பேராதனை ப
ல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மேற்கொண்ட ஆய்வின் படி ஊவா மாகாண ஹல்துமுல்ல பிரதேசத்திலுள்ள பெண் தோட்டத் தொழிலாளர்களது தாய்ப்பாலில் கொடிய விஷங்களில் ஒன்றான ‘பெறகொட்' இரசாயனம் கலந்திருந்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்றை சுற்றாடல் மற்றும் மண்ணியல் ஆய்வாளரான கலாநிதி பி.ஐ.யாப்பா தெரிவித்தார்.
சர்வதேச இரசாயன பீடைகொள்ளி எதிர்ப்பு தினம் தொடர்பாக கண்டி அனிவத்தையிலுள்ள ‘கெண்டியன் ரிக் ரீட்' சுற்றுலா விடுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஆராய்ச்சி அதிகாரியும், பேராதனைப் பல்கலைக்கழக விவசாய கற்கை நெறிகளுக்கான விரிவுரையாளருமான கலாநிதி யாப்பா மேலும் தெரிவிக்கையில்,
‘பெறகொட்' என்ற இரசாயனப் பதார்த்தம் கொடிய நஞ்சாகும். இதனை உட்கொண்டால் மரணமே இறுதி விளைவு. அதனைத் தயாரிக்கும் நாடுகளே அதன் பாவனைக்குத் தடைவிதித்துள்ளது. பிரபல தயரரிப்பு நிறுவனமான ‘சின்ஜென்டா’ நிறுவனத்தின் தலைமையகம் சுவீஸ் நாட்டில் உள்ளது. அங்கு ‘பெறகொட்' பீடைகொள்ளி பாவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
1964ன் பின் இலங்கையில் இரசாயனக் களைகொள்ளிகள், பீடைகொள்ளிகள், இரசாயனப் பசளை, இரசாயனக் கிருமிநாசினிகள் என்பன பாவனைக்கு வந்தன. இதன் விளைவாக இரசாயனங்கள் மிகக் குறைந்த அளவில் தொடர்ச்சியாக எமது உடம்பில் சேகரிக்கப்பட்டு புற்று நோய், சிறுநீரக நோய், பாக்கின்சன் என்ற நரம்பு நோய், கண் வியாதி, தோல்வியாதி போன்ற பல நோய்களுக்குக் காரணமாக உள்ளது. வருடம் தோறும் 5ஆயிரம் பேர் ‘பெறகொட்' இரசாயனம் உணவில் சேர்வதன் காரணமாக இறக்கின்றனர்.
‘பெறகொட்' மண்ணுடன் சேர்ந்தால் அது அழியமாட்டாது. மண்ணின் அகத்துறுஞ்சும் தன்மை, வடிதிறன் என்பன குறைகின்றது. இதனால் மண் பாதிப்படைகிறது.
எதிர்காலத்தில் இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கையில் மூன்று வருட இடைவெளியில் இதன் பாவனையை முற்றாக ஒழிப்பதாகக் கூறிய போதும் புதுப் பெயர்களில் அவை விதைந்துரைக்கப்பட்டு திறந்த சந்தைக்கு வந்துள்ளது" என்றார்.