13 நவம்பர், 2009


ராணுவப் புரட்சி ஏற்படும் என ராஜபட்ச அஞ்சினார்: பொன்சேகா


இலங்கையில் ராணுவத்தின் மூலம் தாம் ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என அச்சத்தாலேயே தம்மை ராணுவத் தளபதி பதவியில் இருந்து ராஜபட்ச நீக்கியதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ராணுவம் ஈடுபட்டால் உதவ வேண்டும் என இந்தியாவிடம் ராஜபட்ச கோரியிருந்ததாகவும் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.விடுதலைப் புலிகளுடனான போருக்குப் பிறகு ராணுவத் தளபதி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பொன்சேகா, முப்படைத் தளபதி என்ற கௌரவப் பொறுப்புக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இந்தப் பதவியிலிருந்து நேற்று அவர் ராஜிநாமா செய்துள்ளார்.அரசுக்கு அவர் எழுதிய ராஜிநாமா கடிதத்தில், பல்வேறு அமைப்புகளின் தவறான வழிகாட்டலால், ராணுவம் ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என்கிற முடிவுக்கு ராஜபட்ச வந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிகரமாகச் செயல்பட்ட ராணுவத்தை இப்படிச் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தம்மை வருந்தச் செய்திருப்பதாகவும் அந்தத் கடிதத்தில் பொன்சேகா தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
பல்கலைக்கழக மாணவி விடுவிக்கப்படாததால் பேராதனையில் தமிழ் மாணவர் பகிஷ்கரிப்பு

புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட, கண்டி, பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி ஒருவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பல்கலைக்கழக கலைப்பீட தமிழ் மாணவர்கள் விரிவுரைகளை இன்று காலை முதல் பகிஷ்கரித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை 2.15 மணியளவில் விரிவுரை நடந்து கொண்டிருந்த சமயம் பல்கலைக்கழகக் காவலாளி, புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பதாகக் கூறி இம்மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மாணவர்கள் விரிவுரை மண்டபத்தை விட்டு வெளியே வந்த சமயம் புலனாய்வுப் பிரிவினர் அவரை ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் தெரிவித்தனர்.

முதலில் இம்மாணவி பேராதனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள், இதனை அடுத்து அவர் தங்கியிருந்த பல்கலைக்கழக விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவரது பொருட்கள், உடைகள் என்பவற்றுடன் அவரை புலனாய்வுப் பிரிவினர், விசாரணைக்காகக் கொழும்பு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

இவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்னமும் விடுவிக்கப்படாதது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட தமிழ் மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...
மரக்கறிகள் முதல் அனைத்தும் துணுக்காய் ப.நோ.கூ. சங்கத்தில் விற்பனை



இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்ந்து வரும் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் செயற்படத் தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் தம்பிப்பிள்ளை பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நெருக்கமாகக் குடியிருக்கும் பிரதேசங்களில் நான்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று கிளைகளை உடனடியாகத் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான பாலுணவுகள், மரக்கறிவகைகள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மண்ணெண்ணெய் என்பனவும் முன்னுரிமை அடிப்படையில் இந்தக் கிளைகளின் ஊடாகப் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மீள்குடியேற்றத்தின் முக்கிய அம்சமாகிய வீடுகளை அமைப்பதற்குரிய கூரைத்தகடுகள், கூரைவிரிப்புகள் மரம், தடிகள் என்பவற்றை அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மீளக்குடியமரும் மக்களுக்கு வழங்கி வருகின்றது.

இவற்றை விட மக்கள் மேலதிகமான மரம் தடிகள், கூரைத்தகடுகள் என்பவற்றையும், கூரைகளை அமைப்பதற்குத் தேவையான ஆணிகள் போன்ற முக்கிய பொருட்களையும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைகளே விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
மீளக்குடியமர்த்தப்பட்ட துணுக்காய் மக்களின் போக்குவரத்துக்கென இரு பஸ் வண்டிகள்


மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்கென இரண்டு பஸ்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

வியாழனன்று துணுக்காய் 65 ஆம் படைப்பிரிவின் தலைமையகத்தில் துணுக்காய் பிரதேச மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பாகவும், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்ட உயர்மட்டக் கூட்டத்திலேயே வடமாகாண ஆளுனர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 20 கிராம சேவகர் பிரிவுகளில் 4415 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 394 பேரை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் நடவடிக்கையில் இதுவரையில் 1575 குடும்பங்களைச் சேர்ந்த 5220 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

இந்த மக்களின் அத்தியாவசிய தேவையாகிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகப் போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்தப் பிரதேசத்திற்கென இரண்டு பஸ் வண்டிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நெற்செய்கையை இந்த மக்கள் ஆரம்பிப்பதற்கு வசதியாக 6 உழவு இயந்திரங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

துணுக்காய் பிரதேச விவசாய அபிவிருத்திக்கென 14 மில்லியன் ரூபாவும், இந்தப் பகுதிகளில் உள்ள 19 பாடசாலைகளைத் திருத்தி அமைக்கவும், அபிவிருத்தி செய்வதற்குமென 39 மில்லியன் ரூபாவும் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண ஆளுனர் இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரதேசத்தில் நாளாந்தம் 3000 (மூவாயிரம்) ஹெக்டேயர்களில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் கண்ணிவெடிகளை அகற்றி வருகின்றது.

துணுக்காயில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார், வடமாகாண சபையின் பிரதம செயலாளர் சிவசுவாமி, துணுக்காய் பிரதேச 65 ஆம் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, முல்லைத்தீவு மாவட்ட ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, கிளிநொச்சி மாவட்ட ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் அத்துல ஜயவர்தன ஆகியோர் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் நேரடியாகப் பார்வையிட்டு, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன், கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் தொடர்பான முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...
ஐ.தே.மு கொள்கை விளக்கக் கோவை கையளிப்பு ஊர்வலம் ஆரம்பம்
ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை விளக்கக் கோவையினை கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்கர்களுக்குக் கையளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலம் சுமார் 250 வாகனங்களுடன் இன்று முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர உள்ளிட்ட முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணியினர் கண்டியில் நாளை விசேட மத வழிபாடுகளில் ஈடுபட்டபின்னர் மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
புனரமைக்கப்பட்ட இரு பாடசாலைகள் மூதூரில் திறப்பு



இலங்கைக்கான தூதுவர் எம்.எஸ் பற்றீசியா புட்னிஸ் கடந்த 10 ஆம் திகதி மூதுரில் புனரமைக்கப்பட்ட இரண்டு பாடசாலைகளை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இப்பாடசாலைகள் ஏற்கனவே சேதமான நிலையில் காணப்பட்டன. இதையடுத்து இவற்றை அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி சபை, யுத்த முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த பிரதேசங்களை மீள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் மிகவிரைவாக புனரமைத்தது.

திருகோணமலையில் உள்ள அம்மன் நகர், அரப்பா நகர் ஆகிய இடங்களைச் சேர்ந்த பாடசாலைகளையே அமெரிக்க தூதுவர் திறந்து வைத்தார்.

அதேவேளை திருகோணமலையில் ஐந்து பாடசலைகளும், மட்டகளப்பு மாவட்டத்தில் இரண்டு பாடசலைகளும், வைத்தியசாலை ஒன்றும் அமெரிக்க நிதியுதவியில் புனரமைக்கப்படவுள்ளன.

மேலும் இது குறித்து தூதுவர் கருத்து தெரிவிக்கையில்,

"திருகோணமலையில் உள்ள பாடசாலைகள் நீண்ட காலமாகப் புனரமைக்கப்படவில்லை.எனவே தான் அமெரிக்க அபிவிருத்திச் சபையின் நிதி உதவியின் கீழ் இவை புனரமைக்கப்பட்டன.

இதன்மூலம் இங்குள்ள எதிர்கால சமுகத்தினர் சிறந்த கல்விப் பயனைப் பெற்றுக் கொள்ள முடியும். இதே போன்று மட்டக்களப்பில் புனரமைக்கப்படாத ஏனைய கட்டிடங்களும் மிக விரைவில் புனரமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதிகளிடையே வாய்த்தர்க்கம் மட்டுமே ஏற்பட்டது:உதவி ஆணையாளர்


மெகசின் சிறைச்சாலையில் இன்று காலை தமிழ்-சிங்கள கைதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

பிரதி நீதி அமைச்சர் வி. புத்திரசிகாமணியிடம் இது குறித்து கேட்ட போது, பெரிதாகப் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை என்றும் கைதிகளிடையே வாய்த்தர்க்கம் மட்டுமே ஏற்பட்டதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்ததாக எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு நேரில் சென்று, உதவி சிறைச்சாலை ஆணையாளர் கெனத் பெர்னாண்டோவிடம் நாம் கேட்ட போது,

"இன்று காலை 8.30 மணியளவில் கைதிகளைக் கணக்கெடுப்பதற்காக அதிகாரி ஒருவர் தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரிவுக்குச் சென்றிருந்த சமயம், அங்கிருந்த கைதி ஒருவர் இவர் மீது கல்லெறிந்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த சிங்கள கைதிகளுக்கும் தமிழ்க் கைதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட கைதிகளைச் சிறைச்சாலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதன் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை" என்றார்.

இது குறித்து தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் உதவி சிறைச்சாலை ஆணையாளர் கெனத் பெர்னாணாண்டோ தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...