நாகையில் நடந்த மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகையில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம், மாவட்ட செயலர் செய்யது முபாரக் தலைமையில் நடந்தது. மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறுபான்மையின சமூக, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைப்படி முஸ்லிம் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.முஸ்லிம் சமுதாயத்திற்கு தமிழக அரசால் தற்போது வழங்கப்படும், 3.5 சதவீத இட ஒதுக்கீடு போதுமானதல்ல. கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டின் விகிதாசாரத்தை அதிகரிக்க வேண்டும்.
தமிழக மீனவர்களை சிங்கள அரசு கொன்று குவிப்பதை கண்டிப்பதுடன் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கச்சத் தீவை மீட்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாங்கண்ணி புதிய அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடித்து ரயில் சேவை துவக்கப்பட வேண்டும். நாகை அரசு தலைமை மருத்துவமனையில் 54 டாக்டர்கள் பணி செய்ய வேண்டிய நிலையில் 16 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.