24 பிப்ரவரி, 2011

இந்தியா உறுதியளித்த 50 ஆயிரம் வீடுகளில் எத்தனை குடிமனைகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன: கூட்டமைப்பு கேள்வி
இந்தியாவினால் உறுதியளிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அந்த வீட்டு பயனாளிகளின் பட்டியலை 50 வருடங்களுக்குள் தயாரித்து முடித்து விடுவீர்களா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான எம். சுமந்திரன் கேள்வி எழுப்பினார். இந்தியாவினால் கையளிக்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் 76 மட்டுமே கையளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டிருக்கும் 100 உழவு இயந்திரங்கள் தென்னிலங்கைக்கு நகர்த்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கே இந்த உழவு இயந்திரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உற்பத்தி வரி, நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், விஷம்போல வாழ்க்கைச் செலவு அதிகரித்து செல்கின்ற நிலையில் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான கட்டமைப்புக்களை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். வாழ்க்கைச் செலவு உயர்ந்து கொண்டே செல்லும்.

இது எவருடைய குற்றமும் அல்ல, எனினும் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

விலையை கட்டுப்படுத்துவதற்கான நிதிக் கொள்கையை அரசாங்கம் கொண்டிருந்தால் மக்கள் அதிருப்தியடைய மாட்டார்கள். உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்கையில் அதனை சிறிய நாடொன்றினால் கட்டுப்படுத்த முடியாது.

எனினும் நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான அம்சங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டவிதிகளின் பிரகாரம் வாகனங்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. தீர்வையும் குறைக்கப்பட்டுள்ளது. வீதிகளில் வாகனங்கள் குவிந்திருக்கின்ற நிலையில் தீர்வை குறைக்கப்பட வேண்டுமா? மக்களின் அத்தியாவசிய தேவைகளில் இது அதிமுக்கியமானதா? தாழ்ந்த மட்டத்தில் இருக்கின்ற மக்கள் வாழ்க்கைச் செலவு போராட்டத்தில் திண்டாடி கொண்டிருக்கின்ற நிலையில் வாகன இறக்குமதி தீர்வை குறைப்பின் ஊடாக எவ்விதமான நன்மையும் இல்லை.

விவசாய உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் உணவு பொருட்களின் விலைகளும் விஷம்போல ஏறியுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழைகள் ஏழைகளாகவும் பணவசதி படைத்தோர் வசதி படைத்தவர்களாகவும் இருக்கின்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும். எனினும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டவிதிகள் மற்றும் ஏற்பாடுகளின் மூலமாக எவ்விதமான வாய்ப்புகளும் இல்லை.

நீண்ட யுத்தத்திற்கு பின்னரான பாதுகாப்பு நிலைமையில் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் மக்களின் குறைகளை அரசாங்கம் வார்த்தைகளின் மூலமாக நிவர்த்திக்க முயற்சிக்கின்றது. வடக்கு கிழக்கில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதாக கூக்குரல் இடுகின்றது. அதற்கு பாலங்களும் வீதிகளும் சான்று பகருகின்றன.

இவையெல்லாம் பிரச்சினை இல்லை. முன்னுரிமையான அம்சங்களுக்கே முன்னுரிமையளிக்க வேண்டும். குடியிருப்பதற்கு வீட்டு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

யுத்தத்தினால் 2,50,000 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இடிந்துபோன குடிமனைகளை கட்டமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இல்லை. ஆறு கம்புகளை நாட்டி தகரங்களை கூரையாக அமைப்பது குடிமனைகள்?

இந்தியா 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் ஒரு வீட்டையேனும் கட்டிக்கொடுப்பதற்கு முன்வரவில்லை. தாராள மனம் நிறைந்த இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். ஆனால் அந்த வீடுகளில் எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினையாகும்.

1000 பயனாளிகளின் பட்டியலை தயாரிப்பதற்கு ஒருவருடம் தேவைப்பட்டுள்ளது. முழுமையான பட்டியலை 50 வருடங்களில் தயாரித்து முடித்து கொள்வீர்களா?

இந்தியா வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா அரியாலையில் சொற்ப வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல்லை நாட்டி வைத்தார். ஏனைய ஒரு வீட்டுக்கேனும் அடிக்கல் நாட்டப்படவில்லை.

வடபகுதி மக்களுக்கென 500 உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. எனினும் அதில் 100 உழவு இயந்திரங்கள் கஜு கூட்டுத்தாபனத்திற்கும் 100 இயந்திரங்கள் தெங்கு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டுள்ள 100 உழவு இயந்திரங்கள் தென்னிலங்கைக்கு நகருகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 38 இயந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான ஒழுங்கீனங்கள் ஏன்? ஏனையவற்றை தென்னிலங்கைக்கு ஏன் நகர்த்துகின்றீர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி கூறிய அதிபாதுகாப்பு வலயம் எங்குள்ளது?
விபரங்கள் வர்த்தமானி அறிவிப்பில் இல்லை சபையில் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிப்பு வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், அந்த அதியுயர் பாதுகாப்பு வலயம் எங்கு இருக்கின்றது எனக் கேள்வி எழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பலாலி உள்ளிட்ட அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானி அறிவிப்பில் இல்லை என்றும் சுட்டிக்காட்டியது.

அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் அளவு தற்போது குறைக்கப்பட்டிருக்கின்றது அது எங்கிருக்கின்றது என்பதை யாழ்ப்பாணம் போய்த்தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்த அரசாங்கம் கண்ணிவெடிகளில் பயணிப்பதற்க கூட்டமைப்பு ஆசைப்படுகின்றதா? என்றும் கேள்வி எழுப்பியது.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று கூடியது சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது கூட்டமைப்பின் எம்.பி.யான அ.விநாயகமூர்த்தி கிளிநொச்சி உட்பட வடக்கில் பாதுகாப்புப் படையினர் தங்கியிருக்கும் தனியார் வீடுகள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை. அவ்விடங்கள் உண்மையான உரிமையாளருக்கு எப்போதும் மீளவும் ஒப்படைக்கப்படும் உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார்.

கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 1129 தனியார் காணிகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என்பன இராணுவத்தினரால் பாவிக்கப்படுகின்றன. வடக்கில் பாதுகாப்பு படைகளும் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் பாதுகாப்பு படைமுகாமை நடத்திச்செல்ல வேண்டியிருப்பதனால் உரியவர்களுக்கு அவற்றை ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை.

சுமார் 129 தனியார் காணிகள், நிறுவனங்கள் மற்றும் வீடுகள் கடற்படையினரால் பயன்படுத்தப்படுகின்றன. 35 வரையான தனியார் காணிகளும் பலாலிஅதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குரிய இலங்கை விமானப்படைத் தளத்திற்குள் இருக்கும் 32 தனியார் வீடுகளும் அதற்குரிய காணிகளும் விமானப் படையினரால் பயனபடுத்தப்படுகின்றன. அதில் இரண்டு அரிசி ஆலைகளும் அடங்குகின்றன.

விமானப்படை வன்னி விசேட நடவடிக்கை பிரிவு தலைமையகத்துக்குரிய விமக்ஷினப் படையினரால் பயன்படுத்தப்படும் பிரதேசத்துக்குள் தனியார் வீடுகள் இல்லை என்பதுடன் ஏழு வகையான தனியார் காணிகள் இருக்கின்றன.

இதேவேளை, இராணுவத்தினரால் பாவிக்கப்பட்ட சிவில் மக்களுக்கு உரிய 472 தனியார் வீடுகள், இடங்கள் மற்றும் நிறுவனங்கள் பொதுமக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மிகுதியில் பெரும்பாலானவை பொது மக்களினால் தங்களது விருப்பத்தின் பேரிலேயே பாவனைக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

மற்றொரு பகுதி காணிகள் வீடுகள் போன்றவற்றின் அடையாளம் உறுதி செய்யப்படாததுடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கு கோரிக்கையும் விடப்படவில்லை. கேக்ஷிரிக்கை விடுத்ததும் மீளவும் ஒப்படைக்கப்படும்.

இதேநேரம் சில நிறுவனங்கள் மற்றும் வீடுகள் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருப்பதனால் பாதுகாப்பு படைமுகாம்கள் இயங்கிவருவதனால் அவற்றை ஒப்படைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்படவில்லை.

கடற்படை முகாம்களை இயங்க வைப்பது அவசியம் என்பதனால் அந்த முகாமை ஸ்தாபிப்பதற்கு பொருத்தமான இடத்தை பிரதேச செயலாளர்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விமானப்படையினரால் பாவிக்கப்பட்டு வரும் வன்னிப் பிரதேசத்துக்குள் வீடுகள் இல்லை என்பதுடன் அதற்குரிய தனியார் காணிகள் அடுத்த 3 மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஒப்படைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.

இதனிடையே குறுக்கு கேள்வியொன்றை எழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான சுமந்திரன், வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன,. அந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் எங்கு இருக்கின்ற எனக் கேள்வி எழுப்பினார்.

“அக்கேள்விக்கு பதிலத்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, 20 வருடங்களாக இருக்கும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அது எங்கு இருக்கின்றது என்பதை யாழ்ப்பாணம் போய் தான் பார்க்க வேண்டும் என்பதுடன் ஜனாதிபதி அவ்வாறானதொரு அறிவித்தலை விடுவிக்கவில்லை என்றாலும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் அளவு குறைக்கப்பட்டு வருவதாகவே அவர் கூறியிருக்கின்றார்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்றார்.

குறுக்கிட்ட சுமந்திரன் எம்.பி. குறிப்பாக பலாலி உள்ளிட்ட பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானி அறிவித்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

மீண்டும் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகளின் பிரகாரம் அது வர்த்தமானி அறிவித்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. எனினும், தற்போது அதியுயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்பட்டு வருவதுடன் அதனுள் இருந்த 472 தனியார் காணிகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்.

இதனிடையே குறுக்கிட்ட விநாயகமூர்த்தி எம்.பி. ஆனையிறவுக்கு அப்பால் இருக்கின்ற பிரதேசங்களில்? என்று மற்றுமொரு கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ், கண்ணி வெடிகளில் பயணிக்க வேண்டுமா? என விநாயகமூர்த்தி எம்.பி.யை பார்த்து கேள்வி எழுப்பினார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் பாதுகாப்பு வலயங்கள் 1/3 ஆக குறைப்பு : கடற்படையினரின் பயன்பாட்டிலுள்ள காணிகள் மூன்று மாதத்தில் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு


வடக்கில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் 1/3 ஆக குறைக்கப்பட்டுள்ளதோடு படிப்படியாக பொதுமக்களின் காணிகள், வீடுகள் மீள கையளிக்கப்பட்டு வருவதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வன்னிப் பிரதேசத்தில் கடற்படையினர் பயன்படுத்தும் தனியார் காணிகள் 3 மாத காலத்தினுள் மீள உரியவர்களிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வடக்கிலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி அ. விநாயகமூர்த்தி பிரதமரிடம் கேட்டிருந்த கேள்விக்கு பிரதமர் சார்பாக அமைச்சர் தினேஷ் பதிலளித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

வடக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சுமார் 1129 ஐ பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துகின்றனர். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் 32 தனியார் வீடுகள் மற்றும் காணிகளும் இரண்டு அரிசி ஆலைகளும் உள்ளன.

வன்னி விமானப்படையினர் பயன்படுத்தும் பிரதேசத்தில் தனியார் வீடுகள் கிடையாது. ஆனால் 7 தனியார் காணிகள் உள்ளன.

இராணுவத்தினர் பயன்படுத்திய பொதுமக்களின் 472 காணிகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என்பன பொது மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட் டுள்ளதோடு சிலர் தமது சுயவிருப்பத்தின் பேரில் தமது இடங்களை படையினருக்கு வழங்கியுள்ளனர். சிலர் தமது வீடுகளுக்கான உரித்தினை உறுதிசெய்யவில்லை. மீளப்பெற விண்ணப்பிக்கவுமில்லை. அவர்கள் விண்ணப்பித்தால் மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சில வீடுகள், நிறுவனங்கள் என்பன அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ளதாலும் அப்பகுதிகளில் முகாம்கள் உள்ளதாலும் அவற்றை மீள வழங்க முடிவு செய்யப்படவில்லை. அங்குள்ள இராணுவ முகாமை நிறுவ பிரதேச செயலாளர்கள் மூலம் காணிகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

20 வருடங்களாக வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக முன்னெடுக்கப்பட்டன. அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள வீடுகள் படிப்படியாக மீள கையளிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தமது நிலங்களுக்கு திரும்பியுள்ளனர். 1/3 பகுதியாக அதி உயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் மிதிவெடிகள் உள்ளன. மிதிவெடிகளால் எந்த ஒரு குடிமகனும் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் அங்கு நேரில் சென்று உண்மை நிலையை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இங்கே தொடர்க...

துரோகிகளை உருவாக்கும் இடங்களாக சிறைச்சாலைகள் இருக்கக் கூடாது

* சிறை முறைகேடுகளை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவு

* 88 வீதமானோர் தூக்குத்தண்டனைக்கு வலியுறுத்தல்சமூகத் துரோகிகளை உருவாக்கும் இடங்களாக சிறைச்சா லைகள் இருக்கக் கூடாது என தெரிவி த்த ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிறைச் சாலைகளில் இடம் பெறு கின்ற முறை கேடு களைக் கட்டுப்படுத்து வதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை அமைக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குற்றவாளிகள் நல்வழிக்குக் கொண்டுவரப்பட வேண்டுமேயொழிய அவர்கள் சமூகத்தின் மீது குரோதம் மிக்கவர்களாக உருவாகக் கூடாது.

குற்றவாளிகளை சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியவர்களாக மாற்றியமைக்கும் முறையை வலுப்படுத்த வேண்டும். இதனூடாக நாட்டுக்கு நன்மை பயக்கக் கூடியவர்கள் உருவாகுவார்கள். சிறைகள் சமூகத் துரோகிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் இடங்களாகத் திகழ வேண்டும். மாறாக திருடர்களையும், கொள்ளைய ர்களையும் உருவாக்கும் இடங்களாக இருக்கக் கூடாது.

இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட தடுப்புக்காவல் கைதிகள் வரையான சகலரும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் செயலாற்றும் வகையில் பொருத்தமான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இக்கூட்டத்தின் போது ஆலோசனை வழங்கினார்.

இதேநேரம், சிறைகளில் இடம்பெறுகின்ற முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக விஷேட பொலிஸ் பிரிவொன்றை அமைக்குமாறும், சிறைக் கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக விசேட வேலைத் திட்டத்தைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கி னார்.

இப்போது சிறைக் கைதிகள் எவரும் நாட்டின் பொருளாதாரத்திற்கு எதுவிதமான பங்களிப்பையும் செய்வதில்லை. ஆனால் அரசாங்கம் ஒரு சிறைக்கைதிக்கு மாதத்திற்கு 9000 ரூபா முதல் 10,000 ரூபா வரை செலவிடுவதாக இக்கூட்டத்தின்போது சுட்டிக் காட்டப்பட்டது.

அதேநேரம் குற்றவாளிகளை சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியவர்களாக மாற்றியமைக்கும் முறைமையின் கீழ் கடந்த சில வருடங்களுக்குள் 405 மில்லியன் ரூபாவை மீதப்படுத்த முடிந்ததாகவும் இக்கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வின் படி இலங்கையில் 88 சதவீதமானவர்கள் தூக்குத் தண்டணை முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளனர்.

மரண தண்டனை செயற்படுத்தப்படாத தால் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கொலை குற்றங்களுடன் தொடர்புடைய 334 பேர் விசேட கவனிப்புடன் சிறையில் இருக்கின்றார்கள்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தேசிய கண் வங்கி இன்று ஜனாதிபதியினால் திறப்பு * சிங்கப்பூர் மூன்று கோடி ரூபா நிதி * உயர் தொழில்நுட்பம்

இலங்கையில் முதல் முறையாக அமைக்கப்படும் தேசிய கண் வங்கி இன்று (24) மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.

சிங்கப்பூரின் உயர் தொழில்நுட்பத்தின் கீழ் அமையும் தேசிய கண் வங்கியின் மூலம் நோயாளர்களுக்கு கோர்னியா விழி வெண் படலம் பொருத்தப்படும்.

இலங்கையில் உள்ள நோயாளர்களுக்கு மட்டுமன்றி முழு உலகத்திலும் உள்ள கண் நோயாளர்களுக்கு உதவும் இந்த கண் வங்கி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட் டலின் கீழ் தேசிய கண் வைத்தியசாலையில் இந்த வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் அமையும் தேசிய கண் வங்கிக்காக சிங்கப்பூர் அரசாங்கம் மூன்று கோடி ரூபா நிதியை வழங்கியுள்ளது.

ஐந்து வருட திட்டத்தின் கீழ் செயற்படும் தேசிய கண் வங்கியின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் மேம்படுத்தலுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் உதவி ஒத்தாசை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது.

தேசிய வைத்தியசாலையில திடீரென உயிரிழக்கும் நோயாளர்களின் கண்கள் புதிய கண் வங்கியின் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். 6 மணி நேரத்துக்குள் இந்த கண் வில்லைகளை பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால் இவ்வாறான திட்டத்தை முன்னெடுத்திருப்ப தாக அவர் மேலும் கூறினார்.

கண்ணின் வெண் படலத்தில் குறை ஏற்பட்டால், சத்திர சிகிச்சை மூலம் வெண் படலத்தை அகற்றி அதனை மாற்றியமைக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை இலகுவாக்கும் வகையில் அவசியமான படலத்தை பெற உதவுவதே இதன் நோக்கமாகும் என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய கண் வைத்தியசாலையின் கண்காணிப்பில் உள்ள படலம் இலங்கையின் கண் சத்திரசிகிச்சை இடம்பெறும் கராபிட்டிய, திருகோணமலை மற்றும் ஏனைய எந்தவொரு வைத்தியசாலையிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

கொழும்பு கண் வைத்தியசாலையில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய கண் வங்கியின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே, சிங்கப்பூர் கண் வைத்தியசாலையின் கண் வங்கியின் பணிப்பாளர் பேராசிரியர் டொனல்ட் பேன், விசேட கண் வைத்தியர் சரித் பொன்சேகா ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்குபற்றினர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐரோப்பிய ஒன்றியம்: பயங்கரவாதிகள் பட்டியலில் மீண்டும் புலிகள் உள்ளடக்கம்

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டிருக்கும் பயங்கரவாதிகளின் பட்டியலில் புலிகள் இயக்கத்தின் பெயர் மீண்டும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி உருவாக்கிய பயங்கரவாத அமைப்புக்களைத் தடைசெய்யும் சட்டத்திற்கமைய புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப் பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட 26 அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் தாம் தடைசெய்யப்பட்டமைக்கான காரணங்களைக் கோர முடியுமென்று 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்த போதும் எந்தவொரு அமைப்பும் அதற்கான கோரிக்கையை விடுக்க வில்லையென்றும் ஐரோப்பிய ஒன்றியத் தின் சஞ்சிகையில் மேலும் குறிப்பி ட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

யானைகள் ஊருக்குள் நுழைவதற்கு மின்வேலிகள் தடையாக இருக்காது


மனிதனுக்கும் யானைக்கும் இடையி லான ஜீவமரணப் போராட்டத்துக்கு பிரதான காரணமாக மனிதனே இருந்து வருகிறான். யானைகளின் வாசஸ்தலத் தில் மனிதன் குடியேற்றங்களை அமைத்து வருவதனால்தான் யானைகள் காடுகளை அண்டியுள்ள தங்களின் வாசல்பூமியில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் ஊடுருவி பயிர்களை அழித்தும், வீடுகளை உடைத்தும் சில சந்தர்ப்பங்களில் மனிதனையும், மனித உயிர்களையும் பழிவாங்குகிறது.

இதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்திருப்ப தாகப் பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே இந்தத் தகவலை வெளியிட்டார்.

யானைகள் கிராமங்களுக்குள் ஊடுருவி வருவதைத் தடுப்பதற்கான மின்வேலிகள் இன்று ஒரு தடையாக இருக்கவில்லையென்றும் அடர்ந்த காடுகளில் மரங்கள் உயரத்தில் இருப்பதனால் யானைகளுக்கு இலை குழைகளை இலகுவில் பறித்து சாப்பிட முடியாதிருப்பதனால், அவை கிராமங்களுக்குள் நுழைந்து உணவைத் தேடுகின்றன என்று தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தேனீக்களை வளர்ப்பதன் மூலமும், போகன்விலா மற்றும் எலுமிச்சை செடிகளை நாட்டுவதன் மூலம் யானைகள் கிராமங்களுக்கு வருவதை மக்கள் தடை செய்து வருவதாகக் கூறினார்.

யானைகள் எங்கள் நாட்டின் ஒரு தேசிய செல்வமாகும். அவை மனிதனுக்கு சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தினாலும், அது எமது நாட்டின் மரபுரிமையின் சின்னமாக விளங்குகிறது. அதனைக் காப்பாற்றுவது அவசியம் என்று வலியுறுத்தினார். யானைகளை விரட்டியடித்து கொல்வதில் ஆர்வம்காட்டும் விவசாயிகள் யானைகள் அடித்து இறப்பவர்களைவிட விஷப் பாம்பினால் மரணமடையும் மக்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதை மறந்துவிடுகிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.

யானையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த அமைச்சர் காட்டுப் பன்றிகளைப் பற்றித் தனது கவனத்தைத் திருப்பினார். எங்கள் நாட்டிலுள்ள சட்டம் ஒரு விநோதமான சட்டமாகும். காட்டுப் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியை சாப்பிடுவதை சட்டம் குற்றமாகக் கருதவில்லை. ஆனால், காட்டுப் பன்றி இறைச்சியை விற்பனை செய்வதையோ அல்லது அந்த இறைச்சியை வீடுகளில் வைத்திருப்பதையோ தண்டனைக்குரிய குற்றமாக சட்டம் கருதுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விறுவிறுப்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஒரு தடவை வனவிலங்கு காவலர்கள் ஒரு யானையை பிடித்து ஒரு காட்டில் விட்டபோது, அந்த யானை தான் பிடிபட்ட தூரத்திலிருந்து இருந்த இடத்திற்கு உடடினயாகத் திரும்பிவிட்டது என்று கூறி இரண்டு கால் யானைகளும் இதைத்தான் செய்கின்றன என்று சிரித்தார்.

இன்னுமொரு சுவையான சம்பவத்தையும் ஜனாதிபதி கூறினார். வனவிலங்கு சரணாலயத்திலுள்ள அதன் பொறுப்பதிகாரியின் காரியாலயத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்த ஒரு நபர் அங்கிருந்த தொலைபேசியில் இலக்கத்தைச் சுழற்றி அந்த அதிகாரியின் மனைவியுடன் ஏதோ புரியாத மொழியில் பேசியதைக் கேட்ட அந்த மனைவி பதற்றமடைந்து விட்டாராம்.

விசாரணை செய்து பார்த்த போது மறுமுனையில் தொலைபேச்சில் பேசியது ஒரு மனிதன் அல்ல என்பது தெரியவந்தது. காட்டிலுள்ள ஒரு குரங்கே இந்த சேஷ்டையைப் புரிந்திருக்கிறது என்று ஜனாதிபதி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்திலிருந்து வெங்காயம், மிளகாய், கிழங்கு பெருமளவு வருகை; விலைகள் வீழ்ச்சி


யாழ்ப்பாணத்திலிருந்து பெருமளவு மரக்கறி, வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் ஆகியன தம்புள்ளை சந்தைக்கு வந்துள்ளதால் அவற்றின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனால் எதிர்க் கட்சி மேற்கொண்ட வீண் பிரசாரத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சின் உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அமைச் சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் :

காலநிலை இயற்கை அனர்த்தம் காரணமாக கடந்த சில வாரங்களாக மரக்கறி விலை அதிகரித்திருந்தது. இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும் இத்தகைய நிலையே நிலவியது.

இக்காலகட்டங்களில் மரக்கறி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவை யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளை பொருளாதார வர்த்தக நிலையத்துக்கு வந்துள்ளன. பீட்றூட் கிழங்கு, வெங்காயம் போன்ற வை இலட்சக் கணக்கான கிலோக்கள் தம்புள்ளைச் சந்தைக்கு வந்து சேர்ந்துள்ளன.

இதனால் அண்மைக் காலமாக அதிகரித்திருந்த மரக்கறி விலைகள் தற்போது குறைவடைந்து வருகின்றன. பயங்கரவாதத்தை ஒழித்து அப்பகுதியில் இயல்பு நிலையை தோற்றுவித்ததன் பயன்களாகவே இதனைக் கருதமுடியும்.

ஐக்கிய தேசியக் கட்சி அப்பகுதியைப் பிரிக்க முயற்சித்தது. அவ்வாறு நடந்திருந்தால் இத்தகைய பயன்களை பெற்றிருக்க முடியுமா எனவும் அமைச்சர் சபையில் கேள்வி எழுப்பினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீனவர்கள் 16 பேர் விடுதலை

இலங்கை மீனவர்கள் 16 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர். இவர்கள் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் மன்னார் தெற்குக் கடல் எல்லையில் வைத்து, இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட் டனர்.

16 மீனவர்களையும் 3 ரோலர் படகுகளையும் பொறுப்பேற்றுக்கொண்ட இலங்கை கடற்படையினர் மீனவர்களை உரியவர்களிடம் கையளித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 21 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட் டிருந்தனர். 4 மீன்பிடிப் படகுகளுடன் 21 மீன வர்கள் கடற்படையினரால் அழைத்து வரப்பட்டு காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டி ருந்தனர்.

அதேநேரம் இந்தியாவில் எஞ்சியி ருக்கும் 73 இலங்கை மீனவர்க ளையும் விரைவில் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமை ச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தமை இங்கு குறிப் பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...