அண்மையில் தமிழ் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்ற உள்ளூராட்சி மன்றப் பிரதேசங்களில் நடத்தப்பட்ட தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மை வலுவுடன் வாழ்கின்ற உள்ளூராட்சி பிரதேசங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சி நம்பிக்கை தருகின்ற வெற்றியைப் பெற்றுள்ளது.

தமிழ் பேசும் மக்கள் தங்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வாழ்வதை உறுதிப்படுத்தும் ஆட்சி அதிகாரப்பகிர்வின் அடிப்படையிலும் அதன் மூலம் ஏனையோரின் கருணையில் தங்கியிருக்காமல் தங்களுடைய சொந்த முயற்சி ஊடாக தங்களின் சட்டபூர்வமான அரசியல், சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு ஒன்று தமிழ்ப் பிரச்சினைக்கு காணப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குறிக்கோளுக்கு தொடர்ச்சியான ஆதரவை தெளிவாக தமிழ் மக்கள் இத்தேர்தல் மூலம் தந்துள்ளனர்.

ஏப்ரல் 2010 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நிலைத்து நிற்கக்கூடியதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு என்ற தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை ஜயத்திற்கு இடமேயின்றி எடுத்துக்காட்டியுள்ளது.

ஜனநாயக ஆட்சி என்ற கொள்கையின் அடிப்படையின் கீழ் செயற்படுவதாகக் கூறிக் கொள்ளும் ஒரு நாட்டில் தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அரை நூற்றாண்டுக்கு மேலாக 1956 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் தேர்தல்களில் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வந்துள்ள ஜனநாயகத் தீர்ப்புக்களின் இணைவாகவே தமிழ் மக்களின் இந்த ஜனநாயகத் தீர்ப்புக்கள் அமைகின்றன. வன்செயல்கள் மற்றும் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முதற் காரணம் 1956 இலிருந்து தமிழ் மக்களால் அளிக்கப்பட்டு வந்த ஜனநாயகத் தீர்ப்புக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதற்கு தவறியதேயாகும்.ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால் நாடு குறிப்பாக தமிழ் மக்கள் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியதாயிற்று. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்த யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் போராட்டத்தில் பங்குபற்றாத அப்பாவி தமிழ் மக்களே பெரும் எண்ணிக்கையில் பெரிய விலையைக் கொடுக்கவேண்டியதாயிற்று என்று பரவலாக நம்பப்படுகின்றது.

இவ்விடயம் தற்போது பகிரங்கமாகியுள்ளது. மீண்டும் எந்த விதமான வன்செயலிலும் ஈடுபடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்புக்கள் தொடர்ச்சியாக மரியாதையற்ற முறையில் புறக்கணிக்கப்பட்டு மற்றும் அலட்சியப்படுத்தப்படுவது தமிழ் மக்களை அவர்களின் சம்மதம் இன்றியும் அவர்களின் சுதந்திரமான விருப்புக்களுக்கு எதிராகவும் ஆட்சியதிகாரத்தில் அவர்களுக்கு பங்கு வழங்காமலும் சர்வாதிகாரத்துடனும் அகம்பாவத்துடனும் தொடர்ந்து ஆளப்பட வேண்டும் என்பதையே வெளிப்படுத்தும், அவ்வாறாக, தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல், அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் சர்வாதிகார மற்றும் எதேச்சதிகாரமான ஆட்சி நிச்சயமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது என்றே நாம் நினைக்கின்றோம்.

ஏற்றுக் கொள்ளக்கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணமுடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் சார்பாக ஒரு செயற்பாட்டில் தற்போது ஈடுபட்டுள்ளது. அவ்வாறான ஏற்றுக் கொள்ளக்கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணமுடியும் என்ற உறுதிப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது. இந்த நோக்கத்தை அடைவதற்காக தமிழ் மக்களும் தமிழ் அரசியல் அமைப்பிற்குள் வருகின்ற அனைத்து அரசியல் சக்திகளும் ஐக்கியப்பட்டு திடமான உறுதியை எடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பின் வலிமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இப்பெறுபேறுகளை பெற்று சாதனை படைக்க பங்களிப்பு செய்த மக்கள் மற்றும் கட்சிப் பணியாளர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களின் ஐக்கியத்தையும் ஒத்துழைப்பையும் வேண்டுகின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அணியின் வெற்றி யுத்த வெற்றியைப் போன்றது

மும்பையில் இன்று நடைபெறவிருக்கின்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியானது எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினைப் போன்றதாகும்.

எனவே, இலங்கை அணி வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தை சுவீகரிக்கும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்றைய சமூக, அரசியல் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் எமது அணியினர் உலகக் கிண்ணத்தை வென்று வரவேண்டுமென்றும் ஜோன் அமரதுங்க எம்.பி.யின் ஊடாகபொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை கிரிக்கெட் அணி வெற்றிபெற தொலைபேசியூடாக ரணில் வாழ்த்து



இன்றைய இறுதிப்போட்டியில் இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள வேண்டும். அதற்காக அணியின் அனைத்து வீரர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்படி வாழ்த்தினைத் தெரிவித்திருப்பதாக எதிர்க்கட்சி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளதாவது:

எந்தவிதமான சவால்களையும் எதிர்கொண்டு அதனை வெல்கின்ற தன்மையை எமது நாடு கொண்டிருக்கின்றது. அந்த வகையிலேயே இலங்கை கிரிக்கெட் அணியும் நோக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் செயற்பாடுகள், அதன் திறமைகளை அறிந்து வைத்திருக்கிறேன். இன்று நடைபெறவிருக்கின்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்பதே நாட்டு மக்களினது பாரிய எதிர்பார்ப்பாகும்.

எனவே, இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமென்று நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கீரிமலை ஆலய வளவினுள் ஆணின் சடலம் மீட்பு

வலி. வடக்குப் பிரதேசத்திலுள்ள கீரிமலைப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் மாலை இளவாலைப் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளவினுள் வெட்டுக்காயங்களுடன் இளம் வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக நீண்டகாலமாக இருந்த இப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பே மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைப் பணிப் பெண்ணுக்கு கட்டாரில் ஒருவருட சிறை

கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த இலங்கைப் பெண்ணொருவருக்கு 11, 000 கட்டார் றியால்களை திருடிய குற்றச்சாட்டு காரணமாக ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அப்பெண் பணியாற்றிய வீட்டு எஜமானி கட்டார் பொலிஸாரிடம் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தனது கைப்பையிலிருந்து இப்பணத்தை பணிப்பெண் திருடியதாகவும் கடந்த வருடம் மார்ச் 6 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற்றதாகவும் இம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பணிப்பெண்ணின் அறையிலிருந்து 8000 றியால்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

39 வயதான இப்பணிப்பெண் குறித்த வீட்டில் தொழில் பெற்றுச் சென்று ஒருமாத காலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த பணிப்பெண் குப்பையிலிருந்தே பணப்பையை கண்டெடுத்ததாகவும் அவர் கூறினார்.

எனினும் வீட்டு உரிமையாளரின் முறைப்பாடு நம்பகமானது என கண்டறிந்த டோஹா நீதிமன்றம் மேற்படி பணிப்பெண்ணுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்ததுடன் தண்டனை முடிந்தவுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறவேண்டுமென என உத்தரவிட்டது.
மேலும் இங்கே தொடர்க...

கடற்படை வீரர்களைக் கண்டுபிடிப்பதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம்: கடற்படை பேச்சாளர்



முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமல் போன நான்கு கடற்படை வீரர்கள் தொடர்பில் எவ்விதமான தகவலும் இல்லை. எனவே, இவர்களை கண்டுபிடிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம் என்று கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணக்குலசூரிய தெரிவித்தார்.

காணாமல் போன கடற்படை வீரர் படகு எவ்விதமான சேதமும் இன்றி வெற்றிலைக்கேணி கரையோரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடற்படை பேச்சாளர் இது தொடர்பாக தொடர்ந்தும் கூறுகையில் கடந்த 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த நான்கு கடற்படை வீரர்களும் மர்மமான முறையில் படகுடன் காணாமல் போயிருந்தனர்.

சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பிறகு படகு மட்டும் வெற்றிலைக்கேணி கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவை அண்டிய கரையோரப் பிரதேசங்களில் விசாரணைகளிலும் தேடுதல் நடவடிக்கைகளிலும் படையினர் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு காணாமல் போயுள்ள நான்கு கடற்படை வீரர்களையும் கண்டுபிடிக்க இந்திய கடற்படையினரிடம் உதவி கோரப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தெற்கு லண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு இலங்கை சிறுமியும் இளைஞனும் காயம்

தென் லண்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த 5 வயது சிறுமியொருவரும் 35 வயதுடைய இளைஞர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த துஷாரா கமலேஸ்வரன் என்ற சிறுமியும் ரொஷான் செல்வகுமார் என்ற இளைஞனுமே காயமடைந்தவர்களாவர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தெற்கு லண்டன் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை குழுவொன்று மதுபானம் அருந்தும் கடையில் அமர்ந்து இங்கிலாந்துக்கும் கானாவுக்கும் இடையிலான கால்பந்துப் போட்டியை பார்த்து ரசித்துக்கொண்டிருந்துள்ளது.

அந்தச் சமயம் அங்கு மோட்டார் சைக்கிளில் மூவர் வந்துள்ளனர். இதனையடுத்து மதுபானக் கடையில் அமர்ந்திருந்த குழுவைச் சேர்ந்த 19 வயது இளைஞரொருவர் துப்பாக்கியையெடுத்து அலட்சியமாக சரமாரியாக சுட்டுள்ளார்.

இந்தத் திடீர் தாக்குதலில் இஸ்டாக் வெல் வுட் கடையில் நின்றுகொண்டிருந்த 5 வயது இலங்கைத் தமிழ் சிறுமி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இதேபோல் அந்தக் கடையில் வேலைபார்க்கும் 35 வயது இலங்கை இளைஞரும் காயமடைந்தார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான துஷாராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இளைஞனும் சிறுமியும் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்த சிறுமி துஷாரா தனது மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்தபோதே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களை பிடிக்க உதவினால் 50 ஆயிரம் பவுண்ஸ் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று பிரிட்டனிலுள்ள கடைஉரிமையாளர்கள் பலர் அறிவித்துள்ளனர்.33 ஆயிரம் கடைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கடை உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் லோவ்மன் இதுதொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், இச்சம்பவத்துக்கு பொறுப்பானவரை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு உதவ நாம் விரும்புகின்றோம் என்று கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பெற்றோல் விலை 10ரூபாவால் அதிகரிப்பு

பெற்றோல் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தானம் தெரிவித்துள்ளது.

இதனை பெற்றோலிய கூட்டுத்தாபன செயலாளர் சமிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி பெற்றோல் 10ரூபாவாலும் டீசல் 3ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

தனியார்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டம் அடுத்த மாதம் உத்தியோகபூர்வ அறிவிப்பு




தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் அடுத்த மாதம் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட வுள்ளதாக தொழிலமைச்சு தெரிவித்தது.

தொழிலமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹேலா இது தொடர்பில் தெரிவிக்கை யில், மேற்படி ஓய்வூதியத்திட்டத்திற்கான ஆவணங்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆய்வுகளுக்கு உட்படுத் தப்பட்டு வருவதுடன் மே மாதம் அதனைச் சட்ட மூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதியம் போன்று தனியார் துறையினருக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்படுமென அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்திருந்தார்.

இதற்கமைய தொழிலமைச்சு மேற்படி தனியார்துறை ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களைத் தயாரித்துள்ளதுடன் இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதத்தில் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படுமெனவும் தொழிலமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

உணவுப் பாதுகாப்பு திட்டத்துக்கு ஜப்பான் ரூ. 468 மில்லியன் உதவி






இலங்கையின் உணவு பாதுகாப்புச் செயற்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் 468 மில்லியன் ரூபா நிதியை வழங்குகின்றது.

இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்து நிகழ்வு நிதியமைச்சில் நடைபெற்றதுடன் ஜப்பானிய அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான ஜப்பானிய உயர் ஸ்தானிகர் குனியோ டகாஸியும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தரவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். குறைந்த வசதிகளைக் கொண்ட விவசாயிகளுக்கு விவசாய இயந்திர உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே ஜப்பானிய அரசு இந்நிதியுதவியை வழங்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது.

ஜப்பானிய சுய உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ் இந்த 468 மில்லியன் ரூபா நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் வழங்கப்படும் இயந்திர உபகரணங்கள் கமநல சேவைகள் திணைக் களத்தின் கமநல சேவை மத்திய நிலையங் களுக்கூடாக விவசாயிகளுக்கு கையளிக்கப்பட வுள்ளதுடன் விவசாயத் திணைக்களத்தினூ டாக அரசாங்கத்தின் விதை உற்பத்திப் பண்ணைகளுக்கும் வழங்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. கொள்வனவு செய்யப்படும் இயந்திர உபகரணங்களின் பெறுமதியில் ஒரு பகுதி நிதி மத்திய வங்கியின் விசேட கணக்கொன்றில் வைப்பிலிடப்பட வுள்ளதுடன், இந்நிதி உணவு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நடவடிக்கை களுக்காக உபயோகப்படுத்தப்படவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அரச வைத்தியசாலைகளில் தனியார் வாட் வசதிகள் உடனடியாக அமுல்படுத்த திட்டம் அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்தது




உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பிரதான அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் அறவிட்டு சேவை வழங்கும் தனியார் வாட் கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு கடந்த 30 ஆம் திகதி அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தனியார் வைத்தியசாலைகள் பொது மக்களிடம் அசாதாரமான முறையில் கட்டணங்களை அறவிடுவதாகவும், அவற்றிற்கிடையே நிலையான கட்டண முறையொன்று இல்லையெனவும், அதனால் நியாயமான விலையில் சேவையினைப் பெற்றுக்கொள் ளக்கூடிய வகையில் அரசாங்க வைத்திய சாலைகளில் தனியார் வாட்டுக்களை நிர் மாணிக்குமாறு நீண்டகாலமாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

(பொதுமக்களின் இவ்வகையான கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண் டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார். கொழுபிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள இந்த வசதியினை இவ்வாண்டின் இறுதிக்குள் நாட்டின் அனைத்து பிரதான வைத்திய சாலைகளிலும் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு புதிதாக கட்டடத் தொகுதிகளை அமைக்க உள்ளதாகவும், இதன் ஆரம்ப நிகழ்வு அம்பாறை பெரிய ஆஸ்பத்திரி யிலிருந்து மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு சர்வதேச கீர்த்தியைப் பெற்றுத் தந்த முரளிதரனை இன்று நாம் தேசிய வீரராக கெளரவிப்போம்




உலக சாதனை படைத்து சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கீர்த்தியை பெற்றுக்கொடுத்த முத்தையா முரளிதரன் என்ற மாவீரனை இன்று இலங்கை மக்கள் அதி உன்னத நிலையில் வைத்து கெளரவிப்பார்கள். விளையாடும்போது ஏற்பட்ட சிறிய உபாதையையும் பொருட்படுத்தாமல் இந்த சாதனையாளர் முரளிதரன் தாய் நாட்டுக்காக இன்று களமிறங்குவார் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று நாடெங்கிலும் ஒரு கிரிக்கெட் விழாவைக் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. எமது வீரர்கள் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாடெங்கிலும் வாண வேடிக்கைகளும் பட்டாசுகளும் கொளுத்தி மக்கள் ஆனந்தப் பூரிப்படைவார்கள். அது போன்றே எங்கள் வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு பவுண்ரிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் வெடிகள் கொழுத்தப்படுமென்று நாட்டின் பல பகுதியில் ஒழுங்குகள் செய்யப் பட்டிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்தன. இன்றைய இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றாலும் அல்லது இரண்டாம் இடத்தைப் பெற்றாலும் தங்கு தடையின்றி வெற்றிவிழா இலங்கையில் பல நாட்களுக்கு நடைபெறுமென்றும் அறிவிக்கப்படுகிறது.

நாளையதினம் ஞாயிற்றுக்கிழமை மக்கள் வெற்றிப்பூரிப்பில் வீதியிறங்கி இன் சுவைகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை அணியினது பதாதைகளும், முத்தையா முரளிதரனின் பதாதைகளும் நாட்டிலுள்ள பிரதான நகரங்களில் வைப்பதற்கான நடவடிக் கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள இலங்கை - இந்திய அணிகள் மோதல்




10 ஆவது உலகக் கிண்ண இறுதிப் போட்டி மும்பை வென்கடே அரங்கில் இன்று நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை - இந்திய அணிகள் மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்க வுள்ளன. இதில் 1996 ஆம் ஆண்டு உலக சாம்பியனான இலங்கை அணியும் 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியும் இரண்டாவது தடவையாக கிண்ணத்தை சுவீகரிக்க களமிறங்கவுள்ளன.

உலகக் கிண்ண தொடரின் ஆரம்ப சுற்று மற்றும் காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் சரிசமமான திறமையை வெளிக்காட்டியுள்ள இவ்விரு அணிகளும் இன்றைய இறுதி ஆட்டத்தில் கிண்ணத்தை வெல்ல கடைசிவரை போராடும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் கட்டாயம் பங்கேற்க முயல்வார் என மும்பையில் நேற்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற அணித்தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார். எனினும் இறுதிப்போட்டியில் விளையாடும் 11 பேர் அணி, கள நிலவரங்களை பொறுத்து தேர்வு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறும் முத்தையா முரளிதரன் விளையாடும் கடைசி சர்வதேச ஆட்டமாக இது அமையவுள்ளது. இதேவேளை இலங்கை அணியின் சகலதுறை வீரர் அன்ஜலோ மத்தியூஸ் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் சுராஜ்ரன்தீவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

மத்தியூஸ் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் காயத்திற்கு உள்ளானார். இதனால் அவர் அந்தப் போட்டியில் ஓட்டம்பெற மேலதிக வீரர் ஒருவரின் துணையுடனேயே துடுப்பெடுத்தாடினார்.

இந்நிலையில் மத்தியூஸணுக்கு பதில் ரன்தீவை அணியில் இணைப்பதற்கு ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.

இலங்கை அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரன்தீவ் இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே இலங்கை அணியில் முரளி, மெண்டிஸ், ரங்கன ஹேரத் என மூன்று சுழற் பந்து வீச்சாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஷிஷ் நெஹ்ராவும் காயத்திற்கு உள்ளாகியுள்ளார். நெஹ்ராவின் விரல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பதில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மும்பை பொலிஸாருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படை கொமாண்டோக்கள் இந்திய மத்திய துணை இராணுவம், மராட்டியத்தின் போர்ஸ் ஒன் அதிரடிப்படை, அதிவிரைவுப் படை மராட்டிய மாநில மேலதிக பொலிஸ் ஆகியோர் வான்கடே மைதான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வான்வழி பாதுகாப்புக்காக மும்பை அருகில் உள்ள இந்திய கடற்படை தளம், விமானப்படை தளம் மற்றும் கட லோர காவல் படை தளம் ஆகியவை எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. கடற்படை கொமாண்டோ படையும், ஹெலிகொப்டர்களும் தயாராக இருக்கின்றன. மேலும் மைதானம் அருகே விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் வான்கடே ஸ்டேடியத்தை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங் களுக்காக மைதானம் அமைந்துள்ள பகுதியின் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மைதானத்திற்கு வரும் ரசிகர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்வார்கள். மைதானத்தை சுற்றியுள்ள வளையத்தில் மராட்டிய மாநில மேலதிக பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மும்பை பாதுகாப்பு பணிகளுக்காக நவிமும்பை மாநகர பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள்.

வான்கடே மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் 180க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த காமராக்கள் மூலம் ரசிகர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு பொலிஸ் கட்டுப்பாட்டு அறை இயங்கும்.

உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பைனாகுலர், கமரா. சிகரெட் பற்ற வைப்பதற்காக பயன்படுத்தப்படும் லைட்டர்கள், பைகள் உள்ளிட்டவை கொண்டு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர்.

வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனங்களை மோதி தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளதால் வான்கடே மைதானத்தைச் சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

மைதான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில உள்துறை அமைச்சர் ஆர். ஆர். பாட்டீல் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். அவருடன் மும்பை மாநகர பொலிஸ் ஆணையர் அருப் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சென்றிருந்தனர்.

கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடந்த மாதம் முதலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடல்சார் பொலிசார் மற்றும் கடலோர பாதுகாப்பு பொறுப்பான மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. கடற்படை போர்க் கப்பல்களும், விமானங்களும் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளை இடைவிடாமல் கண்காணித்து வருகின்றன.

இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான விரைவாக தாக்கும் கப்பல், ரோந்து சுற்றும் கப்பல், எதிரிகளை விரைவாக இடைமறிக்கும் கப்பல் தொடர்ச்சியாக கடலோர பகுதிகளில் ரோந்து வருகின்றன.

கடற்கரை பகுதிகளில் சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் அவர்களை பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...