இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் பாதுகாப்பு தொடர்பிலான எதுவித உறவுகளுமில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதார நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு சபையில் அரசியல் ரீதியிலான உதவிகள் செய்தமை தொடர்பில் சீனாவின் உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மிகவும் விசேடமான இந்த உறவு மேலும் வளர்ச்சிடையக் கூடியதென அவர் கூறியுள்ளார். இலங்கையில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரும் பொருட்டு இந்தியா நிகரற்ற உதவிகளை வழங்கி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியாவின் ஓமந்தை ரயில்நிலையம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதியின் பின்னர் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இதுவரை தாண்டிக்குளம் வரையிலான ரயில் நிலையங்களுக்கு சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், ஓமந்தை ரயில் நிலையம் சர்வதேச அளவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. நாட்டில் எந்தவொரு ரயில் நிலையத்திலும் இல்லாத அங்கவீனமுற்றவர்களுக்கான விசீட் நிலையமொன்றும் அங்கு அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.