10 நவம்பர், 2010

புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் மீட்பு: சந்திரசிறி



புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் வட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் வட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர் சுமார் ஆறரை கோடி ரூபா பெறுமதியான இந்த கொள்கலன்கள் வட மாகாணத்திலுள்ள விவசாய அமைப்புக்களுக்கும் கூட்டுறவுச் சங்களுக்கும் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆளுநர் நேற்று செவ்வாய்க்கிழமை கொள்கலன்களை கையளித்தார்;. இந்நிகழ்வு கிளிநொச்சி புள்ளியம் பொக்கனையிலுள்ள அரிசி ஆலை களஞ்சியத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழிலாண்மை அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவாநந்தா மற்றும் பாராளுமன்ற குழுவின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

வட மாகாணத்திலுள்ள பெருமளவிலான களஞ்சியங்கள் யுத்தம் காரணமாக சேதமடைந்துள்ளன. தற்போது பெரும் போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை களஞ்சியப்படுத்தும் வகையில் இந்த கொள்கலன்கள் வழங்கப்பட்டுள்ளன.இதன் மூலம் வட மாகாணத்தை சேர்ந்த விவசாயிகளும் மக்களும் பயனடைவர் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தாதிமார் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவில்லை: ஹெக்டர் வீரசிங்க

தமது கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் எவ்வித பொறுப்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என இன்று நடைபெறவிருந்த தாதிமார் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடாளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டம் நடாதத்துவதாக தாதிமார் சங்கம் தெரிவித்திருந்தது. எனினும் போராட்டத்தில் ஈடுபடாமல் வழமைபோன்று பணிகளில் ஈடுபடுவதாகவும் அவ்வாறு ஒரு போராட்டத்தில் ஈடுபட இருந்தமை பொய்யான தகவல் எனவும் தெரவித்தார்.

இதேவேளை நடாளாவிய அனைத்து தேசிய வைத்தியசாலைகளிலும் தாதிமார் தமது பணிகளில் ஈடுபடுவதாகவும் கடமைக்குச் சமூகம்தராத தாதிமார் கடமையிலிருந்து விலகியதாகவே கருதப்படுவதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

எட்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களை இடமாற்ற விசேட குழு

ஒரே பாடசாலையில் 8 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களை இடமாற்றுவதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சிறிசேன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஒரே பாடசாலையில் 8 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்காக கல்வியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் 5 பேரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள 9700 பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களது சேவைக் காலம் குறித்து ஆராய்ந்து அவர்களை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மாகம்புர துறைமுகம் 18ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும்

அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம்மாதம் 18ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாக துறைமுகம் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். துறைமுகம் மற்றும் விமான சேவை அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து ஜனாதிபதி துறைமுகத்தை திறந்து வைப்பார். மாகம்புர துறைமுகத்தை திறந்து வைக்கும் வைபவத்தினை மக்கள் கண்டுகளிக்கலாம்.

இத்தினத்தில் ஜெட்லய்னர் கப்பல் மற்றும் இரு கப்பல்கள் மாகம்புர துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை கடற்படைக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்:அமைச்சுத் தகவல்

இலங்கை கடற்படைக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய கடற் பாதுகாப்பு படைப் பிரதி இயக்குனர் வி.எஸ்.ஆர்.மூர்த்தி மற்றும் இலங்கை கடற்படைப் பாதுகாப்பு இயக்குனர் ஜெனரல் ரியர் எட்மிரல் தயா தர்மபிரிய ஆகியோர் நேற்று படைத் தலைமையகத்தில் சந்தித்து இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரியர் எட்மிரல் தயா தர்மபிரிய இச்சந்திப்பு குறித்து தெரிவிக்கையில்,

"இருநாட்டு கடற் பாதுகாப்பு படைகளுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்பவுள்ளோம். இந்தியா இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்கவுள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், மீன்பிடி மற்றும் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறல் தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடினோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து: ஐ.தே.க

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம். எனவே அவரின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும். சிறைச்சாலையிலிருந்து பொன்சேகாவை நீதிமன்றம் கொண்டு செல்கையிலும் நீதிமன்ற வளாகத்திலும் சிறைச்சாலைக்குள்ளும் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதமானது பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன்போது சரத் பொன்சேகாவின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்புக்கூறுவது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் அசம்பாவிதம் ஒன்று இடம்பெற்றது. இந்த நிலையில் பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் சிறைச்சாலையை சோதனையிட சென்றிருந்தால் ஏன் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை? சிறைச்சாலை அதிகாரிகள் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டதா? ஆனால் பொலிஸார் சோதனையிட செல்வது சிறைக் கைதிகளுக்கு தெரிந்துவிட்டது. இது எவ்வாறு என்று கேள்வியெழுப்புகின்றோம்.

ஆனால் நாங்கள் ஒரு விடயத்தை வலியுறுத்துகின்றோம். அதாவது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையிலேயே வைக்கப்பட்டுள்ளார். அவர் தங்கியுள்ள கூடத்துககு நானும் சென்றிருந்தேன். அங்கு அவருக்கு எவ்விதமான பாதுகாப்பும் இல்லை. ஒரு அதிகாரி இருக்கின்றார். 60 பொலிஸார் சென்ற வேளையிலேயே பாரிய அசம்பாவிதம் ஏற்பட்டுள்ள நிலையில் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு கூறுவது? என அவர் கேள்வியெழுப்பினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழர் மீள்குடியேற்றம் இந்திய அரசு உரிய நடவடிக்கை: சோனியா காந்தி

இலங்கைத் தமிழர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து இலங்கை அரசாங்கத்துடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது என்றும் அவர்கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு கடந்த அக்டோபர் 8 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்தில் 30 ஆயிரம் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோனியாகாந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் அந்தக் கடித்தில் மேலும் பிரஸ்தாபித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். அரசாங்க அதிபரின் சாட்சியம் அதிர்ச்சியுடன் வேதனையை தருகிறது: எஸ்.சிறிதரன்

2009 தை மாதத்தில் முல்லைத்தீவை விட்டு வெளியேறிய அரச அதிபர் இமெல்டா சுகுமாரினால் 2009 மே மாதம் 18 ஆம் திகதிவரையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் எவ்வாறு நேரில் கண்டதைப் போல் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளிக்க முடியும். இவ்வாறு பொய்களைக் கூறுகின்ற அரச அதிகாரிகளினால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடையாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. யான எஸ்.சிறிதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர காலச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவிதார். சிறிதரன் எம்.பி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

யாழ் குடாநாடாடில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இருப்பதாகவும் அதில் தற்போதைக்கு மக்கள் மீளக்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர்களும் இராணுவ அதிகாரிகளும் கூறி வருகின்றனர். ஆனால் யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ். குடாநாட்டில் அதியுர் பாதுகாப்பு வலயம் என்ற எந்தவொரு இடமும் இல்லையென கூறுகின்றார்.

அண்மையில் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த அவர் பொய்களை தாராளமாகவே கூறியுள்ளார். முல்லைத்தீவை விட்டு தான் 2009 தை மாதம் வெளியேறிவிட்டதாக ஆணைக்குழு முன்னிலையில் காட்சியமளித்த அரசு அதிபர் அதன் பின்னர் மே 18 ஆம் திகதிவரையிலான சம்பவங்கள் தொடர்பிலும் நேரில் கண்டதைப்போல் சாட்சியமளித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்னியில் பொது மக்களை புலிகள் கேடயங்களாகப் பயன்படுத்தியதாக அவர் சாட்சியமளித்துள்ளார்.

தை மாதத்தில் முல்லைத்தீவை விட்டு வெளியேறிய அவர் அதன் பின்னர் அங்கு இடம்பெற்ற சம்பவங்களை எப்படி நேரில் கண்டவரைப்போல் சாட்சியளிக்க முடியும்.

இவரது சாட்சியம் எமக்கு அதிர்ச்சியை மட்டுமல்லாது வேதனையையும் தருகின்றது. இவர் இவ்வாறு பொய் கூறுவது யாருக்காக. இவரைப்போன்ற அரச அதிகாரிகளால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடையாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவுக்கு ஒபாமா ஆதரவு: அமெரிக்கா வரவேற்பு




:

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர அந்தஸ்து கிடைக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளதை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.

அமெரிக்க அரசியலில் செல்வாக்குமிக்கத் தலைவர்கள் ஒபாமாவின் அறிவிப்பை வரவேற்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

""ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர அந்தஸ்து கிடைக்க அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீரமைப்பு அவசியம். அந்த அமைப்பு 21-ம் ஆண்டின் உண்மை நிலவரத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு உள்ள மரியாதை குறித்து கேள்வி எழுப்ப முடியாது'' என்று செனட் வெளியுறவுக் குழுவின் தலைவர் ஜான் கெர்ரி தெரிவித்தார்.

""ஒபாமாவின் அறிவிப்பு சர்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பை அங்கீகரிப்பதோடு அல்லாமல் சர்வதேச அளவில் பாதுகாப்பு விஷயத்தில் இரு நாடுகளும் நெருக்கமாகச் செயல்படுகின்றன என்பதை ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது அறிவிப்பு வரவேற்கத்தக்கது'' என்று மற்றொரு செனட் உறுப்பினர் ராபர்ட் மெனென்டஸ் கூறியுள்ளார். ""உலக அளவில் அதிகமான மக்கள் தொகையை உள்ளடக்கிய 2-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. பொருளாதார ரீதியிலும் துரித வளர்ச்சியை கண்டு வருகிறது. ஆசியப் பிராந்தியத்தின் அமைதிக்கும்,ஸ்திரத்தன்மைக்கும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இதில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர அந்தஸ்தை பெற இந்தியாவுக்கு அனைத்து தகுதிகளும் உண்டு'' என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மத்திய பகுதியில் தேயிலை தோட்டங்களில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி


மத்திய பகுதியில் தேயிலை தோட்டங்களில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி அதிகரிக்கப்படும் என்று இலங்கைக்கான இந்திய தூதர் கூறினார். அந்த பகுதிகளுக்கு 2 நாள் பயணமாக சென்ற இலங்கைக்கான இந்தியதூதர் அசோக் ஏ கனத்தா, அங்கு வீடுகள் கட்டுவதற்கும், மருத்துவ வசதி மேம்படுத்தவும், போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் செய்யவும் டில்லி உதவும் என்றும் கூறினார். அந்த பகுதியில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நிதியுதவியும் வழங்கப்படும் என்றும் கூறினர். இதனிடையே இலங்கையில் உள்ள கலாசாரம் மற்றும் கல்வி நிறுவனத்திற்கு 20 பேருந்துகளை இந்திய தூதர் வழங்கினார். மேலும் மத்திய பகுதியில் சுற்றுலாத்துறை கல்வி மற்றும் விவசாயத்துறையை மேம்படுத்துவதில் இந்தியாவின் பங்கு குறித்து இந்திய தூதர் ஆலோசனை நடத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...

மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள், வெடிபொருட்களை மீட்கும் பணி தொடரும்


வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடெங்கிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் வெடிபொருட்க ளையும் மீட்கும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ண நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அதேநேரம் நாட்டில் மீண்டு மொறு தடவை பயங்கரவாதம் தலை தூக்க முடியாத வகையில் சகல பாதுகாப்பு முன்னேற்பாடு களையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றம் நேற்று பகல் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கைகளின் பின்னர் பிரதமர் அவசரகாலச் சட்ட பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கொழும்பில் ஆங்காங்கே நகரின் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த காவலரண்கள், மூடப் பட்டிருந்த வீதிகள் திறந்து விடப்பட்டுள்ளன. மக்கள் சுதந்திரமாக சென்று வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் மக்களுக்கு தேவையான வசதிகளை படிப்படியாக செய்து கொடுக்க தீர்மானித்து இருப்பதுடன் தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் அவசரகாலச் சட்டத்தைத் தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதற்கான தேவையும் எழுந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் திகதியும் முல்லைத்தீவு பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. பரந்தன், முல்லைத்தீவு வீதியில் நெற் களஞ்சி யத்திலும் பெருந்தொகை ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. அக்டோபர் 29 ஆம் திகதி வவுனியாவிலும் பீரங்கிக் குண்டுகளும் மீட்கப்பட்டன.

அக்டோபர் 14 ஆம் திகதி வெடிபொருட் களுடன் கைது செய்யப்பட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் இருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மலைய கத்தில் இருவர் கைது செய் யப்பட்டனர்.

சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளைத் தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சட்டத்தையும் ஒழுங்கையும், தொடர்ந்தும் பாதுகாப்பதற்கும் அரச சொத்துக்களை பாதுகாப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்க வேண்டியுள்ளது.

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்கள் நிம்மதியாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் சுதந்திரமாக பாடசாலைக்குச் செல்கிறார்கள் என்றும் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட 12,030 பேர் கைது






நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 27 நாட்களாக நடத்தப்பட்ட பாரிய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 12,030 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

கடந்த மாதம் 13ம் திகதி முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 27 நாட்களாக நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான 12,500 சம்பவங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதலின்போது 10, 306 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஹெரோயின், கஞ்சா, பாபுல், போதை தரும் லேகியங்கள் மற்றும் அபின்போன்ற பல்வேறு வகையான போதைப் பொருட்களையே பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆயிரக் கணக்கான பொலிஸார் அடங்கிய, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் விஷேட பொலிஸ் தேடுதல் பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘போதை ஒழிப்பு, திட்டத்தின் பிரகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஹெரோயினுடன் தொடர்புடைய 3275 சம்பவங்கள் தொடர்பாகவும், கஞ்சாவுடன் தொடர்புடைய 7596 சம்பவங்கள் தொடர்பாகவும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்கிஸ்ஸையிலுள்ள படோவிட்ட, கிரேண்ட் பாஸிலுள்ள கிம்புலாஎல, பொரல்லையிலுள்ள மகஸின் வீதி, பண்டாரநாயக்க வீதி, ஒபேசேகரபுர மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களிலேயே விஷேட பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர் என்றார். போதைப் பொருள் பாவனையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் வரை இந்த பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுப்பர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 909 மில். ரூபா ஒதுக்கீடு






யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 909 மில்லியன் ரூபா கட்டுநிதி கிடைத்திருப் பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சுகுமார் இமெல்டா தெரிவித் துள்ளார்.

யாழ். செயலகத்தில் இடம்பெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித அபிவிருத்தித் திட்டத்தின் செயல்பாடுகள் மீள் பரிசீலனை செய்யும் மாதாந்த கூட்டத்தில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இந்நிதியில் குடாநாட்டில் 64 வீதிகளை அபிவிருத்தி செய்ய 379 மில்லியன் ரூபாவும், 11 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை புனரமைக்க 26 மில்லியன் ரூபாவும் 12 பொதுக் கட்டடங்களை புனரமைக்க 203 மில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளன.

இதேவேளையில், யாழ். மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் நடவடிக்கைக்கு 250 மில்லியன் ரூபாவும் பதினாறு பாடசாலை களில் மேலதிக வளங்களை மேம்படுத்த 34 மில்லியன் ரூபாவும் நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு 15 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்ட திட்டங்களில் முத ன்மையான வேலைகள் பிரதேச செயலக ங்கள், பிரதேசசபைகள், கல்வித் திணைக் களம், நீர்ப்பாசன திணைக்களம், நீர்வழங் கல் மற்றும் வடிகாலமைப்புசபை, யாழ். செயலகம் ஆகியவற்றால் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. கேள்விகள் கோரப்பட்டு வேலைகள் தனியார் ஒப்பந் தகாரர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி பதவியேற்பு; உலகில் மிகப் பெரிய பாற்சோறு



ஜனாதிபதியின் இரண்டாவது பதவி ஏற்பு நிகழ்வை முன்னிட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி உலகில் மிகப்பெரிய பாற்சோறு தயாரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியது. 65 ஆயிரம் பேர் சாப்பிடக் கூடிய இந்த பாற்சோற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைக்க உள்ளார்.

500 சமையற் காரர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்படவுள்ள இந்த பாற்சோற்றுக்கு 7 ஆயிரம் கிலோ மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படவுள்ளன. 1,200 கிலோ பச்சை அரிசி, 300 கிலோ மர முந்திரிகை, 250 கிலோ கருப்பட்டி, 250 கிலோ உலர்ந்த திராட்சை, 150 கிலோ எண்ணெய், 150 கிலோ தேன் பாணி, 24 கிலோ உப்பு, 1,500 தேங்காய்கள், 3,500 லீட்டர் தண்ணீர் என்பன இதற்காகப் பயன்படுத்தப்படும்.

நவம்பர் 17 முதல் 20 ஆம் திகதி வரை சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள ‘சுதந்திரம்’ கண்காட்சி நிகழ்வு நடைபெற உள்ளது.

இதில் ஒரு அங்கமாக எமது தேசிய பாற்சோறு சமைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ம.ம.முன்னணியின் எதிர்கால திட்டங்கள்; புதிய தலைவர் இன்று அறிவிப்பார்


மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவராகப் பொறுப்பே ற்றுள்ள நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் இன்று (10) புதன்கிழமை தமது எதிர்காலத் திட்டங்களை உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றார்.

மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளமை தொடர்பிலும் இன்று அவர் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கின்றார்.

இது தொடர்பாக இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு ‘கோல்பேஸ்’ ஹோட்டலில் விசேட செய்தியாளர் மாநாட்டை ராதாகிருஷ்ணன் எம்.பி. நடத்துகின்றார்.

இதன்போது தமது எதிர்கால அரசியல் திட்டங்களை அறிவிப்பதாக அவர் ‘தினகரனு’க்குத் தெரிவித்தார்.

முன்னணியில் இணைய வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலை தமக்கு ஏற்பட்டதாகக் கூறிய ராதாகிருஷ்ணன் எம்.பி, தமது தனிக்கட்சி அரசியல் பிரவேசம் மலையகத்தில் ஒரு திருப்பு முனையைத் தோற்றுவிக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, அவருக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலையில் நடைபெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...