24 செப்டம்பர், 2010

கண்டியில் சூதாட்ட நிலையம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு: பெண்கள் உட்பட 74 பேர் கைது

கண்டி நகரில் சட்ட விரோதமான முறையில் நடாத்தப்பட்ட ‘கெஸினோ’ சூதாட்ட நிலையம் ஒன்றினை கண்டி பொலிஸார் சுற்றி வளைத்து அங்கிருந்த பெண்கள் உட்பட 74 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கண்டி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இச்சுற்றி வளைப்பு இடம்பெற்றது.

கைது செய்யப்பட்டவர்களில்; ஒன்பது பெண்களும் அச்சூதாட்ட நிலையத்தின் ஊழியர்கள் 24 பேரும் அடங்குவர்.

நீண்ட காலமாக நடாத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் இச்சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த போது இரண்டு இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தவிர கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வசமுள்ள பணத்தின் தொகை சம்பந்தமாக கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன் எடுத்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன்? : பழ.நெடுமாறன் கேள்வி

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறுகின்றார். அது உண்மை என்றால், அழிக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன்?

சிறையில் இருக்கும் சீமானை விடுதலை செய்ய வலியுறுத்தி 'கருத்துரிமைக்களம்', சார்பில் கோவையில் நேற்று கூட்டம் ஒன்று நடந்தது. தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இன்று அவர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதன்போது,

"இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன.

நியூசிலாந்தில் சமீபத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,

"விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு அரசியல் இயக்கத்திற்கான அம்சங்களையும், நேர்மையையும் கொண்ட ஒரு மிகப்பெரிய தேசிய விடுதலை இயக்கம்" என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இங்கே மட்டும் மத்திய, மாநில அரசுகள் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் என்கிறார்கள். அது தீவிரவாத இயக்கம் என்கிறார்கள்.

இலங்கையில் விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். அது உண்மை என்றால், அழிக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன்?

அந்தத் தடையை நீக்குவதற்குத்தான் வைகோ டில்லியில் வாதாடிக் கொண்டிருக்கிறார்" என்று பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியாவில் தொடர் மழை : மீள்குடியேறிய மக்கள் அவலம்

வவுனியா பிரதேசத்தில் தொடர்மழை பெய்கிறது. இதனால் சொந்த இடங்களுக்கு மீள்குடியேறிய மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வீமன்கல் கிராமப்பகுதியில் 33 வருடங்களின் பின்னர் மீள்குடியேறியுள்ள குடும்பங்களின் கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இருப்பதற்கும் படுப்பதற்கும் முடியாத நிலையில் தாம் அவதிப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வீமன்கல் மட்டுமல்லாமல், குடாகச்சகொடி, பாவற்குளம், ரன்கெட்கம உள்ளிட்ட வேறு பல மீள்குடியேற்றக் கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பாதிப்புகள் குறித்து வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் தெரிவிக்கையில்,

"தற்போது ஆரம்பித்துள்ள மழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை.

எனினும். மழையினால் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு வழங்குவதற்கென அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு மேலதிக கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டு கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குத் தேவையான கூரைத்தகடுகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் தொடர்ச்சியான அல்லது கடும் மழையினால் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐநாவின் அகதிகளுக்கான தூதரக அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதற்கென ஒரு திட்டத்தை வகுக்குமாறு அவர்களிடம் கோரியுள்ளோம். அந்தத் திட்டத்திற்கமைய பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்படும் குடும்பங்கள் பராமரிக்கப்படும் " என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கு முதல்வருக்கு மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. புகழாரம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. இராஜதுரை கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவை நலனைப் பாராட்டி அவருக்குப் பொன்னாடை போற்றிக் கௌரவித்தார்.

புதன்கிழமை மட்டக்களப்பில் அவரது வீட்டில் முதலமைச்சர் சநத்திரகாந்தனைச் சந்தித்து பேசுகையில்,

"கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல சேவைகளைப் புரிந்து வருகிறது. மக்களின் நலனில் அக்கறை கொள்கின்ற ஒரு கட்சியாகவும் இது செயற்படுகிறது.

எனது ஆதரவு த.ம.வி.பு. கட்சிக்கு என்றும் உண்டு. மேலும் பல சேவைகளை எமது மக்களுக்காக ஆற்ற வேண்டி இருக்கின்றது. அதற்கு த.ம.வி.பு. கட்சியுடனான உறவு வலு சேர்க்கும் என நான் நம்புகிறேன்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஈழப்போர் பற்றிய ஓவியக் கண்காட்சி: வைகோ இன்று திறப்பு

இலங்கையில் கடந்த 27 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், அந்நாட்டு மக்களின் அவல நிலை என்பன பற்றிய ஓவியங்களை உள்ளடக்கிய கண்காட்சி ஒன்று இன்று திருச்சியில் திறந்து வைக்கப்படுகிறது.

திருச்சி டி.எம்.எஸ்.எஸ்.எஸ். ஹாலில் ஓவியர் புகழேந்தியின் தயாரிப்பில் `போர் முகங்கள்` என்ற இந்த ஓவிய கண்காட்சியை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

இந்நிகழ்வுக்கு திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மலர்மன்னன் தலைமை தாங்குகிறார்.

கண்காட்சி எதிர்வரும் 26ஆந் திகதி வரை நடைபெறும். தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

காணி அபகரிப்பு தொடர்ந்தால் உண்ணாவிரதப் போராட்டம்: த.தே.கூ

தமிழ் பிரதேசங்களில் காணி அபகரிப்புகள் அதிகரித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழர் பகுதிகளில் ஒரு பிரிவினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அங்கு விகிதாசார அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். முறையற்ற வேலை வாய்ப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மீள் குடியேற்றப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மழைக் காலம் தொடங்கி விட்டமையால் அவர்கள் மீண்டும் அகதிகளாகவுள்ளனர். மழைக்கு ஒதுங்குவதற்கு பாடசாலையோ கோவிலோ இல்லை.

யுத்தம் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகின்ற போதிலும் மன்னார் மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கு தற்போதும் பாஸ் நடைமுறையில் உள்ளது. கடலுக்குள் இறங்குவதற்கு பாஸ் பெற வேண்டும். புலிகள் அழிக்கப்பட்டு விட்டால் இந்த கட்டுப்பாடு எதற்கு?, பாஸ் எதற்கு? வடக்கு, கிழக்கில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. அதுவும் ஒரு சிறு பிரிவினருக்கே வழங்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கில் வழங்கப்படும் வேலை வாய்ப்புக்களில் விகிதாசாரம் பேணப்பட வேண்டும். இல்லையேல் அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம் முறையற்ற, தகுதியற்ற வேலை வாய்ப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.

தமிழ் பகுதியில் காணி அபகரிப்புகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலைமை தொடர்ந்தால் இதற்கெதிரான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்ணா விதரம் இருக்கும்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்-மாவை சேனாதிராஜா எம்.பி


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் வன்னி மக்கள் அளித்த சாட்சியத்தை இராணுவப் பேச்சாளர் மறுத்துள்ள நிலையில் அந்த மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாட்சியமளித்த மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் கோரிக்கை விடுத்தார். யுத்தம் என்ற பெயரில் வடக்கு கிழக்கில் எமது சமூகத்தை அழித்தொழித்தது போதும்; சொத்துக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தியதும் போதும். தற்போது அங்கு இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை தடுத்துநிறுத்துமாறும் எமது பிரதேசங்களையாவது பாதுகாக்குமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

யுத்தம் நிறைவடைந்து விட்டதாகவும் புலிகளை அழித்துவிட்டதாகவும், கூறுகின்ற அரசாங்கம் எதற்காக இந்த அவசரகாலச் சட்டத்தை நீடித்துக்கொண்டிருக்கின்றது என்பது தெரியவில்லை. அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருவதால் இராணுவப் படைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்படுகின்றன. இவ்வாறு இராணுவ அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதன் மூலம் அது சிவில் நிர்வாகத்துக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடுகின்றது. வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் சிவில் நிர்வாகத்துக்குள் இராணுவ ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் அரச நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை இராணுவத்தினர் கையேற்றிருப்பது இயல்புநிலைக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆயிரக் கணக்கான இராணுவத்தினை குவிப்பதற்கோ அல்லது இராணுவ முகாம்களை அமைப்பதற்கோ தேவைகள் இல்லை. யுத்தம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் சென்றுவிட்ட போதிலும் தமிழ் மக்களின் நிலங்கள், வீடுகள் இராணுவத்தினரிடமிருந்து விடுபடவில்லை. இன்றும் கூட எமது மக்களின் வீடுகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்து முகாமிட்டுள்ளனர். யுத்தத்தினூடாக எமது மக்கள் அழிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில், சூழல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சுட்டிக்காட்டி காங்கேசன்துறையில் சுண்ணக்கல் அகழ்வினைத் தடுத்து நிறுத்தியிருந்தோம்.

ஆனால், தற்போது அங்கிருந்து சுண்ணக்கல் அகழப்பட்டு கப்பல் கப்பலாக ஏற்றப்படுவதாக தெரியவருகின்றது. இந்நிலையில் இந்த கற்கள் எங்கு கொண்செல்லப்படுகின்றன என்று அரச அதிகாரிகளே கேள்வியெழுப்புகின்றனர். அப்படியானால் இதனை யார் செய்கின்றர்? எம்மைத்தான் அழித்துவிட்டீர்கள். எமது பிரதேசங்களையாவது பாதுகாப்பதற்கு உரிய அதிகாரிகள், அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மீள்குடியேற்றம் என்ற பெயரில் அரசு பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றது. ஆனாலும், தற்போது பருவமழைக் காலமாகும். செப்டெம்பர் வந்து விட்டாலே வடக்கில் வெள்ளம் என்பது அறிந்த விடயமாகும். அப்படியானால் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்கள் அழிவடைந்த பிரதேசங்களிலும் மரங்களுக்கு கீழும் எவ்வாறு இருக்கப்போகின்றனர் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இந்த பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தையும் இன்னும் அவசரமான சட்டங்களையும் கொண்டுவருகின்ற அரசாங்கம், வன்னி மக்கள் மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டுவந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இது இவ்வாறிருக்க செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் கணிசமானதொகை முன்னாள் புலிப்போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் பெற்றோர் அவர்களை அழைத்துச் செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் கடந்த 18ஆம் திகதி அவர்களது பெற்றோர் குறித்த முகாமுக்குச் சென்று கையெழுத்திட்டுள்ள போதிலும் இதுவரையில் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்ற தகவலும் இல்லை. எனவே, அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

இது இவ்வாறிருக்க அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு விசாரணைகளை நடத்திவருகின்றது. இதில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் சாட்சியமளித்துள்ளனர். தமது பிள்ளைகள், கணவர்மார், சகோதரங்கள் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாதிருப்பதாகவும் இன்னும் தாம் சந்தித்தவற்றையும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமாக வழங்கியுள்ளனர்.

இராணுவப் பேச்சாளர் இவ்வாறு தமிழ் மக்களின் சாட்சியத்தை மறுத்திருப்பதானது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளித்த எமது மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

கச்சத்தீவை நோக்கி 10 ஆயிரம் இந்திய மீனவர் படையெடுப்பு!


இந்திய மீனவர்கள் 10,000 பேர் கச்சத்தீவை நோக்கிச் செல்லும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் (ஒக்டோபர்) 11 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவதற்குக் கண்டனம் தெரிவித்தே இவர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கச்சத்தீவு அருகே சென்று மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவது தொடர்கதையாகி விட்டது. இது குறித்து மத்திய அரசும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

இந்திய அரசின் மெளனமும், அலட்சியமும் இலங்கை கடற்படையினருக்கே சாதகமாக உள்ளன. சுடப்படுவதும், உயிரிழப்பதும், தாக்கப்படுவதும், சேதங்களை சந்திப்பதும் மீனவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம், மகத்துவம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், அந்தோணி, சேசுராஜா, எமரிட், ஜான், தட்சிணாமூர்த்தி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையைத் தமக்கு நிலைநாட்டித் தர வேண்டும் - எல்லை தாண்டிச் சென்ற 110 படகுகளுக்கு 'நோட்டிஸ்' வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் - இலங்கையில் உள்ள படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி, எதிர்வரும் 11ஆந் திகதி ஆயிரம் படகுகளில் 10 ஆயிரம் மீனவர்கள் ஒன்று திரண்டு கச்சத்தீவு சென்று போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தி புதிய பரிமாணங்களை எட்டுவோம்




தவறான திசையில் சென்றவர்களுக்கு ஜனாதிபதி கைகோர்த்துக் கொள்ளுமாறு அழைப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி உரை

இலங்கைக்கு எதிரான சவால்களை நாம் இனங்கண்டுள்ளோம். அதில் பாரிய சவாலாக இருப்பது எமது கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதாகும். இந்நிலையில் அதற்காக இவ்வருட முற்பகுதியில் கற்றுணர்ந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அது பொறுப்புத் தன்மையுடனான கொள்கைக்கு முற்றிலும் உட்பட்டது என்று ஜனாதி பதி மஹிந்த ராஜாபக்ஷ நேற்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றிய போது கூறினார். ஐ. நா. பொதுசபை கூட்டத் தோடரில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-

எனது இரண்டாவது பதவிக் காலம் முதலாவது பதவிக் காலத்தை விட பெரிதும் மாறுபட்டது. 2005 ஆம் ஆண்டு நான் முதலில் தெரிவு செய்யப்பட்ட போது எனது நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்பதாக வாக்குறுதி வழங்கினேன்.

அதை நிறைவேற்றியுள்ளேன். சில காலத்துக்கு முன் அங்கு கனவாக மட்டுமே இருந்த சமாதானம் இப்போது அங்கு நனவாகியுள்ளது.

எனது இரண்டாவது பதவிக் காலத்தில் சமாதானம் மற்றும் சபீட்சத்தை ஸ்திரப்படுத்துவதுடன் பயங்கரவாதம் மீண்டும் ஒருமுறை தலைதூக்க இடமளிக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை எனது மக்களுக்கு வழங்குகிறேன்.

விரைவிலேயே மறந்துபோன உண்மை என்னவென்றால் மிகவும் கொடூரமான, நன்கு திட்டமிட்டு செயற்பட்ட சிறந்த நிதி உதவியை பெற்று, நன்றாக இயங்கிய ஒரு பயங்கரவாத இயக்கத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதாகும். இது ஏனைய நாடுகளிலும் தனது வலையை விரிக்கக் கூடியதாக இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

மேற்கு நாடுகள் அண்மைக் காலத்தில் அனுபவித்துவரும் பயங்கரவாதத்தின் கொடூரத்தை இலங்கை மக்கள் சுமார் 30 வருடங்கள் அனுபவித்து வந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் அதில் உயிரிழ ந்தனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் இலங்கை ஜனாதிபதி ஒருவரும் முன்னோக்க தரிசனத்துடன் கூடிய ஒரு இந்தியத் தலைவரும் நூற்றுக்கணக்காக புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர்.

வழி தவறிப் போன சிலருக்கு நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் பிரிவினைவாதம், குரோதம், மற்றும் வன்முறைக்கு துணை போகாதீர்கள். அதற்கு மாறாக எம்முடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்திய வண்ணம் புதிய பரிமாணங்களை நாம் எட்ட முடியும்.

எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கும் அதன் காயங்களை ஆற்றுவதற்குமான நடைமுறை எமக்குள்ளேயே உருவாக வேண்டும் என்று நாம் நம்புகிறோம். சரித்திரம் நமக்கு ஒன்றை சொல்லிக் கொடுத்திருக்கிறது. என்றால் அது வெளியில் இருந்து திணிக்கப்பட்ட தீர்வுகள் மனக்கசப்பை தோற்றுவித்து இறுதியில் தோல்வியையே ஏற்படுத்தும் என்பதாகும். அதற்கு மாறான எமது உள்நாட்டு நடைமுறையானது எமது மக்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத் தையும் பிரதிபலிப்பதாக அமைகிறது.

எமது நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்து வரும் நிலையில் அதற்கு நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை வரவேற்கிறோம் சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் பரிமாண வளர்ச்சி மூலம் சர்வதேச சமூகத்துடன் கூட்டாக செயற்பட நாம் தயாராக இருக்கிறோம்.

சமாதானத்தின் பெறுபேறாக எமது பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் செல்கிறது. கடந்த காலாண்டு காலத்தில் எமது வளர்ச்சி நிலையாகவும் ஸ்திரமாகவும் உள்ளதுடன், 8 சத வீதத்துக்கு மேற்பட்ட வளர்ச்சி வீதத்தை காட்டி நிற்கிறது. பண வீக்கம் குறைந்த நிலையிலும் வட்டி வீதங்களும் குறைந்து காணப்படுகின்றன. கடந்த 5 வருடங்களில் எமது தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. அதனை மேலும் முன்னேற்றச்செய்து 2016 ஆம் ஆண்டளவில் அதனை தற்போது இருப்பதிலும் இரட்டிப்பாக்குவது எமது குறிக்கோளாகும்.

மஹிந்த சிந்தனை, எதிர்கால நோக்கு என்ற எனது தேர்தல் விஞ்ஞாபனம் உறுதியான உட்கட்டமைப்பை கொண்டிருக்கும் எனது எதிர்கால தரிசனத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தேசிய, மாகாண மற்றும் கிராம மட்டங்களில் இடம்பெறும் இந்த தரிசனம் எமது முழுமையான சமூகத்தின் அபிவிருத்தியை அர்த்தமுள்ளதாக்கும்.

அதேவேளை எனது நாட்டின் பொருளாதார தந்திரோபாயம் புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளை சுலபமாக நிறைவேற்றக்கூடிய நிலையில் இருப்பதை சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். ஐக்கிய நாடுகளின் காலக்கெடுவுக்கு முன்னரே அதனை இலங்கை நிறைவேற்றும் என்று நம்பலாம்.

ஐக்கிய நாடுகளின் அமைதிப் படைக்கு இலங்கை பங்களிப்பு வழங்கிய 50ஆவது நிறைவு 2010 ஆம் ஆண்டு என்பதை கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். எமது படையினரும் பொலிஸாரும் இன்று சிறப்பான யுத்தப் பயிற்சியுடன் எந்தச் சவாலான நிலையிலும் கடமையாற்றக் கூடிய திறனுடன் உள்ளனர். ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்து உதவும் எமது விருப்பத்தை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.

எமது பிராந்தியத்தில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அழிவுகள் முறையான செயற்பாட்டின் தேவையை கோடிட்டுக் காட்டுகின்றன. இதற்கு கூட்டான பங்களிப்பு தேவைப்படுகிறது. அதன் மூலமே மனித வேதனையைக் குறைக்க முடியும். சுவாத்திய மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவை இன்று அனைத்து நாடுகளினதும் அவதானத்தை ஈர்க்கும் விடயமாகியுள்ளதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டுவரும் அரசியல் விவகாரங்களில் பலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படும் விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். இந்த விடயம் தாமதமின்றி தீர்க்கப்பட்டு அடுத்த வருட பொதுச்சபை கூட்டத்தில் பலஸ்தீனம் பூரண அங்கத்துவ நாடாக கலந்து கொள்ளும் என்று நாம் நம்புகிறோம். உலகளாவிய ரீதியில் இன்று ஒவ்வொரு நாடும் ஒன்றையொன்று சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. எனவே நாம் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும். தேவையான வேளையில் நாம் ஒருவரையொருவரின் ஆலோசனையுடன் செயற்பட முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. நா. பொதுச்சபையில் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்கு உரிய ஏற்பாடு அவசியம் அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான விவாதத்தில் பிரதமர் ஜயரட்ன

புலிகள் மீண்டும் தலைதூக்குவதை சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவி த்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற் றுகையில் :-

பயங்கரவாதம் தோற்கடிக்கப் பட்டதையிட்டு உலகில் பல நாடுகள் இலங்கையைப் பாராட்டியுள்ளன. இதனூடாக சமூக, பொருளாதார ரீதியாக நாடு பாரிய நன்மைகளைப் பெற்று ள்ளது. குறிப்பாக உல்லாசப் பயணத் துறையில் பாரிய மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இது நாட்டின் பாதுகாப்பு நிலமை உயர் நிலைமையில் இருப்பதை சர்வதேச மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கை தொடர்பாக உலக மக்கள் மத்தியில் நல்லபிப்பிராயம் வளர்ந்து வருகின்றது.

எமக்கு கிடைக்கப் பெற்று வருகின்ற பாராட்டுக்களை நாம் தொடர்ந்தும் பேணிக் கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். இத்திட்டங்களை இன, மத, பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற அடிப்படையில் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தவென பலவிதமான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் பயனாக அண்மைக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்தை அடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், உலகில் மக்கள் திருப்தியுடன் வாழும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடத்தில் இருப்பதையும் மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

மேலும் ஈழக் கனவை கைவிடாதவர்கள் உலகில் இருக்கவே செய்கின்றார்கள். அவர்கள் தங்களுக்குத் தேவையான பின்புலத்தைத் தயாரித்துக் கொள்ளுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களது செயற்பாடுகளை நோக்கும் போது, அவர்கள் மீண்டும் இந்நாட்டில் செயற்பட முயற்சிப்பதையும் அவர்களது செயற்பாடுகளை மீளமைக்கத் திட்டமிட்டிருப்பதையும் எடுத்துக் காட்டுவதாக அவை உள்ளது. அதனால் புலிகள் மீண்டும் தலைதூக்குவதை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இதேவேளை புலிகளின் ஆதரவு இயக்கங்கள் வளர்ச்சி பெற்று வருவதையும் அவதானிக்க முடிகிறது. அத்தோடு புலிகளின் சர்வதேச வலையமைப்பு நாட்டுக்கு வெளியே ஈழ இராச்சியத்தை அமைக்கும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்காக சர்வதேச ஆதரவை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதற்காக ஐரோப்பாவிலும் மேற்கு நாடுகள் பலவற்றிலும் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் வடக்கு, கிழக்கிலும், கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களும், வெடி பொருட்களும் தொடர்ந்தும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

தனால் பயங்கரவாத செயற்பாடு மீண்டும் தலைதூக்குவதைத் தவிர்ப்பதற்காக தொடர்ந்தும் செயற்படுவது அவசியம். இதற்காக நிலையான வேலைத்திட்டம் மிகவும் அவசியமாகும்.

இலங்கையில் உறுதியான பாதுகாப்பு வேலை திட்டத்தை கடைப்பிடிப்பதற்கு கடற்படையைப் புனரமைப்பது மிகவும் அவசியமான காரணமாகும். யுத்தம் இல்லாவிட்டாலும் நாட்டின் பிரதான பாதுகாப்பு துறையே கடற்படையாகும்.

ஏனெனில் இது கடலால் சூழப்பட்ட ஒரு நாடாகும். அதனால் நாட்டைப் பாதுகாக்கும் வேலியே கடற்படையேயாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும், வெடிபொருட்களும் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் வந்து சேருவதை கடற்படையினரால் தான் கட்டுப்படுத்த முடியும். சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வருவதையும், வெளிநாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பதையும் தவிர்ப்பதற்கும், கடல் வலயங்களை ஒன்று சேர்த்து பாதுகாப்பதற்கும் உல்லாச பயணத் துறைக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும். கரையோரங்களைப் பாதுகாப்பதற்கும் கடற் படையை வலுப்படுத்துவது அவசியம்.

அதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் முழு நாட்டினதும் கரையோரங்களைப் பாதுகாப்பதற்காக கடற்படையினரின் முகாம்கள் வலையமைப்பை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது எதிர்கால பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் பாராட்டத்தக்க வேலைத் திட்டமாகும்.

இதேவேளை சரணடைந்துள்ள மற்றும் இனம் காணப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை புலன் விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநேரம் தெரிந்தெடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகின்றன. அவர்களுக்கு தொழிற் பயிற்சி பெற்றுக் கொடுக்கப்பட்டு சமூக வாழ்வில் ஈடுபடுத்தும் வேலைத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் ஏற்கனவே மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகளை அவர்கள் வெளிப்படுத்தி இராத போதிலும் அவை இப்போது மேற்கொள்ளப்படும் புலன் விசாரணைகளில் தெரியவருகின்றது. அதனால் தொடர்ந்தும் விழிப்பாக இருப்பது அவசியம்.

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வந்த பயங்கரவாத சந்தேக நபர்களும் விசாரணைகளின் பின்னர் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இதனோடு சேர்த்து அப்பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப் படுகின்றன. இதனூடாக அப்பகுதி மக்களின் எதிர்காலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

18ஆவது திருத்தம் நேற்று முதல் சட்டமாகியுள்ளது - சபாநாயகர்






அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தம் நேற்று (23ம் திகதி) முதல் நாட்டின் சட்டமாகியுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று சபையில் அறிவித்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது. இச்சமயம் அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது சபாநாயகர் மேற்படி அறிவிப்பை சபையில் விடுத்தார்.

அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் கடந்த 08ம் திகதி சபையில் மூன்றிலிரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு சபாநாயகர் கையெழுத் திட்டதும் அது நாட்டின் சட்டமாகும்.

அதற்கு ஏற்ப அரசியலமைப்புக்கான 18வது திருத்தமும் நேற்று முதல் நாட்டின் சட்டமாகியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழரின் மனங்களை வெல்ல வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை சமசமாஜ கட்சியின் மூத்த உறுப்பினர் பட்டி வீரக்க

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகுமென்று இலங்கை சமசமாஜக் கட்சியின் மூத்த உறுப்பினர் பட்டி வீரக்கோன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்காமல் 13ஆவது திருத்தத்திற்கும் அப்பால் செல்ல வேண்டியதில்லை என்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் முன்னிலையில் நேற்று (23) சாட்சியமளித்தபோது பட்டி வீரக்கோன் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தங்களுக்குப் பின்னர் முன்மொழியப் பட்ட தீர்வுகளைக் கொண்டு வந்தவர்கள் முன்னைய திருத்தத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை என்றும் பட்டி வீரக்கோன் தெரிவித்தார்.

ஆணைக் குழுவின் விசாரணை கொழும்பு 7, லக்ஷ்மன் கதர்காமர் நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. இதில் தொடர்ந்து சாட்சியமளித்த பட்டி வீரக்கோன், 1972, 1978 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புகள் முழுமையானதாக அமையவில்லை. ஜே. ஆர். ஜயவர்த்தனவின் அரசியலமைப்பிலும் குறைபாடுகள் காணப்பட்டதால், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கென 13 ஆவது திருத்தமொன்று கொண்டுவரப்பட்டது. இதற்காக ஜே. ஆர். அமைத்த அனைத்துக் கட்சிக் குழுவில் நானும் பங்குபற்றினேன். அதற்குப் பின்னர் இந்திய - இலங்கை உடன்படிக்கையின் ஊடாகவும் இந்தத் திருத்தத்திற்குச் சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டன.

ஆனால், மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்குவதையிட்டு ஐக்கிய தேசிய கட்சியினர் அச்சம் வெளியிட்டார்கள். ஆர். பிரேமதாசவைப் பொறுத்தவரை அவர், இந்திய தலையீட்டுக்கும் வடக்கு, கிழக்கு இணைப்புக்கும் எதிரானவராகக் காணப்பட்டார்.

பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியானதும் 13 ஆவது திருத்தத்தில் பாடங்களைக் கற்றுக்கொள்ளாது புதிய தீர்வொன்றுக்குச் சென்றார். அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் கருத்தின்படி தமிழர்கள், தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் இருக்கவே விரும்புகிறார்கள் என்று தனது புத்தகமொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். சிங்களவர் எப்போதும் சிங்களவர்களாக நினைக்கிறார்கள்.

அரசாங்கமும் அப்படித்தான் எண்ணுகிறது. நான் எனது ஐம்பதாண்டு கால அரசியல் அநுபவங்களைக் கொண்டு இந்த சாட்சியத்தை அளிக்கின்றேன் என்றார்.

ஆணைக்குழு முன்னிலையில் இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப் சாட்சியமளிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு துருக்கியில் விசேட சலுகை நிவாரணம்



இலங்கை - துருக்கி ஜனாதிபதிகள் சந்திப்பில் இணக்கம்

இலங்கைத் தேயிலையை துருக்கிக்கு ஏற்றுமதி செய்யும்போது துருக்கியில் விதிக்கப்படும் குறிப்பிட்டவொரு வரியின் காரணமாக இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் சலுகை நிவாரண முறையொன்றை பின்பற்ற துருக்கி இணக்கம் தெரிவித்து ள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியூயோர்க்கில் வைத்து சந்தித்த துருக்கிய ஜனாதிபதி அப்துல்லா குல் மேற்கூறியவாறு இணக்கம் தெரிவி த்தார்.

துருக்கிய ஜனாதிபதியை சந்தித்த அதேவேளை ஜமேய்க்கா பிரதமர் புரூஸ் கோர்டனையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசினார்.

புலிப் பயங்கரவாதிகளை தோற்கடிக்க முடியாது என பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த கருத்தை பொய்யாக்கும் வகையில் இலங்கையில் 30 வருட காலம் நிலவிய பயங்கரவாதத்தை தோற்கடித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை துருக்கிய ஜனாதிபதி அப்துல்லா குல்லும், ஜமேய்க்கா பிரதமர் புரூஸ் கோர்டனும் பாராட்டினர்.

துருக்கிய ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையே விமான சேவையொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக ஒப்பந்தம் செயற்படுத்தும் விதம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலும் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதுடன் வர்த்தக பரிமாற்றத்தை ஊக்குவிப்பது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

இலங்கையில் இடம்பெறும் துரித அபிவிருத்தி தொடர்பாக துருக்கிய ஜனாதிபதி கேட்டறிந்தார். நிர்மாணத்துறையில் துருக்கிய அரசு முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் அவர்களது தொழில்நுட்பம் மற்றும் துருக்கிய நிறுவனங்கள் இலங்கையின் நிர்மாணத் துறைக்கு பங்களிப்பை செலுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

ஜமேய்க்கா பிரதமருடனான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு மிடையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பது தொடர்பாக விசேடமாக பேசப்பட்டது.

நடுத்தர வருமானத்தைப் பெறும் நாடுகள் அபிவிருத்தி இலக்கை எட்டுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டது.

வெளிவிவகார அலுவல்கள், அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, சாந்த பண்டார, ரேனுக விதானகமகே, ஜே. ஸ்ரீரங்கா, சச்சின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, வெளிநாட் டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, பேராசிரியர் பாலித கொஹேன மற்றும் ஜாலிய விக்ரமசூரிய ஆகியோரும் இந்த சந்திப்புகளின்போது உடனிருந்தனர்
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பில் தமிழில் கருமமாற்றக் கூடிய 593 பொலிஸார் விரைவில் கடமை




தமிழ் மொழியில் நன்கு கருமமாற்றக் கூடிய 593 பொலிஸார் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் விரைவில் சேவையில் ஈடுபடுத்தப்படுவர் என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

தமிழ் மொழியை நன்றாக எழுத, வாசிக்க, முறைப்பாடுகளைப் பதிவு செய்யக்கூடிய வகையில் ஐந்து மாத கால கற்கை நெறியை முடித்துக் கொண்டு இவ்வாண்டு டிசம்பரில் 593 பொலிஸார் வெளியேற உள்ளதாகத் தெரிவித்த அவர், இவர்கள் உடனடியாக மேற்படி பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.

தமிழ் மொழியில் நன்கு கருமமாற்றக் கூடிய வகையில் வருடமொன்றுக்கு 1200 பொலிஸார் என்ற அடிப்படை யில் ஐந்தாண்டு காலத்திற்குள் 6000 பொலிஸார் பயிற்றுவிக் கப்படவுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை பொலிஸ் தலைமையகத்திலுள்ள பொலிஸ் மா அதிபரின் மாநா ட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிடுகையில்:-

பொலிஸார் மத்தியில் தொழில்சார் வளர்ச்சியை மேம்படுத்த பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதியினதும், பாதுகாப்புச் செயலாளரினதும் ஆலோசனைக்கமைய இதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பொலிஸாரை தேர்ச்சியடையச் செய்வதுடன் அவர்களுக்குத் தேவையான துறைகள் பயிற்சிகளையும், கற்கைகளையும் வழங்குவதே எனது பிரதான குறிக்கோளாகும் என்றார்.

விஷேடமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பின்னர் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் தற்பொழுது பொலிஸ் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டும், செயற்பட்டும் வருகின்றன. இந்த மாகாணங்களில் வாழும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இந்த அடிப்படையில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறுபவர்கள் விரைவில் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்றார்.

களுத்துறை, அனுராதபுரம், வவுனியா, மட்டு, கல்லடி, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஆகிய பொலிஸ் பயிற்சி நிலையங்களில் வருடந்தோறும் 1200 பேர் பயிற்றுவிக்கப்படவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

புதிய பொலிஸ் நிலையங்கள் அதேவேளை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலையங்களின் நிர்மாணப்பணிகள் அடுத்த மாத இறுதியில் முடிவுறும் என்று தெரிவித்த அவர், நவம்பர் மாத ஆரம்பப் பகுதியில் இந்த இரு பொலிஸ் நிலையங்களும் திறந்து வைக்கப்படவுள்ளது என்றார்.

இது தவிர, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, முல்லைத்தீவு, மல்லாவி, ஒட்டுச்சுட்டான், பியகம, இரத்தினபுரி, தியத்தலாவ, மொரவெவ மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளில் புதிதாக பொலிஸ் நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் பொலிஸ் நிலையங்களைப் புனரமைக்கத் திட்டமிட்டுள்ளது என்றும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

இதே வேளை, தமிழ், முஸ்லிம்களை பொலிஸில் இணைத்து அவர்களுக்குத் தேவையான உரிய பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான என். கே. இளங்ககோன், காமினி நவரட்ன, ஐயந்த கமகே, பிரதிப் பொலிஸ் மாஅதிபர்களான சிசிர மென்டிஸ், அநுர சேனநாயக்க, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தரம் - 5 புலமைப் பரிசில்: பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரி மாணவன் பிரியநேசன் மூன்றாம் இடம்



பரீட்சை பெறுபேறுகள் வெளி வந்ததாக மட்டுமே முதலில் கேள்விப்பட்டேன். பின்னர் 190 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தில் தெரிவு செய்யப்பட்டேன் என்றதும் பெருமகிழ்ச்சியடைந்தேன்.

பரீட்சையை நல்லமுறையில் எழுதினேன். பெற்றோரின தும் பாடசாலை ஆசிரியருடைய அறிவுரைகளின் பிரகாரம் நடந்து கொண்டதினால் இந்த பெறுபேற்றை என்னால் பெறமுடிந்தது.

இவ்வாறு வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரி மாணவன் யோகேஸ்வரன் பிரியநேசன் தெரிவித்தார்.

சமயபுரத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் சிரானிதமயந்தி தம்பதிகளின் இரண்டாவது மகன். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இவரின் தந்தையார் முச்சக்கரவண்டி சாரதி, நடுத்தர வருமானத்தைக் கொண்ட குடும்பம் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரியநேசன் பணிவான மாணவன். ஒழுங்காக பாடசாலைக்கு வருவார். அவரிடம் பல திறமைகளை காணமுடிந்தது. அவரின் பரீட்சை பெறுபேறுகள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது என மாணவனுடைய வகுப்பாசிரியை திருமதி பிலோமினா பிரோம்குமார் தெரிவித்தார்.

5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தையும் வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்ற மாணவனுக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதென குடும்ப தரப்பினர் தெரிவித்தனர்.

தேசிய ரீதியில் 3ம் இடத்தை பெற்ற வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரி மாணவனை கெளரவித்து விருது வழங்க வவுனியா வர்த்தக சங்கம் முன்வந்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...

அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க புதிய அணி

அணு ஆயுதமற்ற உலகைப் படைக்கும் முயற்சியாக 10 நாடுகள் இணைந்து புதிய அணியை உருவாக்கியுள்ளன.

ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சிலி, ஜெர்மனி, மெக்ஸிகோ, ஹாலந்து, போலந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளன.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தின் ஒருபகுதியாக இந்த புதிய அணு ஆயுத எதிர்ப்பு நாடுகளின் கூட்டமும் வியாழக்கிழமை நடைபெற்றது.

அணு ஆயுதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென இந்த நாடுகள் உறுதி எடுத்துக் கொண்டுள்ளன. கூட்டத்தில் பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கேவின் ரூட், இப்போது உலகுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடிய 23 ஆயிரம் அணு ஆயுதங்கள் பல்வேறு நாடுகளிடம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுள்ள வடகொரியா, ஈரானுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக குரல் எழுப்புவோம் என்றும் கேவின் ரூட் தெரிவித்தார்.

உலகில் அணு ஆயுதத்தால் பாதிக்கப்பட்ட ஒரே நாடு ஜப்பான். அங்கு அமெரிக்காவால் 1945-ல் வீசப்பட்ட அணுகுண்டுகள் இப்போது வரையிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...