பெங்களூரு : நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நித்யானந்தாவிற்கு, எந்த குறைபாடும் இல்லை என கூறி, மருத்துவமனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
கடந்த 23ம் தேதியிலிருந்து சாமியார் நித்யானந்தாவிடம், நான்கு நாள் தொடர்ச்சியாக பெங்களூரு சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், நேற்று முன்தினம் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் இரண்டு நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூரிலுள்ள சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக ஜெயதேவா அரசு இதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலையிலும் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
சிகிச்சை குறித்து மருத்துவமனை இயக்குனர் மஞ்சுநாத் கூறுகையில், ''மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் நித்யானந்தாவுக்கு நேற்று முன்தினம் இரவு சில மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின், இன்று (நேற்று) காலை மீண்டும் நித்யானந்தாவிற்கு இ.சி.ஜி., எக்கோகார்டியோகிராப் உட்பட இதய சம்பந்தமான அனைத்து சோதனைகளும் நடத்தப் பட்டன. அவரது உடல் நிலையில் எந்தவித மாறுபாடுகளும் இல்லாததால், உடனடியாக அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பிற்பகலில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்,'' என்றார்.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன நித்யானந்தா, சி.ஐ.டி., மத்திய அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். மீண்டும் அவர், தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். நாளை மாலை 5:30 மணிக்குள் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜர்படுத்தப்படவுள்ளார்.நித்யானந்தா சீடர் லெனினிடம், சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அவரிடமிருந்து பல நம்பகமான தகவல்களை சேகரித்துள்ளனர். நித்யானந்தாவின் நிதி விவகாரங்கள், இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டிலுள்ள ஆசிரமத்தின் கிளைகள், அந்த இடங்களில் நடத்திய விவகாரங்கள் ஆசிரமத்திற்கு விஜயம் செய்து வந்த நடிகைகள் தவிர, ஆசிரமத்தில் நடந்து வந்த சட்ட விரோத நடவடிக்கை குறித்த தகவல்களை லெனின், சி.ஐ.டி., போலீசாரிடம் கூறியுள்ளார்.
ரகசிய ஒப்பந்தங்களின் தஸ்தாவேஜுகளை, 'சிடி'க்களை லெனின், சி.ஐ.டி., போலீசாரிடம் அளித்துள்ளதாக தெரிகிறது.இதற்கிடையில், சாமியார் நித்யானந்தாவிடம் நடத்தப்படும் விசாரணையை கண்காணிக்கவும், அவரது நடத்தையை கண்காணிக்கவும், பெங்களூரிலுள்ள சி.ஐ.டி., அலுவலகத்தில், 'சிசிடிவி' அவசர, அவசரமாக பொருத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி நடந்த முதல் நாள் விசாரணையை அதிகாரி, திருப்பிப் போட்டு பார்க்கும் போது, வீடியோ மட்டும் தான் தெரிந்தது. சாமியாரின் குரல் எதுவும் கேட்க வில்லை. இதனால், போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அதேகேள்விகளை வைத்து, சாமியாரிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்தினர். சாமியார் புன்முறுவலுடன் தகவல் தெரிவித்தார்.முக்கியமான கேள்விகளை கேட்கும் போது, தூங்குவது போன்று கண்ணை மூடிக் கொள்கிறார் அல்லது மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்து விடுகிறார். இதனால், பெரிய சிரமம் ஏற்படுகிறது, என்று சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...