வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் விவகாரம் தேசிய எல்லைக்கு அப்பால் சர்வதேச அளவில் முதன்மைப்படுத்தப்பட்ட விவகாரமாக கவனிக்கப்பட்டு வருகிறது. ஐ.நா.சபை பிரதிநிதிகளும் அடிக்கடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வன்னி தமிழ் அகதிகளை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா. விசேட பிரதிநிதி லின் பெஸ்கோ வன்னி மக்களின் மீள்குடியேற்றம் பற்றி சர்வதேச சமூகம் கொண்டுள்ள அக்கறைபற்றி ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றப்படும் நடவடிக்கை நிறைவடைந்ததும் மீள்குடியேற்றம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். குரேசியா யுத்தத்தின் 16 வருடங்கள் நிறைவடைந்த பின்னரும் இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருவதாகவும் ஆனால் இலங்கையில் அவ்வாறு நீண்ட காலம் செல்லாது என்றும் லின் பெஸ்கோவிடம் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்த லின் பொஸ்கோ அங்குள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டதுடன் வடபகுதியில் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணிகளையும் நேரில் பார்வையிட்டுள்ளார். அவர் நாடு திரும்பும்போது ஊடகவியலாளர்களைச் சந்தித்து அகதிகள் பிரச்சினைபற்றி கருத்து தெரிவிக்கையில் கண்ணி வெடிகள்,மிதிவெடிகள் அகற்றுவதற்கு நவீன இயந்திரங்கள் பயன்படுத்த அரசு மேற்கொண்டுள்ள துரித நடவடிக்கைகளைப் பாராட்டியதுடன் இலங்கையின் தற்போதைய நிலவரம் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
கண்ணி வெடிகள், மிதிவெடிகளை துரிதமாக அகற்றுவதற்காக இலங்கை அரசு 5 நவீன இயந்திரங்களை குரேசியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இவை மணிக்கு 2700 சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணி வெடிகள், மிதிவெடிகளை அகற்றும் ஆற்றல் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அரசாங்கம் கண்ணி வெடிகளை காரணம் கூறி மீள்குடியேற்றத்தை நீண்ட நாட்களுக்கு தாமதப்படுத்தமுடியாது என எதிர்பார்க்கலாம்.
ஆனாலும் புலிச்சந்தேக நபர்களிடம்; விசாரணையூடாக பெறும் தகவல்களின் அடிப்படையில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள், கண்ணிவெடிகள், காஸ் சிலிண்டர்கள் என்பன நாளாந்தம் மீட்கப்பட்டு வருவதால் யுத்தம் நடைபெற்ற இடங்களில் இருந்து ஆயுதங்கள் முற்றாக எடுக்கப்படும்வரை அந்த இடங்களில் மீள்குடியேற்றம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆனாலும் வன்னி தவிர்ந்த வடக்கு தெற்கு பகுதிகளில் தற்காலிக வாழ்விடங்களை அமைத்துக்கொள்ள வசதிபடைத்தவர்களை முகாம்களில் இருந்து வெளியேற அரசாங்கம் அனுமதி அளித்தால் பலர் வெளியேறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் முகாம்களில் ஏற்படும் இட நெருக்கடிகளை குறைப்பதன் மூலம் அங்கு நிலவும் நடைமுறைப் பிரச்சினைகளைக் குறைக்கலாம்.
மீள் குடியேற்றம் விரைவுபடுத்தப்படாததுபற்றி ஒரு சாரார்; விமர்சனம் செய்கின்றனர். இன்னொருசாரார்; அவசர கதியில் மீள்குடியேற்றம் செய்யப்படவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்பற்றி விமர்சனம் செய்கின்றனர்.
மீள்குடியேற்றம் என்ற பெயரில் முசலி பிரதேசத்தில் முஸ்லிம் மக்களை அவசர அவசரமாக மீள்குடியேற்றினர். ஆனால் அங்கு திட்டமிடப்படாமல் அவசரகதியில் குடியேற்றியதால் அம்மக்கள் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சனைகள் குறித்து இப்போது பேசப்படுகிறது.
முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது பற்றி பேசுவோர் குடியேற்றப்படுபவர்களினது மனிதாபிமான உதவிகளில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் அந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கேற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளும் சேர்த்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளாததே முசலியில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளாகும்.
வன்னி மக்கள் அன்றும் இன்றும் அரசியல் பகடைக் காய்களாக பாவிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் முடிவுக்கு வரும் இறுதி நேரம்வரை வன்னி மக்களை புலிகள் தங்களது அரசியல் கேடயமாகவும் யுத்த கேடயமாகவும் பயன்படுத்தினர். யுத்தம் முடிந்து அம்மக்கள் வவுனியா முகாம்களில் அகதிகளாவுள்ள நிலையில் பலரும் அவர்களை தங்கள் அரசியலுக்கு மூலதனமாக்க முயல்கின்றார்கள்.
இந்த நிலை இலங்கையில் மாத்திரமல்ல தமிழ் நாட்டிலும் பலர் வன்னி மக்களை வைத்து தமது அரசியலை நடத்த மீண்டும் ஆரம்பித்துள்ளனர். வன்னி மக்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த இந்திய மத்திய அரசு இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக முதல்வரின் அனுசரணையுடன் தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் கூட்டாக பிரதமரை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது தி.மு.க. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அடங்கிய குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இலங்கைக்கு வருவது அவசியமே. அப்போதுதான் இலங்கையில் உள்ள உண்மை நிலைகளைப் புரிந்து கொண்டு இனப்பிரச்சினை தீர்வுக்கு யதார்த்தமான முடிவுகளை அவர்களால் எடுக்கமுடியும்.
தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றுள்ளது. அந்த மகாநாட்டில் ~ஈழத்; தமிழர்; வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம்” என்று ஒரு பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரகடனம் புலிகள் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் கலைஞரும் தமது பங்குக்கு அகதிகள் பிரச்சினையை கிளப்பியுள்ளார். அகதிகள் பிரச்சினையில் இலங்கை அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ தாமதமாகவேனும் அவர்களை சொந்த இடங்களில் குடியேற்றியே தீரவேண்டும். முகாம்களில் பெரும் தொகையான மக்களை வைத்து நீண்டகாலம் பராமரிக்க அரசாங்கத்தால் முடியாது. மக்களை நீண்டகாலம் முகாம்களில் வைத்து பராமரிக்க சர்வதேச நாடுகளும் தொடர்ந்து நிதியுதவி அளிக்காது
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு தார்மீக பொறுப்புண்டு. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு குறிப்பாக தி.மு..க.வுக்கு மதிப்பளிக்கவேண்டிய தேவையும் மத்திய அரசுக்கு உண்டு. எனவே அகதிகள் பிரச்சினையில் தமிழக அரசு மத்திய அரசுடன் முட்டி மோதி நேரத்தை வீணாக்காமல் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன் வைக்கும்படி இந்திய அரசின்மூலம் இலங்கை அரக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தினால் அது தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வாக அமையலாம். இந்தியப் பிரதமர் வாக்களித்தபடி இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் மாநில எம்.பி.க்கள் குழுவும் இனப்பிரச்சினை தொடர்பாக கூடிய கவனம் செலுத்துவர் என எதிர்பார்ப்போம்.
வடபகுதியில் இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை இவர் பார்வையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அரச தரப்புப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வோல்டர் கெலின் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த இரண்டாவது ஐக்கிய நாடுகள் பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது
புலிகள் அமைப்பில் 4 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாக 2008 செப்டெம்பர் மாதம் முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்திருந்த நிலையில், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் புலிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தையும் தாண்டி ஊதிப் பெருத்தது எவ்வாறு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மீள்குடியமர்வு அமைச்சுக்கான 35 கோடி ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தை எதிர்க்கட்சி தரப்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:
"சர்வாதிகாரத்தின் மூலம் எங்கும் வெற்றியீட்ட முடியாது. இலங்கை என்றசொர்க்க பூமியில் சர்வாதிகார பெரியண்ணனின் படம் எல்லா இடங்களிலும் காட்சியளிக்கின்றது. கொழும்பு வீதிகள் மஹிந்த ராஜபக்ஷவின் படங்களின் குப்பைகளினால் நிரம்பி வழிந்து கிடக்கின்றன என்று லண்டனிலிருந்து வெளியாகும் சஞ்சிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோரின் நவீன யுகமாகவே இது இருக்கின்றது. இலங்கையின் சமாதான செயலகம், இலங்கையின் யுத்த செயலகமாகவே மாறியது. அந்த செயலகம் கொடூரங்களுக்கும் பயங்கரவாதம் என்று காரணம் கற்பித்து மன்னிப்பு கோரியது.
நலன்புரி முகாம்களில் ஒட்டுமொத்தமாக 300 ஆயிரம் பேர் சிறைக் கைதிகளாகவே இருக்கின்றனர். அகதிகளை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்து கொண்டு சர்வதேசத்தைத் திருப்திப்படுத்துவதற்கு அரசாங்கத்தினர் முயற்சிக்கின்றனர். இவர்கள் அகதிகள் அல்லர். கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களே ஆவர்.
வன்னியில் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் என்னதான் குற்றம் செய்தனர்? விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் பிறந்து இரண்டு தசாப்த காலங்களாக அங்கு வாழ்ந்தமையே அவர்கள் செய்த குற்றமாகும்.
புலிகளின் சர்வாதிகார ஆட்சியில் வாழ்ந்தனர். புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தாச்சியிலிருந்து அடுப்புக்குள் விழுந்து விட்டனர். புலிகள் தோற்கடிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. எனினும், மக்களின் சுதந்திரமான நடமாட்டம் மறுக்கப்பட்டு விட்டது.
மக்களின் சுதந்திரமான நடமாட்டமும் வாழ்கின்ற உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. வன்னி முகாம்களில் தினமும் 30, 40 பேர் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு காணாமல் போகின்றனர்.
முகாம்களுக்கு உள்ளூர், வெளியூர் ஊடகங்களோ, சர்வதேச, உள்ளூர் தொண்டு நிறுவனங்களோ அனுமதிக்கப்படுவதில்லை. முகாமில் மூடிமறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால் முகாமை உலகத்திற்கு திறந்து விடுங்கள்.
அரசாங்கம் பல்வேறு சாக்குபோக்குகளை கூறிக்கொண்டு மாதங்களைக் கடத்தி வருகின்றது என்பதனால் நாடாளுமன்ற தெரிவுக்குழு முகாம்களுக்கு சென்று ஏன் பார்வையிட முடியாது?
அகதிகளுக்குப் பொருளாதார பிரச்சினை இல்லை. நாட்டின் பல பாகங்களிலும் அவர்களுக்கு உறவினர்கள் இருக்கின்றனர். அரசாங்கத்தின் நன்மையோ, பணமோ தடுப்பு முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையில்லை. அவர்களுக்கென வங்கியில் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.
அவர்கள் பிச்சைக்காரர்கள் அல்லர். சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களும் அல்லர். யுத்தம் நிறைவடைந்து விட்டமையினால் அவர்களை சுதந்திரமாக நடமாடுவதற்கும் உறவினர்களுடன் இணைந்து வாழ்வதற்கும் இடமளிக்க வேண்டும்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களுக்குப் போக முடியாவிடின் அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்காவது செல்வதற்கு அனுமதியளிக்கலாம். அதற்காக அவர்கள் அமைச்சர்களிடம் பணம் கோரவில்லை.
அகதிகள் தொடர்பிலான நடவடிக்கைகள் மூன்று மாதங்களுக்குள் நிறைவடைந்து விடும் என்று இந்திய வெளிவிவகார செயலாளர்களுக்கும் பாதுகாப்பு செயலாளர்களுக்கும் அரசினர் உறுதியளித்தனர்.
எனினும், அந்த நடவடிக்கைக்கு 2010 ஜனவரி 31ஆம் திகதி வரையிலும் கால அவகாசம் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு விருப்பம் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விருப்பமில்லையே.
மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு தரப்பினரின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படல் வேண்டும். ஏனென்றால் மக்கள் தற்போதுள்ள முகாம்களிலிருந்து கைது செய்யப்பட்டு, இது போன்ற மற்றுமொரு முகாமில் மீண்டும் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நான் சென்றதில்லை. எனினும், அந்த மக்கள் புலி அட்டூழியங்களுடன் வருடக் கணக்கில் கண்ணி வெடிகளுடனேயே வாழ்ந்து வந்தவர்கள்.
மக்களை மீளக்குடியேற்றுவதற்கு கண்ணிவெடிகள் தான் தடையென்றால் அவர்களை உறவினர்களுடன் வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும். அவர்களின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும்.
முகாம்களில் 20 ஆயிரம் புலிகளின் சந்தேகநபர்கள் இருப்பதாக அரசாங்கத்தினால் வெளியாகியுள்ள புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், முன்னாள் இராணுவத் தளபதி 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5000 புலிகள் மட்டுமே இருப்பதாக கூறினார்.
பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தற்போது 4 ஆயிரம் புலிகள் மட்டுமே இருப்பதாகவும் கூறினார். அழித்தொழிக்கப்பட்டதன் பின்னர் புலிகள் ஊதிப் பெருத்து விட்டனரா?". இவ்வாறு மங்கள சமரவீர கேள்வி எழுப்பினார்.
மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயம் இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும்-
அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாமிலுள்ள 42 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர். இவர்களைப் பிரதேச செயலக அதிகாரிகள் பொறுப்பேற்று அவரவர் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைத்தார்.
அதிகாரிகளின் தகவல்களின்படி கட்டம் கட்டமாக இக்குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் சர்வதேசத்தினால் கோரப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைகளை பெறுவதற்காக சர்வதேசத்தினால் கோரப்படும் மனித உரிமைமீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இடமளிக்கப்போவதில்லை என ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பீரிஸ் மேலும் கூறுகையில்,
"பிரசல்ஸில் உள்ள தூதுவர் மூலமாக தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, எமது நாட்டு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்படுகிறது.
எனினும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளைப் பெறுவதற்காக இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு சர்வதேச நாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.
எமது நாடு கௌரவமான ஒரு நாடு. ராஜதந்திர ரீதியில் நாம் நமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியே ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளவுள்ளோம்" என்றார்.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ள நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவின் இணைத் தலைவர்களில் அமைச்சர் ஜி.எல் பீரிஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.