ஆர்ப்பாட்டத்தில் பான் கீ மூன் கொடும்பாவி எரிகிறது
இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும் ஐ.நா. அலுவலக வளாகத்தில் நடந்துவரும் ஆர்பாட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா, ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கூட்டாக தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.
ஐ.நா. மன்ற வளாகத்தில் நடக்கும் ஆர்பாட்டங்கள் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இலங்கையில் இருக்கும் மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ரொமானிய, நார்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதரங்கள் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அமைதியான எதிர்ப்பு ஆர்பாட்டம் என்பது ஜனநாயக நடைமுறைகளில் ஒரு அங்கமென்றாலும் இப்படியான ஆர்ப்பாட்டங்கள் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயரை கெடுக்கும் செயல்" என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மன்றத்தின் அலுவலகத்துக்கு செல்லும் வழிகளில் தடைகளை ஏற்படுத்துவதும், ஐ.நா. பணியாளர்களை துன்புறுத்துவதும், மிரட்டுவதும், சர்வதேச நடைமுறைகளை மீறும் செயல்.
மேற்குலக நாடுகள்
ஐ.நா. மன்றத்தின் பணியாளர்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும்படி இலங்கை அரசை தாங்கள் கோருவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அலுவலகம் மூடல்
இதனிடையே கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகங்களில் ஒன்றான வளர்ச்சிப் பணிகளுக்கான பிராந்திய அலுவலகம் மூடப்படுவதாக ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.
தவிர இலங்கையிலுள்ள தனது வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே அவர்களையும் ஆலோசனைகளுக்கான ஐ.நா.வின் தலைமைச் செயலர் நியூயார்க் அழைத்துள்ளார்.
விமல் வீரவன்சவின் போராட்டத்தை ஒட்டியே ஐக்கிய நாடுகளின் வளர்ச்சிப் பணிகளுக்கான பிராந்திய அலுவலகம் மூடப்படுவதாக வெளியான செய்தியை கொழும்பிலுள்ள ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகம் மறுத்துள்ளது.
இலங்கையின் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்து வரும் அந்நாட்டுக்கான யு.என்.டி.பி அலுவலகம் மூடப்படவில்லை என்றும், ஆசிய பசபிக் பகுதிகளுக்கான பகுதிகளை கவனித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சிப் பணிகளுக்கான அலுவலகமே மூடப்படுகிறது என்றும் ஐ.நா. கூறியுள்ளது.
'ராஜினாமா செய்யத் தயார்'
அமைச்சர் வீரவன்ச தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் தனது அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்யவும் அவர் முன்வந்துள்ளார்.
ஆனால் அவரது பதவி விலகலை ஜனாதிபதி இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.