19 ஜூலை, 2010

காரைதீவில் இன்று நடந்த செம்மொழி விழா

கிழக்கு மாகாண தமிழ் செம்மொழி விழா சுவாமி விபுலானந்தரின் சிரார்த்த தினமான இன்று காலை, அவரின் பிறந்த மண்ணான காரைதீவில் உள்ள விபுலானந்த மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், கல்முனைக் கல்வி வலயம் ஆகியவற்றுடன் இணைந்து காரைதீவு பிரதேச புத்திஜீவிகள் இணைந்து இவ்விழாவை நடத்தினர்.

இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த பேராளர்கள் பெரிய துறைநீலாவணை சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் இருந்து ஊர்வலமாக காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரிக்கு அலங்கார ஊர்திகள் சகிதம் அழைத்துச் செல்லப்பட்டனர்
மேலும் இங்கே தொடர்க...

சிறப்பாக நடைபெற்று வரும் கதிர்காம திருவிழா

கதிர்காம ஆடித் திருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த விழாவில் இம்முறை வடகிழக்குப் பிரதேசங்களிலிருந்து அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதைக் காணக் கூடிய யுத்த சூழ்நிலை மறைந்துள்ள நிலையில் அச்சமின்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டு, திருமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் இம்முறை கதிர்காம ஆடித் திருவிழாவுக்கு செல்வதற்கு இன்னமும் பலர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். பஸ்கள், கார்கள், வான்கள் மாத்திரமின்றி பெருமளவு பக்தர்கள் கால்நடையாகவும் இங்கு வந்து குவிந்த வண்ணமிருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி தீ மிதிப்பும், 25ஆம் திகதி முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் வீதியுலா வருதலும், 26ஆம் திகதி நீர்வெட்டுடன் திருவிழா நிறைவடைய உள்ளது. கதிர்காம திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவில் பெரஹரா ஊர்வலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரிலிருந்து 17 குடும்பங்கள் இன்று பெரிய பண்டிவிரிச்சானில் குடியமர்வு

மன்னார் தீவுப்பகுதிக்குள் இருந்து மேலும் 17 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மன்னாரில் இருந்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் கடந்த வாரம் அவர்களுடைய சொந்த கிராமமான பண்டிவிரிச்சான் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட மக்களுக்கான உணவு வசதிகளை மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டி மெல் மேற்கொண்டுள்ளார்.

மன்னார் தீவுப்பகுதிக்குள் இருந்து இதுவரை 63 குடும்பங்களைச் சேர்ந்த 185 பேர் மீள் குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சகல பாகங்களில் இருந்தும் இதுவரை பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு 256 குடும்பங்களைச் சேர்ந்த 923 பேர் மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவிலிருந்து சிறப்புத்தூதரை அனுப்ப வேண்டிய அவசியமில்லை: இலங்கை அமைச்சர்இலங்கை தனது பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றி வருவதால் அதுதொடர்பாக ஆய்வுசெய்ய இந்தியா சிறப்புத்தூதரை அனுப்ப வேண்டிய அவசியமில்லை என இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகளை ஆய்வுசெய்ய சிறப்புத்தூதர் ஒருவரை அனுப்ப வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் சிறந்த புரிந்துணர்வும், உறவும் உள்ளது. மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில்கூட இந்தியா இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. இந்தியாவுடனான உறவு உலகில் வேறு எந்த நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை விட சிறந்ததாகும்.

தமிழ் மக்களின் மறுகுடியமர்வு தொடர்பாக அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே இலங்கை நிலைமை தொடர்பாக ஆராய இந்தியாவிலிருந்து சிறப்புத்தூதரை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

முட்டை சாப்பிடும் பெண்களுக்கு பிரசவத்தின்போது இதய நோய் வராது

முட்டை சாப்பிடும் பெண்களுக்கு    பிரசவத்தின்போது இதய நோய் வராது

முட்டை உடல்நலத்திற்கு சிறந்தது. அனைத்து வயதினரும் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் முட்டை சாப்பிடும் பெண்களுக்கு பிரசவ காலத்தின் போது இதய நோய்கள் தாக்குவது பெருமளவில் குறையும். இந்த தகவலை தற்போது நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

முட்டையில் “சோலின்” என்ற திரவவடிவிலான சத்துப்பொருள் பெருமளவில் உள்ளது. இது வைட்டமின் “பி” காம்ப்ளக்சுக்கு இணையானது. “சோலின்” என்ற சத்து இதய நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. எனவே கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் முட்டை சாப்பிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்னல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மேரி காடில் என்பவர் தலைமையிலான குழுவினர் பெண்களிடம் “சோலின்” சத்து குறைந்த உணவை சாப்பிட கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரசவ காலத்தின் போது 2 தடவை அவர்கள் இதய நோயினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் இதய நோய் பாதிப்பு இருந்தது.

ஆகவே, கர்ப்ப காலத்தின்போது பெண்களுக்கு சத்துணவு குறித்தும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம் குறித்தும் கற்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சல்வார்-கம்மீஸýக்கு யாழ் கோயிலில் தடை


யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோயிலில் ஆகஸ்ட் 15 முதல் 25 நாள்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவின்போது பெண்கள் சல்வார் - கம்மீஸ் அணிந்துவர தடை விதிக்க ஆலய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழர்கள் பாரம்பரியமாக அணியும் பாவாடை - தாவணி, சேலை ஆகியவற்றை மட்டும் அணிந்து வரலாம் என்று ஆலயம் சார்பில் அறிவிக்கப்படவிருக்கிறது. ஆடவர்கள் வேட்டி அணிந்து வரலாம். கைலி என்று அழைக்கப்படும் லுங்கி, பெர்முடாஸ் என்று அழைக்கப்படும் அரை டிராயர்களுக்கு அனுமதி இல்லை.

இதை யாழ்ப்பாண நகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

சல்வார் - கம்மீஸ் ஆடை உடலை நன்கு மூடி மறைக்க உதவும்போது அதை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது தமிழர்களின் பாரம்பரிய உடை அல்ல என்பதால் வேண்டாம் என்கிறோம் என்றார் யோகேஸ்வரி.
மேலும் இங்கே தொடர்க...

போலி மருந்தகர்கள் பிடிபட்டால் சிறை : கட்டுப்பாட்டுச் சபை தெரிவிப்பு

போலி மருந்தகங்கள் (பாமஸிகள்), போலி மருந்தகர்கள் (பாமஸிஸ்ட்கள்) மற்றும் அபாய ஒளடத சட்டத்தை மீறுவோர் பிடிபடும் பட்சத்தில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என ஒளடத கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் கே.கமகே தெரிவித்தார்.

மேற்கத்தைய மருந்து வகைகளைச் சிலர் போதைக்காகவும் முறைகேடாகவும் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அபாயகர ஒளடத சட்டத்தை கடுமையாகப் பின்பற்ற நடடிக்கை எடுக்கப் போவதாகவும் கமகே தெரிவத்தார்.

இருமல், நரம்புத்தளர்ச்சி மற்றும் வலி நிவாரணம் போன்றவற்றுக்கான மருந்து வகைகளைச் சிலர் தவறான முறையில் பயன்படுத்தி போதை ஏற்படுத்திக் கொள்வது உட்பட மேலும் பல முறைகேடுகள் இடம்பெறுவது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து சுகாதார அமைச்சு இம்முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் ஒளடத விற்பனை நிலையங்கள் உட்பட அதனுடன் தொடர்புடைய அமைப்புக்கள், நிறுவனங்களை அறிவுறுத்தும் முயற்சியை உடன் மேற்கொள்வதுடன் சட்டத்தை மீறும் மருந்து விற்பனையாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வைத்தியர்கள் வழங்கும் சிட்டைகளுக்கு மட்டும் மருந்து வழங்கப்பட வேண்டும். அதே போன்று, அனுமதிப் பத்திரமற்ற, தகுதியற்ற மருந்துக் கலவையாளர்களைக் கொண்ட பாமஸிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அவ்வாறு சட்டத்தை மீறும் நபருக்கு 5,000 முதல் 50,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் அமைப்புடன் தீர்வு குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும்

அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் அதேவேளை, அரசியல் தீர்வுத்திட்டம் குறித்தும் அவதானம் செலுத்துவது காலத்துக்குப் பொருத்தமாக அமையும் என்று நாங்கள் கருதுகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அரசியலமைப்பு திருத்தங்களுக்கு பிரதான எதிர்க்கட்சி ஆதரவு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் அரசியல் தீர்வு விடயம் என்பன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது :

மக்களுக்கு தேவையான மற்றும் நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு திருத்தங்களுக்கே ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கும். அதன் அடிப்படையிலேயே மிகவும் நேர்மையான முறையில் ஆளும் தரப்புடன் எமது கட்சி பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றது.

தற்போதைய அரசியலமைப்பில் சில திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்பதனை நாங்களும் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால் அவை நாட்டுக்கு பொருத்தமானதாக அமையவேண்டும். இதேவேளை தற்போதைய அரசியலமைப்பு திருத்த செயற்பாடுகளின்போது அரசியல் தீர்வு விடயம் குறித்தும் கலந்துரையாடுவது மிகவும் பொருத்தமாக அமையும் என்று நம்புகின்றோம்.

மேலும் அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுடனும் அரசாங்கம் பேச்சு நடத்தவேண்டும். அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தவேண்டியது முக்கிய விடயமாகும்
மேலும் இங்கே தொடர்க...

அணிசேரா நாடுகளுக்குள் முரண்பாடு : இலங்கைக்கு முட்டுக்கட்டை

இலங்கை பற்றியும் இலங்கையின் பொறுப்புச் சொல்லும் கடப்பாடு தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு வுக்கு எதிராக அணிசேரா இயக்கத்தினால் வரையப்பட்ட கடிதம் பற்றியும் நேற்று முன்தினம் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு முன்பாக இடம்பெற்ற மதியநேர விளக்கவுரையின் போதும் பின்னர் மேல் மாடியில் நெல்ஸன் மண்டேலாவின் 92ஆவது ஜனன தின வைபவத்தின் போதும் சரமாரியாக கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டன என்று ஐக்கியநாடுகள் வளாக ஊடகமான இன்னர் சிற்றி பிறெஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முதன்முதல் இன்னர் சிற்றி பிறெஸ் செய்தியாளர் மெத்த்தியூ ரஸ்ஸல் லீயினால் பெறப்பட்டு பிரத்தியேகமாக பிரசுரிக்கப்பட்ட அணிசேரா இணக்கத்தின் நகல் கடிதம், அணிசேரா இயக்கத்தின் ஒரு அங்கத்துவ நாடான கௌதமாலாவின் எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் விசாரணைகளுக்கு தடங்கல் விளைவிக்க கூடாது என்று கௌத்தமாலா தெரிவித்துள்ளது. இயக்கத்தின் அங்கத்தவர்கள் மத்தியில் இலங்கையை "பாதுகாப்பதற்கான பொறுப்பு' என்ற சொற்பதங்கள் அடிக்கடி கேட்டன என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

அணிசேரா நாடுகள் ஏகமனதாக இல்லாவிட்டாலும் அநேகமான நாடுகள் இலங்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்க மறுப்பு தெரிவிக்கின்றன. ஆனால் அணிசேரா இயக்கத்தின் தீர்மானங்களுக்கு சகல அங்கத்துவ நாடுகளினதும் இணக்கப்பாடு அவசியமாகும் என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

காஸாவுக்கான நிவாரணப் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து இஸ்லாமிய மாநாட்டு நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளே இலங்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பை கோரும் முயற்சிகள் தாமதமடையக் காரணம் என்று இலங்கையும் பல அணிசேரா நாடுகளும் கூறுகின்றன. ஆனால் இலங்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பு தற்போது அணிசேரா நாடுகளின் குழப்பநிலையில் சிக்கியுள்ளது என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் தெரிவிக்கிறது.

அணிசேரா இயக்கத்தை பொறுத்த வரையில், இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை எகிப்திற்கு அடுத்து ஈரான் ஏற்றுக் கொள்ளும் என்பது தற்போது உறுதியாக இல்லை என்று பிறெஸ் தெரிவித்துள்ளது. பாரசீக குடாவை சேர்ந்த மன்னராட்சி நாடுகள் கூட்டமைப்பும் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத அரேபியாவின் மக்றெப் பிராந்திய நாடு ஒன்றும் ஈரானின் தலைமைத்துவத்தை எதிர்க்கின்றன. அணிசேரா நாடுகள் இயக்கத்திற்கு ஈரான் தலைமைதாங்க விரும்பிய போது வெனிசுவேலா 77 நாடுகள் குழுவுக்கு தலைமை தாங்க விரும்பியது.

செயலாளர் நாயகம் பான் கீமூனின் ஆலோசனைக்குழு தற்போது 8 அங்கத்தவர்களைக் கொண்ட குழுவாக விஸ்தரிக்கப்பட்டு நவநீதம்பிள்ளையின் நியூயோர்க் பிரதிநிதியாக சேவையாற்றி அண்மையில் விலகிய ஜெஸிகா நியூறித் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை இன்னர் சிற்றி பிறெஸ் வியாழக்கிழமை பிரத்தியேகமாக அறிவித்திருந்தது.

ஊழல் எதிர்ப்பு, குடும்ப ஆட்சி எதிர்ப்பு கொள்கையுடைய நியூறித்தின் நியமனம் ராஜபக்ஷாக்களின் ஆதரவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் பிறெஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆதரவாளர்கள் இப்பொழுது இன்னர் சிற்றி பிறெஸ் அசிக்கைகளுக்கம் அப்பால் சென்று நவநீதம்பிள்ளைக்கும் நியூறித்துக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். இந்த மாதிரியான அரசியலையே ராஜபக்ஷக்கள் நடத்துகிறார்கள் என்றும் பிறெஸ் தெரிவித்தது.

மற்றுமொரு விவாதம் அவர்கள் முன்வைத்தது என்னவெனில், நிபுணர்கள் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட மர்சூகி தருஸ்மன் முன்னர் இலங்கை நியமித்த சர்வதேச குழுவில் கடமையாற்றிவிட்டு அவருக்கு சேரவேண்டிய கட்டணத்தை பெறுவதற்காக தேவையற்ற விடயங்களை முன்வைத்து இலங்கையுடன் முரண்பட்டுக் கொண்டார் என்றும் தெரிவித்தார்கள். மேலும், விசாரணைக்குழு பொறுப்பு சொல்லும் கடப்பாடு பற்றிய பிரச்சினையை எழுப்பாத பட்சத்தில் குடும்ப ஆட்சி, ஊழல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள தாம் விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

ராஜீவ் காந்தி சொன்னதைக் கேட்டிருந்தால் பிரபாகரன் மன்னனாக இருந்திருப்பார்-ப.சிதம்பரம்

ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் கூடாது. நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்ல. அவர் சென்ற பாதைதான் எதிரானது. நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன். இரவு 12 மணிக்கு எனது காரை நானே ஓட்டிச்சென்று அவர் இருந்த இடத்தில் அவருடன் பல மணி நேரம் பேசியிருக்கிறேன்.

அவர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையில் இரு மாநிலங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.ஆனால், நிலைமை வேறாகிவிட்டது. இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு. எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் தெரிவித்தார்.

பெருந்தலைவர் காமராஜரின் 108ஆவது பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் 125ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது இலங்கைப் பிரச்சினை பற்றி கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,

இன்று இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது. இலங்கை தமிழர் நலனுக்காக இந்தியா 3600 கோடி நிதி உதவி அளித்துள்ளது. அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.காங்கேசன் துறைமுகத்தையும், பலாலி விமான நிலையத்தையும் சீர்படுத்தித்தர இந்தியா முன் வந்திருக்கிறது. இன்னும் 2 வருட காலத்தில் அங்குள்ள 2 லட்சம் தமிழர்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள்லண்டன் : இந்தியா சுதந்திரமடைந்த போது, பிரிவினையை கடுமையாக எதிர்த்த காந்தி, பின் அதை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டது பற்றிய ரகசிய ஆவணங்கள் பிரிட்டனில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.பிரிட்டனிலுள்ள "தேசிய பாரம்பரிய நினைவு நிதி' (என்.எச்.எம்.எப்.,) என்ற அமைப்பு, கி.பி.19ம் நூற்றாண்டில் பிரிட்டன் தொடர்பான பல்வேறு பழமையான ஆவணங்களை பாதுகாத்து வருகிறது. மொத்தம் 4,500 பெட்டிகளில் இந்த ஆவணங்கள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அரசு சார்ந்த ஆவணங்களும், தனிநபர் கடித போக்குவரத்து தொடர் பான ஆவணங்களும் இதில் அடங்கும்.

இந்தியாவின் இறுதி வைசிராயாக இருந்த மவுன்ட்பேட்டனுக்கும், காந்திக்கும் இடையில் இந்தியா விடுதலையை நெருங்கும் நேரத்தில் கடித போக்குவரத்து இருந்தது. அந்த கடிதங்கள் இந்த ஆவணங்களில் உள்ளன. பிரிவினை குறித்து இறுதி கட்டத்தில் காந்தி ஏன் மவுனம் சாதித்தார் என்பதை, இக்கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன. என்.எச்.எம்.எப்., செதித்தொடர்பாளர் கூறுகையில், "கடித உறைகளின் பின்பக்கம், காந்தி பென்சிலால் பல குறிப்புகள் எழுதியுள்ளார். இவற்றின் மூலம் பிரிவினை யை எதிர்த்த அவர் இறுதியில் விருப்பமே இல்லாமல் ஏன் சம்மதித்தார் என்று தெரிய வருகிறது' என்று கூறுகிறார்.

காந்தி தொடர்பான இக்குறிப்புகளை மட்டும், சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் விலைக்கு வாங்க போகிறது. இதற்காக, அது நிதி திரட்டி வருகிறது. அதன் இலக்கான 20 கோடி ரூபாயில், தற்சமயம் என்.எச்.எம்.எப்., மானியத்துடன் 14 கோடி ரூபாயை திரட்டி விட்டது.பல்கலைக்கழகத்தின் சிறப்பு ஆவணத்துறை பேராசிரியர் ச்ரிஸ் வூல்கர் கூறுகையில், "காந்தியின் இந்த ஆவணங் களை வாங்குவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த ஆவணங்கள் இல்லாமல் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளின் விடுதலைக் கான அடிப்படை வரலாற்றை நாம் எழுத முடியாது' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நாடெங்கும் டெங்கு மீண்டும் தீவிரம்; தடுப்பு நடவடிக்கைகளில் அரசு துரிதம் ஆபஐ பக்றீரியா அடுத்த வாரம் சந்தையில் 149 பலி 21,000 பாதிப்பு

டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பக்ஹரியா இம்மாத இறுதியில் சந்தைக்கு விடப்படும் என்று கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம். முபாரக் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த பக்ஹரியாவை எவரும் கொள்வனவு செய்து நுளம்புகள் பெருகும் இடங்களென சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் விசிறுவதற்கு ஏற்றவகையில் இவை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பி.ரி.ஐ. பக்ஹரியாவைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு கடந்த வாரம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்த அடிப்படையில் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கென சுகாதார அமைச்சு கியூபாவிலிருந்து தருவிக்கும் பத்தாயிரம் லீட்டர் பி.ரி.ஐ. பக்ஹரியா கிடைக்கப்பெற்ற தும் அதனைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

இந்த பக்ஹரியா வந்து சேர்ந்ததும் ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி கண்டி நகர், அக்குறணை, கம்பளை ஆகிய மூன்று பிரதேசங்களிலும் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்தப்படும் எனவும் அவ்வதிகாரி கூறினார்.

இதேவேளை இவ் வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடந்த 14 ஆம் திகதி வரையும் டெங்கு நோய் காரணமாக 149 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காலப் பகுதியில் 20 ஆயிரத்து 647 பேர் இந்நோய்க்கு உள்ளாகினர் என்று அமைச்சின் நோய் பரவுதல் தடுப்புப் பிரிவு அதிகாரியொருவர் கூறினார்.

இந்நோய் கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தீவிரமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டெங்கு நோய்க்கு இவ்வருடத்தை விடவும் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால் இந்நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கை குறைவு எனவும் அவ்வதிகாரி கூறினார்.

இதேநேரம் டெங்கு நுளம்பு பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக் கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் வாரத்திற்கு ஒரு நாள் என நான்கு தினங்களை தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாகப் பிரகடனப் படுத்துவதற்கு டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் டெங்கு நோய் அச்சுறுத்தல் அதிகமுள்ள மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் 61 இருப்பதாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கடந்த வாரம் முதல் தெஹிவளை மருத்துவ அதிகாரி பிரிவும் டெங்கு அச்சுறுத்தல் மிக்க மருத்துவ அதிகாரி பிரிவுக்குள் சேர்க்கப் பட்டுள்ளது.

கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் மேலும் கூறுகையில், உள்நாட்டில் பி.ரி.ஐ. பக்ஹரி யாவை கலாநிதி ராதிகா சமரசேகர தலை மையிலான குழுவினரே தயாரித் திருக்கின்றனர்.

இது தனியார் நிறுவன மொன்றின் ஊடாக இம்மாதத்தின் இறுதியில் சந்தைக்கு விடப்படும். இந்த பக்ஹரியா கிருமிநாசினிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருமி நாசினிகள் பதிவாளர் இதனைச் சந்தைப்படுத்துவதற்கு தற்காலிக பதிவையும் வழங்கியுள்ளார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

காரைதீவில் இன்று செம்மொழி விழா; கல்முனை பிரதேசம் விழாக்கோலம் மாகாணப் பணிப்பாளர் நிசாம் தலைமை: தமிழக, சிங்கப்பூர் அறிஞர்களும் பங்கேற்புகிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்தும் தமிழ்ச் செம்மொழி விழா இன்று காலை 9.30 மணிக்கு காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. ஏ. நிசாம் தலைமையில் நடைபெறவுள்ளது. இதனையிட்டு கல்முனைப் பிரதேசம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவாக நடைபெறும் தமிழ்ச் செம்மொழி விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கெளரவ அதிதியாகவும் கலந்துகொள்வர்.

தமிழ்நாடு புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ. அறிவுநம்பி, சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் இ. வெங்கடேசன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் முனைவர் கே. பிரேம்குமார், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் முனைவர் எஸ். எம். இஸ்மாயில் ஆகியோர் விசேட விருந்தினர்களாகவும்,

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வ. பொ. பாலசிங்கம், கிழக்கு மாகாண கல்விச் செயலர் எச். கே. யூ. கே. வீரவர்த்தன, கிழக்கு மாகாண பிரதி கல்விச் செயலாளர் எஸ். தண்டாயுதபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வர்.

இந்நிகழ்வில் கெளரவத்திற்குரிய முதன்மை பேராளர்களாக பேராசிரியர் எஸ். தில்லைநாதன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் சி. மெளனகுரு, பேராசிரியர் சி. சிவலிங்கராசா, பேராசிரியர் சித்திரலேகா மெளனகுரு, பேராசிரியர் க. அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்வர்.

இன்றைய நிகழ்வில், பெரிய நீலா வணையில் இருந்து காரைதீவு வரையுமான சிறப்பு ஊர்தியுடனான ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் இலக்கியவாதிகள், கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வர். இன்று காலை 8.30 அளவில் ஊர்வலம் ஆரம்பமாகும்.

காரைதீவு சுவாமி விபுலானந்தர் மணிமண்டபம் புதுப் பொலிவு பெற்றுள்ளது. பணி மன்றத்தினரின் ஏற்பாட்டில் காரைதீவின் சகல பொது நல அமைப்புகளும் விழா ஏற்பாடுகளில் பங்கேற்றுள்ளன. பிரதான விழா விபுலானந்த மத்திய கல்லூரியில் 12.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

காலை 9.30 மணிக்கு காரைதீவு வட எல்லையில் மாளிகைக்காட்டுச் சந்தியிலிருந்து பேரூர்வலம் ஆரம்பமாகும். தமிழ் பாரம்பரிய கலை வடிவங்கள், தமிழின்னிய அணிகள், பாண்ட் வாத்திய அணிகள், காவடி, கரகாட்டம், கோலாட்டம் சகிதம் கண்ணகை அம்மனாலயத்தை அடைந்து அங்கிருந்து விழா அதிதிகள், பேராளர்கள் சகிதம் ஊருக்குள் ஊர்வலம் நகர்ந்து விழா நடைபெறும் விபுலானந்தா மத்திய கல்லூரியைச் சென்றடையும்.

விழாவில் கிழக்கிலங்கையின் தமிழ்ப் படைப்பாளிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன. சுவாமி விபுலானந்தரின் மருமகள் திருமதி கோமேதகவல்லி செல்லத்துரை (இ. அதிபர்) கெளரவ பேராளராக அழைக்கப்படுகிறார்.

மாகாண கல்வித் திணைக்களம் கல்முனைக்கு வருகை தந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

கனடாவில் இடம்பெற்ற வீரமக்கள் தினம்;!

கனடா ரொறன்ரோவில் 21வது வீரமக்கள் நேற்றையதினம் சனிக்கிழமை(17.07.2010) மாலை நினைவு கூரப்பட்டது. செங்கிளேயர் வீதியில் அமைந்துள்ள சென்ற் கொலம்பியா மண்டபத்தில் இடம்பெற்ற வீரமக்கள் தின கூட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலை அமைப்புகள், அரசியல் கட்சிகளின் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டும், மரணித்த போராளிகளின் படங்களை திரையிலேயே காண்பித்தவண்ணம் மலரஞ்சலியுடன் வீரமக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பமாகியது. புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர் மைய+ரனின் வரவேற்புரையுடன் அவரது தலைமையில் வீரமக்கள் தின கூட்டம் ஆரம்பமாகியது.
இங்கு உரையாற்றிய மைய+ரன் அவர்கள், கடந்த கால கசப்பான அனுபங்களில் பாடங்களை கற்றுக்கொண்டு இனியாவது அனைத்து அமைப்புகளும் ஒன்றுபட்டு ஒருமித்த கருத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், அமிர்தலிங்கம் அவர்கள் மற்றும் உமாமகேஸ்வரன் அவர்களின் ஆழுமையான அரசியல் தீர்க்கதரிசனங்களை முன்னெடுக்க கூடிய தலைவர்கள் இன்று எம்மத்தியில் இல்லை என்றும் குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து உரையாற்றிய ஸ்காபுரோ றோச்றிவர் தொகுதியின் கவுண்சிலர் வேட்பாளர் நமு பொன்னம்பலம் அவர்கள் உரையாற்றுகையில், நமக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும், தாயகத்தில் உள்ள ஒற்றுமையை அங்குள் கட்சிகள் பார்த்து கொள்ளட்டும், முதலில் இங்கே கனேடிய மண்ணில் நாம் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்று உரையாற்றினார்.
பின்னர் உரையாற்றிய தோழர் மணியம், போராட்ட வரலாற்றையும், தமிழ் தலைவர்கள் அழிகப்பட்டதையும், போராட்டம் சிதைவடைக்கப்பட்டதையும், சுட்டிக்காட்டி போராட்டம் தோல்வியை தழுவியமைக்கான காரணிகளையும் சுட்டிக்காட்டி பேசியதுடன், அவரும் ஒற்றுமையின் அவசியத்தை சுட்டிக்காண்பித்து உரையாற்றினார்.
இங்கு உரையாற்றிய ஊடகவியலாளர் மனோ ரஞ்சன், ஊடகத்துறையை பற்றியும் ஊடகங்கள் தவறுகளை விட்டுள்ளன, சம்பவத்தை ஒருபக்க சார்பாக கூறும் ஊடகங்களாகவே செயற்பட்டு வருகின்றன. தமக்கு உயிர் அச்சுறுத்தல் என்று கூறி ஊடக தர்மத்தை அவர்கள் கைவிட்டு பிழைப்புக்காக ஊடகம் நடாத்தும் நிலைக்கு மாறிவிட்டன. இவைகள் மக்களிற்கு செய்தி கூறும் ஊடகங்களாகவும் மக்களை நல்வழி படுத்தும் சக்தியாகவும் இருப்பதை விடுத்து மக்களை தூண்டி வன்முறைக்குள் தள்ளும் ஊடகங்களாகவே இன்று பல ஊடகங்கள் மாறியுள்ளதுடன். தனி நபர்களை விமர்சிப்பதும் அவர்களைப்பற்றி மிகவும் கேவலமான முறையில் எழுதுவதுமாகவே ஊடகங்கள் செயற்படுகின்றன என்பதையும், தனக்கு புளொட் அமைப்பு மீது உள்ள பரிவையும், பாசத்தையும் சுட்டிகாட்டியதுடன், புளொட் அமைப்பு குறித்த விமர்சனங்களும் ஒருபுறம் உள்ளதாகவும் தெரிவித்தார். அவ்வாறான விமர்சனங்களில் ஒன்றாக வவுனியாவில் நிலைகொண்டிருந்தமாணிக்கதாசனின் பெயரை கேட்டால் கருவில் உள்ள சிசுவும் கலங்கும்என்ற தலையங்கத்தில் அமுது சஞ்சிகையில் விமர்சித்து இருந்ததையும், பின்னரும் கூட புளொட் அமைப்புடனான உறவு நீடித்து அவர்களது செவ்விகள், பேட்டிகள் கண்டதையும் குறிப்பிட்டதுடன், தலைவர் சித்தார்த்தனுடன் இன்றுவரை தனது உறவு தொடர்வதாகவும் தெரிவித்தார். பல ஊடகவியலாளர்களை புளொட் அமைப்பு உருவாக்கியது என்றும் அவர்களின் தராக்கி என்ற பெயரில் ஆங்கிலத்தில் யுத்த ஆய்வுகளை எழுதிவந்த சிவராம் என்பவர் கூட புளொட் அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒர் ஊடகவியலாளர் என்பதையும் சுட்டிக்காட்டியதுடன். இவர் போன்ற பல ஊடகவியலாளர்களை புளொட் அமைப்பு உருவாக்கியுள்ளது என்றும் சுட்டிக்காட்டி ஊடக துறையின் தர்மம் காக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசியிருந்தார்.
வி.பி.பொன்னம்பலம் அவர்களின் புதல்வரும் புளொட் அமைப்பின் முன்னைநாள் உறுப்பினருமான மகாவலி ராஜன் அவர்கள் மிகவும் சுவார்ஸயமான விடயங்களை சுட்டிக்காண்பித்து ஒற்றுமைபாட்டின் அவசியத்தை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். இங்கே நினைகூரப்படும் போராளிகள், பொதுமக்கள், தலைவர்களுகான அஞ்சலியை தெரிவித்து கொண்டு உரையாற்றிய மகாவலிராஜன் இங்கே தலைவர்கள் அனைவரையும் வைத்துள்ளார்கள் தன்னை புளொட் அமைப்பிற்குள் உள்வாங்கிய சந்ததியாரை மறந்துவிட்டார்கள் என்பதுதான் வேதனையாக உள்ளது அதனையும் ஏற்பாட்டாளர்கள் எதிர்காலத்தில் செய்வார்கள் என்று கருதுகின்றேன். அமிர்தலிங்கம், பத்மநாதா,ஸ்ரீசபாரத்தினம் என்று அனைரையும் வைத்து ஒர் நினைவுதினம் இங்கே நினைவுகூரப்படுவது வரவேற்கதக்கது. கடந்த காலங்களில் இங்கே இவ்வாறான கூட்டங்களை நடாத்தவோ, பேசவோ முடியாத நிலையில் தற்போது இவ்வாறான தலைவர்கள், போராளிகளையும் நினைவு கூரும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கனடாவில் தனிமனிதர்களாக சென்று கனேடிய அரசியல்வாதிகளை சந்திப்பதில் அர்த்தமில்லை. அரசியல்வாதிகள் தமது வாக்கு வங்கியை தான் கருத்தில் கொள்வார்கள் ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து ஓரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தனதுரையில் தெரிவித்தார்.
இவர்களின் உரையை தொடர்ந்து சிறய இடைவேளையின் பின்னர் .பி.டி.பி. அமைப்பின் உறுப்பினர் தோழர் மகேஸ்வரராஜா அவர்கள் உரையாற்றினார். இளைஞர் பருவத்தில் இருந்தே போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட தான் ஆரம்பத்தில் தமிழ் தேசியவாதியாகவே இருந்து பின்னர் சண்முகதாசனுடன் தான் இணைந்து பணியாற்றியதையும், நடைபெற்று முடிவடைந்துள்ள ஆயுத போராட்டத்திற்குள் இளைஞர்களை தள்ளியது .வி.கூ தலைமையிலான அரசியல்வாதிகளே என்றும் தனதுரையில் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக அவ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் .பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் சார்பாக ராஜா யோகராஜா அவர்கள் உரையாற்றியதுடன், அவரும் ஒற்றுமையின் தேவையையும், அவசியத்தையும் சுட்டிக்காட்டியதுடன். மகிந்த அரசின் தமிழின விரோதத்தையும், யுத்த வெற்றி விழா என்ற போர்வையில் தமிழர்களை வெற்றி கொண்டுவிட்டதாக எண்ணி வெற்றி விழா கொண்டாட்டத்தினை கொண்டாடுகின்றார் என்றும் அரசின் மீதான தவறுகளையும் சுட்டிக்காட்டி பேசினார்.
.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் சார்பாக தோழர் ஜேம்ஸ் அவர்கள் உரையாற்றுகையில், ஜனநாயகத்தையும், மனித உரிமையையும் நிலைநாட்டுவதற்காக மரணித்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் போராளிகளுக்கு எனது அஞ்சலியை தெரிவித்து கொள்வதுடன், பலஸ்தீனம் மற்றும் பிலிப்பைன்ஸில் இன்;றுவரை இடம்பெறும் போராட்டங்களையும், வெற்றிபெற்ற நிக்கரகுவா போராட்டத்தினையும் நினைவ+ட்டி எமது போராட்டம் மட்டும் தோல்வியை தழுவி கொண்டதற்கான காரணிகளையும், ஊடகவியலாளர்கள் காலத்திற்கு காலம் முகமூடிகளை மாற்றி தவறான செய்திகளையும் வெளியிட்டு மக்களை தவறான பாதைக்கு இட்டு சென்றதுமே எமது போராட்டம் தோல்வியடைய காரணமாகியது என்றும் ஜேம்ஸ் தனதுரையில் தெரிவித்தார்.
மலையக மக்கள் சார்பாக தோழர் சந்திரசேகரன் அவர்கள் உரையாற்றியிருந்தார். அவர் நினைவுகூரல் ஏற்பாட்டினை பாராட்டியதுடன். போராட்டத்தில் ஈடுபாடில்லாத தான் இந்தியாவில் இருந்த நினைவுகளையும், தான் யாழ் பரியோவன் கல்லூரியில் கல்வி பயின்றபோது யாழ் இளைஞர்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதையும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுத அமைப்புகளுடன் அகிம்சை வழியில் போராடிய அமிர்தலிங்கம் அவர்களின் புகைப்படமும் வைக்கப்பட்டு அஞ்சலி தெரிவிக்கப்படுவது மகிழ்வினை தருவதாகவும். இவ்வாறு ஸ்ரீசாபரத்தினம், பத்மநாபா போன்ற தலைவர்களின் படங்களும் வைக்கப்பட்டு அனைவருக்குமான அஞ்சலியாக இது காணப்படுகின்றது. அத்துடன் புளொட் அமைப்பு தாம் தாயகத்தில் மேற்கொள்ளும் மக்கள் பணிகள் குறித்த படங்களையும், வீடியோ காட்சியாக காண்பித்து கொண்டுள்ளனர் இவைகள் நல்லவிடயம்கள், சிறப்பாண பணிகளை அங்கே ஆற்றிகொண்டுள்ளதை மகிழ்வை தருகின்றது. அதற்கு பக்கதுணையாக வெளிநாடுகளில் இருந்து அவ் அமைப்பின் தோழர்கள் செயற்பட்டு வருவதையும்,
மக்களிடம் சேகரிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொருட்களையும் காணமுடிந்தது. இவர்கள் போன்று அனைவரும் ஒன்றுபட்டு அந்த பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவவேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் தான் தங்கியிருந்தபோது திருச்சியில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உமாமகேஸ்வரன் உரையாற்றும்போதுதான் அவரை காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டதாகும், அப்போது உமாமகேஸ்வரன் பற்றிய சிறப்பினை துக்ளக் சோ வெளியிட்டிருந்தார் என்றும், சோ விரைவில் ஒருவரை பற்றிய புகழை வெளிக்காட்ட மாட்டார் என்றும், அப்படியான துக்ளக் சோ உமாமகேஸ்வரனை பற்றி குறிப்பிட்டு அவரது அரசியல், போராட்ட வடிவங்களையும் தெளிவுபடுத்தியவர் அப்போதுதான் தனக்கு உமாமகேஸ்வரன் மீது பற்று ஏற்பட்டதாகவும் சந்திரசேகரன் குறிப்பிட்டிருந்தார்.
புளொட் அமைப்பு வன்னியில் மேற்கொண்டுவந்த புனர்வாழ்வு, புனரமைப்பு, மக்கள் பணிகள், உதவிகள் குறித்த புகைப்படங்கள் திரையில் காண்பிக்கப்பட்டதுடன், வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட உதவி பொருட்கள், மேடையில் வைக்கப்படாமல் இருந்த 100கணக்கான போராளிகளின் படங்கள் எல்லாம் நிகழ்ச்சி தொடங்கி முடியும்வரை பாரிய திரை மூலம் காண்பிக்கப்பட்டிருந்தது. வன்னியிலே புளொட் அமைப்பு அன்று தொடக்கம் இன்றுவரை ஆற்றிவரும் மக்கள் பணிகள் குறித்த படங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து கொண்டது. வன்னி இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்தவர்களிற்கு உதவியும், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு உதவுதல் என்று புளொட் அமைப்பினால் தொடரும் உதவி திட்டங்கள் குறித்த வீடியோ திரையிலே காண்பிக்கப்பட்டு கொண்டிருந்ததை பலரும் பாராட்டி சென்றதையும் காணமுடிந்தது.
இறுதியாக புளொட் அமைப்பின் சார்பாக செல்வம் அவர்கள் தமது அமைப்பின் அழைப்பையேற்று வந்திருந்த பேச்சாளர்கள், விளம்பரம் செய்து உதவிய கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுதாபனம், இணையதளங்கள், சகல விதத்திலும் உதவிய அனைவருக்கும் நண்றியை தெரிவித்து கொண்டதுடன் அஞ்சலி நிகழ்வு, நினைவுதின கூட்டமும் நிறைவுபெற்றது.மேலும் இங்கே தொடர்க...