6 மே, 2010

தலிபான் போராளிகளை இல்லாதொழிக்க பாகிஸ்தான் இலங்கை இராணுவத்தின் உதவியை கோருகிறது




பாகிஸ்தானில் நிலைகொண்டுள்ள தலிபான் போராளிகளை இல்லாதொழிக்க அந்நாட்டுப் பாதுகாப்பு தரப்பினர் இலங்கை இராணுவத்தின் உதவியைக் கோரியுள்ளனர். பாகிஸ்தான் விமானப்படையின் சிரேஸ்ட அதிகாரியான அஞ்சும் நதியும் இந்தக் கோரிக்கையை இலங்கையிடம் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் நிலைகொண்டுள்ள தீவிரவாதக் கட்டமைப்புக்களை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இலங்கை இராணுவத்தினரின் உதவி மிகவும் அவசியமென அவர் குறிப்பிட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இருபது வருடங்களின் பின்னர் யாழ் - முல்லைத்தீவு பஸ் சேவை




இருபது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவிற்குமான புதிய நேரடி பஸ் சேவை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து சபையின் வட மாகாண பிராந்திய முகாமையாளர் கணபதிப்பிள்ளை கணேச பிள்ளை வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

முல்லைத்தீவில் 1990 காலப்பகுதியில் இருந்த பஸ் டிப்போவானது யுத்த சூழ் நிலை காரணமாக சேதமாக்கப்பட்டது. எனினும் தற்போது புதிய பஸ் நிலைய தரிப்பிடம் அமைக்கப்பட்டு எதிர்வரும் திங்கட் கிழமை முதல் யாழ்ப்பாணம் - முல்லைத்தீவிற்கான நேரடி பஸ் சேவையில் ஈடுபடும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை பருத்தித்துறைக்கும் - கொழும்பிற்குமான நேரடி பஸ் சேவையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

பருத்தித்துறைக்கும் கொழும்பிற்குமான பஸ் சேவையினை அரசாங்க உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு படையினருமே அதிகளவில் பயன்படுத்துவதால் சேவை பகல் வேளையில் இடம்பெறுவதால் போக்குவரத்து செய்யும் மக்களது எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே மக்களின் வேண்டு கோளுக்கிணங்கவே சேவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக கணேச பிள்ளை மேலும் தெரிவித்தார்.

பலாலி, தெல்லிப்பளை போன்ற பிரதேசங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி பஸ் சேவையினை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கணேசபிள்ளை தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள் தொடர்பில் விரிவான விசாரணை



மட்டக்களப்பில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைகளின் பின்னரே உண்மையான அறிக்கைகளை வெளியிடுவதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் கடந்த வாரம் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்களால் மக்கள் இன்னமும் பயத்தில் இருப்பதாக தெரிவிக்கும் எமது செய்தியாளர், மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்திலும் சாதாரண தரம் கற்கும் மாணவர் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் தப்பி வந்தத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் தொடரும் கடத்தல் சம்பங்களால் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்களையும் மாணவர்கள் பயத்தினால் புறக்கணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மாந்தை மேற்குப் பிரதேச மக்களின் பிரச்சினைகள் : ஜனாதிபதிக்குக் கடிதம்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மாந்தை மேற்குப் பிரிவு கிராம, மாதர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தில்,

"மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள், கடந்த 3 தசாப்த காலமாக யுத்தப்பிடிக்குள் அகப்பட்டு பல்வேறு துன்ப துயரங்களையும் இன்னல்களையும் அனுபவித்தவர்கள். பல தடவைகள் மாறி மாறி இருப்பிடத்தை விட்டு இடம் பெயர்ந்து வறுமைக்கோட்டில் வசித்து வருபவர்கள். அண்மைய இடப்பெயர்வினால் தம்மிடமிருந்த அனைத்தையும் இழந்த நிலையில் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் பூச்சியத்தில் இருந்து வாழ்வைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மீள் குடியேற்ற வாசிகளுக்கு நிரந்தர வீடமைத்துக் கொடுக்கும் பணி ஆரம்பித்துள்ளது.

இதற்கென வழங்கப்படும் 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபா போதியதாக இல்லை. இதனை இரட்டிப்பாக அதிகரித்தால் ஒரு நிறைவான இல்லம் அமைக்கக் கூடியதாக இருக்கும்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்ட வீடமைப்புப் போன்று, இத்தொகையினை அதிகரிக்க வேண்டும் என்பதே எமது ஏகோபித்த எதிர்பார்ப்பாகும்.

சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை போன்றதே எங்களுடைய நிலைப்பாடும். எனவே எங்களுடைய மனிதாபிமானத்தின் வாழ்வியலை கருதி எமது வேண்டுகோளை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்விடயம் தொடர்பான பிரதிகள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அட்லாண்டிஸ் விண்கலம் அடுத்த வாரம் செல்கிறது: திரும்பி வந்ததும் மியூசியத்தில் வைக்கப்படும்








விண்வெளியில் மிகப்பிரமாண்டமான வீடு ஒன்றை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்பட சில நாடுகள் சேர்ந்து கட்டி வருகின்றன. அதில் விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

சர்வதேச விண்வெளி வீட்டுக்கு சென்று வர அமெரிக்கா 3 விண்வெளி ஓடங்களை வைத்துள்ளது. இதில் அட்லாண்டிஸ் என்ற விண்வெளி ஓடமும் ஒன்று. இந்த விண்வெளி ஓடம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (14-ந்தேதி) சர்வதேச விண்வெளி வீட்டுக்கு செல்ல உள்ளது.

அந்த விண்வெளி ஓடத்தில் 6 வீரர்கள் செல்ல உள்ளனர். மேலும் விண்வெளி வீடு கட்டுமான பணிகளுக்கான சில பொருட்களையும் எடுத்துச் செல்கிறார்கள். இந்த பொருட்களை ரஷியா கொடுத்துள்ளது.

அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் செல்லும் வீரர்கள் சுமார் 12 நாட்கள் விண்வெளி வீட்டில் தங்கி இருப்பார்கள். அப்போது 3 தடவை வான்வெளியில் நடந்து ஆய்வு நடத்துவார்கள்.

அதன் பிறகு அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்கு திரும்பும். அட்லாண்டிஸ் விண்கலத்துக்கு இதுதான் கடைசி பயணமாகும்.

பூமிக்கு திரும்பிய பிறகு அட்லாண்டிஸ் விண்கலத்தை மியூசியத்தில் வைக்க நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதன் பிறகு நாசா விஞ்ஞானிகள், டிஸ்கவரி, எண்டேவர் ஆகிய 2 விண்கலங்களை சர்வதேச விண்வெளி வீட்டுக்கு சென்று வர பயன்படுத்துவார்கள். வரும் செப்டம்பர் மாதம் டிஸ்கவரி ஓடமும் நவம்பர் மாதம் எண்டேவர் ஓடமும் விண்வெளி வீட்டுக்கு செல்ல உள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

செவ்வாய் கிரகத்துக்கு 39 நாளில் செல்லும் ராக்கெட்: அமெரிக்கா உருவாக்கியது





அமெரிக்கா மனிதனை நிலவுக்கு அனுப்பி ஏற்கனவே சோதனை நடத்திவிட்டது. அதற்காக செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டு உள்ளது. இதற்கான ஆய்வுகளை நடத்தி வருகிறது.

இப்போது உள்ள ராக்கெட் மூலம் மனிதனை அனுப்புவதாக இருந்தால் இந்த ராக்கெட் செவ்வாய் கிரகத்தை சென்றடைய 6-ல் இருந்து 9 மாத காலம் ஆகும். விஞ்ஞான ரீதியாக இது சாத்தியப்படாது.

எனவே இன்னும் அதிக வேகத்தில் செல்லும் ராக்கெட்டை கண்டுபிடித்தாக வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்கிய நாசா விஞ்ஞானிகள் புதிய ரக ராக்கெட் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

ஹைட்ரஜன் மற்றும் ஆர்கான் போன்ற எரிபொருளை கொண்டு இயங்கும் இந்த ராக்கெட்டுகள் 39-ல் இருந்து 45 நாளில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.

இதை சோதனை செய்து வருகின்றனர். இது வெற்றி பெற்றால் இந்த ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பி விடலாம்.

மற்றும் பல்வேறு கிரகங்கள், விண்கற்கள் போன்றவற்றை ஆராயவும் இந்த ராக்கெட்டை அனுப்பி வைக்கலாம்.
மேலும் இங்கே தொடர்க...

ரஷியாவில் நடந்த கொடூரம் : பெண்ணை கொன்று சமைத்து சாப்பிட்ட வாலிபர்கள்



ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரை சேர்ந்த வாலிபர்கள் கிளாவ்ஸ்கி, மோஸ்னோவ். இருவரும் நெருங்கிய நண்பர்கள். குடிபோதையில் இருந்த அவர்கள் 16 வயது பெண்ணை தண்ணீரில் அமுக்கி கொன்றனர். பின்னர் அவர் உடல் தசை பகுதியை தனியாக வெட்டி எடுத்து சென்றனர்.

அதை இருவரும் சமைத்து சாப்பிட்டனர். அந்த பெண்ணுடைய உடமைகளையும் திருடி சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நடந்தது கிளாவ்ஸ்சிக்கு 19 ஆண்டு ஜெயில் தண்டனையும், மோஸ்னோவ்க்கு 18 ஆண்டு தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

காணாமல் போன ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை : எ.ஊ.அமைப்பு கோரிக்கை



யுத்த காலத்தில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஊடகத்துறை அமைச்சராக நேற்றுப் பதவியேற்ற கெஹலிய ரம்புக்வெலவிடம் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வேண்டுக்கோள் விடுத்துள்ளது.

மேலும் கடந்த 100 நாட்களுக்கு மேல் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட மற்றும் கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில் காணாமல் போன ஊடகவியலாளர் ருவான் வீரக்கோன் ஆகியோர் தொடர்பிலான விராணைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இரு ஊடகவியலாளர்கள் தொடர்பான எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்பதையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இராணுவ நீதிமன்றத்திற்கு அறிவிக்காமையே பொன்சேகா சபை வரமுடியாமைக்கு காரணம்


சிறப்புரிமை பிரச்சினைக்கு சபாநாயகர் பதில்: சட்டமா அதிபருடன் பேசப்படுமெனவும் அறிவிப்பு


சரத் பொன்சேகா பாராளுமன்றத்திற்குச் செல்ல வேண்டுமென்பதை அவரது சட்டத்தரணிகள் இராணுவ நீதிமன்றத்துக்கு அறிவிக்காமையே அவர் பாராளுமன்றம் வருவதற்குத் தடையாக அமைந்து விட்டதென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனினும், இது தொடர்பில் நாம் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் சபாநாயகர் நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, ஐ. தே. க. எம்.பி. தேவரப்பெரும தாம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்திற்கு வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் நேற்று சபையில் சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ; பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்படாமை சம்பந்தமாகவும் சிறையில் என்ன நடந்தது என்பது குறித்தும் தம்மை நேரில் சந்தித்துக் காரணங்களை விளக்குமாறு தேவரப்பெரும எம்.பிக்குப் பணிப்புரை விடுத்தார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் ஜே. வி. பி. எம்.பி. அனுரகுமார திசாநாயக்க சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பி சரத் பொன்சேகா எம்.பி. பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து அவ்விடயத்தை வலியுறுத்தி எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் விமல் வீரசன்ச போன்றோரும் சபாநாயகரைக் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ; அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் சரத் பொன்சேகா எம்.பி. கலந்துகொள்ள வேண்டுமென நேற்று முன்தினம் பாராளுமன்ற செயலாளர் சிறைச்சாலை ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து அவர் அதற்கான அனுமதியை வழங்கியிருந்தார்.

அதற்கிணங்க நேற்றைய தினம் சரத் பொன்சேகா எம்.பி. பாராளுமன்ற அமர்விற்கு சமுகமளித்திருந்தார்.

எனினும், நேற்றைய தினம் சரத் பொன்சேகா எம்.பி. பாராளுமன்றத்துக்குச் செல்ல வேண்டியுள்ளமை தொடர்பாக அவரது சட்டத்தரணிகள் இராணுவ நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் பாராளுமன்றத்துக்குச் சமுகமளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்ற போது பாராளுமன்றம் செயற்பட்ட விதத்தைப் பின்பற்ற வேண்டியுள்ளது. அதற்கிணங்கவே நாம் செயற்பட்டுள்ளோம் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை முன்னேற்றுவதே எமது இலக்கு


அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற நிலையில் இருந்து அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை முன்னேற்றுவதே எமது இலக்காகும். இந்த இலக்கை அடைவதற்கு மத்திய வங்கி முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று மத்திய வங்கிக்கு விஜயம் செய்தார். மத்திய வங்கி அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது : கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரிய ஆணையை வழங்கினர். அவர்கள் வழங்கிய பெரும் பான்மை அதிகாரத்தைப் போன்றே அவர்களின் எதிர்பார்ப்பும் மிகப் பெரியதாகும். மக்களின் பாரிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நாம் கூடுதல் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்.

கடந்த 60 வருடங்களாக இலங்கை அபிவிருத்தி குன்றிய நாடாகவே கருதப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். வறுமை ஒழிப்பு, கிராமிய அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதி போன்ற பல இலக்குகளை வெற்றிகொள்வதே எமது அமைச்சுக்குள்ள முக்கிய பொறுப்புகளாகும்.

எமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மத்திய வங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சரியான வழிகாட்டல்களை மத்திய வங்கி வழங்க வேண்டுமென்றார்.

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் :

2050 டொலர்களாக உள்ள இலங்கையின் தனிநபர் வருமானத்தை 4 ஆயிரம் டொலர்களாக உயர்த்துவதே எதிர்கால இலக்காகும்.

இதனை அடைய மத்திய வங்கி தனது முழுப் பங்களிப்பையும் அளிக்கும்.

நாட்டை, அபிவிருத்தி செய்வதற்கு நீண்ட காலத் திட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நடைபாதை வியாபாரிகளுக்கு புதிய வர்த்தக தொகுதி நிர்மாணம்

இரு வாரத்தினுள் கட்டிமுடிக்க ஜனாதிபதி பணிப்பு; தற்காலிகமாக ரூ. 2 ஆயிரம் வழங்கவும் நடவடிக்கை

கொழும்பு நகரின் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போதிராஜ மாவத்தையில் புதிய வர்த்தக தொகுதியொன்றை நிர்மாணிக்குமாறும், அதனை 2 வார காலத்தில் கட்டி முடிக்குமாறும், அதுவரை அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (4) பிற்பகல் புறக்கோட்டை சுயவேலையாளர் சங்க பிரதிநிதிகளை அலரிமாளிகையில் சந்தித்து பேசினார். புறக்கோட்டையில் நடைபாதை வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டதைய டுத்து ஏற்பட்ட நிலை தொடர்பாக பேசுவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நடைபாதையில் செல்வோருக்கு அசெளகரியம் ஏற்படாத வகையிலும், நகரத்தின் அழகுக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் சிறிய வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை நடத்திச் செல்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் முறையான திட்டமொன்றை துரித கதியில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும் இங்கே தொடர்க...