முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே-
பேரியல் அஸ்ரப்- முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே கிடைக்கும் அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோமென அமைச்சர்கள் பௌஸி, பேரியல் அஷ்ரப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சிறுசிறு கட்சிகள் மற்றும் சுயாதீனமான வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது பெறுமதியான வாக்குகளை குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்கு விரும்பமாட்டார்கள் எனவும் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார். இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக வாக்குகளில் பாதிப்புகள் ஏற்படுமா என வினவியபோதே அமைச்சர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அஸாத் சாலியும் எம்மோடு இணைந்துள்ளார். எவ்வித சந்தேகமுமின்றி 70வீத வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவது உறுதியெனவும் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்ட விமானத்திலிருந்து தாய்லாந்தில் கைது செய்யப்பட்டவர்கள் மேலும் 12நாட்களுக்கு தடுத்து வைக்கப்படவுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டே இந்தத் தடுத்து வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து பொலீசார் தெரிவித்துள்ளனர். ஆயுதங்களை ஏற்றிவந்த இந்த விமானம் தாய்லாந்தில் கைப்பற்றப்பட்டபோது அதிலுள்ள ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து அந்த விமானம் ஈரானுக்கான ஆயுதங்களையே வடகொரியாவிலிருந்து எடுத்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.