13 ஜூலை, 2011

வாகரை பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு

வாகரைப் பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத ஆயுதக் குழு ஒன்றினால்பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ரீ56 ரக துப்பாக்கிகள் 35 உள்ளிட்ட பல ஆயுதங்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிகள், விமான ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

நோர்வேயிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் எம்மிடமுண்டு : குணவன்ச

இன்றைய அரசாங்கத்தை நாங்களே உருவாக்கினோம் எனவே 13 ஆவது சீர்திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் ஆட்சியாளர்களுக்கு கிடையாது என்று எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார். நோர்வேயிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் எம்மிடமுள்ளது. எனவே அவ்வாறானவர்கள் வாய் திறக்காமல் மௌனமாக இருப்பது நல்லது என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே எல்லே குணவன்ச தேரர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தேரர் மேலும் உரையாற்றுகையில்; இந் நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் 13 ஆவது திருத்தத்தை கோரவில்லை. இந்தியாவே பலாத்காரமாக எம் மீது இதனை சுமத்தியது. தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் பிரச்சினை என்ன என்பதை தெரிவிக்கப்படவில்லை.

லியம் பொக்ஸ், யசூசி அகாசியென வெளிநாட்டவர்கள் அடிக்கடி இலங்கைக்கு படையெடுக்கினற்னர்.

இதன் பின்ணியில் சதித்திட்டமொன்று உள்ளது. இன்று சில அமைச்சர்கள் நோர்வேயினை மீண்டும் பிரச்சினைக்கு தீர்வு மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். இவ்வாறாக நோர்வேயிடமிருந்து எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்ற பட்டியல் எம்மிடம் உள்ளது.

இவர்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட படையினருக்கு ஒரு தோடம் பழத்தையேனும் வழங்கியதில்லை. ஆனால் அடிக்கடி நோர்வேக்கு பயணத்தை மேற்கொள்வதில் அக்கறையுடன் செயற்படுவார்கள்.

மாகாண சபைகளால் என்ன நன்மைகள் கிடைத்துள்ளது. சைக்கிள் கூட இல்லாதவர்கள் மாகாண சபை உறுப்பினர்களாகி ப்ராடோ சொகுசு வாகனத்தில் பவனி வரும் நிலைமையே உருவானது. இதற்கு வீணாக நாட்டின் பணம் செலவு செய்யப்படுகின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவின் நிதி குறைப்பு நடவடிக்கையால் பாகிஸ்தானுக்குப் பாதிப்பில்லை: இராணுவம் அறிவிப்பு


அமெரிக்காவின் நிதி குறைப்பு நடவடிக்கையால், பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை பாதிப்பு அடையாது என அந்நாட்டின் இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அத்தர் அபாஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசினால் பாகிஸ்தானுக்கு வருடாந்தம் வழங்கப்பட்ட 2.7 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையிலிருந்து பாகிஸ்தான் இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த 800 மில்லியன் டொலரை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்ததையடுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா பாதுகாப்புச் செலவீனங்களை குறைக்க வேண்டும் என அந்நாட்டின் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கிற்கு செல்வதற்கான பாதுகாப்பு முன் அனுமதி முறை முற்றாக நீக்கம்

வடக்கிற்கு செல்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நடைமுறை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடவுச்சீட்டை உடையவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறும்முறை கடந்த சில மாதங்களாக அமுலில் இருந்த அந்த நடைமுறை கடந்த வாரம் நீக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜதந்திரிகள், உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் வடகிற்கு பிரயாணம் செய்வதற்கு முன் அனுமதி பெறவேண்டியிருந்த நடைமுறை நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளது.

எனினும் இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளை சந்திக்கச் செல்வதற்கு இன்னும் பாதுகாப்பு அமைச்சு அனுமதியை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சிலாபம் வைத்தியசாலை அறுவை சிகிச்சை பிரிவு வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்


சிலாபம் பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களும் ஊழியர்களும் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டத்தினால் அறுவை சிகிச்சை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் நோயாளிகள் நீர்கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இரண்டு அறுவை சிகிச்சை கூடங்களினதும் குளிரூட்டி பழுதடைந்த நிலையில் அதனை திருத்தித் தருமாறு முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படாததை அடுத்தே இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் வைத்தியர்களும் ஊழியர்களும் ஈடுபட்டனர்.

சிலாபம் வைத்தியசாலை புத்தளம் மாவட்டத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையாக விளங்குவதோடு, கல்பிட்டிய, ஆனைமடுவ பிரதேச வைத்தியசாலையிலுள்ள நோயாளிகள் இங்கு மாற்றப்படுகின்றனர்.

இங்கு ஒரு நாளைக்கு குறைந்தது 30 அறுவை சிகிச்சைகள் வரை இடம்பெறுவதோடு, இரு அறுவைசிகிச்சை கூடங்களிலும் 7 வைத்திய நிபுணர்கள் சேவையாற்றுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ரொஹான் குணரட்ணவுக்கு எதிராகக் கனடியத் தமிழர் பேரவை வழக்குத் தாக்கல்


இலங்கையில் இருந்து வெளிவரும் லக்பிம பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரொஹான் குணரட்ண, கனடியத் தமிழர் பேரவை தொடர்பாகக் கூறிய கருத்துக்களுக்காக, கனடியத் தமிழர் பேரவை கனடாவின் மாகாணங்களில் ஒன்றான ஒன்ராரியோ மாநிலத்தில் இவ்வழக்கினைத் தாக்கல் செய்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கற்கைகள் பற்றி விரிவுரையாற்றும் ரொஹான் குணரட்ண லக்பிமவுக்கு அளித்த பேட்டியில் கனடியத் தமிழர் பேரவை, கனடாவில் புலிகளின் முதன்மையான முன்ணனி அமைப்பு என்றும், விடுதலைப்புலிகள் கனடியத் தமிழர் பேரவை என்ற பெயரின் கீழ் செயற்பட்டு வருவது குறித்துக் கனேடிய அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார். ரொஹான் குணரட்ணாவின் இக் கூற்று உண்மைக்குப் புறம்பானவை என்றும், பொய்களால் சோடிக்கப்பட்டவை என்றும், இவ் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடியத் தமிழர் பேரவை ஆனது, தமிழ்க் கனேடியர்களின் குரலாக ரொரன்ரோ மாநகரத்தில் தலைமையகத்தைக் கொண்டு கனடா முழுவதும் பல் கிளைகளை நிறுவி, கனடாவில் உள்ள மத்திய, மாகாண, மாநகரசபை அரசாங்கங்களுடனும், அரசியல்வாதிகளுடனும் தொடர்புகளைப் பேணி இயங்கி வரும் ஒரு அரசசார்பற்ற நிறுவனமாகும். கனடியத் தமிழர் பேரவை அதன் அங்கத்துவர்களால் தெரிவு செய்யப்பட்ட பல்துறை சார்ந்த கல்விமான்கள், தொழில் விற்பன்னர்ளை உள்ளடக்கிய ஒரு பணிப்பாளர் குழுவினரால் வழிநடத்தப்படுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ரொஹான் குணரட்ணவுக்கு எதிரான இம் மானநஸ்ட வழக்கில் கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் உமாசுதன் சுந்தமூர்த்தி, கனேடியத் தமிழ் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை ஆகியோர் வாதிகளாகவும், ரொஹான் குணரட்ண, அக் கூற்றைப் பிரசுரித்த லக்பிம பத்திரிகை நிறுவனர் ஆகியோர் பிரதிவாதிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் ஆவணப் பிரதிகள், சிங்கப்பூரில் உள்ள ஒரு சட்டத்தரணி குழுவினரால், ரொஹான் குணரட்ணவுக்கு சேர்க்கப்பட்டுள்ளன என்பதும், இன்று வரை தனக்கெதிரான வழக்கினை எதிர்த்து அவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

2020 இல் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி நேரடியாக ஆய்வு மேற்கொள்ள சீனா முடிவு


விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா அளவிற்கு சீனா முன்னேற ஆர்வமாக உள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி அங்கு நேரடியாக ஆய்வுகளை மேற்கொள்ள சீனா முடிவு செய்துள்ளது.

சீனா தனக்கென்று விண்வெளியில் ஓர் ஆய்வு மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதோடு, அதற்காக பொருட்கள், கருவிகளை ரொக்கட் மூலம் கொண்டு செல்லும் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவுள்ளது.

2013 இல் சந்திரனில் சீனா தனது ஆராய்ச்சியை ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதோடு, அதற்கான நிதியை சீன அரசு ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

12 ஜூலை, 2011

11 வயது சிறுவனிடம் பிரதேச அரசியல்வாதி பாலியல்

பிரதேச அரசியல்வாதி ஒருவர் 11 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ள சம்பவம் கொபெஹிகனை என்ற இடத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து சிறுவனின் தாயார் செய்த முறைப்பாட்டை அடுத்து அந்த அரசியல்வாதி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவன் தனது இளைய சகோதரனுடன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதன்போது, அப்பக்கமாக வருகை தந்த சந்தேக நபரான கொபெஹிகனை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர், தனிமையில் இருந்த மேற்படி 11 வயதுடைய சிறுவன் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்டுள்ளார்.

தாய் வீட்டிற்குத் திரும்பியதும் பாதிக்கப்பட்ட சிறுவன் தனக்கு நேர்ந்தவற்றைத் தாயாரிடம் எடுத்துக் கூறவே அவர் பொலிஸில் முறைப்பாடு செய்தார். பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தப்பிச் சென்ற 40 ஆயிரம் இராணுவத்தினரைத் தேடி வேட்டை: பேச்சாளர்

இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை குறி வைத்து பாரிய தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு அண்மையில் அதிகரித்து வரும் பல்வேறு வகையான குற்றச் செயல்களின் பின்னணியிலும் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்தார்.

"இதுவரையில் தப்பிச்சென்ற 9 ஆயிரம் பேரை இராணுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையோரையும் விரைவில் கைது செய்து தண்டனை வழங்குவோம். எனவே தப்பிச் சென்ற வீரர்கள் சரணடைந்து சட்டபூர்வமான விலகலைப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறுகையில்,

"கடந்த யுத்த காலப் பகுதியில் பெருந்தொகையான இராணுவ வீரர்கள் சட்டவிரோதமாக படைகளில் இருந்து தப்பிச்சென்றிருந்தனர். இவர்கள் அனைவரையும் கைது செய்யும் நோக்கில் பல தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அது மட்டுமன்றி சட்டபூர்வமான விலகலை பெற்றுக்கொள்ள கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஒரு சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இராணுவத்திலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டனர்.

ஆனால் பெருந்தொகையானோர் சரணடையவில்லை. இதுவரையில் 40 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். இது இராணுவ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். உத்தியோகபூர்வமான விலகலைப் பெற்றுக்கொள்ளாமல் இராணுவ வீரர்களால் பொது வாழ்லில் ஈடுபட முடியாது.

எனவே சட்டவிரோதமாக வெளியில் உள்ள இராணுவ வீரர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள். உள்நாட்டில் அண்மைக் காலங்களாக நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களிலும் தப்பிச் சென்ற இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே இவர்களை விரைவில் கைது செய்து இராணுவச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புகலிடம் கோரும் இலங்கையரை வரவேற்கத் தயாரில்லை : நியூசி.பிரதமர் ஜோன் கீ

நியூஸிலாந்திற்கு வரும் வழியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிடக் கோரிக்கையாளர்களும் வரவேற்கப்படவில்லையென அந்த நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இந்தோனேசியாவில் டன்ஜீங் பினாங் கடற்பரப்பில் மேற்படி அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் நங்கூரமிட்டு நின்ற போது அகதிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கப்பலிலிருந்து இறங்குவதற்கும் மறுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் நியூஸிலாந்திற்கு செல்ல விரும்புகின்றோம் எங்களது எதிர்கால வாழ்க்கை நியூஸிலாந்திலேயே உள்ளது. நாங்கள் நியூஸிலாந்திற்குச் செல்ல வேண்டும்" என எழுதப்பட்ட பதாதைகளை கப்பலிலுள்ள அகதிகள் வைத்திருந்தனர்.

"புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை குறித்து எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கு நியூஸிலாந்து உதவியளிக்காதென" அந்நாட்டுப் பிரதமர் கூறினார்.

அகதிகளில் சிலர் நியூஸிலாந்திற்கு வரவேண்டுமெனக் கூறி கொடிகளையும் பதாதைகளையும் தாங்கியவாறும் காணப்படுவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியும். அவர்கள் வரவேற்கப்படவில்லையென்பதே எங்களது தகவல் என ஜோன் கீ குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

11 ஜூலை, 2011

நீதி, சுதந்திரமான தேர்தல் வடக்கில் இடம்பெறுவதற்கான சூழல் இல்லை: ஜே.வி.பி. குற்றச்சாட்டு

வட பகுதியில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறுவதற்கான சூழ்நிலை இல்லாது போயுள்ளதோடு, அரசாங்கத்தின் அடக்குமுறை தலைதூக்கி சிவில் நிர்வாகம் அற்றுப் போயுள்ளது என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார். நாட்டில் "அரசாங்கம்'' என்பது பெயரளவில் மட்டுமே உள்ளதே தவிர, செயலில் எதுவும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே விஜித ஹேரத் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் வீட்டில் நாய் கழுத்து வெட்டப்பட்டு வீசப்பட்டுள்ளது. அத்தோடு வேட்பாளர்களின் வீடுகளில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

எமது ஆதரவாளர்கள் கிளிநொச்சியில் பிரசாரங்களை நடத்தியபோது சிறு இராணுவக் குழுவினரால் தடுக்கப்பட்டுள்ளனர். சுதந்திரமாக பிரசாரங்களை முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

வட பகுதிக்கு அண்மையில் கொழும்பிலிருந்து சென்ற அரச தொலைக்காட்சி குழுவினர் அங்குள்ள தாய்மாரை அழைத்து அரசாங்கத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக பேட்டி எடுத்துள்ளனர்.

ஆனால் இப்பேட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார் தாம் அனுபவிக்கும் துன்பங்கள் தொடர்பிலும் காணாமல் போன உறவுகள் தொடர்பாகவும் கண்ணீர் மல்க கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதனால் ஏமாந்து போன படப்பிடிப்புக் குழுவினர் ஏமாற்றத்துடன் கொழும்பு திரும்பியுள்ளனர்.

வடக்கில் இன்று சிவில் நிர்வாகம் இல்லை. அரசாங்கத்தின் அடக்கு முறையே தலைதூக்கியுள்ளது. நாட்டில் இன்று அரசாங்கம் என்பது பெயரளவிலேயே உள்ளது. செயலில் எதுவும் இல்லை. மக்கள் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வுகளை வழங்க முடியாமல் உள்ளது.

யுத்தம் முடியட்டும் சம்பள உயர்வை வழங்குகிறோம். வாழ்க்கைச் செலவை குறைப்போம். வரிகளை குறைப்போம், மக்கள் மீது சுமைகளை சுமத்தமாட்டோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களுக்கு அறிவித்தது.

இன்று யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றார்கள். அதுவும் நிறைவேற்றப்பட்டது. ஸ்திரமான அரசாங்கம் தேவை என்றார்கள். அதனையும் பெற்றுக் கொண்டனர்.

சிறப்புரிமைகள் சலுகைகளை வழங்கி மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் பெற்றுக் கொண்டனர். ஆனால் மக்களுக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக சுமைகளையே அதிகரித்துள்ளனர். நுரைச்சோலை, கொத்மலை அனல் மின் நிலையங்கள் பல இலட்சம் ரூபா செலவில் கோலாகலமான வைபவங்களை நடத்தி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் எதிர்காலத்தில் மின் துண்டிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தனர். ஆனால் இன்று பொதுமக்களுக்கு அறிவிக்காமலேயே மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை மின்சார சபை திறைசேரிக்கு 2000 மில்லியன் ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளது.

ஊழியர்களின் சம்பள நிலுவை 900 மில்லியன் ரூபா செலுத்தப்படாதுள்ளது. பல கோணங்களில் மின்சார சபை நெருக்கடியில் சிக்கியுள்ளது. அனல் மின்நிலையங்கள் இயங்காமையின் பின்னணியில் "சதிகாரரர்கள்'' இருப்பதாக அமைச்சர் தெரிவிக்கின்றார்.

அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்கு ""சதித் திட்டம்'' என்ற வார்த்தை தாரக மந்திரமாக பயன்படுத்தப்படுகிறது.

முன்னாள் சுகாதார அமைச்சரும் இந்நாள் சுகாதார அமைச்சரும் டெங்கை முற்றாக ஒழிப்போம் பி.ரி.ஐ. பக்டீரியாவை பயன்படுத்துவோம் என்றெல்லாம் உறுதி மொழிகளை வழங்கினர்.

ஆனால் டெங்கு நோயாளர்களின் தொகை 11,110 ஆக அதிகரித்துள்ளது. 82 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு வாரத்திலும் 900 டெங்கு நோயாளர்கள் கண்டு பிடிக்கப்படுகின்றனர். இவ்வாறு முழு நாடுமே சீர்குலைந்து சின்னாபின்னமாகியுள்ளது. பொருளாதாரம் பின்னடைவைக் கண்டுள்ளது.

ஆனால் அரசாங்கத்திடம் எதுவிதமான திட்டங்களும் இல்லை. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு பின்னரும் விலையேற்றங்கள் இடம்பெறும்.

எதுவிதமான நிர்வாகத் திறனும் இல்லாத மக்கள் மீது சுமைகளை அதிகரிக்கும் இந்த அரசாங்கத்தை மக்கள் தேர்தலில் தோல்வியøடயச் செய்ய வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுத்தை கடித்து கதிர்காமத்துக்கு யாத்திரை சென்ற பெண் பரிதாபகரமாக உயிரிழப்பு

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் தாயொருவர் புலியிடம் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று யால காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் யால வள்ளியம்மன் ஆற்றுப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது மட்டக்களப்பு தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சாந்தகுமாரி என்ற 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கதிர்காமம் உற்சவத்தை அடுத்து நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான அடியார்கள் கதிர்காமத்திற்கு யாத்திரை செல்கின்றனர். விஷேடமாக வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து இம்முறை பெருந்திரளான அடியார்கள் கதிர்காமத்திற்கு யாத்திரையினை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற இளம் தாயான கிருஸ்ணபிள்ளை சாந்தகுமாரி நேற்று அதிகாலை யால காட்டுப் பகுதியில் வள்ளியம்மன் ஆற்றுப் பகுதியில் காலைக் கடன் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த சிறுத்தையொன்று இப்பெண்ணை கடித்து இழுத்துச் சென்றுள்ளது.

சிறுத்தையினால் கடித்து இழுத்துச் செல்லப்பட்ட போது குறித்த பெண் கதறி அழுததுடன் சத்தமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏனைய யாத்திரிகர்கள் அந்த ஆற்றுப் பக்கமாக ஓடியுள்ளனர். அதனால் குறித்த பெண்ணை அவ்விடத்தில் சிறுத்தை விட்டு விட்டுச் சென்றுள்ளது.

பின்னர் யாத்திரிகர்கள் அவ்விடத்திற்குச் சென்று பார்த்த போது குறித்த பெண் இறந்து கிடந்துள்ளார். பெண்ணின் கழுத்தில் சிறுத்தை கடித்துள்ளமையினாலேயே குறித்த பெண் சம்பவ இடத்தில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

சர்ச்சைக்குரிய கருத்தால் தூதரக பாதுகாப்பு ஆலோசகரை அமெரிக்கா திருப்பி அழைத்தது

இலங்கை இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் லோறன்ஸ் ஸ்மித் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

2008ம் ஆண்டு ஜூன் மாதம் சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற லேப். கேணல் லோறன்ஸ் ஸ்மித், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொழும்பில் பணியாற்றியவர். அண்மையில் சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் பங்கேற்ற அவர், போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முன்வந்தனர் என்பதில் சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார்.

இதையடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் லெப். கேணல் ஸ்மித்தின் கருத்து தனிப்பட்டது என்றும் , அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ கருத்தல்ல என்றும் கூறியிருந்தது.

இந்த நிலையிலேயே அவர் அமெரிக்காவுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லெப். கேணல் பற்றிக் ஜே.ஸ்கூலர் அமெரிக்கத் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் பற்றிக் ஜே.ஸ்கூலரை நேற்று முன்தினம் மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பிரதி அமெரிக்கத் தூதுவர் வலேரி சி.பௌலர் அம்மையர் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்தச் சந்திப்பில் பங்கேற்ற லெப். கேணல் லோறன்ஸ் ஸ்மித் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விடைபெற்றுக் கொண்டார் என்பதும்
மேலும் இங்கே தொடர்க...

கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டின் முன்னால் மலர்வளையங்கள், சுடலைச் சாம்பல் மதிலில் அஞ்சலி தெரிவித்து வாசகங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களது இல்லங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவது போன்ற அநாகரிக செயற்பாடுகள் யாழ். குடாவில் தொடர்ந்த வண்ணமுள்ளன. இம் மாதம் 23 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த கூட்டமைப்பு வேட்பாளர் கந்தையா அசோகலிங்கம் என்பவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் சுடலையில் வைக்கப்பட்டிருந்த மலர் வளையங்களை எடுத்துவந்து வீட்டின் முன் எறிந்துள்ளதுடன் சுடலை சாம்பலையும் வீட்டின் முற்றத்தில் வீசி, கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையிலான வாசகங்களை மதில்களில் வரைந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யயப்பட்டுள்ளது.

இதேவேளை இவரது வீட்டிற்கு கடந்த வாரம் இரவு வேளைகளில் கற்களால் எறிந்துள்ளதாகவும் குறித்த வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை வல்வெட்டித்துறையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளூராட்சி வேட்பாளருமான எம்.கே சிவாஜிலிங்கத்தின் அலுவலகம் மீது வாய்க்கால் கழிவுகள் இனந்தெரியாத நபர்களினால் எறியப்பட்டுள்ளது. அன்றைய தினம் வலி. மேற்கு பிரதேச சபை வேட்பாளர் ஐங்கரன் நாகரஞ்சினியின் வீட்டிலும் இவ்வாறான கழிவொயிலை ஊற்றிவிட்டு நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளதாகவும் ஆனால் வேட்பாளர்கள் அதை முறையிட தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

அரசாங்கமும் எதிர்க் கட்சிகளும் ஒன்றிணையும் காலம் வந்துவிட்டது: ரணில்

சர்வதேச பிரச்சினைகளிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டிய காலம் வந்துவிட்டது.

தாமதித்தால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

யுத்தத்தின் இறுதிக் கட்டம் தொடர்பில் கவலையை வெளியிட வேண்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை முன்னெடுத்து நிலையான அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மறைந்த ஐ.தே. கட்சியின் வடகொழும்பு எம்.பி.யும். அமைச்சராக பதவி வகித்தவருமான வீ.ஏ. சுகததாசவின் 38 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு கொழும்பில் சுகததாஸ விளையாட்டரங்கின் முன்பாக அன்னாரது சிலைக்கருகில் இடம்பெற்றது. கொழும்பு மாவட்ட எம்.பி. யும் தேசிய அமைப்பாளருமான ரவி கருணாநாயக்க, முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான மகேந்திர டி. சில்வா, காமினி ஹேமச்சந்திர ஆகியோர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், அண்மையில் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்த நான் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீன் மூனை சந்தித்தேன். இதன்போது இலங்கை சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாகவும் எனவே அதற்கமையவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்றும் மூன் என்னிடம் தெரிவித்தார்.

இக் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

2009 ஆம் ஆண்டு பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது போரின் இறுதிக் கட்டம் தொடர்பில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஆராயவும் விசாரணை நடத்தவும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.

ஆனால் அரசாங்கம் இதனை முன்னெடுக்கவில்லை. எனவே மூன் தருஷ்மன் குழுவை நியமித்தார். அக்குழு அறிக்கையையும் வெளியிட்டது.

இதனை அரசாங்கம் கடுமையாக விமர்சித்ததோடு தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது. எம்மால் சர்வதேச நாடுகளுடன் மோத முடியாது. மோதுவதா? பேச்சுவார்த்தைகளை நடத்தி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதா என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும்.

உலகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியதில்லை. எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்வோமென ஒரு சிலர் கூறுகின்றனர். இந்தத் தர்க்கம் பிழையானது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் போன்ற நாடுகளுடன் வர்த்தகங்களை தொடர வேண்டும்.

அந்நாடுகளின் உதவிகள், ஒத்துழைப்பு என்பன எமது பொருளாதார அபிவிருத்திக்கு அத்தியாவசியமானதாகும்.

மேற்குலகின் உதவிகள் கிடைக்காவிட்டால் நாடு பின்னடவு காணும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

எமது கட்சியில் சிலர் கூறுகின்றனர், இது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினையென. இப்பிரச்சினை நாட்டையும் மக்களையும் பாதிக்கும். நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாகும்.

எனவே இதனை தீர்த்து வைப்பதில் எதிர்க்கட்சியான எமக்கும் பொறுப்பு உள்ளது.

ஐ.நா. அறிக்கை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னவென்பதை அறிவிக்க வேண்டும்.

அதன்போது இச் சவாலை எதிர்கொள்ள அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐ.தே.க. தயாராகவே உள்ளது.

இதனை ஐ.நா. செயலாளர் நாயகத்திடமும் தெரிவித்தேன்.

இன்று எமது நாட்டு பிரச்சினை தொடர்பாக உலகிலுள்ள பாராளுமன்றங்களில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடத்தப்படுகின்றன.

இறுதிக் கட்ட யுத்தத்தில் 40,000 மக்கள் உயிரிழந்ததாகவும் அதனைவிடக் குறைவென்றும் பல்வேறு எண்ணிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.

அதற்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்திலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் படையினர், புலிகள் என பலர் உயிரிழந்தனர். சர்வதேச ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைக்கு முகம் கொடுப்பதற்கு அரசாங்கம் மூன்று விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.

இறுதிக் கட்ட யுத்த உயிரிழப்புக்கள் தொடர்பில் கவலையை வெளியிட வேண்டும்.

அரசியல் தீர்வை வழங்கி நிலையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஜனநாயகத்தை நாட்டில் நிலை நாட்ட வேண்டும். இதனை முன்னெடுத்தால் சர்வதேச பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியும்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுத்து இறுதித் தீர்வை எட்ட வேண்டும்.

அதற்கு ஐ.தே.க. பூரண ஆதரவை வழங்கும்.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கம் காணப்பட்டது போன்று 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் சர்வதேசத்திற்கு எம்மால் பதிலளிக்க முடியும். அத்தோடு விசேடமாக வட பகுதியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை சுதந்திரமாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேறி விடுவார்கள்.

இவ்வாறான நிலைமை தோன்றுமானால் சர்வதேச ரீதியிலான பிரச்சினைகள் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும்.

செப்டெம்பர் மாதம் ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூடவுள்ளது. எனவே காலத்தை இழுத்தடிக்காது அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தீர்வுகளை காண வேண்டும்.

இதன்போது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க நாம் தயார்.

யுத்த வெற்றி மட்டுமே சமாதானத்தை ஏற்படுத்தாது. அதற்கு ஜனநாயகமே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

லியாம் பொக்ஸ் நாடுதிரும்பினார்

இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்த பிரித்தானியாவின் பாதுகாப்புத் து றை அமைச்சர் லியா ம் பொக்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார்.

பிரத்தானியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட விமானத்தின் மூலமாக நேற்றுக்காலை 10.15 மணியளவில் டோஹா கட்டார் நோக்கி புறப்பட்டு சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு வருகைதந்த லியாம் பொக்ஸ் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு பேருரையில் கலந்துகொண்டு நினைவு சொற்பொழிவாற்றினார்.

இலங்கைக்கு விஜயத்தின் போது அவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ், பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சனிக்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது பல்தரப்பட்ட விடயங்கள் தொடர்பில் இருவரும் விரிவாக ஆராய்ந்துள்ளதுடன் இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெற்ற லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு சொற்பொழிவில் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கையை நவம்பர் மாத்திற்குள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை லியாம் பொக்ஸ் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர் எதிர்தரப்பில் எவரையும் சந்திக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

நியூசிலாந்து செல்ல முயற்சி 87 இலங்கையர்கள் கைது

இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்கு கப்பல் மூலம் சட்டவிரோதமாக செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் 87 பேரை இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பெட்டன் எனும் இடத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களில் சிறுவர்கள், பெண்களும் அடங்குவார்கள் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலிசியா எனும் கப்பல் மூலம் நியூசிலாந்துக்கு புறப்பட்டு இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களை இந்தோனேசிய கடற்படையினர் கப்பலுடன் இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

10 ஜூலை, 2011

இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று அவுஸ்திரேலிய செனட்டில் நிறைவேற்றம்




போர்க் குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டும். விசாரணைக் குழுவை நியமித்து போர்க்குற்றங்கள் பற்றிய உண்மை நிலையை ஐ.நா. தெளிவுபடுத்த வேண்டும் என்றுஅவுஸ்திரேலிய செனட்சபை வலியுறுத்தியுள்ளது.

அந்த நாட்டின் செனட்சபையின் உறுப்பினரான பொப் பிறவுண் இது தொடர்பான பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்திருந்தார். இந்தப் பிரேரணைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் ஏகமனதாக அது நிறைவேறியது. வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பாக செனட்சபையில் பிரேரணை கொண்டு வரப்படுவதில்லை. வழமைக்குமாறாக இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வெளிவிவகாரஅமைச்சர் கெவின் ரூட் கவனம் எடுக்க வேண்டும் என்று பொப் பிறவுண் கடித மூலம் அவரைக் கேட்டுள்ளார்.

ஐ.நா.வில் உள்ள தமது அரசின் சார்பிலான செயலகம் ஊடாகத்தான் இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் மீள் விசாரணை செய்யுமாறு கோரவிருப்பதாக கெவின் ரூட் தெரிவித்திருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தருஸ்மன் அறிக்கை தொடர்பில் இலங்கையே பதில் கூற வேண்டும்:இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள்


மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேசத்தின் கேள்விகளுக்கும் தருஸ்மன் அறிக்கைக்குமான பதிலை இலங்கையே வழங்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.அதேவேளையில், தமிழ்நாட்டு அரசாங்கமும் தமிழ்நாட்டு மக்களும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாகக் கொண்டுள்ள அக்கறை, கரிசனை தமிழர் விவகாரத்தில் அவர்கள் காட்டுகின்ற அதீத ஈடுபாடு என்பவற்றை இலகுவில் தூக்கியெறிந்துவிட முடியாது.

தமிழக அரசினதும் தமிழ்நாட்டு மக்களினதும் இந்த உணர்வுபூர்வமான ஈடுபாட்டையும் கருத்தையும் உதாசீனப்படுத்திவிடவும் முடியாது என்று இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார். இலங்கையிலிருந்து புதுடில்லிக்கு வருகை தந்திருந்த தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகைகளின் ஆசிரியர்கள், சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் உதவிச் செயலாளர்கள் இதனைத் தெரிவித்தனர்.

மேற்படி இரு சந்திப்புகளும் கடந்த 4ஆம் திகதி திங்கட்கிழமை தனித்தனியாக இடம்பெற்றன. இந்திய வெளியுறவு உதவிச் செயலாளர்கள் இருவரும் அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு சாஸ்திரி பவனில் இலங்கைப் பத்திரிகையாளர் குழுவினரைச் சந்தித்தனர். அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைப் பத்திரிகையாளர் குழுவினரை புதுடில்லி சவுத் புளக்கில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது வெளிவிவகார உதவிச் செயலாளர்களும் உடனிருந்தனர்.

இந்திய வெளியுறவு உதவிச் செயலாளர்களுடனான சந்திப்பின்போது தருஸ்மன் அறிக்கை தொடர்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தமது தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளன. ஆனால் இந்தியா இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மௌனம் காத்து வருகின்றது என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கையில், தருஸ்மன் அறிக்கை இலங்கை தொடர்பானதே அன்றி இந்தியா தொடர்பானதல்ல. எனவே, இலங்கை அரசாங்கமே இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்தியா மீது காஷ்மீர் விவகாரத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தனவே என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கையில், உண்மைதான். காஷ்மீர் விவகாரத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கான உரிய பதிலை இந்தியா வழங்கியது. நாம் வேறெந்த நாட்டையும் துணைக்கு அழைக்கவில்லை. இந்தியாவுக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது. அதற்கமைய பதிலளித்தோம் என்று கூறினார்.

தருஸ்மன் அறிக்கை தொடர்பாக சீனா, ரஷ்யா என்பன இலங்கைக்குச் சார்பாகத் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளனரே என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவு உதவிச் செயலாளர்கள் பதிலளிக்கையில்,மற்றைய நாடுகளின் நிலைப்பாடு குறித்து இந்தியா கருத்துக் கூறமுடியாது என்று குறிப்பிட்டனர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர்

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் கருத்துத் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், தமிழக அரசின் கருத்து மற்றும் நிலைப்பாடு அறிக்கை என்பன உணர்வுபூர்வமானவை. தமிழ் நாட்டில் தமிழர்களே அதிகமாக உள்ளனர். தமிழ் நாட்டில் இருந்து 22 மைல்களுக்கு அப்பால் மிக அருகில் வாழும் தமது இனம் சார்ந்த மக்கள் குறித்து கரிசனை, அக்கறை கொள்வது இயல்பே.இந்தகைய போக்கு இன்று மட்டுமல்ல. கடந்த காலங்களிலிருந்து தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் பதவியில் இருக்கும் அரசாங்கம் உணர்வுபூர்வமற்றதாக இருக்க முடியாது. தமிழக ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டை மற்றும் கருத்தை உணர்வுபூர்வமற்றது என இந்திய மத்திய அரசும் கருத முடியாது என்று பதிலளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்த நினைவுச் சின்னங்களை அழிக்குமாறு வடக்கில் உத்தரவு



வடக்கில் யுத்த நினைவுச் சின்னங்களென எவையும் எஞ்சியிருக்கக் கூடாதென வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நெல்லியடி மத்திய மகா வித்தியால மண்டபத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். நினைவுச் சின்னங்களை அகற்ற அவர் காலக்கெடுவொன்றையும் விதித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிளால் 1987 ஆம் ஆண்டில் ஜூலை 5 ஆம் திகதி, நடத்தப்பட்ட முதல் கரும்புலி தாக்குதல், இப்பாடசாலை கட்டிடங்களில் நிலை கொண்டிருந்த படையினர் மீதே நடத்தப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் நினைவுச் சின்னமாக சிறிய கட்டிடத் தொகுதியொன்று பேணப்பட்டு வந்தது. அத்துடன் இத்தாக்குதலை நடத்திய மில்லர் ஞாபகார்த்தமாக சிலையொன்றும் நிறுவப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டின் பின்னர். குடாநாட்டினில் இருந்த பெரும்பாலக்ஷின நினைவுச் சின்னங்கள், இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டிருந்தன. அவ்வகையில் மில்லர் ஞாபகார்த்த சிலையும் இடித்தழிக்கப்பட்டிருந்தது. எனினும் முதல் கரும்புலித் தாக்குதலின் நினைவு எச்சமாக, சிறிய கட்டிடத் தொகுதியொன்று பேணப்பட்டு வந்திருந்தது. அக்கட்டிடத் தொகுதியையே இடித்து அகற்றுமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். எனினும் படையினரால் போர்வெற்றியை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுவரும் நினைவு எச்சங்கள் பற்றி அவர் எதுவுமே கூறியிருக்கவில்லையென தெரியவருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

5 ஜூலை, 2011

கொல்லப்பட்டவர்களின் தொகையை மீளாய்வு செய்ய ஜெனீவாவை கோரவுள்ளோம்: கெவின் ரூட்

கொல்லப்பட்டவர் தொகை தொடர்பிலான ஆதாரங்கள் தொடர்பில் மீழ் ஆய்வு செய்யுமாறு ஜெனீவாவை கோரவுள்ளதாக அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர்ரும் முன் நாள் அதிபருமான கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியினால் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் காணொளி அவுஸ்ரேலியாவில் ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்வில் கெவின் ரூட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

உள்நாட்டு யுத்தத்தின் போது பொதுமக்கள் மீதான கொடூரங்கள் தொடர்பான புதிய தகவல்கள் ஆச்சர்யப்பட வைப்பதாகவும் தங்களுக்கு தனியானதொரு மாநிலம் கோரிய தமிழர்களுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையில் கடந்த 26 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த போர் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இந்த யுத்தத்தின் போது சுமார் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அவர்களின் கருத்தை நான் நம்புகின்றேன்.

இருப்பினும் போர்குற்றம் குறித்த விசாரணைக்கு குறித்த காணொளி ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனவும் அவுஸ்திரேலிய அரசும் இந்த நிலைபாட்டுடனேயே காணப்படுகின்றது. எனவும் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

சூரியவௌ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலகக்கோஷ்டித் தலைவரான நெலுவ பிரியந்த கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினமிரவு நடைபெற்றுள்ளது.

சுமார் 25 கொலைச் சம்பவங்கள் உட்பட பல்வேறு கடத்தல், கப்பம் பெறல் மற்றும் போதைப் பொருள் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர் புடைய மேற்படி சந்தேக நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்ட நிலையில் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆயுதங்கள் சிலவற்றை கைப்பற்றுவதற்காக சூரியகந்த பிரதேசத்துக்கு நேற்று முன்தினம் இரவு சந்தேக நபர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியொன்றினால் அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டதாகவும் இதனையடுத்து அதிரடிப்படையினர் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சூரியவௌ வைத்தியசாலையில் அனும திக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவௌ பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் நபரின் சடலம் தற்போது சூரியவௌ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

7 வயது சிறுவன் அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை: பெற்றோர் கைது

ஏழு வயது நிரம்பிய சிறுவன் ஒருவனை இரவு முழுவதும் தனியறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் வேயாங்கொடை பொலிஸாரினால் அந்த சிறுவன் மீட்கப்பட்ட சம்பவமொன்று சப்புகஸ்தென்னை, கலகெடிஹேன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சிறுவனை கொடுமைப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் அவனது தாயாரும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேயாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு விரைந்த பொலிஸார் அங்கு சோதனைகளை நடத்தியபோது வீட்டின் அறையொன்றில் 7 வயது சிறுவன் ஒருவன் தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. அவனது முதுகிலும் நெஞ்சுப் பகுதியிலும் சிறு காயங்களும் ஏற்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் கர்ப்பிணித் தாயார் (சங்கீத ஆசிரியை)மற்றும் அவனது தந்தை (ஆங்கில ஆசிரியர்) ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து சிறுவன் வீட்டில் சிறுநீர் கழித்த குற்றத்துக்காகவே இவ்வாறு தண்டிக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட தந்தை சிறுவனின் உண்மையான தந்தையல்ல என்பதும் தெரியவந்திருப்பதாக வேயாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அதிகளவு உள்ளூராட்சி மன்றங்களை யாழ்ப்பாணத்தில் கைப்பற்ற முடியும்: சுசில்

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகளவான உள்ளூராட்சிமன்றங்களைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் செயற்பட்டுவருகின்றனர் என்று முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில்பிரே ம்ஜயந்த தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர்கள் குழுவினர் விஜயம் மேற்கொண்டமை மற்றும் வேட்பாளர்களுக்கு செயலமர்வை நடத்தியமை தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் பிரேம்ஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் : யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செயலமர்வை நடத்தும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை அங்கு விஜயம் செய்தோம்.

எமது கூட்டணியின் வேட்பாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். எமக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகின்றது. நாங்கள் யாழ்ப்பாணத்தில் சில நிகழ்வுகளிலும் கலந்துகொண்டோம்.

இந்நிலையில் வடக்கில் அதிகளவான உள்ளூராட்சிமன்றங்களை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் நாங்கள் பிரசார பணிகளை மேற்கொள்வோம். அதிகளவான வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சண்டே லீடரில் செய்தியை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தேன்: கரு



ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் எதிரணியின் பொதுவேட்பாளரின் பிரசார பணியில் நாம் கூடுதல் கவனம்செலுத்தியிருந்தோம். அவ்வாறான நிலையில் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி வெளியான சண்டே லீடர் பத்திரிகையின் தலைப்புச் செய்தியை பார்த்ததும் நான் ஒரு கணம் அதிர்ச்சியடைந்துவிட்டேன் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான கரு ஜயசூரிய சாட்சியமளித்தார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற மேற்படி வழக்கில் நேற்று திங்கட்கிழமை சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி வழக்கில் நேற்றயைதினம் சாட்சியமளிப்பதற்காக பேராசிரியர் எஸ்லி அல்பே, ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய மற்றும் சண்டேலீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் ரஷ்மி விஜயவர்தன ஆகியோர் மன்றில் பிரசன்னமாய் இருந்தார்.

வழக்கு விசாரணை நேற்று முற்பகல் 11.15 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போது எழுந்த பிரதிவாதியின் சட்டத்தரணி நளீன் லது ஹெட்டி கருஜயசூரியவின் சாட்சியத்தை முதலாவதாக நெறிப்படுத்தவிருப்பதாக தெரிவித்ததை அடுத்து ஏனைய இரண்டு சாட்சிகளும் மன்றிலிருந்து வெளியேற்றுமாறு பணிக்கப்பட்டனர்.

இதனிடையே குறுக்கிட்ட சட்டத்தரணி பிரதிவாதியின் தரப்பில் ஆஜராகியிருக்கின்ற மன்றுமொரு சாட்சியான பேராசிரியர் எஸ்லி அல்பேயை மன்றிலிருந்து வெளியேற்றவேண்டிய தேவையில்லை என்று நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

குறுக்கிட்ட பிரதிசொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார சாட்சியாளர் நீதிமன்றத்திற்குள் இருப்பதனை நான் கடுமையாக எதிர்ப்பதாக அவர் முதலில் தெரிவித்தபோதிலும் பின்னர் அதற்கு இணக்கம் தெரிவித்ததை அடுத்தே ஐக்கியதேசியக்கட்சியின் எம்.பியான கரு ஜயசூரியவின் சாட்சியத்தை பிரதிவாதியின் சட்டத்தரணி நெறிப்படுத்தினார்.

கேள்வி: தற்போது பாராளுமன்ற உறுப்பினர்?
பதில்: ஆம்.

கேள்வி:ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவராகவும் பதவிவகிக்கின்றீர்கள்?
பதில்:ஆம்.

கேள்வி:சிற்சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளீர்கள்?
பதில்: ஆம்.

கேள்வி: 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்காக தேர்தல் நடவடிக்கையில் நீங்கள் ஈடுபட்டிருந்தீர்கள்?
பதில்:ஆம்.

கேள்வி: என்ன தேர்தல்?
பதில்: ஜனாதிபதி தேர்தல்.

கேள்வி:ஐக்கிய தேசியக்கட்சி எந்தவேட்பாளரை ஆதரித்தது?
பதில்: ஐக்கியதேசியக்கட்சி சரத்பொன்சேகாவை ஆதரித்தது.

கேள்வி:வேறுகட்சிகள் ஆதரித்தனவா?
பதில்: பிரதானமாக ஐக்கியதேசியக்கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவளித்தன.ஏனைய சிறு சிறு கட்சிகளும் ஆதரவளித்தன.

கேள்வி: ஐக்கிய தேசியகட்சியின் தொடர்பாளராக இருந்தீர்கள்?
பதில்: முழுமையான ஒத்துழைப்பு நல்கினேன் காரியாலயமும் திறக்கப்பட்டது.

கேள்வி:ஜனாதிபதி தேர்தல் ஞாபகமா?
பதில்: ஜனவரி மாதத்தில்.

கேள்வி: தேர்தல் நடவடிக்கையை எப்போது ஆரம்பித்தீர்கள்?
பதில்: வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து.

கேள்வி: சண்டே லீடர் பத்திரிகையில் செய்தி வெளியான திகதி ஞாபகமா?

பதில்: 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி.

கேள்வி: ஏதாவது நடவடிக்கையை மேற்கொண்டீர்களா?
பதில்: சண்டே லீடரில் அந்த செய்தியை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தேன். சரத்பொன்சேகாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எனக்கு விளங்கப்படுத்துமாறு கோரினேன்.

கேள்வி:சரத்பொன்சேகா தெளிவுப்படுத்தினாரா?

பதில்: நான் கூறியதைபோல அந்த செய்தியில் இருக்கவில்லை . அது ஊடகவியலாளரின் கதையே தவிர என்னுடைய கதையல்லை என்றார். கரு ஜயசூரிய அவ்வாறு சாட்சியமளித்து கொண்டிருந்தவேளையில் நீதிமன்றத்தில் மின்சாரம் தடைப்பட்டது. விரைந்து செயற்பட்ட நீதிமன்ற பணியாளர்கள் மன்றின் கதவுகளை திறந்தபோதிலும் மின்சாரம் தடைப்படுவதை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்திய நீதிபதிகள் முற்பகல் 11.20 மணியளவில் மேற்படி வழக்கு விசாரணையை இன்று வரைக்கும் ஒத்திவைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் இந்தியா தலையிடும்: பொன்சேகா


நான் கூறியதைப் போல கிழக்கில் பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டது. வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் இந்தியாவின் தலையீட்டை தடுக்கமுடியாது என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். கிழக்கில் வங்கியை பொதுமக்கள் கொள்ளையிடவில்லை பயங்கரவாதிகளே கொள்ளை யிட்டுள்ளனர்.

அதேபோல எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம் என்றும் அவர் சொன்னார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் டிரயல் அட்பார் முறையில் நடைபெற்றுவருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கிற்கு நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டபோதும். வழக்கு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்துவரப்பட்டவேளையில் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில், நான் கூறியதை போலவே கிழக்கில் பயங்கரவாதம் தலைத்தூக்கிவிட்டது. கிழக்கில் வங்கியை பொதுமக்கள் கொள்ளையிடவில்லை பயங்கரவாதிகளை கொள்ளையிட்டுள்ளனர் என்றார்.

இதேவேளை வழக்கு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் மன்றை விட்டுவெளியேறுகையில், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். அம்மக்கள் தொடர்ந்து துன்பப்பட்டால் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் எமது பிரச்சினையில் தலையிடும். அதற்கு இடமளிக்கமுடியாது. எமது பிரச்சினையை நாமே தீர்ப்போம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

4 ஜூலை, 2011

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான விவாதம்

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை விரைவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கொன்சவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்கோட்டின் தகவல்படி இன்னும் விவாதத்துக்கான உறுதிப்படுத்தப்பட்ட திகதி குறிக்கப்படவில்லை.

இலங்கையில் சமாதானத்தையும் நீதியையும் நிலை நாட்டுவது தொடர்பிலேயே இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இந்தப் பிரேரணை 52 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் இலங்கை தொடர்பில் பரிந்துரைத்துள்ள போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளல் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு தொழிற் கட்சியும் ஆதரவளிக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

முச்சக்கர வண்டியில் நான்கு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்ல முடியும்

முச்சக்கரவண்டியில் இனிமேல் நான்கு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்லமுடியும் என்பதுடன் நான்கு பயணிகளுக்கு மேலதிகமாக ஏற்றிச்செல்லும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து பொலிஸினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவிக்கையில்,

முச்சக்கரவண்டியில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்செல்வது சட்டவிரோதமானது. அந்த விதியை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். முச்சக்கரவண்டிகள் வீதிவிபத்துகளில் சிக்கிக்கொள்வதற்கு இதுவே பிரதான காரணமாகும்.

முச்சக்கரவண்டியில் அதிகபட்சமாக நான்குபேரை மாத்திரமே ஏற்றிச்செல்லவேண்டும் இதுவே பாதுகாப்பானது. அதனை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

லோட்ஸ் மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய இளைஞர்

லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இளைஞர் ஒருவர் புலிக் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேற்று இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதன்போது தமிழ் இளைஞர் ஒருவர் விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியவாறு மைதானத்தினுள் ஓடியுள்ளார்.

இதனையடுத்து அவர் அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி வழங்க இந்தியா இணக்கம்

இந்திய, இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான இரண்டு நாள் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை புதுடில்லியில் நிறைவடைந்தது. இக்கலந்துரையாடலில் இலங்கை இராணுவத்தின் வினைத்திறனை முன்னேற்ற இந்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதன் போது இந்திய இராணுவக் கல்லூரிகளில் இலங்கை இராணுவத்தினருக்கு கல்வி சம்பந்தமான பயிற்சிகளை அதிகளவில் வழங்குதல், கலகத் தடுப்பு நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்வது போன்ற விடயங்களில் இரண்டு தரப்பும் இணக்கத்தை வெளியிட்டன.

இதனைத் தவிர இலங்கை இராணுவத்தினருக்கு பல பயிற்சித் திட்டங்களையும் வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. இதில் மனிதாபிமான பயிற்சிகளும் உள்ளடங்கும். ஆங்கிலப் பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறையிலும் இந்தியா, இலங்கை இராணுவத்துக்கு உதவவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவில் திரையிடப்படவிருக்கும் சனல்4 ஒளிப் பதிவுக் காட்சி

இந்திய தஞ்சை மாவட்ட திலகா திடலில் இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு நாளையொட்டி சுடரேந்தி உறுதியேற்கும் நிகழ்ச்சி எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை தமிழர் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தஞ்சை தெற்கு வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனியஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமை தாங்கினார்.

தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியின் மாவட்ட செயலாளர் பழ. ராசேந்திரன், தமிழர் தேசிய பேரவை தலைவர் துரை குபேந்திரன், அறிவியல் பேரவை தலைவர் பேராசிரியர் பாரி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்து உத்திராபதி, உடல் உழைப்பு சங்க பொதுச் செயலாளர் வெ. சேவையா, கும்பகோணம் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் துரை மதிவாணன், இந்திய கம்யூனியஸ் கட்சி நகர செயலாளர் ராசேந்திரன், மக்கள் விடுதலை கட்சி மாநிலக்குழு உறுப்பினர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எதிர்வரும் 8ஆம் திகதி இந்தியா முழுவதும் இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு நாளாக நடைபெறுவதையொட்டி தஞ்சை திலகர் திடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுடரேற்றி உறுதியேற்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும்.

கட்சி, சாதி, மத பேதங்களை கடந்து தமிழின உணர்வாளர்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரும் எதிர்வரும் 8ஆம் திகதி அணி திரள வேண்டும் என இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு தின கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. அன்றைய தினம் ஈழத் தமிழர்கள் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட துயரங்கள் ஆவணப்படமாக திரையிடப்படுகிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

3 ஜூலை, 2011

பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவால் கனேடிய தமிழர் ஒருவர் சித்திரவதை

கனடாவின் குடியுரிமையை பெற்ற இலங்கை தமிழர் ஒருவர் இலங்கையின் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக "த நெசனல் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 3 ஆண்டுகளாக 40 வயதான ரோய் மனோஜ்குமார் சமாதானம் என்பவர் இலங்கைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் தாம் ஆயுதம் கடத்தியதாக பொய்யான வாக்குமூலம் வழங்கும் வரை சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பயமுறுத் தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கனடாவுக்கு திரும்பியுள்ள அவர், தாம் இலங்கையில் மூன்று இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் மிகமோசமான முறையில் இலங்கை யின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம், அதன் மேல் சுமத் தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகிறது. எனினும் அந்த நாட்டின் சிறைகளில் சித்திரவதைகள் இடம்பெறுவதற்கு தாம் ஒரு சாட்சி என்று மனேஜ்குமார் குறிப் பிட்டுள்ளார். இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுகின்றனர்.

அத்துடன் பணம் பறிப்பதற்காக எப்போதும் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் 50 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப் பட்டு வருகிறார்கள் என்றும் மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டை ஐ.நா. சபை விசாரிக்க வேண்டும்: ம.ம.ச.க

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என மலேஷிய அரசியல் கட்சி ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. மலேஷிய மக்கள் சக்தி கட்சியே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அந்த கட்சியினர் மலேஷியாவிலுள்ள ஐ.நா பணியகத்திடம் மனுவொன்றை கையளித்துள் ளனர்.

ஐ.நா சபையின் நிபுணர் குழு அறிக்கை யின்படி இலங்கை மீது அனைத்துலக குற்ற வியல் நீதிமன்றம் விசாரணைனகளை மேற் கொள்ள வேண்டும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். கண்ணன் தெரிவித் துள்ளார்.

மலேஷியா இலங்கையில் முதலீடுகளை செய்துள்ள ஒரு நாடாகும். இதனால் இலங்கை யிலுள்ள தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் அவர்களுக்குரிய உரிமையுடனும் வாழுவ தற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என மலேஷிய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பலஸ்தீனத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஐ.நா சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண் டும் என மலேஷிய மக்கள் சக்தி கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பான் கீ மூன் ஏற்றுக் கொண்டாராம்: பர்ஹான் ஹக்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் குறித்த பரிந்துரையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு நேற்று முன்தினம் அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட போரின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பினர் கிளிநொச்சியிலிருந்து வெளியேறியமை, சேத விபரங்களை வெளியிடாமை போன்ற விடயங்கள், சர்வதேச சட்டங்களுக்கு அமைய, தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகள் சரணடைய பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் வழங்கியதாக கூறப்படும் உறுதி, அதன் பின்னர் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான பரிந்துரையே அதுவாகும் என்று பர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக் கப்படுகின்றது.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் ஏனைய முகவர் நிறுவனங்களிடமும் நிபுணர் குழு அறிக்கை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு வரு கிறது. இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பான் கீ மூனை நாளை மறுதினம் 5ஆம் திகதி சந்திப்பார் என்றும் பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சனல் 4 அலைவரிசை ஒளிபரப்பிய படத்தின் மூலப்பிரதிகள் கண்டுபிடிப்பு: பஷில்

"இலங்கையின் கொலைக்களங்கள்'' என்ற தலைப்பில் சனல் 4 அலைவரிசையினால் ஒளிபரப்பப்பட்ட படத்தை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உண்மையான, மாற்றம் எதுவும் செய்யப்படாத வீடியோ பதிவுகள் கிடைத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். நாட்டுக்கு எதிரான சில வெளிநாட்டுச் சக்திகளுக்கு இந்நாட்டிலுள்ள சிலர் உதவுவதாக அவர் குறிப்பிட்டார். சில டொலர்களுக்கும் யூரோக்களுக்கும் அடிமையாக வேண்டாம் என தாம் அவர்களை கோருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, சனல் 4இல் வெளியான காட்சியில் பின்னணியில் இருப்பவர்கள் சிங்கள மொழியில் உரையாடுவதைப் போன்றே வீடியோ அமைந்திருந்தது.

ஆனால், தற்போது இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிடமிருந்து தமக்கு கிடைத்ததாக இலங்கை அரசாங்கம் கூறுகின்ற, மாற்றம் செய்யப்படாத அசல் வீடியோ என்று வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சியில் பின்னணியில் இருப்பவர்கள் தமிழ் மொழியில் உரையாடுவதை போன்று காட்சி அமைந்திருக்கின்றது.

சனல் 4 வீடியோவிலும், தற்போது இலங்கை யில் வெளியாகியிருக்கும் வீடியோவிலும் "காட்சிகளில் பெரிதளவு வித்தியாசங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை'.

பின்னணியில் கேட்கும் மொழியில் மட்டுமே வித்தியாசம் தெரிகிறது. சனல் 4 தொலைக்காட்சி வீடியோவில் சிங்கள மொழி யில் குரல்கள் கேட்கின்றன. ஆனால் தற்போது இலங்கையில் வெளியாகியுள்ள வீடியோக் காட்சியில் பின்னணிக் குரல்கள் தமிழ் மொழியில் கேட்கின்றன இதேவேளை, இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றி சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று ஐ.நாவும் பல் வேறு நாடுகளும் கோரி வருகின்றமை குறிப் பிடத் தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

2 ஜூலை, 2011

மட்டக்களப்பில் இன்னும் சில குழுக்கள் ஆயுதங்களை வைத்திருக்கின்றன: கிழக்கு கட்டளைத் தளபதி

மட்டக்களப்பில் இன்னும் சில குழுக்களிடம் ஆயுதங்கள் உள்ளன. இந்த ஆயுதங்களை தேடி கண்டு பிடித்து அவற்றை அழிப்போம் என்று கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பெரேரா தெரிவித்தார்.

மட்டக்களப்பு டேத்பா மண்டபத்தில் நடைபெற்ற வங்கிகளின் உத்தியோகத்தர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு புறநகர் பகுதி புதூரில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வங்கிக் கொள்ளைச் சம்பவத்தையடுத்து இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நேற்று இக்கூட்டம் நடைபெற்றது.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மட்டக்களப்பு புதூர் மக்கள் வங்கியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்ட சம்பவமாகும். ஐந்து பேர் ஆயுதங்களுடன் சென்று இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, அம்பாறை, பொலனறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் கடந்த ஒன்றரை வருடத்தின் பின்னர் இவ்வாறான கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நடவடிக்கை சட்டவிரோத ஆயுதங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவங்களோடு ஒரு சில அரசியல் வாதிகளுக்கும், சில அரசியல் குழுக்களும் தொடர்பு உள்ளன.

எந்த அரசியல் சக்தியாக இருந்தாலும், அல்லது எந்த அரசியல்வாதியக்ஷிக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு உடன் நடவடிக்கை எடுப்பேன்.

இந்த நாட்டின் அரசாங்க படைகளைத் தவிர வேறு யாரும் ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது. அவ்வாறு ஆயுதம் வைத்திருப்பவர்கள் உடனடியாக ஆயுதங்களை ஒப்படைத்து விட வேண்டும் அவ்வாறு ஒப்படைத்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

அவ்வாறில்லாமல் தேடி கண்டு பிடித்தால் உரியவர்களுக்கெதிராக மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மட்டக்களப்பில் சில குழுக்களிடத்தில் ஆயுதம் இருப்பது நம்பகமாக எனக்கு தெரிய வந்துள்ளது. இந்த ஆயுதங்களை தேடி கண்டுபிடிப்பதற்காக சுற்றிவளைப்புகள், திடீர் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் வீதித்தடைகள் என்பன மேற்கொள்ள வேண்டி ஏற்படும்.

பொதுமக்கள் இவ் விடயத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். யாரிடமாவது ஆயுதம் இருந்தால் பொதுமக்கள் எமக்கு அறிவிக்க வேண்டும்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் பாதுகாப்பு வழங்குவார்கள். இதை வெற்றிகரமாக முன்னெடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

பலவிதமான பயங்கரவாதக் குழுக்கள் இங்கிருந்தன. அவ்வாறான பயங்கர வாதக் குழுக்களை அழித்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு இங்கு இடமில்லை. அபிவிருத்திக்கும், சமாதானத்திற்குமே இடமுண்டு.

அபிவிருத்திக்கும், சமாதானத்திற்கும் யாராவது தடையாக இருந்தால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இரண்டு வங்கி கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று களுவாஞ்சிக்குடியிலும், மற்றது, புதூரிலுமாகும். இதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்களுக்கான நடவடிக்கை கடுமையாக இருக்கும். ஆகவே பொதுமக்கள் பாதுகாப்பு தரப்பினரின் அறிவித்தலை கடைப்பிடித்து நடக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தெரிவுக் குழு அமைத்து நாட்டு மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது: கரு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வகையான தீர்வு வழங்கினாலும் அதற்கு ஐக் கிய தேசியக் கட்சி முழு அளவில் ஆதரவு வழங்கும். ஆனால் தெரிவுக் குழுக்களை அமைத்து நாட்டு மக்களையும் சர்வதேச நாடுகளையும் ஏமாற்ற முயற்சிப்பதை எம் மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐ. தே. க. வின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய தெரிவித்தார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு உள்ளது. அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி குழுவின் தீர்வு திட்ட யோசனை உள்ளது. மேலும் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளது. எனவே இனியும் தெரிவுக் குழு அமைப்பது என்பது போலி நாடகமாகவே அமைகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தொடர்ந்தும் கூறுகையில், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கட்டாய கடமையாகும். எனவே தமிழ் மக்களுக்கான தீர்வில் ஐ. தே.க. முழு அளவில் ஆதரவு வழங்கி செயற்படும். ஆனால் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக் கொள்ள காலம் கடத்தாது தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும்.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுக்கள் போதாதென்று இன்னுமொரு பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைத்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பது என்பது இழுத்தடிப்பு வேலையாகும். அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து தீர்வு தேட வேண்டிய அவசியம் கிடையாது.

தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்காக அரசாங்கம் முன் வைக்க விரும்பும் தீர்வுத் திட்டத்தை முதலில் வெளிப்படுத்த வேண்டும். அத் திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதால் அதற்கு தேவையான திருத்தங்களை ஏனைய அரசியல் கட்சிகளுடன் விவாதித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். இதை விட்டு விட்டு வெறும் பேச்சு வார்த்தைகளினால் காலத்தை கடத்துவதில் பயனில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் ஐ.நா. செயலாளர் மூனை சந்திப்பார்



அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 5ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து பேசவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துøரயாடியுள்ளர்.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கை காரியாலயத்துக்கான பிரதி துணை செயலாளர் அலிசியா அயர்ஸையும் இவர் சந்தித்து இலங்கையின் சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

1 ஜூலை, 2011

ஆமைகளின் படையெடுப்பால் நியூயோர்க் கெனடி விமான நிலையத்தில் பரபரப்பு




அமெரிக்க நியூயோர்க் நகரில் உள்ள கெனடி விமான நிலையத்தில் நேற்று காலை விமானங்கள் புறப்படத் தயாராக இருந்த நிலையில், திடீரென ஆமைகள் விமான ஓடுபாதையை நோக்கி படையெடுத்தமையினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

அந்நாட்டு நேரப்படி காலை 6.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.



அவை முட்டை இடுவதற்காக கடற்கரை நோக்கி செல்வதற்கு மாறாக, விமான நிலையத்திற்குள் வந்ததமை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்நாட்டு துறைமுக அதிகாரசபை மற்றும் அமெரிக்க விவசாய துறை ஊழியர்கள் விரைந்து ஆமைகளை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

பின்னர் இவற்றை விமான நிலையத்திற்கு வெளியே உள்ள கடற்கரை பகுதியில் விடுவித்துள்ளனர்.

இதனால், விமானங்கள் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

சனல் 4 நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதனை அமைச்சே தீர்மானிக்கும்: அனுர

சனல் 4 நிறுவனம் வெளியிட்ட வீடியோக் காட்சிகள் பொய்யானவை அது முழுமையாகவே நிர்மாணிக்கப்பட்ட படமாகும். அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதா? இல்லையா? என்பதனை வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

சனல் 4 நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள படம் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட படமாகும். அதனை ஏற்றுக்கொள்வதற்கோ இன்றேல் பதிலளிப்பதற்கோ அரசாங்கம் தயாரில்லை எனினும் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சின் ஊடாகவும் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியின் ஊடாகவும் சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த படத்தில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு செயற்பாடுகளும் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன் அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதா இல்லையா என்பதனை வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு பாதுகாப்பு தொடர்பாக இராணுவத்தினரால் உயர்மட்ட மாநாடு

மட்டக்களப்பு நகரில் நேற்று மாலை இடம்பெற்ற வங்கிக்கொள்ளைச் சம்பவத்தையடுத்து வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் மாவட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் உயர் மட்ட பாதுபாப்பு மாநாடு இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி பொனிபஸ் பெரேரா தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வங்கிகளின் முகாமையாளர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஈரோஸ் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் புணாணை இராணுவ தளபதி பிரிகேடியர் மகிந்த முதலிகே மட்டக்களப்பு 234வது படைப்பிரிவு கட்டளை தளபதி பிரிகேடியர் செனவிரத்ன மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் சுதந்திரமான தேர்தலுக்கு அரசாங்கம் வழி வகுக்கவேண்டும்: ஐ.தே.க




வடக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் கட்சிகள் சுதந்திரமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்குமான சூழலை அரசாங்கம் அங்கு ஏற்படுத்தவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

வடக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேலும் குறிப்பிடுகையில் :

வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் அதிகமான உள்ளூராட்சிமன்றங்களுக்கு இம்மாதம் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வடக்கில் தேர்தல் சுதந்திரமதாகவும் நேர்மையாகவும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டியில் அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது அந்த சந்தேகத்தை அதிகளவில் ஏற்படுத்துகின்றது.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்பதுடன் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்குமான சூழலை உருவாக்கவேண்டும். இதேவேளை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி சிறந்த முறையில் தயாராகி வருகின்றது. இவ்விடயம் குறித்து ஆராய எமது கட்சியின் சார்பில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவானது வடக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளையும் பிரசார பணிகளையம் ஒருங்கிணைக்கும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புதுநகர் மக்கள் வங்கியில் 37 இலட்சம் ரூபா பணமும் நகைகளும் கொள்ளை




மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திமிலைத்தீவு புதுநகர் பிரதேச மக்கள் வங்கிக்கிளைக்குள் உட்பிரவேசித்த ஆயுததாரிகள் 37 இலட்சம் ரூபா பணத்தையும் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த துணிகரச் சம்பவம் நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் இடம் பெற் றுள்ளது. வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகளே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். வங்கிக்குள் திடீரென இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த நபர்கள் வங்கியில் கடமையிலிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி அறையொன்றினுள் பூட்டி வைத்து விட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியினை பறித்து உடைத்துவிட்டே இந்தக் கொள்ளையில் ஆயுததாரிகள் ஈடுபட்டுள்ளனர். வங்கியின் முகாமையாளர் நேற்றைய தினம் வங்கிக்கு சமூகமளித்திருக்காத நிலையில் ஏனைய மூன்று பெண் ஊழியர்கள் மாத்திரமே வங்கியில் கடமையிலிருந்துள்ளனர். இந்த நிலையிலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஆயுததாரிகள் வந்த வேனில் வங்கியொன்றின் முத்திரை பதிக்கப்பட்டிருந்ததாகவும், ஐந்து பேர் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புதுநகர், மக்கள் வங்கிக் கிளை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமே கடந்துள்ளது. படுவான்கரை பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலேயே இந்த வங்கிக்கிளை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழருக்கு சுய உரிமை வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்து




இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை. அவை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சுய உரிமை வழங்கப்பட வேண்டும். இதனை இந் தியா வலியுறுத்தி வருகின்றது என இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் பத்திரிகைகளின் ஆசிரியர்களை புதன்கிழமை காலை சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறுகையில், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கடந்த 14 ஆம் திகதி விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கை தமிழர் பிரச்சி னை யை ஜெயலலிதா நன்றாக அறிந்தவர். எனவே இப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் அவர் மிக அக்கறை கொண்டு மத்திய அரசுக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சீனாவின் யுவான் நாணயத்தை இலங்கையில் பயன்படுத்தலாம்




அனுமதியளிக்கப்பட்ட வங்கிகளில் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளில் சீனாவின் யுவான் நாணயத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளில் யுவான் நாணயத்தை பயன்படுத்துவதற்கு அனுமதியளிப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீடுகளுக்கு உதவும் என மத்திய வங்கி தனது இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலர், யூரோ, ஜப்பானிய யென் உட்பட 13 வெளிநாட்டு நாணயங்களிலும் சர்வதேச வங்கிச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதியளிக்கிறது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...