22 அக்டோபர், 2010

டுபாயில் நிர்கதியான 68 பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பினர்




டுபாயில் நிர்கதி நிலைக்குள்ளாகிய 68 இலங்கை பணிப்பெண்கள் இன்று காலை கட்டுநாயக்க விமாநிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்கள் பலவேறு இன்னல்களுக்கு மத்தியில் அங்கு காணப்படதாகவும் ஓய்வற்ற வேலைகள் அதற்கான உரிய ஊதியம் கிடைக்கபெறாத நிலையில் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட நகைகளை ஒப்படைக்க வேண்டும் - மனோகணேசன்

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட அரசு மற்றும் இராணுவத்தினரால் நகைகளை, மீண்டும் நகைகளின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறியுள்ளார்.

வடக்கே பல்வேறு இடங்களில் சுமார் 110 கிலோ அதாவது சுமார் 49 கோடி பெறுமதியான தங்க நகைகளை சேகரித்திருப்பதாகவும், இந்த நகைகள் சட்ட ரீதியாக இலங்கை மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைபற்றப்பட்ட நகைகள் விடுதலைப்புலிகளின் வங்கிகளிலிருந்து பெறப்பட்டவையாக இருப்பினும் ,அவை தமிழ் மக்களின் சொத்து எனவும், நகைகளுக்கு உரியவர்கள் யார் என்பதை கண்டறிந்து அதை ஒப்படைப்பது அரசின் கடமை என தெரிவித்துள்ளார்.

இந்த நகைகள் இவ்வாறு ராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன என்று அவ்வப்போது சொல்லப்பட்டு வந்தாலும், இது குறித்து போர் முடிந்த ஒன்றரை ஆண்டு ஆன பிறகு இப்போதுதான் அரசாங்கம் வாய் திறந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டங்களில் சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் வன்னிப்பகுதியிலிருந்து வெளியேறி, வவுனியா பகுதியில் தஞ்சம் புகுந்தார்கள். அவர்கள் பொதுவாக தங்களது உடமைகள் அனைத்தையும் விட்டுவிட்ட நிலையிலேயே ஓடிவர நேர்ந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மத்திய கிழக்கு நாடுகளில் நிர்கதியான பணியாளர்களுக்கு தற்காலிக கடவுச் சீட்டு

மத்திய கிழக்கு நாடுகளில் நிர்கதி நிலைக்குள்ளாகி உள்ளவர்களுக்கு தற்காலிக கடவுச் சீட்டுக்களை வழங்கி அவர்களுக்கு சகாயம் வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையைச் சேர்ந்த அனேக பணிப் பெண்கள் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர்.

எசமானர்களால் அநீதி இழைக்கப் பட்டவர்களும் முகவர்களால் கைவிடப் பட்டவர்களும் அல்லது தப்பி வரமுடியாது அல்லல் கபவோர் எனப் பலதரப்பினர் உள்ளனர்.

இதற்கு முன்னர் இவ்வாறானவர்களுக்கு கடிதங்கள் மற்றும் ஆவணங்களை வழங்கியே அவர்கள் இங்கு வந்து சேர்ந்தனர். புதிய நடைமுறையின் படி தமது தற்காலிக கடவுச் சீட்டு மூலம் நாடு திரும்ப வழி பிறக்கு என எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வன்னியில் கடமையாற்றிய நான்கு வைத்தியர்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பர்

இறுதியுத்த காலப்பகுதியில் வன்னிப் பகுதியில் கடமையாற்றிய வைத்திய அதிகாரிகள் 4 பேர் அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர்.

வைத்திய அதிகாரிகளான வி. சண்முகராஜா, ரி. சத்தியமூர்த்தி, சிவபாலன், ரி.வரதராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு சாட்சியமளிப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தமாதம் 19ஆம் திகதி வைத்திய அதிகாரிகளான சண்முகராஜா, சத்தியமூர்த்தி ஆகியோரும் 24ஆம் திகதி சிவபாலனும் 30ஆம் திகதி வரதராஜனும் சாட்சியமளிக்கவுள்ளனர்.

இறுதி யுத்த காலப்பகுதியில் வன்னிப் பகுதியில் கடமையாற்றிய இவர்கள் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்தபோது குற்றப்புலனாய்வுப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை யுத்தகாலத்தின்போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியவரும் தற்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றி வருபவருமான இமெல்டா சுகுமார் எதிர்வரும் 4ஆம் திகதி நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்: பிரித்தானிய வலியுறுத்தல்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என பிரித்தானியா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக்கை இலங்கை வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று முன்தினம் சந்தித்தபோது நேரடியாக இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டது. இலங்கையில் ஏற்படுத்தப்படும் நிரந்தர அரசியல் தீர்வு அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும் எனவும் ஹேக் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு பற்றி இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்ட அதேவேளை இந்த ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வில்லியம் ஹேக் கேட்டுக் கொண்டார்.

போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், அனைத்துலக சட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் நியாயபூர்வமாகவும் சுயாதீனமாகவும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் தெளிவான கடப்பாட்டைக் கொண்டிருப்பதாக தாம் நம்புவதாகவும் ஹேக் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவை மட்டுமின்றி இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் தொடர்பாகவும் பிரித்தானிய இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடி இருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அரச ஊழியர் பொறுப்புடன் செயற்படின் பொருளாதார அபிவிருத்தியில் தன்னிறைவு காண்பது உறுதி

அரச ஊழியர்கள் மேலும் பொறுப்புணர்வுடன் செயற்பட் டால் பொருளாதார அபிவிருத்தி யில் நாடு தன்னிறைவு காண்பது உறுதியென ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். தம்மிடம் கண்ணீருடன் வரும் மக்களை மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்ல வைக்க முடியுமானால் அதுவே சிறந்த அரச சேவையாளருக்குரிய இலட்சணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கை இழக்கச் செய்யாது நம்பிக்கையூட்டும் சேவையை வழங்குவதன் மூலமும் தம்மிடம் சேவைபெற வருவோரை தமது உறவினராக மதித்து சேவை வழங்க முன்வரும்போதும் அரச சேவை உயர் ஸ்தானத்தைப் பெறுகிறது. இதனை மனதிற்கொண்டு அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தியுடன் உயர் பண்பு மிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்ப மக்களிடையே சிறந்த சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

பிரதமர் டி.எம்.ஜயரத்ன, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், உயர் மட்ட அரச அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மேலும் தெரிவிக்கையில்,

எமது நாடு 2500 வருட வரலாற்றைக் கொண்டது. ஐந்து வருட திட்டம், பத்து வருட திட்டம் என பல்வேறு திட்டங்கள் வகுத்து நடைமுறைப்படுத்தப்பட்டு அவை தோல்விகண்டன. எனினும் 2005ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தேர்தல் விஞ்ஞாபனமாக மஹிந்த சிந்தனைத் திட்டத்தை முன்வைத்தார். அது நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் கடந்த வருடத்தில் அதன் எதிர்காலத் திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

30 வருட கொடூர யுத்தத்திற்குப் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முன்வைக்கப்பட்ட இத்திட்டம் நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றுள்ள சூழல் அபிவிருத்திக்கும், முதலீடுகளுக்கும் சுற்றுலாவுக்கும் மிகச் சிறந்ததென சர்வதேச அவதானிகள் பகிரங்க கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

தென்கொரியா போன்ற நாடுகள் ‘எம்மால் முடியும்’ என்ற கோட்பாட்டுடன் செயற்பட்டதனால் தான் பாரிய முன்னேற்றமடைந்துள்ளன. இலங்கையிலும் முடியாது, சரிவராது என்ற சிந்தனை யுகத்துக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

2006 மார்ச் 16ல் அன்றைய இலங்கைக்கான நோர்வேயின் சமாதானத் தூதுவராகச் செயற்பட்ட எரிக் சோல்ஹெய்ம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடிய விடயங்களை இன்று ஞாபகப்படுத்துவது பொருத்தமாகும். ‘பிரபாகரனுடன் யுத்தம் செய்து வெல்ல முடியாது என்றும் அவர் மாவீரன் என்றும் புலிகளை அழிக்க முடியாது என்றும் குறிப்பிட்டு யுத்தத்தை கைவிடுமாறு கேட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதி அதனை ஒரு சவாலாக ஏற்று செயற்பட்டார். இன்று பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நாடு சுதந்திரமடைய அது வழிவகுத்துள்ளது. எம் அனைவருக்குள்ளும் இயலும் என்ற சிந்தனை அவசியம்.

நாட்டில் 1.2 மில்லியன் அரச ஊழியர்கள் கடமையில் உள்ளனர். பொது கணிப்பீட்டின்படி அவர்கள் ஒரு நாளில் 3 1/2 மணி நேரமே வேலை செய்கின்றனர். அவர்கள் மேலும் 1/2 மணி நேரத்திற்கு அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்க முடியுமானால் நாம் பொருளாதார அபிவிருத்தியில் மேலும் முன்னேற்றமான நாட்டைக் கட்டியெழுப்புவது மிக சுலபமாகும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் பொலிஸ் மா அதிபரிடம் ஜனாதிபதி அறிக்கை கோரல்


பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதேவேளை, தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் பொலிஸ் மா அதிபரிடம் தானும் தனியான அறிக்கை கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மகாவலி பிரதேச மக்களின் பிரச்சினை: ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை


மகாவலி பிரதேசத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கியுள்ள காணி உறுதிப்பத்திர பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்ற த்தில் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இற்றை வரையும் 40 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் காரணமாக இருப்பிடத்தையும், விவசாய பூமியையும் இழக்கும் சகலருக்கும் மாற்று இருப்பிடங்களும், விவசாய நிலமும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரை யாற்றுகையில்:- மகாவலி பிரதேசங்களில் குடியிருக்கும் மக்கள் காணி உறுதிப் பத்திரங்கள் தொடர்பாகப் பெரும் பிரச்சினைக்கு நீண்ட காலமாக முகம் கொடுத்து வந்தார்கள். இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் மகாவலி பிரதேசத்தில் வாழ்பவர்களுக்காக ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன் இத்திட்டத்தின் கீழ் இற்றைவரையும் 40 ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. காணி அமைச்சின் ‘பிம்சவிய’ திட்டத்தின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றேன்.

காணி உறுதி வழங்கும் நடவடிக்கை தாமதமடைவதற்கு நில அளவையாளர்கள் பற்றாக்குறையே பிரதான காரணமாகும். இப்பிரச்சினையை துரித கதியில் தீர்த்து வைக்கவே நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அதேநேரம், மகாவலி பிரதேசங்களில் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளவர்களை வெளியேற்றவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

மொரகஹகந்த நீரப்பாசனத் திட்டத்தின் கீழ் 88 ஆயிரம் ஹெக்டேயர் நிலம் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது. இது பராக்கிரம சமுத்திரத்தை விடவும் நான்கு மடங்கு பெரிய அபிவிருத்தித் திட்டமாகும். இத்திட்டம் காரணமாக இருப்பிடங்களை இழந்துள்ள 1581 குடும்பங்களை மீளக்குடியமர்த்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்திட்டம் காரணமாக இருப்பிடத்தையும், விவசாய நிலத்தையும் இழப்பவர்களுக்கு மாற்று இடத்தில் இருப்பிடமும், விவசாய நிலமும் வழங்கப்படும்.

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் மக்களுக்கும், வனஜீவராசிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு குவைத் நிதியமும், ஜய்க்கா நிறுவனமும் நிதியுதவி வழங்குகின்றன.

உலக உணவுத் தேவையைக் கருத்திற் கொண்டு 1970 களில் மகாவலி அதிகார சபை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது நாட்டில் 9 இலட்சம் ஹெக்டயர் நிலத்தில் விவசாயத்தை மேம்படுத்துவது இலக்காகக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் நாம் இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம். இத்திட்டத்திற்குள் புதிய ஆறுகளையும், குளங்களையும் உள்ளடக்கியுள்ளோம். மகாவலி பிரதேசத்தில் மரக்கறி பயிர்ச்செய்கையும், பழச் செய்கையும், அலங்கார மீன் வளர்ப்பும் ஊக்குவிக்கப்படுகின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு


உள்ளூராட்சி மன்றங்கள் விஷேட ஏற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல்கள் (திருத்தம்) சட்ட மூலங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நிகழ்வில் வாய் மூல விடைக்கான வினாக்கள் நேரம் முடிவுற்றதும் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி. சில்வா சபாநாயகரின் அனுமதியைப் பெற்று இச்சட்ட மூலங்களை சபையில் சமர்ப்பித்தார்.

உள்ளூராட்சி மன்றங்கள் விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தின் படி மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், நகர சபைகள் கட்டளைச் சட்டம், 1987ம் ஆண்டில் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் என்பன திருத்தப்படவிருக்கின்றன. இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தின் கீழ் தேர்தல்கள் கட்டளைச் சட்டமும் திருத்தப்படவிருக்கின்றன.

இச் சட்டத் திருத்தத்தின் கீழ் தேசிய எல்லை நிர்ணயக் குழுவொன்று அமைச் சரால் தாபிக்கப்படும். இக்குழு ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அத்தோடு தேசிய குழுவுக்கு துணை புரியும் வகையில் அமைச்சர் மாவட்ட மட்ட எல்லை நிர்ணய குழுக்களை நியமிக்கவும் இடமளிக்கப்பட்டுள்ளது.

இத்திருத்தத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர் 20 ஆயிரம் ரூபா படியும், அரசியல் கட்சிகள் சார்பாக போட்டியிடும் அபேட்சகர் ஒருவர் ஐயாயிரம் ரூபா படியும் கட்டுப் பணம் செலுத்த வேண்டும். தற் போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அபேட்சகர்கள் கட்டுப்பணம் செலுத்துவதில்லை. சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர் 250.00 ரூபா படி கட்டுப்பணம் செலுத்துகிறார்.

புதிய திருத்தத்தின் படி அளிக்கப்படும் வாக்குகளில் இருபதில் ஒரு பங்கைப் பெறாதவர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும்.

இத்திருத்தத்தின் படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விகிதாசார முறைப்படியும் தொகுதிவாரி அடிப்படையிலும் நடத்தப்படும்.

இத்திருத்தத்தின் படி அளிக்கப்படும் வாக்குகள் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றப் பிரதேசத்திலும் ஒரு இடத்தில் அமைக்கப்படும் நிலையத்திலேயே எண்ணப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டங் களை நடத்தி வருவதாக தகவல்





ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் வங்குரோத்து அரசியல் சக்திகள் மறைமுகமாகச் செயற்படுவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நாரஹேன்பிடியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் இங்கு மேலும் தகவல் தருகையில் :- அரசியலில் தோல்வி கண்ட சக்திகள் அப்பாவி மாணவர்களைப் பலிக்கடாக்களாக்கி தமது இலக்குகளை அடைந்து கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் அவர்கள் கண்ணீர் வடித்து கவலைகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

மாணவர் விடுதிகளில் மாணவர்கள் அல்லாத வெளி நபர்கள் பலர் தங்கியிருந்துள்ளமையை புலனாய்வுத் துறையினர் கண்டு பிடித்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்ற கூறமுடியாத பல தகவல்கள் உள்ளன. விசாரணையின் இறுதியில் தெரியவரும் என்றார்.

மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுதல், மாணவக் குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெறுதல் போன்ற இங்கு மாத்திரமல்ல உலகின் பல நாடுகளில் நடைபெறும் ஒரு விடயமாகும். ஆனால் எந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கும் ஒரு வரையறை உண்டு என்றும், அரச சொத்துக்களை சேதப்படுத்துவது, உப வேந்தர்களை தாக்க முற்படுதல், அமைச்சுக்களை, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவை முற்றுகையிடுதல் போன்ற செயற்பாடுகள் உகந்ததல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மத்தியில் சிந்தனை மாற்றம் வேண்டும்






பொருளாதார அபிவிருத்திக்கான இலக்கை வெற்றிகொள்வதற்கு மக்களின் சேவகர்களாக அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் மாறுவதுடன் அதற்கான சிந்தனை மாற்றம் அவர்களிடம் பிறக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சமூக ரீதியான மாற்றமொன்றிற் காக சகல தரப்பின ரதும் அர்ப்ப ணிப்பு அவசிய மெனத் தெரிவித்த ஜனாதிபதி; ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழு ப்புவதற்கு அது உறுதுணையாகும் எனவும் குறிப்பிட்டார்.

பொருளாதார அபிவிருத்தியுடன் உயர் பண்புள்ள சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு மக்களிடையே சிறந்த மனப்பான்மையை விருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தியுடன் சமூக அபிவிருத்தியையும் கட்டியெழுப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பிரதமர் டி. எம். ஜயரட்ன, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அரச அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :- பிரதமர் டி. எம். ஜயரட்ன பிரதமர் செயலகத்தினூடாக ஆரம்பித்துள்ள சிந்தனை மாற்றத்திற்கான இவ்வேலைத் திட்டத்தை பாராட்டுவதுடன் நாடளாவிய ரீதியில் இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான தலைமைத்துவத்தையும் அவரே வழங்குவதும் சிறப்பம்சமாகும்.

கொழும்பு நகரில் குப்பை கூளங்களை அழிக்க முடியுமா என்ற பிரச்சினைக்கு தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் நாம் கொண்டு சென்ற சிந்தனை மாற்றத்தின் காரணமாக மக்கள் தற்போது வீதிகளில் குப்பை கூளங்களை போடுவதி ல்லை. அவர்கள் தற்போது பழக்கப்பட்டு விட்டனர்.

நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டங்களை மதிக்காது செயற்பட இடமளிக்க முடியாது. சட்டம் சகலருக்கும் சமமானது. அதற்கான மதிப்பினை சகலரும் வழங்க வேண்டும்.

சமூக சிந்தனை மாற்றமொன்றை எம்மால் மேற்கொள்ள முடியும். முன்னர் அரச அதிகாரிகள் மக்களுக்கு அனுப்பும் கடிதத்தில் தம்மை மக்கள் சேவகராகவே இனங்காட்டி வந்தனர். இன்று அமைச்சர்களிடையோ அதிகாரிகளிடையோ அப்பழக்கம் இல்லாது அருகிவிட்டது.

12 இலட்சம் அரச ஊழியர்கள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட்டால் நாடு முன்னேறும். தற்போது முழு நாட்டிலும் அபிவிருத்திச் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தனிநபர் வருமானத்தை இரண்டு மடங்காக்க எம்மால் முடிந்துள்ளது.

அதனை மேலும் இரண்டு மடங்குகளாக் குவதே எமது இலக்கு. சமூக ரீதியான மாற்றம் தேவை. அதற்கு சகலரதும் அர்ப்பணிப்பு மிகவும் அவசியம். குடும்பம், பாடசாலை மட்டத்திலிருந்து இது ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்


* அச்சுவேலி கைத்தொழில் பேட்டை மீள ஆரம்பம்

* தனியார் ஒத்துழைப்புடன் உற்பத்தித்திறன் மேம்பாடு

* இலங்கை, இந்தியா, ஐ.நா.969 மில்லியன் ரூ. ஒதுக்கீடு


வடமாகாணத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பாரிய வேலைத் திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை மீள ஆரம்பிக்கவும் தனியார்த் துறையின் பங்களிப்புடன் வாழ்வாதார மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சுமார் 969 மில்லியன் ரூபா செலவில் இந்த பாரிய வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு ஆகியன இதற்கான நிதியுதவிகளை வழங்கவுள்ளதுடன் அரசாங்கமும் பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன் ஆகியோர் அமைச்சரவைக்கு தனித்தனியாக சமர்ப்பித்த பத்திரங்களுக்கே அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அமைச்சரவையின் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

அமைச்சர் இங்கு மேலும் தகவல் தருகையில் குறிப்பிட்டதாவது,

யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை மீள ஆரம்பிப்பதற்கான யோசனையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமர்ப்பித்துள்ளார்.

இதற்கமைய யுத்தத்தினால் சேதமடைந்த 65 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையிலுள்ள 36 தொழிற்சாலைகளும் மீள ஆரம்பிக்கப்பட வுள்ளன. யாழ்ப்பாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்தும் பொருட்டு முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத் திட்டத்திற்கு இந்திய அரசு 174 மில்லியன் ரூபா நிதியுதவியையும் இலங்கை அரசாங்கம் 25 மில்லியன் ரூபா நிதியையும் வழங்கவுள்ளன.

1971ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கைத்தொழில் பேட்டையை மீள ஆரம்பிப்பதன் மூலம் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

இதேவேளை, தனியார்த் துறையின் பங்களிப்புடன் வாழ்வாதார மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்கான யோசனையை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் ஸினியிளிலி ஒத்துழைப்புடன் 7.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், உற்பத்தித் திறனை மேம்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

2010- 2014ம் ஆண்டு காலத்திற்குள் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கில் வாழ்வாதாரம், கிராமிய கைத்தொழில் துறை, மீன்பிடி கைத்தொழில் துறை, விவசாயத்துறை போன்றன மேம்படுத்தப்படவுள்ளன.

வடக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை மாத்திரம் ஏற்படுத்துவதுடன் நின்று விடாமல் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை, தொழில்துறையை மேம்படுத்துவதற்கான பாரிய வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு தற்காலிக இருப்பிடத்தையும் பணத்தையும் மாத்திரம் வழங்குவதுடன் நின்று விடாமல் அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும்.

அதனை அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றி வருகிறது. இதற்காகவே இது போன்ற பாரிய திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...