ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ நாளை லண்டனுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்க இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று விஜயம் செய்யும் ஜனாதிபதி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அமர்வொன்றில் விஷேட உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குவைத் நாட்டில் நிர்க்கதி நிலைக்குள்ளான 85 பேர் இன்று இலங்கை வரவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
அந்நாட்டில் நிர்க்கதி நிலைக்குள்ளானவர்களில் மேலும் 360 பேரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவர்கள் கொழும்பு, கண்டி மற்றும் கிழக்கு மாகாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இலங்கையைச் சேர்ந்த 2ஆயிரம் பேர் இவ்வாறு வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளும் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாடுகளுக்கிடையே பண்டமாற்று முறைமையை ஏற்படுத்தி அபிவிருத்தி காண வேண்டும் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸீப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸீப் அலி சர்தாரியை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹில்டன் ஹோட்டலில் பிரதமர் டி.எம். ஜயரத்ன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே பாகிஸ்தான் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது மேலும் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி,
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நீண்ட காலமாக ராஜதந்திர உறவுகள் இருந்து வருகிறது. அதனை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். இங்கு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கினோம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அமெரிக்க டொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொண்ட யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
அதற்கு பதிலாக எம்மைப் போன்ற நாடுகள் பண்டமாற்று முறைமை ஊடாக அபிவிருத்தியின் இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும். இலங்கையின் நிர்மாணப் பணிகளுக்கு தேவையான இரும்பு மற்றும் சீமெந்து உட்பட தேவையான பொருட்களை பாகிஸ்தானால் வழங்க முடியும். மேலும் இலங்கையில் சீனி உற்பத்தியை மேம்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் நாம் தயாராக உள்ளோம்.
இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உடன்படிக்கையினை பலப்படுத்தி வர்த்தக அடித்தளமொன்றை ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது" என்று கூறினார்.
வாழச்சேனை நாசிவன் தீவு பகுதியில் எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயதுடைய நபரொருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக வாழச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரி எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
குறித்த சிறுமி வாழச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளனர்.
இலங்கை ஆழ்கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சவூதி அரேபிய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
''இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் 400 சவூதி அரேபிய மீனவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பிடிக்கும் மீன் வகைகளில் 20 சதவீதத்தை இலங்கைக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பான ஒப்பந்தம் டிசம்பர் முதல் வாரமளவில் கைச்சாத்திடப்படவுள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
உலகின் விமர்சனத்திற்குள்ளான புதிய லிபரல்வாத, காலனித்துவ நாடாக இலங்கையை வெளிநாட்டவர்களுக்கு "தாரைவார்க்கும்' வரவு செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைத்துள்ளது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார்.
பௌத்த குருமார்கள் முன்னிலையில் உறுதியளித்த சம்பள உயர்வை வழங்காத ஜனாதிபதி ஒரு "பொய்காரர்' என்றும் அவர் தெரிவித்தார். பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மக்களுக்கு சலுகைகளை வழங்காத அரச ஊழியர்களுக்கு உறுதியளித்த ரூபா 2500 சம்பள உயர்வை வழங்காத வரவு செலவு திட்டம் என்பதே எமக்கு மேலோட்டமாகத் தெரியும் விடயமாகும். ஆனால் இதனை ஆழமாக ஆராய்ந்தபோது நாட்டின் பொருளாதாரத்தை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயல்படுத்தும் வரவு செலவுத் திட்டம் என்பதே உண்மையாகும்.
முதலீட்டு நிதியை வெளிநாட்டவர்களுக்கு ஏற்ற விதத்தில் இலகுவாக்கி நிதிச் சட்டங்களையும் அவர்களுக்கு சார்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எனவே உலக நாடுகளிலிருந்து எந்தத் "திருடர்களும்' இங்கு வந்து முதலீடு செய்யும் ஆபத்தான நிலை தோன்றியுள்ளது. அமைச்சுப் பதவிகளுக்காக சிறப்புரிமைகளுக்காகவும் தேசப் பற்றுள்ள தேசிய பொருளாதாரத்தை கட்டிக் காக்கும் அரசாங்கம் என புகழ் பாடிக் கொண்டிருப்போர் ரணில் விக்கிரமசிங்கவை விட புதிய லிபரல்வாதக் கொள்கையை முன்னெடுக்கும் ஜனாதிபதி தொடர்பில் மௌனம் சாதிக்கின்றனர்.
நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவே உலகின் சிறந்த லிபரல்வாதி ஜனாதிபதி என புகழ் பாடியுள்ளார். இன்று விவசாயம் புறம்தள்ளப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சூதாட்டம் சட்டமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஹிக்கடுவை கண்காட்சி, ஐபா என பல்வேறு கலாசார சீரழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. "மதுவுக்கு முற்றுப்புள்ளி' எனக் கூறும் அரசாங்கம் நாடு முழுவதும் மதுபானச் சாலைகளை ஆரம்பிக்கின்றது.சூதாட்ட வலயங்கள் அமைக்கப்படுகின்றன. சுற்றுலாத்துறைக்கான பொருளாதார அபிவிருத்தி என்பது எமது நாட்டுக்கு பொருந்தாத விடயமாகும். இது நாட்டில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும்.
வெளிநாட்டவர்களை சந்தோஷப்படுத்தி உறவினர்களுக்கு உழைப்பதற்கு வழிவகுக்கும் அனைத்து திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சந்தித்து பேச இருந்த போதிலும் இந்தச் சந்திப்புக்கள் இறுதி நேரத்தில் ரத்துச்செய்யப்பட்டுள் ளன. நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமையினாலேயே இந்தச் சந்திப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டதாக குறித்த கட்சிகளுக்கு இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கை வந்திருந்த கிருஷ்ணா, யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மற்றும் அங்கு ஏற்பாடாகியிருந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், அதனைத் தொடர்ந்து தமிழ்க்கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலநிலை மாற்றம் காரணமாக அன்று மாலை நடைபெறவிருந்த நிகழ்வுகள், நேற்று ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டன. இதன் பிரகாரம் அம்பாந்தோட்டையில் புதிதாக இந்திய கிளை தூதுவர் ஆலயம் திறந்து வைப்பதற்கென அமைச்சர் கிருஷ்ணா நேற்று அங்கு சென்றிருந்தார். இதுவே சந்திப்பு இடம் பெறாமைக்கான காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று காலை அம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்த எஸ்.எம். கிருஷ்ணா அங்கிருந்து நேரடியாக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று நாடு திரும்பியுள்ளார்.
இதேவேளை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் நேற்று கொழும்பில் கூடி கிருஷ்ணாவைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இறுதி நேரத்தில் இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து மகஜரை கையளிக்க முடியாத நிலை அரங்கத்தினருக்கு ஏற்பட்டது
பாதுகாப்பை வலுப்படுத்தவும் பொருளாதார அபிவிருத்தியை மேலும் விருத்தி செய்யவும் அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கும் இலங்கை அரசாங்கத்துக்கு உதவ அமெரிக்கா தயாராகவுள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஷியா ஏ. பியூடெனிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் பூராக ஐக்கிய அமெரிக்காவின் உறவுகளுக்கு ஜீவனூட்ட ஜனாதிபதி ஒபாமாவும் இராஜாங்க செயலாளர் ஹிலரி ரொட்ஹம் கிளின்டனும் முன்னுரிமை கொடுத்துள்ளனர்.
அவர்கள் தற்போதைய அமெரிக்க உறவுகளுக்கு வலுவூட்டவும் அன்றாட சவால்களை முறியடிக்கக் கட்டியெழுப்பப்படும் உறவுகளுக்கு அதாவது காலநிலை மாற்றங்கள், அணு ஆயுத அச்சுறுத்தல்கள், நோய் மற்றும் வறுமை ஒழித்தல் போன்ற சவால்களை புதிய உறவுகளுக்கு வலுவூட்டவும் பாடுபடுகின்றனர். இந்த முயற்சிகளில் நாமும் ஒரு பங்காளி என்பதையிட்டு இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன்.
பாதுகாப்பை வலுவூட்டவும் பொருளாதார அபிவிருத்தியை மேலும் விருத்தி செய்யவும் அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கை வாசிகளுக்கும் உதவ ஐக்கிய அமெரிக்கா மிகவும் பாடுபட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விருத்தி செய்ய அமெரிக்க வர்த்தகக் குழுவை வரவழைத்தோம். தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முகமாக மோதல் பிரதேச மக்களுக்கு புதுச் செயல்திறன்களை பயிற்றுவிப்பதற்காக எமது அபிவிருத்தி முகவரான யுஎஸ்எயிட் பல உள்ளூர் நிறுவனங்களுடன் தோழமை பூண்டுள்ளது.
இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவிற்கு நாம் வழங்கும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியின் முதல்கட்ட உதவி கடந்த வாரம் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அமெரிக்க 180 மில்லியன் அமெரிக்க டொலரிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஊடகத் துறையில் மிகவும் அதிகமாகப் பேசப்படும் விடயமாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் கணினியிலிருந்து களவாடப்பட்ட ஆவணங்கள் அமைந்துள்ளது. இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை என்னால் உறுதி செய்ய முடியாது. ஆயினும் இரகசியமாக வைத்திருக்க வேண்டிய தகவல்கள் வெளியாகியமை சம்பந்தமாக ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்ந்த அனுதாபத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தச் செயலை நாம் கண்டிக்கின்றோம்.
தூதுவர்கள் தம்மைச் சந்திப்பவர்களிடம் நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. ஆகையால் பேச்சுவார்த்தையில் அடங்கியவை இரகசியமாக அமைய வேண்டும். ஏனைய அரசாங்கங்களுடன் சர்வதேச உறவுகள் பற்றி கலந்துரையாடும் போது அது நேர்மையானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சமாதானம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறுதித் தன்மையைப் பேண முடியாது.
இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை புது வீதியில் இந்திய துணைத் தூதரக அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது, இலங்கை, இந்தியாவின் தெற்காசிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும். 2000 ஆம் ஆண்டில் அமுலுக்கு வந்த இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் எட்டு ஆண்டுகளில் மொத்த வர்த்தகப் புரள்வு ஐந்து மடங்காக அதிகரித்தது.
இந்தியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி சென்ற வருடத்திலிருந்து 50 சதவீதத்திற்கு கூடுதலாக அதிகரித்தது. இலங்கையின் நான்கு பாரிய முதலீட்டாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் இலங்கையின் முதலீடுகளும் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியை அடைந்துள்ளன. எங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வடக்கு, தெற்கு உட்பட நாடுபூராவும் வளர்ச்சியடைந்துள்ளது.
என்னுடைய நாட்டுடன் நீண்ட வரலாற்று ரீதியான பிணைப்பினைக் கொண்ட ஒரு தேசத்துடனான இணைப்பை வலுவாக்கும் அவாவின் பிரதி பலிப்பாகும். சமய, கலாசார மற்றும் மொழி சம்பந்தப்பட்ட எமது இரு நாடுகளின் பிணைப்பானது பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது.
இலங்கையும் இந்தியாவும் சமய அனுஸ்டானங்களில் ஒத்த கொள்கைகளை யும், இணைப்புக்களை உண்டாக்கியுள்ளன. பிரமாண்டமான ஆயிரம் தூண்களையுடைய விஷ்ணு கோயில் முந்திய காலத்தில் தேவேந்திர முனையில் இருந்துள்ளது. இன்னுமொன்றையும் நாங்கள் மறக்க முடியாது. அது இந்துத் தமிழர்களும், பெளத்த சிங்களவர்களும் ஒரே இடத்தில் வழிபடும் முருகக் கடவுள் அல்லது ஸ்கந்த என்றழைக்கப்படும் தெய்வம் கோயில் கொண்டுள்ள கதிர்காமமாகும்.
எமக்கிடையேயுள்ள தொடர்புகள் பலதரப்பட்டவையும் சரித்திர ரீதியானவையுமாகும். எமது நட்பினதும் ஒத்துழைப்பினதும் முழுமையான ஆற்றலின் முழுமையான பிரயோசனத்தை பெற்றுக்கொள்வதே எங்கள் முன்னுள்ள சவாலாகும். யுத்தம் முடிவடைந்ததுடன் அதற்கான நேரம் வந்துள்ளது என நான் நம்புகிறேன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இரு தரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கும் எமது இணைப்புக்களையும் பழைமை வாய்ந்த கலாசாரப் பிணைப்புக்களையும் புத்தூக்கம் பெறச் செய்யவும் பொருளாதார கடப்பாடுகளை துரிதப்படுத்தவும் எமது பிரதமரும் ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அம்பாந் தோட்டையையும் அதன் சுற்றுப்புறங்களை யும் பாரிய பிராந்திய மையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுளார். எனவே தென்பகுதியில் ஒரு துணைத் தூதரக அலுவலகத்தை திறப்பதற்கு தீர்மானித்ததுடன் அதை அம்பாந்தோட்டையில் திறப்பதானது வர்த்தகம், வணிக முதலீடுகள், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளில் இப்பிராந்தியத்துடன் இந்தியாவுக்குள்ள இறுக்கமான பிணைப்புக்களை கட்டியெழுப்புவதற்காகவே ஆகும் என தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றதுடன் இரு நாடுகளுக்குமிடை யிலான நான்கு முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.
ஒரு மணித்தியாலம் வரை நீடித்த மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து இரு நாடுகளினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது.
இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமது கவலையினைத் தெரிவிப்பதாக பாகிஸ்தானிய ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதேவேளை, இலங்கை மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துலைமையிலான அரசாங்கத்துக்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்த அவர்; பிராந்திய ரீதியில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இலங்கையின் அனுபவம் மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன் இலங்கையின் தேயிலை மற்றும் மாணிக்கக் கற்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்குள்ள வாய்ப்புகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.
இலங்கையின் மாணிக்கக் கல் தொழில் துறையில் உபயோகப்படுத்தப்படும் தொழில் நுட்ப நுணுக்கங்களை பாகிஸ்தானுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு பாகிஸ்தான் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதையடுத்து இலங்கை ஜனாதிபதி அதனைக் கவனத்திற் கொண்டார்.
இலங்கையின் மருத்துவத்துறை ஈட்டியுள்ள வளர்ச்சி தொடர்பில் பாகிஸ்தான் ஜனாதிபதி தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தாதியருக்கு பயிற்சிகளை வழங்கக் கூடிய தாதியர்களை இலங்கையிலிருந்து தமது நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அவர் இலங்கை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
அத்துடன் இலங்கையிலிருந்து ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்களின் ஒத்துழைப்பினை பாகிஸ்தானின் கல்வித் துறைக்கு பெற்றுக்கொள்வது சம்பந்தமாக பாகிஸ்தான் ஜனாதிபதி முன்வைத்த வேண்டுகோள் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது இரண்டாவது பதவி ஏற்போடு பாகிஸ்தான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதால் இரு நாடுகளுக்குமிடையி லான நல்லுறவுகள் மேலும் வலுப்பட இது சிறந்த வாய்ப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் அமைதிச் சூழல் நிறைந்த இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வ தற்காக பாகிஸ்தான் முதலீட்டாளர்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி; அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்; இலங்கையில் எதிர்கால தலைமுறையினரை போதைப் பொருளிலிருந்து பாதுகாக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு விசேட பாராட்டுக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி; பிராந்திய ரீதியில் போதை உபயோகத்தை ஒழிப்பதற்கு பிராந்திய நாடுகள் இணைந்து செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இரண்டு நாடுகளுக்குமிடையில் வங்கி நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.
இருதரப்பு பேச்சுவார்த்தைகளையடுத்து இரு நாடுகளுக்குமிடையில் நான்கு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.
இதன்படி ராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்திருப்போருக்காக விசா இன்றி இரு நாடுகளுக்குமிடையில் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள்.
இரு நாடுகளுக்குமிடையில் விவசாயம் சம்பந்தமான ஒத்துழைப்பு விடயங்களில் புரிந்துணர்வு.
சுங்க நடவடிக்கைகளில் தனித்துவமான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு.
கலை மற்றும் உருவாக்கத்திறன் தொடர்பான ஒத்துழைப்பினை மேம்படுத்தல் போன்ற நான்கு உடன்படிக்கைகளில் இரு நாட்டுத் தலைவர்களினதும் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
மேற்படி உடன்படிக்கைகளில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் விவசாய அமைச்சின் செயலாளர் கே. ஏ. கருணாதிலக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுதர்மா கருணாரத்ன, நுண்கலைப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜயசேன கோட்டகொட ஆகியோரும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மக்டூம் ஷா மஹ்மூத் குரேஷி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் லியாகி பலோச் ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.
பாகிஸ்தான் தூதுக் குழுவில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மக்டூம் ஷா மஹ்மூத் குரேஷி, பாதுகாப்பு அமைச்சர் அகமட் முக்தார், நிதியமைச்சர் சைப் முரப் அலி ஷா, உயர்ஸ்தானிகர் கூமா லியாகி பலோச், ஜனாதிபதியின் பிரதம செயலாளர் எம். சல்மான் பாரூக், மேலதிக செயலாளர் பாரூக் அமில், பாதுகாப்பு செயலாளர் சையிட் மொகமட் அட்னன் ஆகியோர் பங்கேற்றனர்.
இலங்கையின் சார்பில் அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், ஏ. எச். எம். பெளஸி, கலாநிதி சரத் அமுனுகம, பந்துல குணவர்தன, டி. பி. ஏக்கநாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பிரதம பதவிநிலை அதிகாரி காமினி செனரத் ஆகியோர் பங்கேற் றனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாக 8646 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 395 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.
மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்கள் ஊடாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப் பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
இம்மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 101 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 21 வீடுகளும் பகுதியாக சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையப் பேச்சாளர் கூறினார். யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1283 குடும்பங்கள் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டி ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், இம்மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 1231 குடும்பங்களைச் சேர்ந்த 6164 பேரும், மன்னார் மாவட்டத்தில் 5855 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 680 பேரும், யாழ். மாவட்டத்தில் 1354 குடும்பங்களைச் சேர்ந்த 4988 பேரும், மொனறாகலை மாவட்டத்தில் 82 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேரும், வவுனியா மாவட்டத்தில் மெனிக்பாமில் 47 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 77 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.
இம்மழையினால் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் பிரதேச செயலகப் பிரிவில் 803 குடும்பங்களைச் சேர்ந்த 4764 பேரும், கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 170 பேரும், நவகத்தேகம பிரதேச செயலகப்பிரிவில் 292 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேரும், கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேரும் மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப்பிரிவில் 971 குடும்பங்களைச் சேர்ந்த 3930 பேரும், மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 2183 குடும்பங்களைச் சேர்ந்த 9485 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 939 பேரும், மடு பிரதேச செயலகப் பிரிவில் 2015 குடும்பங்களைச் சேர்ந்த 7562 பேரும், யாழ். பிரதேச செயலகப் பிரிவில் 670 குடும்பங்களைச் சேர்ந்த 2504 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, தென் கொரியா பயிற்சியை ஆரம்பித்ததால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தன
வட கொரியா மீது எத்தகைய தாக்குதல் கள் தொடுக்கப்பட்டாலும் அதன் எதிரொலி மிகக் கடுமையாக இருக்குமென வட கொரியா கடுமையான தொனியில் எச்சரித்தது. கொரியன் குடாவை நோக்கி அமெரிக்க தென்கொரிய இராணுவங்கள் முன்னேறிவரும் நிலையில் ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற மிகப் பெரிய போர்க்கப்பலும் களத்தில் இறங்கியுள்ளன.
இதில் விமான ஓடுபாதைகள் ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட நவீன இராணுவ, ஆயுத உபகரணங்களும் உள்ளன. வட கொரியாவை இலக்கு வைக்கும் தாக்குதல் திசையை நோக்கி ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற இந்தக் கப்பல் மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில் தென் கொரிய, அமெரிக்க இராணுவங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நான்கு நாள் போர்ப்பயிற்சியை நேற்று ஆரம்பித்த மைக்கான ஆதாரமாக பாரிய வெடியோசை கள் விண்ணையும், மண்ணையும் அதிர வைத்ததாகப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
வட, தென் கொரிய எல்லைகளிலுள்ள பொதுமக்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களை நோக்கி நகர்ந்தனர். வானம் புகை மண்டலமாகவும் எங்கும் தீப்பிளம்புகளும் தென்பட்டதை இரண்டு எல்லைகளிலிருந்தும் பார்க்கக் கூடியதாக இருந்தது. வட கொரியா வானைமுட்டிச் சென்று தாக்கும் நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை கரை ஓரத்திற்குக் கொண்டுவந்தது.
அந்நாட்டு விமானங்களும் விண்ணில் வட்டமிட்டவண்ணமிருந்தன. தென் கொரியாவைப் பொறுமைகாக்குமாறு கோரும் பொருட்டு சீனாவின் வெளிநாட்டமைச்சர் அவசரமாகப் புறப்பட்டு நேற்று தென் கொரியத் தலைநகர் வந்தார்.
இவர் தென் கொரிய ஜனாதிபதியுடன் விரிவான பேச்சுக்களையும் நடத்தினார். ஆனால் நான்கு நாள் போர்ப்பயிற்சி ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறுமென்பதை தென்கொரியா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
பேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டாலும் பயிற்சிகளின் போது இராணுவ மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும்படி சீன வெளிநாட்டமைச்சர் கேட்டுக்கொண்டார். சென்றவாரம் தென்கொரியா மீது வடகொரியா ஐம்பது ஏவுகணைகளை ஏவியது. இதனால் இந்த முறுகல் நிலையேற்பட்டது.
வட மாகாணத்தின் முதலீடு, வளங்கள் தொடர்பாக விரிவாக ஆராயும் பொருட்டு ‘உள்ளூராட்சி மாநாடும், கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
ஜனவரி மாதம் 28ம் திகதி முதல் 30ம் திகதி வரை மூன்று நாட்கள் வவுனியாவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் போது வட மாகாண அபிவிருத்திக்கான ஐந்தாண்டு திட்டங்கள் தயாரிப்பது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக ஏசியன் பவுண்டேசன், ஜி. டி. இஸட் ஆகியன 200 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க வுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டுள்ள ‘உள்ளூர் மட்ட அபிவிருத்தி ஊடான தேசிய அபிவிருத்தி’ என்ற தொனிப் பொருளுக்கு அமைய இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியாவுக் கான உள்ளுராட்சிப் பிராந்திய உதவி ஆணையாளர் எஸ். அட்சுதன் தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆரம்ப மற்றும் இறுதி நாள் வைபவங்கள் வவுனியா நகர சபை கலாசார மண்டபத் திலும் கண்காட்சி நகர சபை மைதானத்தி லும், பொருளாதார ஆளுகை என்ற மாநாடு கச்சேரி மாநாட்டு மண்படத்திலும் இடம்பெறவுள்ளன. தொழில்நுட்ப அறிமுகம், தகவல் பங்கீடு, கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி போன்ற துறையை மேம்படுத்துவது தொடர்பாக இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட வுள்ளது.
அபிவிருத்திக்கு தனியார் துறை, பொது மக்கள் மற்றும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளுதல் போன்றவையே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் எஸ். அட்சுதன் குறிப்பிட்டார்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நேற்று பிற்பகல் 2.50 மணி முதல் மின்சாரத்தடை ஏற்பட்டது. கொத்மலை - பியகமைக்கிடையிலான தேசிய மின்னிணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணமென மின்வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.
இது தொடர்பில் அமைச்சின் உயரதிகாரி யொருவர் தெரிவிக்கையில்,
கொத்மலை - பியகம தேசிய மின்னி ணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்று 2.50 மணியளவில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் மின்சார சபைக்குப் பல முறைப்பாடுகள் வந்தன.
மேற்படி மின்துண்டிப்பினால் கொத்மலை - பியகம மின்னிணைப்பு பரிமாற்றத் தொகுதியூடாக மின்சாரத்தைப் பெற்றுக்கொள் ளும் மின் பாவனையாளர்கள் அசெளகரிய ங்களுக்குள்ளாகினர்.
இத்தொழில்நுட்பக் கோளாறைப் பரிசோதித்து திருத்தும் நோக்கில் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அக்குழு உடனடியாகவே தமது செயற்பாடுகளை ஆரம்பித்தன.
இதனையடுத்து எவ்வளவு விரைவாக மின்சாரத்தை வழங்க முடியுமோ அந்தளவு விரைவாக மின்சாரத்தை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் மின்வலு எரிசக்தி அமைச்சு மேற்கொண்டதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.