29 செப்டம்பர், 2010

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் சாத்தியம்

அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது. அதற்கிடையில் உள்ளூராட்சிமன்ற திருத்தச் சட்டமூலத்துக்கு மாகாண சபைகளின் அனுமதியை பெறுவதும் மற்றும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறும் நடவடிக்கையும் ஒக்டோபர் மாதத்துக்குள் முடிவடைந்துவிடும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்

உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெரும்பாலும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறுவது உறுதியாகும். அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. அதாவது உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய தேர்தல் முறைமைக்கு அமையவே உள்ளூராட்சிசபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக திருத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அடுத்ததாக மாகாண சபைகளின் அங்கீகாரத்தை பெறும் நோக்கில் செயற்பாடுகள் இடம்பெறும். அதனையடுத்து திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார்.

இதேவேளை உள்ளூராட்சிசபை தேர்தலில் ஒரு கோடியே 43 இலட்சத்து 15 ஆயிரத்து 417 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக தேர்தல் திணைக்கள தகவல்ககள் தெரிவித்துள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் இரண்டு இலட்சத்து 26 ஆயிரத்து 917 பேர் அதிகமாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதேவ÷ளை உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களின் பிரகாரம் மாநகரசபை நகரசபை அல்லது பிரதேச சபை ஒன்றின் வரவு செலவுத்திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் குறித்த சபையின் தலைவர் அல்லது மேயர் பதவி விலகவேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் புதிய திருத்தங்களின் பிரகாரம் உள்ளூராட்சிசபை ஒன்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 வீதத்தை ஒரு கட்சி பெறுமாயின் உள்ளூராட்சிமன்றத்துக்குரிய தலைவர் அல்லது மேயரை தெரிவு செய்யும் உரிமை அந்தக் கட்சிக்கு கிடைக்கும். ஆனால் உள்ளூராட்சிசபை ஒன்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 வீதத்தை எந்தக் கட்சியும் பெறாவிடின் சபைக்கான தலைவர் அல்லது மேயரை நியமிக்கும் பொறுப்பு குறித்த சபைக்கே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக