15 ஏப்ரல், 2010

ராஜீவ் கொலை தொடர்பாக பத்மநாதனை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்; இலங்கையிடம் இந்தியா கோரிக்கை






ராஜீவ் கொலை தொடர்பாக பத்மநாதனை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்; இலங்கையிடம் இந்தியா கோரிக்கை
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர் குமரன் பத்மநாதன். கே.பி. என்றழைக்கப்பட்ட இவர்தான் விடுதலைப்புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி அனுப்பி வந்தார்.

ஈழத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப் பட்டதும் இவர் திடீரென விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இனி நான்தான் தலைவர் என்று அறிவித்துக் கொண்டார். மலேசியாவில் இருந்த அவரை சிலநாடுகள் துணையுடன் இலங்கை அசு கடந்த ஆண்டு பிடித்துச் சென்றது.

கொழும்பில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் தற்போது சிங்களர்களுக்கு உதவும் வகையில் மாறி விட்டதாக கூறப்படுகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பத்மநாதன் முக்கிய சாட்சியாக கருதப்படுகிறார். அவரை இந்தியா கொண்டு வர முயற்சி நடந்தது. ஆனால் இலங்கை பத்மநாதனை ஒப்படைக்க மறுத்து விட்டது.

இலங்கை அதிகாரிகள் சாதகமான பதில் சொல்லாததால் சி.பி.ஐ. அதிகாரிகள் சற்று அதிருப்தியுடன் இருந்தனர். தற்போது பத்மநாதனிடம் விசாரிக்க அனுமதிக்க கோரி மீண்டும் இலங்கைக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதி உள்ளது.

அத்துடன் பத்மநாதனின் வங்கி கணக்குகளையும் தருமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழையும் இந்தியா கேட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு பிரபாகரன் மரணச் சான்றிதழ் என்று ஒரு தாளில் இலங்கை அதிகாரிகள் எழுதி கொடுத்ததாக தெரிகிறது.

எனவே பிரபாகரனின் மரண சான்றிதழின் மூலப்பிரதியை தாருங்கள் என்று இந்தியா கேட்டுள்ளது. ஆனால் இலங்கை, இந்திய அதிகாரிகளின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

சீனாவில் நில நடுக்கம் : 617 பேர் பலி,10,000 பேர் காயம்




சீனாவி‌ன் வடமேற்கு மாகாணமான கியுங்காய் பகுதியில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 617 பேர் பலியாகியுள்ளனர். 10,000க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சீன நேரப்படி நேற்றுக் காலை 7.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கு அடியில் 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து 3 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த சிவாஜிலிங்கம் முடிவு



இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்குள் பிரவேசிப்பதற்கு தமக்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிராகவே இவ் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டு சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், புதன்கிழமை இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை 3.05 மணியளவில் கிங் ஃபிஷர் எனப்படும் தனியாருக்குச் சொந்தமான விமானத்தில் கொழும்பிலிருந்து புறப்பட்ட தாம் 4.40 மணியளவில் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தாகவும், சுமார் நான்கு மணித்தியாலங்கள் தமக்கு சென்னை விமான நிலையத்தில் தரித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மாலை 5.00மணியளவில் சென்னை விமான நிலையத்தில் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகள் தம்மை இந்தியாவுக்குள் பிரவேசிக்க முடியாது எனக்கூறினர். அதற்குரிய காரணத்தை நான் வினவியபொழுது தமக்கு இடப்பட்ட உத்தரவு என்றும், தம்மால் எதுவும் கூற முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எதுவாக இருப்பினும் புது டில்லியில் உள்ள உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர். பின்னர் 9.15 மணியளவில் என்னை ஏயர் லங்கா விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர்" என்றார்.

எதிர்வரும் 21 ஆம் திகதிவரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதாகவும்,அந்த அடிப்படையிலேயே தமது பயணத்தை மருத்துவ பரிசோதனையின் நிமித்தம் மேற்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை செல்லுபடியான சார்க் நாடுகளுக்குச் செல்லும் பயணச் சீட்டை தமது கடவுச் சீட்டில் இணைத்துள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டி மாவட்டத்தின் ஒரு சிலரின் வெற்றி நாவலப்பிட்டி வாக்காளர்களின் கையில்



நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள 37 வாக்களிப்பு நிலையங்களில் இடம் பெறவுள்ள மீள் வாக்களிப்பினை முன்னிட்டு நாவலப்பிட்டிய நகரப்பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளுக்குஅமர்தப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்திலுள்ள நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் 85,136 வாக்காளர்கள் உள்ளனர்.இவர்களில் சுமார் 16,000 பேர் தமிழ் வாக்காளர்களெனத் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை ஆளுங்கட்சியின் சார்பில் எடுக்கப்போகின்றவர் யார் என்பதை நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியின் மீள் வாக்களிப்பே தீர்மானிக்கப்போகின்றது.

அதேவேளை நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியின் மீள் வாக்களிப்பில் கண்டி மாவட்டத்தில் ஆளுங்கட்சியில் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர் ஒருவரினதும் தமிழ் வேட்பாளர் ஒருவரினதும் வெற்றி தங்கியுள்ளதோடு ஜனநாயக தேசிய முன்னணிக்கு ஓராசனம் கிடைப்பதும் இதில் தங்கியுள்ளதாகா தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச கல்விப் பிரசார வாரம் எதிர்வரும் 20 முதல் 27ஆந் திகதி வரை

‘தரமான பொதுக் கல்விக்கு நிதி ஒதுக்குங்கள்; அது அனைவரினதும் உரிமை' என்னும் கோரிக்கையை முன்வைத்து இவ்வருடத்துக்கான சர்வதேச கல்விப் பிரசார வாரம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இவ்வாரத்தின் போது மலையக கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு அவசியம் என்ற விடயம் குறித்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வலியுறுத்தப்படவுள்ளதாக பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார் .

சர்வதேச கல்விப் பிரசார வார செயற்பாடுகள் குறித்து பிரிடோ நிறுவன பணியாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமார்வு ஹட்டனில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"இம்முறை கல்விப் பிரசாரத்திற்கான செயற்பாட்டு வாரம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையாகும். தற்போதைய புள்ளி விபரங்களின் படி உலகில் 74 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையிலும் 774 மில்லியன் வளர்ந்தவர்கள் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாகவும் உள்ளனர்.இவர்கள் அனைவரும் வறுமையில் வாடுபவர்கள்.

கல்வி பெறாதவரை, அவர்கள் தொடர்ந்தும் வறுமையிலேயே வாடவேண்டியிருக்கும். இந்த நிலைமையை மாற்றியாக வேண்டும் என்ற உயாந்த நோக்கத்துடனும் 2015 ஆம் ஆண்டில் உலகில் அனைத்து சிறுவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடனும் உலக கல்வி பிரசார இயக்கம் 2003 இல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பிரசார இயக்கம், வருடா வருடம் ஏப்ரல் மாதம் மூன்றாம் கிழமையை உலக செயற்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தி, அனைவரும் கல்வி பெற முழு உலகமும் குரல் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறது.

கடந்த காலங்களில் உலக கல்விப் பிரசார வார நிகழ்வுகளின் போது ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் காரணமாக பல உலக நாடுகள் பாடசாலை கட்டணங்களை நீக்கியதால் பல மில்லியன் மாணவர்கள் பாடசாலை செல்ல முடிந்தது. ஆயினும் அதிகரித்த மாணவர் தொகைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படாததாலும் கல்வி அபிவிருத்திக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யாததாலும் இம்மாணவர்களுக்குத் தரமான கல்வியை பெற முடியவில்லை.

இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு உலக கல்விப் பிரசார இயக்கம் இவ்வருடம் ‘தரமான பொதுக் கல்விக்கு நிதி ஒதுக்குங்கள்; அது அனைவரினதும் உரிமை' என்னும் கோரிக்கையை முன்வைத்து அக்கோரிக்கைக்கு ஆதரவாக உலக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் எனக் கேட்டுள்ளது. பிரிடோ நிறுவனம் கல்விப் பிரசார இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 2003 ஆம் ஆண்டு முதலே மலையக பகுதிகளில் கல்விப்பிரசார செயற்பாட்டு வாரத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தி வந்திருக்கிறது.

இம்முறை கல்விப்பிரசார வாரத்தின் போது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் எமது ஒரே குறிக்கோள்;அனைவருக்கும் கல்வி” என்ற சுலோகத்தை பிரபல்யப்படுத்துவார்கள். இந்தப் பின்னணியில் இந்த நாட்டில் கல்வித்துறையில் பின்தங்கிய மக்கள் என்ற வகையில் உலக கல்விப் பிரசார இயக்கத்தில் அவர்களை கலந்து கொள்ள செய்து அவர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டுவது அவசியமாகும்.

மலையத்தின் கல்வி வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். பிரதேச சபைகள் மாகாண சபைகள், நாடாளுமன்றம் ஆகிவற்றில் மலையத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் மலையக கல்வி நிலையை மேம்படுத்துவற்கு தங்கள் நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் மலையக கல்வியை மேம்படுத்துவதற்காக அரசிடமிருந்து அதிக நிதி ஒதுக்கீடுகளை பெற முயற்சி செய்ய வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் தரமான பயற்சி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் - போன்ற கோரிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் மூலம் அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் நிகழ்ச்சிகளையும் பிரிடோ நிறுவனம் கல்விப் பிரசார செயற்பாட்டு வாரத்தின் போது முன்னேடுக்கத் திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு கிழக்கில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் : இராணுவப் பேச்சாளர்


இடம்பெயர்ந்து வாழும் மற்றும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் நலன்கருதி இராணுவம், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார் என அரச இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும்,

"இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் அந்தந்த பிரதேசங்களில் வாழும் பொதுமக்களினதும், அரச மற்றும் தனியார் வர்த்தக சமூகத்தினரதும் பூரண ஒத்துழைப்புடன் இராணுவம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பலவற்றை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பல்வேறு சமய வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவின் வேண்டுகோளுக்கிணங்க மனிக்பாம் மற்றும் கதிர்காமர் நிவாரணக் கிராமங்களில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் நலனை கருத்திற் கொண்டு ஞாயிறன்று இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் கண்ணிவெடியகற்றும் பணிகள் மிகக் கவனமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இந்நடவடிக்கைகள் நிறைவு பெறுமென நம்புகின்றோம்.

எவ்வாறெனினும் இம்மாதத்தில் கணிசமானோரை மீள்குடியேற்ற முடியுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளோரில் சுமார் 15,000 பேரளவில் தினமும் வெளியில் செல்கின்றனர். அவர்களில் பலர் பல்வேறு தொழில்களில் ஈடுபவதுடன் தமது உறவினர்கள் நண்பர்களையும் சந்தித்து வருகின்றனர்.

அதற்கான அனுமதியூம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அத்தகையோருக்கான நிவாரணங்கள் தொடர்ந்தும் வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்கா-இஸ்ரேல் ஆகியவை ஈரான் மீது விமான தாக்குதல் நடத்துவதற்கு சம்மதிக்க மாட்டோம் ரஷியா அறிவிப்பு






ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் விமான தாக்குதல் நடத்துவதற்கு நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என்று ரஷியா அறிவித்துள்ளது.

அமெரிக்கா எதிர்ப்பு

ஈரான் நாடு அணுஆராய்ச்சி நடத்தி வருகிறது. அதோடு அணுஉலை கூடங்களையும் அது அமைத்து வருகிறது. அணு ஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் பணியையும் ஈரான் செய்து வருகிறது. இதனால் அது அணுஆயுதம் தயாரிக்கப்போவதாக கருதும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மின்உற்பத்திக்காக தான் அணுசக்தியை பயன்படுத்த இருக்கிறோம். ஆயுதம் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதை அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ஏற்கவில்லை. இதனால் ஈரான் மீது பொருளாதார தடை கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளன. இதற்கு எல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான பணிகளுக்கு அணுசக்தியை பயன்படுத்தி கொள்ள எங்களுக்கு உரிமை இருக்கிறது. இதை யாரும் தடுக்க முடியாது என்றும் ஈரான் கூறி உள்ளது.

விமான தாக்குதல்

அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்துவதற்கும், ஆயுதம் தயாரிக்க பயன்படுத்துவதற்கும் லேசான வேறுபாடு தான் உள்ளது. இதனால் மின்சக்திக்காக பயன்படுத்தும் அணுசக்தியை ஆயுதம் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

இதனால் ஈரானை பணிய வைக்க அந்த நாட்டில் உள்ள அணுஉலை கூடங்கள் மீது விமான தாக்குதல் நடத்தலாம் என்ற எண்ணமும் அமெரிக்காவுக்கு உள்ளது. அதனால் தான் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ராணுவ ரீதியில் தீர்வு காண்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதை ஒதுக்கித்தள்ள முடியாது என்று அமெரிக்க தலைவர்கள் கூறி வருகிறார்கள். விமான தாக்குதலை உலக நாடுகளின் சம்மதத்தோடு செய்ய அமெரிக்கா நினைக்கிறது.

சம்மதிக்க மாட்டோம்

அமெரிக்காவின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட ரஷியா இதற்கு சம்மதிக்க மாட்டோம் என்று தெரிவித்து உள்ளது. ரஷிய ராணுவ தளபதி ஜெனரல் நிக்கோலாய் மகரோவ் இதுகுறித்து கூறியதாவது:-

ஈரானின் அணு சக்தி திட்டம் கவலை அளிக்கிறது. இது அணுஆயுத பரவலுக்கு வழிவகுக்கும். இது குறித்து உலகநாடுகளுக்கு உள்ள கவலையை ஈரான் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கவலையை நீக்கும்படியான நடவடிக்கைகளை அது எடுக்க வேண்டும்.

உந்துதல்

ஈரான் அணுஆயுதத்தை தயாரிக்குமானால், அது மற்ற நாடுகளுக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்தும். அந்த நாடுகளுக்கும் அணுஆயுதம் தயாரிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்படும். ஆனால் அதே நேரத்தில் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுப்பதற்காக அந்த நாட்டின் மீது விமான தாக்குதல் நடத்துவதை எங்களால் ஏற்க முடியாது. அதற்கு நாங்கள் சம்மதிக்க மாட்டோம்.

இவ்வாறு ரஷிய ராணுவ தளபதி நிக்கோலாய் மகரோவ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இத்தாலியில் ரெயில் தடம் புரண்டதில் 7 பேர் பலி






இத்தாலி நாட்டில் போல்சானோ நகரில் ரெயில் தடம் புரண்டதில், 7 பேர் பலியானார்கள். 25 பேர் காயம் அடைந்தனர். அதிகாலை 7 மணிக்கு இந்த நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போதுதான் ஒரு ரெயில் அந்த வழியாக சென்றது. இதில் 2 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன.

காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலமாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்த ஊரில் கடந்த 2005- ம்ஆண்டு தான் புதிய ரெயில் பாதை தொடங்கப்பட்டது. இதனால் இந்த ஊர் வழியாக செல்லும் ரெயில் பாதை நவீனமானது ஆகும்.
மேலும் இங்கே தொடர்க...

தரை இறங்கியபோது இந்தோனேசிய விமானம் 2ஆக உடைந்தது 20 பேர் காயம்






இந்தோனேசிய நாட்டு விமானம் ஒன்று 100 பயணிகளுடன் அந்த நாட்டின் பாபுவா மாநிலத்துக்கு புறப்பட்டது. அங்குள்ள விமான நிலையத்தில் தரைஇறங்கியபோது பலத்த மழை பெய்தது. இதனால் விமானி தெரியாமல் விமானத்தை ஓடுபாதையில் இறக்காமல் அதை விட்டு விலகி அருகில் உள்ள ஆற்றில் இறக்கி விட்டார். அதன் தலைப்பகுதி ஆற்றில் மூழ்கியது. அதன் உடற்பகுதி 2 பகுதிகளாக உடைந்தது. இதில் பயணிகள் 20 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

சரண் அடையுங்கள், இல்லையேல் கைது செய்வோம் கிர்கிஸ்தான் அதிபருக்கு அந்த நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை







கிர்கிஸ்தான் அதிபர் பாகியேவ் ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து விட்டதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி அவரை வீட்டை விட்டு விரட்டி அடித்தனர். தலைநகரை விட்டு வெளியேறி, தலைமறைவாக இருக்கும் அவருக்கு இடைக்கால அரசாங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அவர் 24 மணி நேரத்துக்குள் சரண் அடையவேண்டும். இல்லாவிட்டால் அவரை கைது செய்வோம் என்று அந்த நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதிக்குரிய சட்டப்பாதுகாப்பை நாங்கள் ரத்துசெய்து விட்டோம். அவர் தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அவர் தன் ஆதரவாளர்களுடன் ஜலலாபாத்தில் பதுங்கி இருக்கிறார் என்று தெரிவித்தார்.

அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். அவர் சரண் அடையாவிட்டால், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பின்லேடன் எங்கள் நாட்டில் இல்லை பாகிஸ்தான் பிரதமர் சொல்கிறார்






பயங்கரவாத தலைவரான பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை என்று அந்த நாட்டு பிரதமர் கிலானி கூறிஇருக்கிறார். அமெரிக்கா வந்து இருக்கும் அவர் அந்த நாட்டு டி.வி.சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

பின்லேடன் பாகிஸ்தானில் நிச்சயமாக பதுங்கி இருக்கவில்லை. அவர் அங்கு தங்கி இருந்தால் சமீபத்தில் எடுக்கப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளில் தப்பி இருக்க முடியாது. பாகிஸ்தான் ராணுவம் ஸ்வாத், தெற்கு வசீரிஸ்தான், ஆரக்சி ஆகிய இடங்களில் பரவலான முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்கள் ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்துள்ளது. பின்லேடன் அங்கு பதுங்கி இருந்தால், அவர் உயிருடன் பிடிபட்டு இருப்பார். அவர் உயிருடன் இருக்க முடியாது என்று தான் நான் நம்புகிறேன். ஆனால் உறுதியாக தெரியாது. ஒருவேளை அவர் உயிருடன் இருந்தாலும் இருக்கலாம்.

தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. தீவிரவாதிகள் எப்போதும் தீவிரவாதிகள் தான். அவர்களுடன் பேசக்கூடாது.

இவ்வாறு கிலானி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...