30 மே, 2010

கிளிநொச்சி கணேசபுர பகுதியில் மலசலக்கூடக் குழியில் மனித சடலங்கள்


கிளிநொச்சி கணேசபுர பகுதியில் மலசலக்கூடக் குழியில் மனித சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அண்மையில் உள்ள காணியில் இருக்கும் மலசலக்கூடக் குழியை துப்பரவு செய்யும் போதே சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் சில பொலித்தீன் பைகளில் கட்டபட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் காணியின் உரிமையாளர் பொலிஸாருக்கு குறித்த சம்பவத்தை அறிவித்த பின்னர் நீதவான் உட்பட பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதோடு குறித்தப் பகுதியில் இன்னும் பல சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் மாணவர் மத்தியில் கையடக்கத் தொலைபேசி பாவனை : பெற்றோர்



மன்னாரில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் கையடக்கத் தொலை பேசிகளைப் பயன்படுத்தி வருவதனால், அவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள், மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கவலை தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதும், மாணவர்கள் மறைமுகமாக கையடக்கத் தொலை பேசிகளை பாடசாலைகளுக்கு கொண்டு சென்று பயன்படுத்தி வருவதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேவேளை, மாணவர்கள் மாலை நேர வகுப்புக்களுக்குச் செல்லும் போது கையடக்கத் தொலைபேசிகளில் பதிவு செய்து வைத்துள்ள சினிமாப் பாடல்களை உரத்த சத்தமாகப் போட்டுக் கேட்டுக் கொண்டே வீதிகளில் நடந்து செல்வதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சில மாணவர்கள் ஆபாச வீடியோக் காட்சிகளைப் பதிவு செய்து பாடசாலைகளுக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் கொண்டு சென்று பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே பாடசாலை நிர்வாகமும் தனியார் நிறுவனங்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி கையடக்கத் தொலைபேசி பாவனைகளைக் கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில்,இந்தியா அதிகாரம் செலுத்தவில்லை:





இலங்கையில்,இந்தியா அதிகாரம் செலுத்தவில்லை: ஜனாதிபதி மஹிந்த ராஜபஹ்சா
விடுதலைப்புலிகளுடன் நடந்த போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்ற முதலாம் ஆண்டு விழா கொழும்புவில் கொண்டாடப்பட்டது. அப்போது அதிபர் ராஜபக்சே பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

தனி ஈழம் கேட்டுவிடுதலைப்புலிகள் போராடினார்கள் அதை இலங்கை அரசு ஒப்புக் கொள்ளவில்லை. அதற்காக அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். நான் பதவிக்கு வந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்த விரும்பினேன். அதற்கு மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதாகிவிட்டது.

விடுதலைப்புலிகளை வெற்றி பெற்று இருந்தாலும் அந்த இயக்கம் முற்றிலும் அழித்து விட்டதாக நான் கருத வில்லை. ஏனெனில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளவர்கள் மற்றும் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள் அவர்கள் பல நாடுகளில் பரவிக்கிடக்கின்றனர்.

விடுதலைப்புலிகளுடன் நடந்த போரின் போது 20 ஆயிரம் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்ததாக கூறப்படுவது தவறு. இலங்கை ராணுவம் மிகவும் கட்டுப்பாடானது. போரின் போது பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி அவர்கள் நடந்து கொண்டனர்.

இலங்கை அரசின் முகாமில்தான் பிரபாகரனின் தாயார், தந்தை மற்றும் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர் அவர்களை நாங்கள் துன் புறுத்த வில்லை. அப்படி இருக்கும் போது பொது மக்களை கொலை செய்வோமா? ஏனெனில் அவர்கள் அனைவரும் எங்கள் நாட்டு மக்கள்தான்.

இலங்கை ராணுவ முகாம்களில் இருந்த 3 லட்சம் பேரில் 30 ஆயிரம் தமிழர்கள் தங்கள் கிராமங்களில் மீண் டும் குடியமர்த்தப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் குடியமர்த்தப்படுவார்கள். விடுதலைப்புலிகளுடன் நடந்த போரின் போது எங்களுக்கு ராணுவ உதவியையும் ஆலோ சனை களையும் வழங்கி இந்தியா உதவி செய்தது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரி வித்து கொள்கிறேன். போரின் போது சீனாவில் மட்டுமின்றி இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் கூட ஆயுதங்களையும் வாங்கினோம்.

இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் இலங்கை உறவு வைத்திருப்பதாக கருதக் கூடாது. இந்தியாவுடன் இலங்கை நட்புறவுடன் திகழ் கிறது. அது மட்டுமின்றி இந்தியாவை மிக உயர்வாக கருதுகிறோம்.

எங்கள் மீதுஇந்தியா அதிகாரம் செலுத்த வில்லை. மாறாக இளைய சகோதரி யிடம் அன்பு செலுத்துவது போன்று மிக பரிவாக நடந்து கொள்கிறது. வருகிற ஜூன் 8-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறேன். அப்போது பல விஷயங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறேன்.

பொருளாதார வளர்ச்சி குறித்த பேச்சுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வன்னி மக்கள் நலன்கருதி மா.ச. தேர்தலில் ததேகூ போட்டி :




அரியநேத்திரன் முகாம்களில் தங்கி அவதிப்படும் அனைத்து வன்னிப் பகுதி மக்களையும் மீளக்குடியமர்த்தி, அவர்களுக்கு நிம்மதியான, நிரந்தரமான வாழ்வை விடிவை ஏற்படுத்திக்கொடுப்பதை வலியுறுத்தி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற இருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஐபக்ஷ நேற்று தெரிவித்திருந்தார். இதையொட்டி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும்,

"வடக்கில் குறிப்பாக வன்னியில் பெருந்தொகை மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் இடைத்தங்கல் முகாம்களிலும் புனர்வாழ்வுக் கிராமங்களிலும் வசிக்கிறார்கள். இந்த நிலையில் அந்த பிரதேசத்தில் தற்போது தேர்தல் நடத்துவதானது விரும்பத்தக்கதல்ல. இதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

மாறாக ஒரு தேர்தலை நடத்தி அரசு தனது இருப்பை நிரூபிக்க எத்தனித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த தேர்தலில் பங்குபற்றுவது தவிர்க்கமுடியாததொன்றாக அமைந்துவிடும்.

அத்துடன், கடந்த வாரம் வன்னிக்குச் சென்றிருந்தோம். அந்த மக்களின் அவலங்களை நேரில் கண்டோம்.

சர்வதேசத்துக்கு அரசு கூறிவருவது போன்று அங்கு எதுவும் நடக்கவில்லை. மீள்குடியேற்றம் என்ற பெயரில் அரசு ஏமாற்று நாடகத்தையே அரங்கேற்றி வருகிறது. இதனை அம்பலப்படுத்தவும் அந்தத் தேர்தலைப் பயன்படுத்தலாம்.

அல்லற்படும் அந்த மக்களின் அவலங்களுக்கு ஏற்ற தீர்வைப் பெற்றுக் கொடுக்கவாவது வடக்கு மாகாண நிர்வாகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியாக வேண்டும். அந்த நிர்வாகத்தைக் கைப்பற்றுவதன் மூலம் வன்னி மக்களின் அவலங்களுக்கு முடிவைக் காணலாம். சர்வதேசத்துக்கு அரசு அறிவித்து வருவது போன்று மக்கள் வன்னியில் மீளக் குடியமர்த்தப்படவில்லை. இன்னமும் அகதி நிலையிலேயே அந்த மக்கள் பசி, பட்டினியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த மக்களுக்கு விடிவு கிடைத்து சகஜவாழ்வுக்கு அவர்கள் திரும்ப, மாகாண சபைத் தேர்தலைப் பயன்படுத்தவேண்டிய தேவையுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் மத்தியஸ்த சபைகள் : சமூக ஆர்வலர் வேண்டுகோள்

மன்னார் மாவட்டத்தில் இவ்வளவு காலமும் மத்தியஸ்த சபைகள் இயங்காத நிலையிலும் யுத்தத்தைக் காரணம் காட்டி இச்சபைகளின் நியமனங்கள் பல முறையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மன்னாரில் பல்வேறு பிணக்குகள் தீர்க்கப்படாமல் இருந்து வருகின்றன.

எனவே இனியும் காலதாமதமின்றி மேற்படி சபைகளை உடன் அமைக்க நடவடிககை எடுக்குமாறு மன்னார் மாவட்ட சமூக ஆர்வலரும் , சிரேஷ்ட ஊடகவியலாளருமான மக்கள் காதர் நீதி அமைச்சரைக் கேட்டுள்ளார்.

மன்னார் நகரம், நானாட்டான், முசலி மாந்தை , மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவு என 5 வலயங்களிலும் மன்னார் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பல்வேறு பிரச்சினைகள் தினமும் ஏற்படுகின்றன.

எனவே தற்போதைய புதிய அமைச்சர்கள் இனிமேலும் காலதாமதம் செய்யாது, மத்தியஸ்த சபைக்குத் தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று மாவட்டத்தில் சீரான நீதி நிர்வாகம் நடைபெற வழியேற்படுத்த வேண்டும் என தனது வேண்டுகோளில் இவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நகர வாழ்க்கை கசந்தது; காடு வா என்றது' காட்டுக்கே திரும்பினார் இளம்பெண்

"வீடு போ போ என்கிறது; காடு வா வா என்கிறது' என்று நமது வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிகள் சொல்ல கேட்டிருப்போம்.

÷ஆனால், கம்போடியாவில் ஒரு இளம் பெண் 2 ஆண்டுகள் நரக வேதனையை நகரத்தில் அனுபவித்தாரோ என்னவோ, மீண்டும் காட்டுக்கே சென்றுவிட்டார்.

÷கம்போடிய நாட்டில் ரத்னகிரி மாவட்டத்தில் 1989-ல் காட்டெருமைகளை மேய்த்துக் கொண்டிருந்த ரோசோம் பி.ஜியெங் என்ற பெண் காணாமல் போனார். அப்போது அவருக்கு வயது 8.

÷2007-ல் ஒரு விவசாயியின் தோட்டத்தில் உணவு திருட முற்பட்டபோது உடலில் ஆடையின்றியும், அழுக்காகவும் அவர் மீட்கப்பட்டார். பின்னர் அவரது தந்தை சல்லெü கண்டுபிடிக்கப்பட்டு தந்தை வசம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

÷அவரால் சாதாரண மனிதர்களைப் போல பேச முடியவில்லை. குரங்குகள் போலவே அவரது செய்கைகளும், நடவடிக்கைகளும் இருந்தன.

÷மனிதர்களைப் போல உணவு எடுத்துக் கொள்ள மறுத்ததால் அவர் தொடர்ந்து நோய்களால் பாதிக்கப்பட்டார்.

÷மனிதர்களை விட விலங்குகளே மேல் என நினைத்தார் போலும், அவரது தந்தையிடம் இருந்து தப்பி காட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டார்.

÷காட்டில் உள்ள ஆவிகள்தான் அவரை மீண்டும் காட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டது எனவும், அவரை அடர்ந்த காடுகளில் தேடி வருகிறோம் எனவும் அவரது தந்தை சல்லெü தெரிவித்தார்.

÷அவர் காட்டுக்குதான் தப்பிச் சென்றிருக்கக் கூடும் என உள்ளூர் காவல்துறை தலைவர் மா விச்செட்டும் தெரிவித்தார்.

÷மனிதன் பாதி - மிருகம் பாதி இரண்டும் கலந்த கலவை பெண் என்றும், காட்டுப் பெண் என்றும் கம்போடிய மக்கள் அப் பெண்ணை வர்ணித்து வந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

தெல்தெனியாவில் ஆணின் சடலம் மீட்பு

தெல்தெனியா பொலிஸ் பிரிவைச் சேர்ந்த றம்புக்வெல்ல என்ற இடத்தில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெல்தெனிய பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று முன் தினம் மாலை தமக்குக் கிடைத்த ஒரு தகவலின் அடிப்படையில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதியை அண்மித்த, பாதுகாப்பு வலயத்தில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெல்தெனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சிலாவத்துறையில் சிலர் கைது என்ற செய்தி உண்மையில்லை:பொலிஸ் தரப்பு

சிலாவத்துறை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலமையிலான குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பெயரில் சிலர் கைது செய்யப்பட்டார்கள் என வெளியான தகவல்களில் உண்மை இல்லை எனப் பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளை மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கும் பொருட்டு இம்மாதம் 27ஆம் திகதி வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் மன்னாருக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்ட பின், அமைச்சர் பசில் ராஜபக்ஷ சிலாவத்துறைப்பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இதன் போது குறித்த பிரதேசத்தில் மீள்குடியேறியிருக்கும் மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் கோரிக்கை முன் வைப்பதற்காகக் காத்திருந்தனர்.

ஆயினும் குறித்த பிரதேசம் கடற்படையினரின் பாதுகாப்புக்குட்பட்ட பகுதியாக இருந்ததால் பிரதேசவாசிகள் தமது கோரிக்கையைச் சமர்ப்பிக்க எடுத்த முயற்சி பலனற்றுப் போனது. இந்நிலையில், அவர்கள் தாம் கொண்டு சென்ற கோரிக்கையடங்கிய மகஜரைத் தலைக்கு மேல் உயர்த்தி அமைச்சரின் பார்வைக்குக் காட்டியிருக்கின்றனர்.

இச்சம்பவம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதனாலேயே பிரதேசவாசிகளில் சிலர் பொலிஸ் விசாரணைகளுக்கு உள்ளானதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் பொலிஸ் தரப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எனச் சொல்லப்பட்டவர்களிடமிருந்து சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

முல்லையில் கண்ணிவெடி அகற்றப்படும்வரை மீள்குடியேற்றமில்லை: அமைச்சர்

"யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா அகதிமுகாம்களிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முடியாது. அந்த மாவட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டமை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அவர்களை மீளக்குடியேற்ற முடியும்" என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

"இந்த மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கின்றனர். இவற்றை அகற்றும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே அதிகளவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளமை இப்போது தெரிய வந்துள்ளது. இருப்பினும் அந்த மாவட்டத்தில் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமான அறிக்கை எமக்குக் கிடைத்த பின்னரே அகதி முகாம்களிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முடியும்.

இதற்கு இன்னும் ஒரு மாத காலமேனும் தேவைப்படலாம்.

வவுனியாவிலுள்ள ஆறு நலன்புரி வலயங்களில் ஒன்றினை இன்னும் இரண்டொரு தினங்களில் நாம் மூடவுள்ளோம். மீதியாக ஐந்து வலயங்களே உள்ளன. இவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் அனைவரையும் குடியேற்றிய பின்னர் இந்த வலயங்களையும் மூடக்கூடியதாகவிருக்கும்.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு வழங்கப்படும் கூரைத் தகடுகள் இந்தியாவிலிருந்தே எமக்குக் கிடைக்கின்றன. கூரைத் தகடுகளை ஏற்றிய கப்பல்கள் இந்தியாவிலிருந்து கொழும்பை வந்தடைந்ததும் அவற்றினைத் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்குத் துரிதமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அந்தந்தப் பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம சேவகரிடம் இவை ஒப்படைக்கப்படடு மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கப்படும். மேலும், கடந்த காலங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் உதவியுடனேயே அரசாங்கம் ஆறுமாத காலத்துக்கான நிவாரணங்களை வழங்கி வருகிறது.

இவை முடிவுறும் நிலையிலிருந்தாலும் அவற்றினைத் தொடர்ந்து வழங்குவது குறித்து உலக உணவுத் திட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பெரும்பாலும் இது சாத்தியப்படும்" எனவும் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

மலேஷியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் இரு தமிழர்கள்

மலேஷியாவில் உள்ள 40 கோடீஸ்வரர்களின் பட்டியலில் இரண்டு தமிழர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது.

உலகின் உயர்ந்த கட்டடங்களில் ஒன்றான மலேஷியாவின் பெட்ரொனஸ் டவரின் உரிமையாளரான 72 வயதான அனந்த கிருஷ்ணன், 40,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் அதிபதியாவார்.

மலேஷியாவின் மிகப் பிரபலமான கையடக்கத் தொலைபேசி இணைப்பு நிறுவனமொன்றை தற்போது இவர் நிர்வகித்து வருகின்றார்.

அடுத்தவர் ஏ. கே. நாதன் என்பவராவார். 54 வயதான இவர் உலோக மற்றும் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வருபவர் ஆவர்
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் தும்பு, பதனீர் வெல்லம் தொழிற்சாலைகள் திறந்து வைப்பு

யாழ். குடாநாட்டினுள் கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தும்பு மற்றும் பதநீர் வெல்லம் உற்பத்தித் தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் இந்த தொழிற் சாலைகளை திறந்து வைத்தனர். அன்றைய தினமே உற்பத்திகளும் ஆரம்பமாகின.

அத்துடன் வேலணை மேற்கு பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கான புதிய விற்பனை நிலையமொன்றும் திறந்து வைக்கப்பட்டது. உள்ளூர் உற்பத்திகளை ஊக்கவிக்கும் முகமாக இந்த விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விற்பனை நிலையத்தை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறியும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் திறந்து வைத்தனர்.

பனம் வெல்லம், புழுக்கொடியல், பனை ஓலையால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பாராளுமன்றக் குழுக் களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

வேலணை கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தும்பு உற்பத்தி நிலையத்தின் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

பனைசார் தொழில்களையும் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு இத்தொழிற்சாலை திறந்து வைக்கப்பட் டுள்ளது. இவர்கள் தொழிற்பேட்டைக்கான மின்பிறப்பாக்கியை இயக்கி வைத்ததுடன் தொழில் நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்தனர்.

அச்சுவேலியில் தும்புப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையின் தொழிற்சாலை அலுவலகமும்

தொழிற்பேட்டையையும் அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோ ரால் திறந்துவைக்கப்பட்டன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதியுதவியின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்ட இந்த தொழிற்சாலை யில் 40 பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் முதற்கட்ட மாக பணியில் ஈடு படுத்தப்படவுள் ளதாகவும் பின்னர் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அச்சு வேலி பனை தென்னை வள அபி விருத்தி கூட்டுறவுச் சங்க பொது முகா மையாளர் செல்வராசா தெரிவித்தார்.

சுன்னாகத்தில் அமையப் பெற்றுள்ள பதனீர் வெல்ல உற்பத்தி நிலையத் தையும் அமைச்சரும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திர சிறியும் திறந்து வைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சோமாவதி, அக்போபுர விகாரைகளில் ஜனாதிபதி நேற்று வழிபாடு

கந்தளாய் அக்போபுர ரஜமஹா விகாரைக்கும் பொலன்னறுவை சோமாவதி விகாரைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று விஜயம் செய்தார்.

கந்தளாய் அக்போபுர விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்த பெருமானின் வணக்கஸ்தலத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

அக்போபுர விகாரைக்கு வருகை தந்த அடியார்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

இதனையடுத்து பொலன்னறுவை சோமாவதி விஹாரைக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். சோமாவதி சைத்தியவுக்கு வருகை தந்திருந்த அடியார்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

ஜானாதிபதியுடன் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பிரதியமைச்சர்களான சந்திரசிறி சூரியாரச்சி, சிறிபால கம்லத், ரொஷான் ரணசிங்க எம்.பி., ஜனாதிபதியின் செயலணியின் தலைவர் காமினி செனரத் ஆகியோரும் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. தே. க. பல குழுக்களாகப் பிளவு: மறுசீரமைப்பு செயற்பாடு குழப்பத்தில்

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு செயற்பாடுகளை ஆரம்பத்திலேயே முடக்குவதற்கான சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் ஒருவருக்கொருவர் முரண்படும் விதத்தில் சிலர் பரஸ்பரம் கருத்துகளைப் பரிமாறி சதி செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், ஐ.தே.க.வை மறுசீரமைப்பதற்கான முயற்சியை மீண்டும் முடக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

கட்சிக்குள் குழுக்களும் பிரிவுகளும் மேலும் மேலும் உருவாகுவதையும் மற்றும் கட்சி மீண்டுமொருமுறை இர ண்டாகப் பிளவுபடுவதையும் எவ்விதத்திலும் தவிர்க்க முடியாதுபோகுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டுமெனக் குரல் எழுப்பும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ரகசியமாக ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இரட்டைவேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதேவேளை ரவி கருணாநாயக்கவுக்கும் சஜித் பிரேம தாசவுக்குமிடையிலான மோதல் தற்போது பகிரங்கமாக இடம்பெறத் தொடங்கியுள்ளது.

அதேநேரம், கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவையே நியமிக்க வேண்டுமெனப் பகிரங்கமாகக் கூறுவோர், ரகசியமாக சஜித் பிரேமதாசவுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தலைமைத்துவத்திற்கு இருவர் போட்டியாக வரும் பட்சத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் சஜித் பிரேமதாச அரசியலில் அநாதரவாகும் நிலையே ஏற்படுமென்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சி மறுசீரமைப்பு யோசனையின்படி தலைமையைத் தேர்ந்தெடுக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது சஜித் பிரேமதாசவைத் தனிமைப்படுத்துவ தாகவே முடியுமென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, இடைக்கிடை தலை மைத்துவத்தை மாற்ற தேர்தல் நடத்துவது கட்சியைப் பலவீனப்படுத்துவதாகவே அமையுமென்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு விழா: நடிகர்களுக்கு எச்சரிக்கை

சர்வதேச இந்திய திரைப்பட கழக சின்னம்
சர்வதேச இந்திய திரைப்பட கழக சின்னம்
கொழும்பில் நடத்தப்படக்கூடிய விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுக்கு எதிராக தென்னிந்திய திரைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த மாதம் கொழும்பில் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச இந்திய திரைப்பட கழகத்தின் விருது வழங்கும் விழாவை 'இரத்தக் கறை படிந்துள்ள' இலங்கையில் நடத்தக்கூடாது என்று தென்னிந்திய திரைத்துறை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமது கோரிக்கையை மீறி கொழும்பில் விழா நடக்கும் பட்சத்தில், அதில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடாமல் புறக்கணிக்கப்போவதாக தென்னிந்திய திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் வெள்ளியன்று சென்னையில் நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்தக் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானம் கூறுகிறது.

"இந்த விருது வழங்கும் விழாவை வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளுங்கள். ஆனால் இரத்தக் கறை படிந்த இலங்கையில் நடத்தப்படுவதைத்தான் தாங்கள் எதிர்ப்பதாக" அத்தீர்மானம் கூறுகிறது.

ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 3-5 தேதிகளில் கொழும்பில் இந்த விழா நடக்கும் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...