28 செப்டம்பர், 2010

சந்திரனை ஆராய சீனாவின் புது திட்டம்


சந்திரனை ஆராயும் இரண்டாவது செயற்கைகோளை சீனா, வரும் 1ம் தேதி விண்ணில் செலுத்துகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக சீனா வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 2007ல் அக்டோபர் மாதம் சந்திரனை ஆராயும் சாங்க் இ-1 என்ற செயற்கை கோளை செலுத்தியது. இந்நிலையில் வரும் 1ம்தேதி சாங்க் இ-2 என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்துகிறது. ஐந்து நாள் பயணத்துக்கு பிறகு இந்த செயற்கைகோள் சந்திரனுக்கு அருகே 100 கி.மீ., தொலைவை சென்றடையும். இதற்கு அடுத்தபடியாக வரும் 2013ல் சாங்க் இ-3 செயற்கைகோள் சந்திரனுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மூன்று செயற்கைகோள்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் 2025ல் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மங்கள சமரவீர மீது குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணை

ஐக்கியத் தேசியக் கட்சி உறுப்பினர் மங்கள சமரவீர குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவதூறான சுவரொட்டிகளை அச்சடித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜெயகொடி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு

யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு தமது சொத்துக்களை இழந்து இடம்பெயர்ந்த 250 பேருக்கு நஷ்ட ஈடாக 25 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்வதாயின் விண்ணப்பதாரி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் வசித்திருக்க வேண்டும். கிராம சேவையாளரிடம் தம்மை பதிவு செய்திருக்க வேண்டும். இவரது விண்ணப்பத்தை மாவட்ட செயலகம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

முன்னர் எந்த நட்ட ஈட்டையும் பெறாதவராக இருக்க வேண்டும் என புனர்வாழ்வு அதிகாரசபையின் தலைவர் ஈ.ஏ எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்தத்தால் சொத்துக்களை இழந்த நிலையில் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு பத்து இலட்சம் ரூபாவும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு 2.5 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வாக்காளர் இடாப்பில் புனர்வாழ்வு பெற்றோர் இணைவு : உதவி தேர்தல் ஆணையாளர்

புனர்வாழ்வு மையங்களிலிருந்து சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பியோரின் பெயர்கள் வாக்காளர் இடாப்புக்களில் இணைத்துக் கொள்ளப்படும் என துணைத் தேர்தல் ஆணையாளர் நிசாந்த திரிப்பிரிய ஹேரத் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

அவர் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

"வாக்காளர் இடாப்பில் இவர்களின் பெயர் பதிவது தொடர்பாக கிராம சேவகர்களின் ஊடாக தகவல்கள் திரட்டப்படவுள்ளன.

வாக்காளர் இடாப்பில் பெயர் பதியப்பட்டவர்களின் விபரங்கள் மூன்று மாதங்களுக்குள் காட்சிப்படுத்தப்படும்.

2009ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் இவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படும்" என்றார்.

வெளிநாடு சென்றுள்ள தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இந்த வார இறுதியில் நாடு திரும்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதமளவில் புதிய தேர்தல் ஆணையாளர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...


குக்குலுகலை தோட்ட மக்கள் முழுமையாக இன்னமும் வீடு திரும்பவில்லை
இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகலை, குக்குலுகலை தோட்டப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் சிலர் வீடு திரும்பியுள்ளனர். எனினும் சம்பவம் நடந்து இரு வர்ரங்களாகிவிட்ட நிலையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் முழுமையாக வீடுதிரும்பவில்லை என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

பாடசாலை மாணவர்கள் தனியாகச் செல்ல அச்சம் தெரிவிப்பதால், பெற்றோர் அவர்களை வேறுவேறு பாடசாலைகளில் சேர்த்துள்ளதாகவும் , தமது குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளவர்கள் இரவுவேளைகளில் அச்சத்துடன் இருப்பதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இதற்கு தமிழர்களே காரணம் எனக்கூறியே இப்பகுதியில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இதன் காரணமாக 75 குடும்பங்களைச் சேர்ந்த 300இற்கும் அதிகமானோர் காடுகளில் தஞ்சமடைந்தனர். அவ்வேளை, அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு கால்நடைகள் பல கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஆட்சியை கைப்பற்ற முயலும் ரணில் முதலில் கட்சியைக் காப்பாற்ற வேண்டும்:கெஹெலிய

அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் பாராளுமன்றத்தை கலைத்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிப்பீடம் ஏற்றுவதற்கு முன்னர் தமது சொந்தக் கட்சியை ஒருங்கிணைத்து உறுப்பினர்களை தம்முடன் வைத்துக்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் முயற்சிக்கவேண்டும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாடு ஒன்றின் எதிர்க்கட்சி தலைவர் ஆட்சியை கைப்பற்றவேண்டும் என்று எண்ணுவதும் முயற்சிப்பதும் இயல்பான விடயமாகும். ஆனால் அதற்கு முன்னர் தனது கட்சியை கட்டிக்காக்க வேண்டியது எதிர்க்கட்சி தலைவரின் தலையாய கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூடிய விரைவில் பாராளுமன்றத்தை கலைத்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிப்பீடமேற்றுவதுடன் சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க நேற்று முன்நாள் களனியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் தெரிவித்துள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் ரம்புக்வெல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது:

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அதனை கலைத்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிப்பீடமேற்றப்போவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இவ்வாறு கூறுவதற்கு முன்னர் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளவேண்டும். அதாவது பாராளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைவதற்குள் அதனை கலைக்க முயற்சிப்பதற்கு முன்னர் தனது கட்சியை சீர்ப்படுத்த அவர் முயற்சிக்கவேண்டும். ஐக்கிய தேசிய கட்சியை மறுசீரமைத்து ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து கட்சியின் உறுப்பினர்களை தன்னுடன் வைத்துக் கொள்ள எதிர்க்கட்சி தலைவர் முதலில் முயற்சிக்கவேண்டும்.

அதனைவிடுத்து விரைவில் ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சி பீடத்தில் ஏற்றுவேன் என்று கூறினால் எப்படி? முதலில் தமது பக்கம் உள்ள விடயங்களை சரிசெய்துகொள்ள வேண்டும் என்பதுடன் சீர்ப்படுத்தவேண்டும்.

மேலும் பாரிய பலமான நிலையில் இருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை கலைத்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பது அவரின் மற்றுமொரு நகைச்சுவை என்றே கூற வேண்டும். மக்களுக்கு அதனை பற்றி நன்றாகவே தெயும்.

மற்றுமொரு விடயமாக சரத் பொன்சேகாவை விடுவிக்கப் போவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார். பொன்சேகா விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி சிறப்பாக செயற்படுவதில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி அடிக்கடி குற்றம் சுமத்தி வந்தது. அதனை சமாளிக்கும் வகையிலேயே தற்போது பொன்சேகா குறித்து எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறியுள்ளார் என்று கருதுகின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...