“மஹிந்த சிந்தனை”யின் பேரில் சிறைக்கைதிகள் விடயமாக புதிய சிந்தனையுடன் நாம் செயற்படுகிறோம்.
ஜனாதிபதி, சிறைச்சாலைகள் தொடர்பாக தனியான அமைச்சை உருவாக்கி இவ்விடயத்துக்குப் புதுவடிவம் கொடுத்துள்ளார்.
சிறைக்கைதிகளின் புனர்வாழ்வுக்கு மட்டுமன்றி, அவர்களின் குடும்பங்களின் நலன்களுக்கு உதவும் புதிய திட்டம் குறித்தும் நாம் ஆராய்ந்துள்ளோம்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர நேற்று (10/9) இவ்வாறு தெரிவித்தார்.
மஹரைச் சிறைச்சாலையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “ஈதுல் – பித்ர்” வைபவத்தில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்து கொண்டார்.
சிறைச்சாலைகள் பழிவாங்கும் இடங்கள் அல்ல. தண்டனை வழங்கும் இடங்களும் அல்ல. சட்டம் காரணமாக கைதிகள் சிறைத்தண்டனை அனுபவிக்கின்றனர். நவீன உலகுக்குப் பொருத்தமான வகையில் சிறைச்சாலைகளை மாற்றி புதிய செயற்பாடுகளை நாம் அறிமுகம் செய்கிறோம் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் பேசுகையில், “மஹிந்த சிந்தனை”யில் சிறைக்கைதிகளின் புனர்வாழ்வு பற்றி அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் தினத்தில் சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான முஸ்லிம் அல்லாத அமைச்சரான டியூ குணசேகரவே சிறைச்சலைக்கு விஜயம் செய்து இருப்பது வரலாற்றில் முதல் தடதீவாகும்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் ஆறு தசாப்தங்களாக இச் சிறைச்சாலையில் முஸ்லிம் கைதிகளுக்காக ரமழான் ஏற்பாடுகளைச் செய்வது பாராட்டத்தக்கது என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் பேசுகையில், முஸ்லிம் கைதிகளின் மார்க்க விடயங்களில் முஸ்லிம் லீக் ரமழான் காலத்தில் மேற்கொண்டு வரும் சேவைகள் பாராட்டத்தக்கது.
நல்ல பிரஜைகளாக நீங்கள் சமூகத்துக்குத் திரும்ப வேண்டும் என்றார்.
மஹரைச் சிறைச்சாலையில் 90 முஸ்லிம் கைதிகள் இம்முறை நோன்பு நோற்றனர். சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ. ஆர். சில்வா, மஹரைச் சிறைச்சாலை சுப்பிரின்டன்ட் லக்ஷ்மன் அபேகுணவர்த்தனா, உதவிச் சுப்பிரின்டன்ட் ரீ. டபிள்யூ. சந்திரசிறி, பிரதம சேமநல அதிகாரி ஜே. எச். குலதுங்க அமைச்சின் செயலாளர் திஸாநாயக்கா, மேலதிகச் செயலாளர் கொடிப்பிலி, முஸ்லிம் லீக் இணைச் செயலாளர்கள் பவ்ஸணுல் காலித், இஸ்மத் கவுஸ், பொருளாளர் எம். ஆர். எம். இல்யாஸ், சேமநல அதிகாரி துவான் மஃமூர் ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.
மக்பூல் மவ்லானா முஸ்லிம் கைதிகளுக்கான ரமழான் பெருநாள் தொழுகையை நடத்தினார். முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் கைதிகளுக்கு பகல் உணவும் வழங்கப்பட்டது.
அமைச்சர் டியூ குணசேகர அஸ்வர் எம். பி. யின் அழைப்பின் பேரில் மஹரைச் சிறைச்சாலை வளவில் உள்ள மஸ்ஜிதுக்கும் விஜயம் செய்து முஸ்லிம்களுக்கு பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...