12 ஜூன், 2010

பிரபாவின் தாயார் தன்னுடைய மகளின் வீட்டில் தங்கி சிகிச்சைபெற அனுமதி இந்திய மத்திய அரசு அறிவிப்பு

பிரபாவின் தாயார் பார்வதி அம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்து கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருவது குறித்து மத்திய அரசு 7.5.2010 திகதியிட்டு மலேசியா, கோலாலம்பூரிலே உள்ள இந்தியத் தூதுவருக்கு அனுப்பிய கடிதத்தில் மனிதாபிமான அடிப்பதீயில் பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின் பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம் என்று எழுதினார்கள்.

நிபந்தனைகளாக, பார்வதி அம்மாளின் தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும். அவர் மருத்துவமனையிலேதான் தங்க வேண்டுமே தவிர, வேறெங்கும் தங்கக் கூடாது. அரசு மருத்துவமனையிலே அவர் சிகிச்சை பெற விரும்பினால், தமிழக அரசு அதற்கு தேவையான உதவிகளையெல்லாம் செய்திட வேண்டும். அவர் எந்த அரசியல் கட்சியினரோடோ, குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களோடோ, எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட் டிருந்தது.

இதற்குப் பிறகு பார்வதி அம்மாள் சென்னைக்கு வராமல் இலங்கைக்கு சென்றுவிட்ட காரணத்தினால், மத்திய அரசு 18.5.2010 அன்று தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், பார்வதி அம்மாளின் உடல்நிலை கருதியும், அவர் தனது மகளின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்புகிறார் என்பதை மனதிலே கொண்டும் அவருக்கு ஏற்கனவே விதித்திருந்த நிபந்தனையை தளர்த்தி அவரது மகளின் இல்லத்திலே தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கலாமா என்றும், அந்த அம்மையாரின் உறவினர்களும், நண்பர்களும் அவரை சந்திக்க அனுமதிக்கலாமா என்றும் கேட்டிருந்தார்கள்.

இந்தக் கடிதத்திற்கு 20.5.2010 அன்று தமிழக அரசு அனுப்பிய பதிலில் பார்வதி அம்மாள் அவரது மகளின் இல்லத்திலே சிகிச்சை பெறுவது பற்றி தமிழக அரசுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும், அந்த அம்மையாரை அவரது நண்பர்கள் வந்து சந்திப்பது பற்றி மத்திய அரசே முடிவினை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இலங்கையிலே உள்ள இந்திய தூதுவருக்கும் தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ள பதிலில், பார்வதி அம்மாள் அவருடைய மகளின் இல்லத்திலே தங்கலாம் என்றும், அந்த அம்மையாரின் நண்பர்களும், உறவினர்களும் சந்திக்கலாம் என்றும், ஆனால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திக்க அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதுபற்றி பார்வதி அம்மாளின் கருத்தறிந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. தே. க. தலைமைத்துவத்திற்கு நான்கிற்கும் மேற்பட்டோர் போட்டி வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் களத்தில் குதிக்கத் தயார்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத் துவத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதற்கென நான்குக்கும் மேற்பட்டோர் போட்டியிடத் தயாராக உள்ளதாக ஐ. தே. க. உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதைய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலதிகமாக வேறொருவர் கட்சித் தலைமைத்துவத்திற்குப் போட்டியிட்டால், அது ஒரு நான்குமுனைப் போட்டியாக இருக்குமென்று தெரிய வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னணி ஆதரவாளர் ஒருவரின் கொழும்பு 07 பகுதியில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தை யொன்றில், ஐ. தே. க. தலைமைத்துவத்திற்கு சஜித் பிரேமதாச முன்வரவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச கட்சித் தலைமைத்து வத்திற்காகப் போட்டியிட்டால், மேலும் இருவர் போட்டியிடத் தயாராக உள்ளதாகவும் இந் நிலையில், கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரம சிங்கவை நீக்க முடியாத சூழல் உருவாகுமென்பதே கட்சி முக் கியஸ்தர்களின் கருத்தாக உள்ளது.

சஜித் பிரேமதாச தலைமைத் துவத்திற்கு வர முயற்சித்தால் அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக ரவி கருணாநாயக்க எம். பி. வெளிப்படையாகத் தெரிவித் திருக்கிறார்.

எவ்வாறெனினும் ரணில் விக்கிரம சிங்கவை எதிர்த்து சஜித் பிரேமதாச போட்டியிடும் பட்சத்தில் இவர் அரசியலில் ஓரங்கட்டப்படும் நிலை உருவாகலாம் எனச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அதே நேரம், ரவி கருணாநாயக்க போன்றோர் போட் டியிட முன்வரும் பட்சத்தில் சஜித் ஆக பின்னிலைக்குத் தள்ளப் படுவாரென்றும் கட்சி முக்கியஸ்தர் கள் கருதுகிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் தலை மைப் பதவியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க தமது ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கினையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகத் தக வல்கள் தெரிவிக்கின்றன
மேலும் இங்கே தொடர்க...

கைதுசெய்ய வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம்’


“தமிழகத்தில் என்னைக் கைது செய்ய வேண்டும் என்ற சிலரது கோரிக்கைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்” என ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பின்னர் நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பிய அமைச்சர் நேற்று அவசர செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என தமிழகத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றுக்கான பின்னணி பற்றி அமைச்சர் விளக்க மளித்தார். தமிழகத்தில் சூளைமேடு பகுதியில் நடைபெற்றதாக கூறப்படும் விடயத்திற்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை. சம்பவம் நடைபெற்ற பின்னரேயே சமரசம் செய்வதற்காக வந்தேன். வந்த நானும் தாக்கப்பட்டேன்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டவர்கள் யார்? ஈ. பி. ஆர். எல். எவ். அமைப்பில் அன்று இதன் சூத்திரதாரியாக செயற்பட்டவர். தூண்டிவிட்டவர் யார் என்பது பற்றி பாராளுமன்றத்தில் உரித்துக்காட்டுவேன்.

சூளைமேட்டு சம்பவத்தில் நான் குற்றவாளி என நீதிமன்றம் கூறவில்லை. சட்டப்படி கைதாகியிருந் தேன். எனினும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் நான் மட்டுமல்ல ஆயுதக் குழுக்கள் அனைத் திற்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது.

சூளைமேட்டு விவகாரத் தின் பின்னர் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக் கள் அனைத்தும் என்னையும் என் சாக்களையும் கைது செய்ய வேண்டும் என்ற உள்நோக்கோடு ஜோடிக்கப்பட்டவை. இதன் பின்னணியில் டி. ஜி. பி. துரை செயற்பட்டார்.

இறுதியில் அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை யும் அவருக்கு வந்தது. ஜனாதிபதி யுடன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்கு முன்ன தாக பலமுறை இந்தியா சென்றுள்ளேன். தமிழகம் சென் றுள்ளேன்.

ஏன் அப்போது இல்லாத எதிர்ப்பு ஜனாதிபதியுடன் செல்லும் போது மட்டும் வருகிறது? இது அரசியல் தாழ்ப்புணர்ச்சி மட்டுமல்ல, எரிச்சல், பொறமை என்றும் சொல்லலாம்.

தமிழகத்தில் எனக்கெதிராக தாக் கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர் பாக தேவையேற்பட்டால் அதனை சட்ட ரீதியாக சந்திக்கவும் தயாராக இருக் கிறேன்.

என்னைக் கைது செய்ய வேண் டும் என ஆர்ப்பாட்டம் செய்வோர், கோஷம் எழுப்புபவர்கள் இந்தியா வில் தடை செய்யப்பட்ட இயக்கத் தின் தலைவர், இந்தியாவில் தேடப் படும் குற்றவாளியின் புகைப் படத்தை ஏந்தி நிற்கின்றனர்.

இலங்கை, இந்திய உடன்படிக் கையின் கீழ் பொதுமன்னிப்பு வழங் கப்பட்டுவிட்டது. இனி போகலாம் என்றவுடன் தான் நான் வந்தேன். எனினும் அன்று என்னை கைது செய்வதற்கு திரைமறைவில் சூழ்ச்சி கள் நடைபெற்றன.

இந்தியா தான் எமக்கு பயிற்சி வழங்கியது; நிதி வழங்கியது; பயிற்சி முகாம்களையும் வைத் திருந்தோம். எமக்கு மட்டுமல்ல ஆயுதக் குழுவாக செயற்பட்ட வர்களுக்கு இது கிடைத்தது. நான் வந்ததன் பின்னர் உள்நோக்கங் களுக்காக ஆயுதக் குழுக்களிடையே மோதல்கள் நடைபெறவில்லையா? சூட்டுச் சம்பவங்கள் நடைபெற வில்லையா?

சூளைமேட்டில் வேண்டுமென்றே என்னுடனும் எனது சாக்களுடனும் மோதி பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குள்ள ரவுடிகள் சிலரை எமது ஆட்களுடன் மோதச் செய்து வீணான பிரச்சினையை உரு வாக்கினார்கள். விரைவில் பாராளு மன்றத்தில் உரித்துக் காட்டுவேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

மலையகத்தில் தோட்ட கம்பனிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் குடியிருப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர் களின் குடியிருப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடைமுறைச்சாத்தி யமான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கவனம் செலுத்தியுள்ளது.

பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் குடியிருப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளதாக காங்கிரஸின் தலைவர், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பில் விரைவில் பெருந் தோட்டக் கைத்தொழில் அமைச்சுடன் பேச்சுவார் த்தை நடத்தவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

முழுமையாகப் புதிதாக வீடுகளை நிர்மாணித்து முடிப்பதென்றாலும் வருட த்திற்குப் பத்தாயிரம் வீடுகள் என்ற அடிப்படையில் 15 வருடங்களாவது செல்லும். அதற்கிடையில் அரசியல் சூழ் நிலைகள் வேறு. எனவேதான் குறுகிய காலத் தீர்வாக முன்னுரிமை அடிப்படையில் வீட்டுப் பிரச்சினைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

13வது திருத்தத்திலும் கூடுதல் அதிகாரங்களுடன் அரசியல் தீர்வு இந்திய தலைவர்களுக்கு ஜனாதிபதி உறுதி; டில்லி விஜயம் வெற்றி என்கிறார் டக்ளஸ்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் அதிகளவு வெற்றியை பெற்றுத் தந்துள்ளது என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுத்தெரிவித்தார்.

இந்தியாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று அவரது அமைச்சில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியதுடன் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவுகள் நம்பிக்கை மென்மேலும் வலுப்பெற்றுள்ளது என்றும் கூறினார்.

இந்திய ஜனாதிபதி திருமதி பிரதீபா பட்டேல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி, எதிர்க்கட்சி (பாரதீய ஜனதா) தலைவி சுஸ்மா ஸ்வராஜ், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம், நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் பி. அந்தோனி, வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, ரயில்வேதுறை அமைச்சர் மம்தா பானர்ஜி, இவர்களுடன் தமிழக எம்.பிக்கள் குழுவினரையும் சந்தித்தோம். இலங்கையின் உண்மை நிலையை கண்டறிய வருமாறு அவர்களுக்கு அழைப்பும் விடுத்தோம் என்றார்.

எனினும் இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா செயற்படுகிறது என்பது அவர்களுடன் நடத்திய பேச்சுக்களில் தெளிவாகியது.

மக்களை மீளக் குடியமர்த்துவதில் வேகம் போதாது என்பதை சுட்டிக்காட்டியதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதையும் ஜனாதிபதிக்கு வலியுறுத்தினார்கள்.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் மேல் சென்று அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதுதான் எமது அரசின் நோக்கம் என்பதையும் களத்தில் இந்திய நிறுவனங்களும் மிதிவெடி அகற்றல் நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளன. உண்மை யான நிலைமை அவர்களுக்கும் தெரியும். மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொள்ள வழங்கப்படுகின்ற நிதியோ, பொருட்களோ போதுமானதாக இல்லை என்பதையும் அவர்களுக்கு சுட்டிக்காட்டினோம்.

இதனையடுத்து மீளக்குடியமர்த் தப்படும் மக்களுக்கு 50,000 வீடு களை கட்டிக்கொடுப்பதற்காக இந் தியா 1000 கோடி ரூபாவை நன் கொடையாக எமக்கு வழங்க முன் வந்தது. அதுமட்டுமல்ல வட பகுதி ரயில் பாதை புனரமைப்புக்காக 800 மில்லியன் ரூபாவை இலகு கடனா கவும் வழங்க முன்வந்தது என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு-கிழக்கு இணைப்பின்றி 13 ஆவது திருத்தச் சட்டம்; இந்தியா இணக்கம் : அமைச்சர் டக்ளஸ்

வடக்கு கிழக்கு இணைப்பு இல்லாது பதின்மூன்றாவது அரசியல் அமைப்பை செயல்படுத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் அதனுடன் நட்புறவை வளர்க்கவும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் கூடிய ஒன்றாக அமைந்துள்ளமை பெரும் வரப்பிரசாதமாகும். இது ஒரு பெரும் வெற்றிப் பயணம் என்பதே உண்மை.

மேற்கண்டவாறு பரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்;. மாவட்ட ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

"இந்தியப் பயணத்தின் போது, பல முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து கலந்துரையாடக் கூடியதாக இருந்தது. குறிப்பாக இந்திய ஜனாதிபதி, பிரதமர், சோனியா காந்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர், வெளிநாட்டு அமைச்சர் சிவசிதம்பரம், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடக் கூடியதாக இருந்தது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் அனைத்துக் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் ஒரு நல்ல தீர்வை ஒருமித்த குரலில் முன்வைக்க வேண்டும், ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காக அழைப்பொன்றை விடுத்திருந்தேன். ஆனால் அதனை எவரும் பொருட்படுத்தவில்லை.

இன்று நாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் கடந்து செயல்பட வேண்டும். ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் பிரச்சினை பற்றிப் பேசாது நாளாந்தப் பிரச்சினைபற்றி பேசியுள்ளார்கள். நாம் அன்று முதல் இன்று வரை அரசியல் தீர்வு பற்றியே பேசியுள்ளோம்; வலியுறுத்தியுமுள்ளோம்.

ஜனாதிபதியுடன் கைகோர்ப்பதில் முண்டியடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்களை எப்படி ஏமாற்றவது என்பதில் தான் முனைப்புடன் செயல்படுகின்றார்கள். எனவே இவர்கள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, மாகாண சபையைத் தம்வசமாக்கிச் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பதற்கே தயாராகின்றார்கள் எனத் தோன்றுகின்றது.

இந்தியாவில் நாம் கலந்துரையாடிய அனைத்து தரப்பினரையும் இங்கு வரும்படி நானும் ஜனாதிபதியும் அழைப்பு விடுத்துள்ளோம். இலங்கையில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு அவசியம் என்பதையே அவர்கள் அனைவரும் வலியுறுத்துகின்றனர்.

மீள் குடியேற்றம் வாழ்வாதாரத் திட்டங்கள் சம்பந்தமாக ஏற்கனவே இங்கு வருகை தந்த கனிமொழி உட்பட பலருடனும் கலந்துரையாடியுள்ளோம். அவர்களும் திருப்தி அடைந்துள்ளனர். இல்லாத ஒன்றுக்காகக் காத்துக் கிடப்பதைவிட, கிடைப்பதைக் கொண்டு இரண்டாம் கட்டத்திற்கு நகர்வதே சிறப்பு.

தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. உண்மை நிலைமையைக் குறிப்பாக, கண்ணிவெடிகளின் அபாயம் குறித்து விவரித்துள்ளோம். இந்தியக் கண்ணிவெடி அகற்றும் குழுவினரும் இலங்கையில் இருப்பதனால் உண்மை நிலையை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

வட பகுதியில் அழிக்கப்பட்ட வீடுகளை எனது தலைமையில் நிர்மாணிப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாவை வழங்குவதற்கு இந்தியா தயாராகவுள்ளது. இருபது வருட கடன் அடிப்படையில் மேலும் ஆயிரம் கோடி அமெ. டொலர்களை ரயில்பாதை, மின்சாரம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

என் மீது களங்கம் கற்பிப்பதற்காகவே இந்தியாவில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது.

தற்போதும் கூட இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஆனால் நான் அங்கு இல்லாத நிலையில், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடும். எந்த வழக்கையும் சந்திக்க நான் தயாராகவே உள்ளேன்" என்றார்
மேலும் இங்கே தொடர்க...

அம்பானி குழுவினர் இலங்கை வருகை

இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர்களான அம்பானி குழுவினர் அடுத்த கிழமை இலங்கைக்கு வருகைதர உள்ளனர். இலங்கையின் தொலைத் தொடர்புத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்த பேச்சுக்களை நடத்தவே அவர்கள் இலங்கை வர உள்ளதாக இலங்கையின் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கு போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டிருந்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

ஆசியப் பிராந்தியத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஜாம்பாவான்களாகத் திகழும் அம்பானி குழுவினரின் வருகை இலங்கையின் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த அமுனுகம இது இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் ஏனைய முதலீட்டாளர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஒரு கோடியே நாற்பது லட்சம் பேர் தொலைபேசிகளைப் பாவிப்பதாகத் தெரிவித்த அமுனுகம இது தெற்காசியாவிலேயே மிகவும் அதிகமான விகிதாசாரம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர் டக்ளஸ் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியல்ல சபையில் அமைச்சர் தினேஷ் அறிவிப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி அல்லவென்று அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய அரசின் குற்றச்சாட்டுகளிலிருந்து அமைச்சர் தேவானந்தா விடுவிக்கப் பட்டுள்ளதால் அவரை தேடப்படும் குற்றவாளியெனக் கூற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.

அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போதே அமைச்சர் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். இந்தப் பிரேரணையில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. ஸ்ரீரங்கா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளியெனவும், அவ்வாறான சர்வதேச குற்றவாளியொருவருடன் ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளதாகவும் கூறினார்.

இந்தக் கூற்றை அமைச்சர் தினேஷ் குணவர்தன கடுமையாக எதிர்த்தார். அமைச்சர் டக்ளஸ் குற்றமற்ற நிரபராதி எனவும் அமைச்சர் கூறினார்.

ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி.

ரவி கருணாநாயக்கவால் முன்வைக்கப் பட்ட பிரேரணை பொருத்தமற்றவை

என நினைக்கின்றேன். ஏனென்றால், இந்த விடயம் ஏற்கனவே சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில கிராமங்களின் பாதுகாப்புக்காக சட்ட ரீதியாக சிலருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வேளையில், எதிர்க்கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க, “ஆளுந்தரப்புக்குக் கூடுதல் நேரம் விவாதத்துக்கு ஒதுக்கப்படவில்லை” என்று குறுக்கிட் டார். எனினும் தொடர்ந்து உரையாற்றிய அஸ்வர் எம்.பீ. புலிகள் இயக்கக் குழுக்களின் செயற்பாடுகள் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டமை குறித்தும் எடுத்துரைத்தார்.

எச். எம். எம். ஹாரிஸ் எம்.பி.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இன்னமும் சட்ட விரோத ஆயுதக் குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றை முடக்குவதற்கு இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகள் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி தேர்தல் காலங்களில் செயல்பட்டார்கள். அம்பாறை மாவட்டத்தில் ஆயுதம் வைத் திருந்தார்கள் என்று அப்பாவி இளைஞர் களைச் சிறையில் வைத்திருக்கிறார்கள். சட்ட விரோதமாக வைத்துள்ள ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை மீள் உற்பத்தி முதலீடுக்கு ஆஸி. உதவும் அமைச்சர் றிஷாடிடம் உயர்ஸ்தானிகர் உறுதி

யுத்தத்தால் அழிந்துபோன காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் மீள் உற்பத்திக்கான முதலீடுகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது பங்களிப்பை செய்யவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய நாட்டின் உயர் ஸ்தானிகர் கெதி க்ளுமன் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில், வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் வெள்ளிக்கிழமை சந்தித்தபோதே, உயர் ஸ்தானிகர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தற்போது இலங்கைக்கும், அவுஸ்திரேலியாவுக்குமிடையில் காணப்படும் வர்த்தக செயற்பாடுகளை வலுப்படுத்திக்கொள்ளவும், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துறையை மேலும் விரிவுபடுத்திக்கொள்வது குறித்தும் இச்சந்திப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்வலு, கல்வி துறைகளில், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர், அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் சுட்டிக்காட்டினார்.

தற்போது இலங்கையில் காணப் படும் புதிய முதலீட்டு துறைகள் குறித்து அறிவுறுத்திய அமைச்சர், வடக்கு, கிழக்கு பகுதிகளில் முதலீட்டு ஊக்குவிப்புக்களுக்கான சந்தர்ப்பம் அதிகமாகவுள்ளதால், அவுஸ்திரேலியா வடக்கு, கிழக்கு பகுதிகளில் புதிய கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கான முனைப்பை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரிடத்தில் விடுத்த வேண்டுகோளை, தாம் அது குறித்த கவனத்தை செலுத்துவதாக உயர் ஸ்தானிகர் உறுதியளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கு பல்கலையின் திருமலை வளாகம்: சித்த மருத்துவ பீடத்தை மாற்றும் தீர்மானம் மறுபரிசீலனையில்

கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிக காலம் இயங்கி வந்த சித்த மருத்துவ பீடத்தை அங்கிருந்து மாற்றுவதற்கு எடுத்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார துறை அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.

திருகோணமலை வளாகத்தின், கோணேசர்புரியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பீடத்தில் ஏறத்தாள 40 இற்கும் அதிகமான மாணவர்கள் கற்கை நெறியை இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.

மிக அண்மையில் உயர் கல்வி அமைச்சு மேற்படி பீடத்தை இங்கிருந்து மாற்றுவதற்கு தீர்மானித்தது. இதனை அடுத்து பீடத்தை மாற்ற வேண்டாம் என மாணவர்கள் எழுத்து மூல கோரிக்கை ஒன்றை உயர் கல்வி அமைச்சுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கும் விடுத்திருந்தனர்.

மாணவர்களின் கோரிக்கை தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் உயர்கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தமது அமைச்சு மேற்கொண்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதாகவும் சாதகமான முறையில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாகவும் உயர் கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சருக்கு உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

உரமானியம் வழங்குவதற்கு 81,365 மில்லியன் ரூபா செலவு அமைச்சர் மஹிந்த யாப்பா

உரமானியம் வழங்குவதற்காக கடந்த ஐந்து வருடத்தில் அரசாங்கம் 81,365 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார்.

வாய் மூல விடைக்காக ரவி கருணா நாயக்க எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 2005 இல் 6,285 மில்லியன் ரூபாவும் 2006 இல் 10,696 மில்லியன்களும் 2007 இல் 10,998 மில்லியன் ரூபாவும் 2008 இல் 26,449 மில்லியன் ரூபாவும் 2009 இல் 26,935 மில்லியன்களும் செலவிடப்பட்டுள்ளன. நெல், உப உணவுப் பொருட்கள், மரக்கறி, தேயிலை, றப்பர், தெங்கு என் பவற்றுக்கு உரமானியம் வழங்கப்படுகிறது.

இதன்படி, கடந்த வருடம் யாழ். மாவட்டத்துக்கு 3,921 மில்லியன் ரூபாவும் மன்னார் மாவட்டத்துக்கு 1,639 மில்லியன் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு 4,114 மில்லியன் ரூபாவும் திருமலை மாவட்டத்திற்கு 17,315 மில்லியன் ரூபாவும் மட்டு. மாவட்டத்துக்கு 18,984 மில்லியன்களும் அம்பாறை மாவட்டத்துக்கு 55,470 மில்லியன்களும் பசளை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுடன் அரசியலில் ஈடுபட்ட படைவீரர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு
ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் படைவீரர்கள் அனைவரும் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தனர்.

இராணுவத்தில் முக்கிய பதவிகளில் வகித்த ஓய்வுபெற்ற படை வீரர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தொகுதி அமைப்பாளர்க ளாக, மாவட்ட இணைப்பாளர்களாக பல பதவிகளை வகித்து வந்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தொடர்ந்தும் இந்த அரசியல் பயணத்தில் ஈடுபட விரும்பவில்லை என்று தெரிவித்த அவர்கள் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா, ஜே.வி.பியினரின் கைப் பொம்மையாக செயற்படுகிறார். நாட்டைப் பற்றியோ நாட்டு மக்களின் நலன் பற்றியோ சிந்திக்காமல் செயற்படுகிறார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

மத்திய கிழக்கு தொழில்வாய்ப்பு: 2010 முதற்காலாண்டில் 890 மில். டொலர் வருமானம் ஆண்டு இறுதியில் 4 பில். டொலர் இலக்கு

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்கள் சென்றுள்ளதன் மூலம் 2010 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் வெளிநாட்டு செலாவணியாக 890 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைத்துள்ளது. அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களின் எண்ணிக்கையும் 22 சதவீதமாக அதிகரித்துள்ளது என பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2010 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 67,136 பேர் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளனர். 2009 முதல் காலாண்டில் இத்தொகை 54,990 பேராகவே இருந்தது. இது 22 வீத அதிகரிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டை விட 2010 ஆம் ஆண்டில் கட்டார், குவைத், ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளிலிருந்தே அதிகளவு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

கட்டாரிலிருந்து 72 வீதமும், குவைத்திலிருந்து 32 சதவீதமும், ஜோர்தானிலிருந்து 28 சதவீதமும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 11 சதவீதமும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

அத்துடன் பஹ்ரேய்ன், மலேஷியா போன்ற நாடுகளிலும் வேலை வாய்ப்புகளை அதிகளவில் பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளன. கொரியாவிலிருந்தும் 2600 வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

2009 ஆம் ஆண்டைவிட 2010 ஆம் ஆண்டு கிடைத்துள்ள அந்நிய செலாவணியை ஒப்பிடும்போது 14 வீத அதிகரிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது. 2009 முதல் காலாண்டில் 780 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. 2010 ஆம் ஆண்டு இத்தொகை 890 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது.

2010ஆம் ஆண்டு இறுதியில் வெளி நாட்டில் வேலைவாய்ப்பை பெற் றுச் சென்றவர்களினூடாக 4 பில்லி யன் அமெரிக்க டொலர்களை பெற் றுக்கொள்ளும் இலக்கை நோக்கியே பணியகம் செயற்படுகிறது எனவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...