24 நவம்பர், 2010

வத்தளையில் தமிழ் வர்த்தகர் ஒருவரை காணவில்லை

வத்தளையில் பகுதியில் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் தலைமயிர் வெட்டுவதற்காக சென்ற வர்த்தகர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

வத்தளை அல்விஸ் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய கணபதி குணரத்தன என்பவரே காணமல் போயுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு : கருணாநிதி கிருஷ்ணாவிடம் வலியுறுத்து

இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அரசியல் தீர்வொன்றுக்கு வலியுறுத்துமாறு தமிழக முதல்வர் மு.கருணாநிதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருடி;ணாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை வருகை தரவுள்ளார்.

"மீளக்குடியமர்த்தப்படாமல் 30 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். இது கவலைக்குரிய விடயமாகும். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இவ்விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டும்" என மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தினை உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்து கொடுக்கும்படி இந்திய அரசிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ரந்தெனிய விபத்தில் இங்கிலாந்து பிரஜை பலி

இங்கிலாந்து நாட்டவர்கள் பயணம் செய்த கார் ஒன்று கெப் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இங்கிலாந்து நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்தும் அவரது மனைவி காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் 5.00 மணியள வில் இடம்பெற்ற இவ்விபத்தில் பிரிஸ்டியன் ஏம் வயது (59) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். அவரது மனைவி ஜோன் பவுன்ரி என்பவர் படுகாயமடைந்தவராவார்.
மேலும் இங்கே தொடர்க...

திருகோணமலையில் மாணவர்களிடம் போலி நாணயத்தாள்திருகோணமலை மாவட்ட கின்னியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்களிடமிருந்து போலி நாணயத்தாள்கள் 16 ஐ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதில் 11 நூறு ரூபா நோட்டுக்களும் மற்றும் ஐந்து ஆயிரம் ரூபா நோட்டுக்களும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவர்கள் போலி நாணயத்தாள்களை மாற்ற முட்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம் மாணவர்களுக்கு போலி நாணயத் தாள்களை வழங்கியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரைப் பொலிஸார் தேடிவருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

மெனிக்பாம் 2ஆம் வலயம் மூடப்பட்டுள்ளது: வடபகுதிக்கு பொறுப்பான மீள்குடியேற்ற அதிகாரசபை

வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் உள்ள 2ஆம் வலயம் நேற்று முதல் மூடப்பட்டுள்ளதாக வட பகுதிக்கு பொறுப்பான மீள்குடியேற்ற அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நிவாரணக் கிராமம் 2ஆம் வலயத்தில் உள்ள 855 பேர் முல்லைதீவு தேராவில் மற்றும் புதுக்குடியிருப்பில் மீளக்குடியமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வலயம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மீளக்குடியமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து 15 ஆயிரத்து 676 பேர் தற்போது வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமத்தில் உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 158 பேரும், மொத்தமாக வடபகுதிக்கு 17 ஆயிரத்து 183பேரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சிறுமிகளிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தொண்டர் ஆசிரியருக்கு விளக்கமறியல்

தரம் நான்கு மற்றும் ஐந்து வகுப்புக்களில் கல்விக்கற்கின்ற மாணவிகள் ஏழு பேரிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சதுன்விதாரண எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

டிக்கோயாவுக்கும் நோட்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தொண்டர் ஆசிரியராக சேவைபுரிந்த 25 வயதுடைய பாலச்சந்திரன் ஜெகதீஸ்வரன் என்ற தொண்டர் ஆசிரியரொருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நேற்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொண்டராசிரியர் குறித்து பெற்றோர் ஒருவர் நோட்டன் பொலிஸில் பதியப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக நோட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற ஒன்பது தொடக்கம் பத்து வயது வயதையுடைய ஏழு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சிம்கார்ட்டில் ரூபா ஒன்றரை இலட்சம் மோசடி செய்த ஒருவர் கைது

வெளிநாட்டில் தொழில் புரிந்து விடுமுறையில் நாடு திரும்பியவரின் சிம்கார்ட்டில் ரூபா 150000 மோசடி செய்த ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

குருநாகல் மாவட்டத்திலுள்ள வாரியபொல என்ற இடத்தில் வசித்து வந்த ஒருவர் தற்போது இங்கிலாந்தில் தொழில் புரிகின்றார்.

அவர் விடுமுறைக்காக இலங்கை வந்த சமயம் அலவ்வை என்ற இடத்தில் தனது இங்கிலாந்தில் பதிவு செய்த சிம்மை பாவிப்பதால் கூடுதல் பணம் செழுத்த வேண்டும் என்பதனால் இலங்கையில் தனது பெயரில் புதிய சிம் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளார்.

இதேவேளை இங்கிலாந்தில் வைத்து பாவித்த சிம்மை மறதியாக அக்கடையில் விட்டுச் சென்றார். தனது புதிய சிம் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தியதால் பழைய சிம் பற்றி தேவை நினைவு வரவில்லை.

தனது இங்கிலாந்து பட்டியலைப் பார்த்த போதுதான் குறித்த சிம் மூலம் ஒன்றரை இலட்சம் வரை குறித்த கடைக்காரர் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இதுவிடயமாக பொலிஸில் செய்த முறைப் பாட்டை அடுத்து சிம் விற்பனையாளரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாக்.ஜனாதிபதி, இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை இலங்கை வருகின்ற நிலையில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார்.

இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரும் பாகிஸ்தான் ஜனாதிபதியும் நாட்டின் உயர்மட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

வியாழக்கிழமை இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் டி.எம். ஜயரட்ண ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெறும் இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்விலும் எஸ்.எம். கிருஷ்ணா பங்கேற்கவுள்ளார்.

அத்துடன் அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகங்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

இலங்கை பாகிஸ்தான் பாராளுமன்ற சங்கத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுநடத்தவுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கை பாராளுமன்றத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் இலங்கையில் நடைபெறவுள்ள வர்த்தக மாநாட்டிலும் பாகிஸ்தான் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு : எம்.கே. சிவாஜிலிங்கம்

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் எம்.கே சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்றிரவு 7 மணியில் இருந்து 10.30 வரை நடைபெற்றது. இதன்போது, இனப்பிரச்சினை, தமிழ் மக்களின் பிரச்சினைக்கான உடனடி தீர்வு குறித்து நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடி மகஜர் ஒன்று கையளிக்க உள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதியின் சந்திப்பின் போது வடக்கு, கிழக்கில் அகதிமுகாமில் உள்ள மக்களின் அர்த்தமுள்ள மீள்குடியேற்றம், இராணுவ ஆட்சியில் இருந்து விடுப்பட்டு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தல், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

"வெள்ளைக் கொடி' குறித்த ஐ.நா.வின் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பப்படவில்லை

சண்டே லீடர்' பத்திரிகையில் வெளியான வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ஐ.நா.வினால் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பூரணமான பதில் அனுப்பப்படவில்லை என்பதுடன் முதல் கடிதமும் இரண்டு நாட்களிலேயே வாபஸ் பெறப்பட்டது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தூதுவராலயத்தின் வதிவிட பிரதிநிதியான சேனுக்க செனவிரத்ன தெரிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் நான்காவது சாட்சியாக நேற்று செவ்வாய்க்கிழமை சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கை பொருளாதார கேந்திரமாக மாற்றும் வரவு-செலவு திட்டம் 2 பில்லியன் டொலரில் அபிவிருத்தி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டமானது வட மாகாணத்தைப் பொருளாதார கேந்திரமாக மாற்றியமைக்கவும், இப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட பகுதியை முழுமையாக அபிவிருத்தி அடையச் செய்து வட மாகாண மக்கள் மத்தியில் வளமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் பிரதான நோக்கம் என்பதை இந்த வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுகள் காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக வட மாகாணத்தின் நலன் கருதி முன் மொழியப் பட்டவிடயங்கள் தொடர்பாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:- வடக்கில் 2 பில்லியன் ரூபா செலவில் அரசாங்கம் பாரிய அபிவிருத்திகளையும், மீள் நிர்மாணத் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இது இந்த மாகாணத்தில் குறுகிய அபிவிருத்தியை எடுத்துக்காண் பிக்கிறது. மனிதவள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் வட பகுதியைச் சேர்ந்த 120 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன. இதன் மூலம் வடமாகாண கல்வித்துறை மேலும் வளர்ச்சியடையவுள்ளது.

2011 ஆண்டில் ‘மும்மொழி இலங்கை’ என்ற திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளமை விசேடமாக வட பகுதி மக்களுக்கு, இளைஞர், யுவதிகளுக்குப் பெரும் நன்மை தரவுள்ளது. வட பகுதி மக்கள் தென் பகுதி யிலும், தென்பகுதி மக்கள் வட பகுதியிலும் தொழில் புரியக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.

காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் போன்றன அபிவிருத்தி செய்வதற்காக பல முன்மொழி வுகள் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், வட மாகாணத்தை பொருளாதார கேந்திரமாக மாற்றியமைப்பதே இதன் நோக்கமாகும்.

அரச துறையில் 11,500 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த நியமனம் வட பகுதி பட்டதாரிகளுக்கும் நன்மையளிக்க வுள்ளன. சகல துறைகளுக்கும் சலுகை, நிவாரணம் வழங்கும் வகையில் முன் மொழியப்பட்ட இந்த வரவு- செலவுத் திட்டமானது வட பகுதி மக்களின் சகல துறை மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து

இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி வழங்கப்படும் என உறுதி வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பியிருக்கும் கடிதத்திலேயே இந்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலமானது இலங்கை மக்களுக்கான அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத் துக்கு முக்கியமான காலமாக அமையும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பதவியினை கதிரையுடன் மட்டுப்படுத்தாமல் இதயசுத்தியுடன் பணியாற்றுங்கள் புதிய செயலாளர்கள் மத்தியில் ஜனாதிபதி
தமது பதவியினை கதிரையுடன் மட்டுப்படுத்தாது செயற்பாட்டு ரீதியில் இதய சுத்தியுடன் மக்களுக்கு பணியாற்றுமாறும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அர்ப்பணிக்குமாறும் ஜனாதிபதி புதிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

புதிய அமைச்சுக்களுக்கு நியமிக்கப் பட்டுள்ள செயலாளர்கள் நேற்று (23) மாலை தமக்குரிய நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்ட துடன் அதன் பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அறிவுரை வழங்கினார்.

அத்துடன் அந்தந்த அமைச்சுக்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் தமது பிரச்சினைகள் பற்றிய கடிதங்களுக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை குறித்த அமைச்சின் செயலாளர் தனிப்பட்ட முறையில் தேடிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண் டார்.

அனைத்து அமைச்சுக்களுக்கும் “மஹிந்த சிந்தனை தொலை நோக்கின்” பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதன் பிரகாரம் மக்களுக்கு பணியாற்ற வேண்டுமெனவும், அதிலுள்ள பணிகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் கடமையெனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

அதேபோன்று இந்த நாட்டின் அரச துறை பற்றியும்
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு ஆசனம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கென நேற்று முதல் சபையில் ஆசனமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் கூறியது. இதன்படி இவ்வளவு காலமும் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனம் நேற்று முதல் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆசனத்திற்கு அடுத்துள்ள சபை முதல்வரின் ஆசனம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.

18 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் 3 மாதங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்க வேண்டும்.

இதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் சபைக்கு பிரசன்னமாகி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தென்கொரியா மீது வடகொரிய இராணுவம் எறிகணைத் தாக்குதல் பலபேர் காயம், வீடுகள் தீப்பிடிப்பு; இரு நாட்டு இராணுவமும் மோதும் அபாயம்


தென் கொரியாவை நோக்கி வட கொரிய இராணுவம் நேற்று எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது. இரண்டு நாடுகளுக்கும் பொதுவான செம்மஞ்சள் கடற் பிரதேசத்தை நோக்கி ஏவப்பட்ட எறிகணைகள் தென் கொரியாவின் எல்லைக் கிராமங்களில் வீழ்ந்து வெடித்தன. இன்னும் சில தென் கொரியாவின் கடற்படைக் கப்பல்கள் மீதும் வீழ்ந்தன.

இதனால் கப்பலொன்று சேதமானதுடன் ஆறு கடற்படை வீரர்கள் காயமடை ந்தனர். இதில் ஒரு வீரரின் நிலைமை கவலைக்கிடமாயுள்ளது- மற்றும் கிராமப்புறங்களில் எறிகணைகள் வீழ்ந்ததால் பல வீடுகள் தீப்பற்றி எரிந்ததுடன் பொதுமக்கள் பலரும் இத்தாக்குதலில் கயமடைந்தனர். இதையடுத்து கொரியன் குடாவில் பெரும் பதற்றம் நிலவியது.

தென்கொரிய ஜனாதிபதி அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியதுடன் அவசர காலச் சட்டத்தையும் பிரகடனம் செய்தார். செம்மஞ்சள் கடற் பிரதேசத்தை நோக்கி தென் கொரிய இராணுவம் நகர்த்தப்பட்டதுடன், விமானப் படை விமானங்கள் அவசரமாக கண்காணிப்பு நடவடிக்கையில் இறங்கின.

சுமார் ஐம்பது எறிகணைகளை வடகொரிய இராணுவம் தென் கொரியாவை நோக்கி ஏவியது. இதனால் 1950, 1953ம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்றது போன்ற போர்ப் பதற்றம் நிலவியது. எறிகணைத் தாக்குதல்கள் ஆர்பமானதையடுத்து மக்களை வீடுகளைவிட்டு வெளியேறி பதுங்கு குழிகளுக்குள் நுழைந்து கொள்ளுமாறு தென்கொரிய அரசாங்கம் ஒலிபெருக்கிகளில் அறிவிப்புச் செய்தது.

மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினர். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய தென் கொரிய ஜனாதிபதி. வட கொரியாவின் செயல் ஆத்திரமூட்டுவதாகவுள்ளது. நிலைமைகளைச் சமாளிப்பதற்கேற்ற வகையில் இராணுவம் தயாராக உள்ளதென்றும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

காணாமல் போனோரின் பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி கும்பல் இராணுவம் எச்சரிக்கை


தொலைபேசி இலக்கங்களான 0773952175, 024-2222567, 025-3898812 (வன்னி), 021-2229693 (யாழ்ப்பாணம்) மற்றும் 027-2259126 (கிழக்கு) உடனடியாக அறிவிக்கவும்

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளில் காணாமற் போனதாக கூறப்படும் நபர்கள் தன் பொறுப்பில் இருப்பதாகக் கூறி காணாமற் போனோரின் பெற்றோர் உறவினர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடிக் கும்பலொன்று இயங்குவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் “மேஜர் சீலன்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் சில பாடசாலை அதிபர்களையும் நம்ப வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் குறித்து மிகவும் விளிப்பாக இருக்குமாறும் இராணுவத் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் யூ. ஏ. பி. மெதவல விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

காணாமல் போனோர் 300 பேர் தன்னுடைய பாதுகாப்பில் இருப்பதாக கூறி அவர்களை விடுதலை செய்வதற்காக பணம் பறிக்க திட்டமிட்ட மூவர் கிளிநொச்சி காந்தபுரம் பிரதேசத்தில் வைத்து பாதுகாப்பு பிரிவினரால் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் இவர்கள் மோசடி முறையில் பணம் பறிப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இராணுவத்தில் கடமையாற்றும் “மேஜர் சீலன்” என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு காணாமல் போன 2000 பேர் தன்னுடைய பொறுப்பில் இருப்பதாக கூறியதுடன் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி மாலை ஆறு மணிக்கு பணத்தை செலுத்தினால் இவர்களை விடுவிப்பதாக உறவினர்களிடமும் பெற்றோரிடமும் தெரிவித்ததாக தகவல் 2010-11-07 ம் திகதி 57 ஆம் பாதுகாப்பு படைத் தலைமையகதத்திற்கு கிடைத்துள்ளது.

பாதுகாப்புப் படையினர் அந்த பாடசாலை அதிபர்களுடன் இக் கும்பல் சம்பந்தமாக தொடர்பினை மேற்கொண்ட பின்னர் கிளிநொச்சி பொலிஸார் இந்த மூவரையும் உடனடியாக கைது செய்துள்ளனர். பின்பு பணம் பறிக்கும் கும்பல் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டும் அதேபோல் தனியாகவும், கும்பலாகவும் இணைந்து மோசடிகளையும் கடத்தலையும் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சாவகச்சேரி, மானிப்பாய், அராலிப்பளை, வட்டுக்கோட்டை, ஊர்காவற்றுறை, எல்லபன்மராதன்குளம், வவுனியா, மல்லாவி ஆகிய பிரதேசங்களிலும் புரிந்துள்ளதாக பதிவாகிவுள்ளது எனவும் பொலிஸார் இது சம்பந்தமாக கிடைத்த முறைப்பாடுகளை வைத்து விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான மோசடி குற்றச் செயல்களை செய்வதற்கு எத்தனிக்கும் நபர்கள் சம்பந்தமாக கவனமாக இருப்பதுடன் இவர்கள் சம்பந்தமாக தகவல் ஏதாவது தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பாதுகாப்பு முகாம் தொலைபேசி இலக்கங்களான 0773952175, 024-2222567, 025-3898812 (வன்னி), 021-2229693 (யாழ்ப்பாணம்) மற்றும் 027-2259126 (கிழக்கு) உடனடியாக அறிவிக்கவும்
மேலும் இங்கே தொடர்க...

நிதிச்சந்தை வரலாற்றில் புரட்சிகர மாற்றம்: உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதிபெற அனுமதி


உள்நாட்டு நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் எத்தகைய தடையுமின்றி வெளிநாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை மத்திய வங்கி வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது இலங்கையின் நிதிச்சந்தை வரலாற்றில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்து மெனவும் 2011 ற்கான வரவு செலவுத்திட் டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த வெளிநாட்டு நிதிப்பரிமாற்றம் தொடர்பான ஆலோசனைகளே இத்தீர்மானத்திற்கு வழிவகுத்துள்ளன எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்கப்ரால் தெரிவித்தார்.

நாட்டில் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தமது வர்த்தகத்தை விரிவாக்குவதற்கான நிதித்தேவையைக் கொண்டுள்ளன. அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள விரும்பும் வர்த்தகர்கள் உள்ளூர் நிதியிலிருந்தே அதனை பெற்றுக்கொள்ள விளைவதால் தேசிய நிதி நிலையில் அழுத்தங்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அநாவசியமான அழுத்தத்தினைச் சரி செய்வதற்கும் வர்த்தக நிறுவனங்களுக்கான நிவாரணமாகவும் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்த அவர், நிறுவனங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனவும் தெரிவித்தார். மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடொன்று நேற்று மத்திய வங்கி தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இது தொடர்பில் விளக்கமளித்த ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,

எவ்வித தாமதங்களுமின்றி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு நிதிக்கட்டுப்பாட்டுத் திணைக்களத்தில் தனியான பிரிவொன்று ஏற்படுத்தப்படவு ள்ளது. அதேவேளை, இந்நாட்டு நிதி கொடுக்கல், வாங்கல்களை இலகுபடுத்தும் நோக்கில் ஒன்பது புதிய தீர்மானங்களை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது. இதில் ஏழு முக்கிய தீர்மானங்கள் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையை வதிவிடமாகக் கொண்ட ஒரு தனிநபர் ஒருங்கிணைந்த அல்லது ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளை முதலீடு செய்வதற்கும் இங்குள்ள காப்புறுதி நிறுவனங்கள் வெளிநாடுகளில் தமது வளங்களின் ஒரு பகுதியை முதலீடு செய்வதற்கும் மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இத்தீர்மானம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறை க்கு வரவுள்ளது. அத்துடன் வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கைக்குள் வர்த்தக நிறு வனங்களை ஆரம்பிப்பது உட்பட மேலும் 6 தீர்மானங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

துறைமுக லொறிகளிலிருந்து பொருட்கள் திருடும் கும்பல் பாதாள உலகத் தலைவர் சார்ள்ஸ், 21 பேர் கைது

கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறும் லொறிகளிலிருந்து பொருட்களை திருட்டுத்தனமாக இறக்கி விற்பனை செய்யும் பாரிய அளவிலான மோசடி ஒன்றினை கண்டுபிடித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அதனோடு தொடர்புடைய பாதாள உலகத் தலைவன் சார்ள்ஸ் உட்பட 21 பேரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு இறக்கிய பொருட்களின் பெறுமதி சுமார் ஒருகோடி ரூபாவிலும் அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழங்கு, பருப்பு, வெங்காயம், செத்தல் மிளகாய், கருவாடு என்பன அதில் சிலவாகும். இந்த பொருட்களை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலை ஒன்று, மூன்று லொறிகள், தராசுகள், ஆயுதங்கள், சாவி வெட்டும் கருவிகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிரேண்ட்பாஸ் மாவத்தை பிரதேசத்தில் 15 வருட காலமாக இந்த திருட்டுக் களஞ்சியசாலை நடத்திச் செல்லப்பட்டுள்ளது. பாதாள உலகக் கும்பல்களால் மேற்கொள் ளப்பட்டு வந்த இந்த பாரிய அளவிலான மோசடியினை பொலிஸார் முற்றுகையிடாமைக்கான காரணம் பலரது அச்சுறுத்தலென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்பின்பேரில் பொலிஸ்மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரியவினால் இந்த இடம் முற்றுகையிட்டு மோசடிக்காரர்கள் பற்றிய தகவல்களை கண்டுபிடித்து அழித்துவிடுமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவிற்கு அறிவு ரை வழங்கப்பட்டது. அதன் பிரகாரம் நேற்று முன்தினம் மாலையில் 15 பொலிஸ் அதிகாரிகளடங்கிய குழுவொன்று இந்த முற்றுகையை ஆரம்பித்தது.

அந்த நேரத்தில் கூட கடத்தப்பட்ட பொருட்கள் மூன்று லொறிகளில் இறக்கப்பட்டுக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மோசடியில், அதிகம் தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களே சிக்கியுள்ளதுடன் அதனை கொண்டு செல்லும் லொறியின் சாரதிகளும் இந்த பாதாள உலக மோசடிக்காரர்களுக்கு உதவியுள்ளனர்.

துறைமுகத்திலிருந்து வெளியேறும் லொறிகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்து அதிலிருந்து ஒரு பகுதி பொருட்களை இறக்கிவிட்டு மீதியை அனுப்புவதாகவும், இறக்கிய பொருட்களை பாதாள உலகக் கும்பல் கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் விற்பனை செய்து வந்துள்ளது. இந்தத் திருட்டின் மூலம் பாதாள உலகக் கோஷ்டியினர் ஒரு வாரத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வருமானத்தைப் பெற்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனியார் வியாபாரிகள் தமது நட்டத்தை ஈடு செய்யும் வகையில் பொருட்களின் விலையை அதிகரித்து அதனை நுகர்வோரிடமிருந்து அறவிட்டு வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதாள கோஷ்டியினரின் திருட்டுக்களஞ்சியத்திற்கு பொலிஸார் சீல் வைத்துள்ளதுடன், கைது செய்துள்ள பாதாள உலகத் தலைவன் உள்ளிட்ட சந்தேக நபர்களை நேற்று (23) நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரியவருகிறது.

பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உபுல் ஆரியரத்னவின் கண்காணிப்பின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹேமந்த தன்ஓவிட்ட, பொலிஸ் பரிசோதகர் குலரத்ன, சமுது உள்ளிட்ட குழுவினர் இந்த முற்றுகையை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...