22 செப்டம்பர், 2009

வவுனியாவில் இரு பெண் புலி உறுப்பினர்கள் கைது, ஒருவர் சயனைட் அருந்தி தற்கொலை-

வவுனியா உக்குலாங்குளம் பிரதேசத்தில் வைத்து இரண்டு பெண் புலிஉறுப்பினர்கள் இன்றுபகல் கைதுசெய்யப்பட்டதாகவும், இதன்போது ஒருவர் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். உக்குலாங்குளத்தில் இரு புலிகளின் தற்கொலைதாரிகள் மறைந்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பிரதேசம் சுற்றவளைக்கப்பட்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஒருவரே சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் பிரிகேடியர் கூறியுள்ளார். கைதுசெய்யப்பட்ட யுவதிகள் இருவரும் வவுனியாவிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்ததுடன், உக்குலாங்குளம் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. கைதான பெண்புலி உறுப்பினர் வழங்கிய தகவலுக்கமைய ஆசிகுளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கிகள் 03, தலா 02 கிலோகிறாம் எடைகொண்ட வெடிமருந்துப் பொதிகள் 03, அதிசக்தி வாய்ந்த டெட்னேற்றர்கள் 03, மைக்ரோ கைத்துப்பாக்கி ரவைகள் 100 என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பெண் புலி உறுப்பினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

மேலும் இங்கே தொடர்க...
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது : தர்மசிறி லங்கா பேலிஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை ஊடகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தர்மசிறி லங்கா பேலி தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களின் தகவல்களைத் தெரிந்துகொள்ளும் உரிமையைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமக்குக் கிடைக்கும் தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் தடைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் இவர்கள் மீதான கொடுரத் தாக்குதல்களும் ஊடக அடக்குமுறையும் உடனடியாக நிறுத்த்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் எட்டு ஊடக நிறுவனங்கள் சார்பாக வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை இதழியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அரசாங்கம், இதுவரையில் செயலற்றுக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பத்திரிகைப் பேரவையை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளது. 35 வருடங்களுக்கு முன் இலங்கையிலுள்ள அச்சு ஊடகங்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருந்த அன்றேல் அச்சு ஊடகங்களை நிர்வகிப்பதற்காக, அடக்கியாள்வதற்காகவே இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இவற்றை எவ்வித மாற்றங்களும் இன்றி, இன்றைய நிலைக்கு இவை பொருத்தமானவைதானா என ஊடக சங்கங்களுடனோ ஊடகவியலாளர்களுடனோ ஆராய்ந்து பார்க்காமலும் எவருடனும் எவ்வித பேச்சுவார்த்தைகளை நடத்தாமலும் மீண்டும் இயங்கு நிலைக்கு அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.

பத்திரிகை பேரவையை மீண்டும் இயக்க முயற்சிப்பதற்கு நாம், ஊடக அமைப்புக்கள் என்ற வகையில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இதன்மூலமாக அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த நாட்டிலுள்ள மக்கள், தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைக்குப் பங்கத்தை ஏற்படுத்தவே அரசு முயற்சிக்கின்றது.

இந்த நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக இடம்பெற்ற தாக்குதல்களை நாம் நன்கறிவோம். ஊடக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டதை அறிவோம்; ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிவோம்; ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும் நாம் அறிவோம்.

அண்மையில் போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இன்னமும் அவரால் இரு பாதங்களையும் நிலத்தில் ஊன்றி நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கைத்தடி உதவியுடன் கூட ஊன்றி நடக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. போத்தல ஜயந்த இந்த சமூகத்திற்கு இழைத்த அநீதிதான் என்ன என்று நான் கேட்கின்றேன்.

இந்த நாட்டுமக்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமைக்காக குரல் கொடுத்துச் செயற்பட்டமைக்காகவே இவர் இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தியவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு கூட அரசாங்கம் தவறியுள்ளது.

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களைக் கொன்றவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதற்குக் கூட அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

இதுபோன்றதே ஊடகவியலாளர்கள் கடத்தப்படும் சம்பவங்களும்.

ஊடக நிறுவனங்களை எரியூட்டுதல் போன்ற எந்தச் சம்பவம் தொடர்பிலும் அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரிவினரோ பொலிஸாரோ, இதற்குக் காரணமானாவர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்கு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

அந்த வகையில் இந்த நாட்டின் எட்டு ஊடக நிறுவனங்களைச் சார்ந்த நாம், இந்த மேடையில் ஒன்றுகூடி, இந்நாட்டு மக்களின் தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமையைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமக்குக் கிடைக்கும் தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது ஊடகவியலளார்களின் கடமை. எனவே அக்கடமையைச் செய்ய ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகளை அகற்றுமாறும், கொடுரத் தாக்குதல்களையும் ஊடக அடக்குமுறையையும் உடனடியாக நிறுத்துமாறும் நாம் கோருகின்றோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
வவுனியாவில் பெண் தற்கொலைதாரி ஒருவர் சந்தேகத்தில்


பொலிசாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் செவ்வாயன்று நடத்தப்பட்ட தேடுதலின்போது தற்கொலைதாரி எனச் சந்தேகிக்கப்படும் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளின்போது இந்தப் பெண் வழங்கிய தகவலையடுத்து தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் 3 அங்கிகளும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காட்டுப்பகுதி ஒன்றில் இவை ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்ததாகத் தெரிவிக்கப்படும் மற்றுமொரு இளம் பெண் சைனைட் அருந்தித் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களாக இருக்கலாம் எனப் பொலிஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும் இங்கே தொடர்க...

வவுனியாவில் மீளக்குடியேறியோருக்கு அடிப்படை வசதிகள் யாவும் இலவசம்

வவுனியா தெற்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 320 பேருக்கும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு இலவசமாக அத்தியாவசிய உலர் உணவுகள், மின்சார இணைப்பு, நிவாரண உதவிகள் ஆகியன வழங்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சாள்ஸ் தெரிவித்தார்.

மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள ஆயிரம் குடும்பங்களுக்கும் அவர்களது சொந்த காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக கருத்திற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அது குறித்து உயர்மட்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

பெரும்போக பயிர்ச் செய்கையை முன்னிட்டு வவுனியா வடக்கில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டிருந்த ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மூவின மக்களும் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள தமது சொந்த காணிகளில் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் தமது காணிகளை சுத்திகரித்து பெரும்போக பயிர்ச் செய்கையில் ஈடுபட தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வமாக இவர்களை குடியேற்றும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பியின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபா பெறுமதியான மண்வெட்டி, கோடரி ஆகியன உள்ளிட்ட காணி சுத்திகரிப்பு உபகரணங்களும் தற்காலிக கூடாரங்களை அமைத்துக் கொள்வதற்கான 16 தகரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

வீதிகள், குளங்கள், ஆலயங்கள், பாடசாலைகள், கூட்டுறவுச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், வைத்தியசாலைகள், தபாலகங்கள் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டிரு ப்பதுடன் ஒவ்வொருவரது காணிகளுக்கும் நீர் மற்றும் மின் வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மின் இணைப்புக்கள் ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படவிருப்பதால் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாதெனவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இவர்களுடைய சுத்திகரிப்பு பணிகளை ஊக்குவிக்கும் முகமாக ஒரு ஏக்கர் நிலபரப்புக்கு 4 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிலரது காணிகள் பற்றைக் காடுகளாக மாறியிருப்பதனால் அவற்றை சுத்திகரிக்க சிறிது காலம் தேவைபடுமென்பதனால் இந்திய அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிகள் கோரப்பட்டிருந்தன. அந்த வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வரும் 06 மாதகாலத்துக்கு அக்காணிகளைச் சேர்ந்தோருக்கு நிவாரணமாக குறிப்பிட்ட உதவித் தொகையை வழங்க முன்வந்துள்ளது.

¡ணிகளில் தூர்ந்துபோன கிணறுகளை மீள வெட்டி புதுப்பிப்பதற்காக இந்திய அரசாங்கம் உதவுவதாக வாக்குறுதியளித்திருப்பதாகவும் அரசாங்க அதிபர் கூறினார்.

பெரும்போக பயிர்ச் செய்கையை முன்னிட்டு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப் பட்டமையினால் இவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுப்பது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் 06 மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...