9 பிப்ரவரி, 2010


பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது : பிபிசியிடம் ரணில் கண்டனம்




ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க.

அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார்.

மேலும்,

"சரத் பொன்சேகாவின் கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் ஒரு செயல்.

அவர் கைது செய்யப்பட்டுள்ளதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இதுகுறித்து பலதரப்பினருடனும் நான் பேசி வருகின்றேன். அனைவரும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.

இது சில இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல். அவர் மீது ஏதாவது குற்றசாட்டுக்கள் இருந்தால், அவை வழக்கமான நடைமுறைப்படி நீதிமன்றங்கள் முன்னால் விசாரிக்கப்பட வேண்டும்.

அடிப்படை உரிமைகளை மீறும் செயல்

இராணுவச் சட்டங்களின் கீழ் இந்தச் செயல் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறுவதே சட்ட விரோதமானது. நடு இரவில் ஒருவரை கைது செய்வது என்பது அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு செயல்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது நாட்டில் மேலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். உலகம் முழுவதிலுமிருந்து இதற்கு கண்டனம் எழுப்பப்படும்.

ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது முறையற்றது.

போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வருமானால், சாட்சியம் அளிக்கத் தயார் என சரத் பொன்சேகா தெரிவித்தது கூட அவரது கைதுக்குக் காரணமாக இருக்கலாம்" என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிபிசியிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

விசா காலாவதியான பின்னர் தங்கியிருப்போர் தண்டனைக்குரியோர் பட்டியலில் சேர்க்கப்படுவர்




விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை தண்டனைக்குரியவர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கான சட்டம் ஒன்றை கொண்டுவருவதென குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டதிகாரியும், விசாரணைப்பிரிவுத் தலைவருமான வில்லியம் தேவேந்திரராஜா தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா, வட அமெரிக்கா, சார்க் ஆகிய பிராந்தியங்களில்பு தேர்ந்தெடுக்கப்பட்ட 84 நாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு வந்திறங்கியதும் விசா வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் சிலர் பிரதானமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருவோர் இந்த வசதியை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர் என்று தேவேந்திரராஜா தெரிவித்தார்.

இந்த 84 நாடுகளிலிருந்து வரும் பிரயாணிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இங்கு வந்திறங்கியதும் 30 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களது நாடுகளைப் பொறுத்து ஒரு நியாயமான கட்டணத்தில் மொத்தம் இரண்டு மாதங்களுக்கு அல்லது 90 நாட்களுக்கு அவர்களது விசாக் காலம் நீடிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய வசதிகளுக்கு மத்தியிலும் பெருமளவிலான சுற்றுலா பயணிகள் சட்டத்தை மீறி இங்கு பணியாற்றிவரும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் ஆகியோரிடம் தற்காலிக அடிப்படையில் வேலைசெய்து வருகிறார்கள். சீனர்கள் வீதிகளில் அலைந்து திரிகிறார்கள் அல்லது கசினோ சு??தாட்ட கழகங்களில் சுற்றித் திரிகிறார்கள்.

இத்தகைய அத்துமீறல்களை கண்டுபிடிப்பதற்காக தமது தலைமையில் விசாரணை நடத்தியதாக தெரிவித்த தேவேந்திராஜா சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அல்லது நாட்டின் குடிவரவுச் சட்டங்களை மீறுவதாக உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறினார்.

சட்டத்தை மீறுவோர் உடனடியாக நாடுகடத்தப்படுவது மட்டுமன்றி மீண்டும் அவர்கள் இந்நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாதபடி அவர்களது பெயர் தண்டனைக்குரியவர்களது பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் தேவேந்திரராஜா கூறினார். அத்தகைய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் மேன்முறையீடு செய்வதன் மூலம், ஒரு ஜனாதிபதி மன்னிப்பு முறைமையின் கீழ் மாத்திரமே இத்தகையோர் மேற்படி தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்




சின்னங்கள் வேறாக இருப்பினும் நல்லாட்சியை ஏற்படுத்த ஐ.தே.க.வுக்கு ஆதரவு:ஜே.வி.பி கூறுகிறது



வெவ்வேறாக இருப்பினும், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 'யானை' சின்னத்தில் போட்டியிடுமாயின் ஜே.வி.பி. பெரும்பாலும் தனது சின்னமான 'மணி' சின்னத்திலேயே போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு குறித்து நேற்று திங்கட்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

" நடைபெறவுள்ள பாராளுமன்றத்தில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை இறுதியான முடிவு எதுவும் எடுக்கவில்லை. சகல கட்சிகளுடனும் குறிப்பாக பிரதான எதிர்க் கட்சியான ஐ.தே.க.வுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

'யானை' சின்னத்தின் கீழ் ஒரு போதும் ஜே.வி.பி. போட்டியிடாது. அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தனது சின்னத்தில் போட்டியிடுமாயின் ஜே.வி.பி. 'மணி' சின்னத்திலேயே பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும்.

எவ்வாறாயினும் இறுதிக் கட்ட தீர்மானங்கள் எதுவும் இதுவரை எடுக்கவில்லை. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க.வும் ஜே.வி.பி. யும் வெவ்வேறாக போட்டியிடும் நிலை ஏற்பட்டாலும் தேசிய செயற்பாடுகளில் ஓரணியாகவே செயற்படுவோம்.

எமது இலக்கு நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து தற்போது காணப்படும் சர்வாதிகார ஆட்சியை முடிவிற்கு கொண்டு வருவதாகும் எனக் கூறினார்.திகார ரீதியிலான மாற்றங்களில் எமது அதிகாரிகளிடம் எதிர்பார்க்கப்படும் நடு நிலை தவறாமை நல்ல ஆளுகைக்கு பங்கம் விளைவிக்கும்.

தேர்தலின் பின்னால் வேட்பாளர்கள் அவர்கள் ஆதரவாளர்கள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திய தகவல்துறையினர் அச்சுறுத்தப்படுவது துன்புறுத்தப்படுவது தீய பழக்கம்.

தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன் காணாமல் போன பத்திரிகையாளர் எக்னாலி கொட குறித்த தகவலை எதுவும் அறிய முடியாதுள்ளது. இவ்வேளையில் மிகுந்த கலவரத்தை உருவாக்கும் இந்த செய்தி குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் பகிர்வு நல்ல அளுமை ஊடக சுதந்திரம், பொருளாதார அபிவிருத்தி, இல்லாமையினால் உள்ளவர்களுக்கு சமத்துவ உரிமை நடைமுறைப்படுத்தல், சுயாதீனமான நீதித்துறை, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றை எமது தேசம் எதிர்கொள்ளும் போது இப்படியானவற்றிற்கு நாம் கூட்டாக முன்னுரிமை கொடுத்து இன்றிலிருந்து கரிசனையுடன் செயல்பட வேண்டும். ஜனாதிபதியை அமைச்சரவையை எதிர்க்கட்சிகளை இந்த குறித்த இலட்சியங்களை நோக்கி செயல் நோக்குடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வற்புறுத்துகிறோம்



ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது குறித்து சர்வதேசம்
மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா ஆகியன விடுத்துள்ள கருத்துக்கள் :




சர்வதேச மன்னிப்பு சபை

இலங்கையில் அரசியல் எதிர்கட்சியை உடைப்பதற்கான முதல்படியே சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கையாகும் என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற சரத் பொன்சேகா நேற்றிரவு கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்துள்ள லண்டனை மையமாகக் கொண்ட சர்வதேச மன்னிப்பு சபை, தேர்தலுக்கு பின்னர் அரசியல் எதிர்க்கட்சியை உடைக்கும் அரசாங்கத்தின் செயலையே இது பிரதிபலிக்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சேம் சாராபி இது தொடர்பில் கருத்துரைக்கையில், சரத் பொன்சேகாவின் கைது தேர்தலுக்கு பின்னரான அடக்குமுறை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் வெற்றியின் பின்னர், தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிக்கொண்ட பின்னரும் நாட்டின் மனித உரிமைகளை சிறந்தமுறையில் பேணவேண்டும் எனவும் பொன்சேகா மீது போர்க்குற்றங்கள் இருக்குமாயின் அதனை நியாயமான முறையில் விசாரணை செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

ஐநா செயலாளர் பான் கீ மூன்

இலங்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையை அடுத்து அங்குள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளைக் கையாளக்கூடாது என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக, செய்தியாளர்கள் பான் கீ மூனின் பேச்சாளரிடம் வினவியபோது, இந்த சம்பவத்தின் பின்னர் அமைதியைக் கடைப்பிடிப்பது நாட்டின் சமாதானத்திற்கும் இணக்கப்பாட்டுக்கும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தல் காலங்களில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் மக்கள் கோபமூட்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கைது, இலங்கையில் யுத்த மீட்சிக்குப் பின்னர் பாரிய பிளவுகளுக்கு வழியை ஏற்படுத்திவிடும் என அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக கருத்துரைத்துள்ள, அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் பிலிப் கிரௌலி,

"அமெரிக்கா இலங்கை நிலைமையை அவதானித்து வருகிறது. அத்துடன் இலங்கையின் சட்டங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளையும் உன்னிப்பாக அவதானிக்கிறது.

இலங்கை அரசாங்கம், சமூகத்தில் ஏற்படும் அமைதியின்மையைப் போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை, இலங்கையின் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

இலங்கை அரசாங்கம், ஜனநாயக விழுமியங்களுக்கு இடம்கொடுக்க வேண்டும். பொதுத் தேர்தல் நடைபெறப் போகும் இச்சந்தர்ப்பத்தில், இந்த கைது நடவடிக்கை தேவையற்ற செயல்" என்றார்.

சரத் பொன்சேகா, அமெரிக்க 'கிரீன் கார்ட்' வதிவிட அனுமதியைக் கொண்டுள்ள நிலையில் இந்த கருத்தை அமெரிக்கா வெளியிட்டிருப்பது இலங்கையின் அரசியல் மட்டத்தில் விமர்சனங்களைக் கொண்டுவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது




தமிழ் பிரதேசங்களில் வாக்களித்தோரின் மௌனம் குறித்து மிகுந்த கவனம் எடுக்கவேண்டும்:6 பேராயர்கள் கூட்டறிக்கை




வேட்பாளர்கள் இருவரும் தமிழ் மக்களின் துன்ப இயல்நிலை குறித்து கொடுத்த செய்தி அவர்களின் உரிமைகளுக்கு திருப்தி தராதபோது இத்தேர்தலில் அவர்கள் அதிக நம்பிக்கை காட்டவில்லை என்பதை அவர்களின் இந்த நடவடிக்கை காண்பிக்கலாம்.

அவர்களின் எதிர்பார்ப்புக்கள் எதுவும் கவனத்தில் எடுக்காததை அவர்கள் காட்டிய மௌனம் தெளிவாக்கியது.இவ்வாறு பேராயர்கள் அறுவர் கடந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ரோமன் கத்தோலிக்க ஆயர் பேரருட்திரு கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, திருகோணமலை மட்டக்களப்பு ரோமன் கத்தோலிக்க ஆயர் பேரருட்திரு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, மன்னார் ரோமன் கத்தோலிக்க ஆயர் பேரருட்திரு கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை, குருநாகல் அங்கிலிக்கன் பிரதம ஆயர் அருள் பணி குமார இலங்கசிங்க ஆண்டகை, கொழும்பு அங்கிலிக்கன் ஆயர் அருள் பணி டூலிப் டி சிக்கேரா ஆண்டகை, அனுராதபுரம் ரோமன் கத்தோலிக்க ஆயர் பேரருட்திரு கலாநிதி றொபேட் அந்டராடி ஆண்டகை ஆகியோரே இந்த அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் பிரதேசங்களில் வாக்களிக்காத அதிகமானோரின் மௌனம் குறித்து நாடு மிகுந்த கவனம் எடுக்க வேண்டும். போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் இடம் பெயர்ந்தவர்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டனர்.

எப்படி வாக்களித்தார்களென மதித்துப் பாராமல் தேர்தல் பிரசாரங்களில் நடந்த மூன்று மனப்பாங்குகளை இலங்கையர்கள் அநேகர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவை வருமாறு:

தேவையற்ற ஊடக பிரகடனங்களின் தூண்டுதலில் தனிப்பட்டவர் மேல் அவதூறுகள் தொடர்ந்து செய்தல். மக்கள் குரலுக்கு மெய்யான விடயங்களை அறிந்து கொள்ளும் தருணம் மறுக்கப்பட்டது.

தேர்தல் சட்டங்கள் வேண்டுமென்றே மீறப்பட்டமை கவலைக்குரியது. பிரசார நடவடிக்கைகளிற்கு அதிகளவிலான பணம் விரயம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்தலொன்றை நாம் அண்மிக்கும் போது விசேடமாக எமது அரசியல் தலைவர் மேற்கூறப்பட்ட மனப்பாங்குகளை சீர் திருத்தி, தாமே கட்டளைக் கோர்வை என்ற தமக்குள் ஏற்படுத்த வேண்டும். இந்த மாற்றத்திற்கான வாக்காளரின் விருப்பத் தேர்வு எமது அரசியல் கலாசாரத்திற்கான நல்ல நிலை மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும்.

பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் பதவி நிறுத்தங்கள் ஏன் இராணுவ, காவல்துறை, பொதுத்துறை அதிகாரிகளின் பதவி விலகல்கள், அரசியல் நடவடிக்கையின் சன்மானம், தண்டனை ஆகியனவற்றின் சில வழிமுறைகள் என்ற கவலை தருகின்றன.

பொதுநிர்வாகிகளின் திறமை பாராட்டப்பட்டு தமது கடமையை சிறப்பாக பணிபுரிந்தவர்கள் போற்றப்படல் வேண்டும்.

எனினும் ஒரு பொதுநிகழ்வின் உடனடியாக ஏற்படுத்தப்படும் அத்கார ரீதியிலான மாற்றங்களில் எமது அதிகாரிகளிடம் எதிர்பார்க்கப்படும் நடு நிலை தவறாமை நல்ல ஆளுகைக்கு பங்கம் விளைவிக்கும்.

தேர்தலின் பின்னால் வேட்பாளர்கள் அவர்கள் ஆதரவாளர்கள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திய தகவல்துறையினர் அச்சுறுத்தப்படுவது தீய பழக்கம்.தேர்தலுக்கு இரு தினங்களுக்குமுன் காணாமல் போன பத்திரிகையாளர் எக்னாலி கொட குறித்த தகவலை எதுவும் அறியமுடியாதுள்ளது. இவ்வேளையில் மிகுந்த கலவரத்தை உருவாக்கும் இந்தச் செய்தி குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் பகிர்வு நல்ல ஆளுமை ஊடக சுதந்திரம், பொருளாதார அபிவிருத்தி, இல்லாமையினால் உள்ளவர்களுக்கு சமத்துவ உரிமை நடைமுறைப்படுத்தல், சுயாதீனமான நீதித்துறை, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றை எமது தேசம் எதிர்கொள்ளும் போது இப்படியானவற்றிற்கு நாம் கூட்டாக முன்னுரிமை கொடுத்து இன்றிலிருந்து கரிசனையுடன் செயல்பட வேண்டும்.ஜானாதிபதியை அமைச்சரவையை எதிர்க்கட்சிகளை இந்த குறித்த இலட்சியங்களை நோக்கி செயல் நோக்குடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வற்புறுத்துகிறோம்



ஜெனரல் சரத் பொன்சேகா கைது : இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏற்பாடு




இராணுவத் தளபதியும், கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமையதிகாரியும், ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவப் பொலிஸாரினால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்தே நேற்று திங்கட்கிழமை இரவு 9.50 மணியளவில் அவரை இராணுவப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இராணுவ இரகசியங்களை வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதியைக் கொலைச்செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்ற விபரங்கள் உடனடியாக வெளிவராத போதிலும், அவரை இராணுவ சட்டதிட்டத்தின் கீழ் இராணுவ நீதிமன்றத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு றோயல் கல்லூரி மாவத்தை, இலக்கம் 1/3 விலாசத்தில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இருந்த வேளையில் இராணுவப் பொலிஸாரால் அவ்வலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு கடமையிலிருந்த ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் மெய்ப்பாதுகாவலர், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வசமிருந்த ஆயுதங்களையே அவர்கள் முதலில் கைப்பற்றினர்.

இதனையடுத்து, அலுவலகத்திற்குள் உட்புகுந்த இராணுவப் பொலிஸார் அவரைக் கைதுசெய்து விசேட வாகனத்தில் கடும் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டதுடன், இராணுவப் பொலிஸார் அவரது அலுவலகத்தைச் சுற்றிவளைத்தமையினால் அப் பகுதியிலுள்ள வீதிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் ஆகியோரும் உடனிருந்துள்ளனர்.

அவர்களது பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் ஆயுதங்கள் அபகரித்துச் செல்லப்பட்டமையினால் அவர்கள் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலக அறையிலேயே பலமணி நேரமாகக் காத்திருந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்படும் வேளையில் அவருடன் இருந்தவர்கள் இரவு 10.40 மணிக்குப் பின்னரே அங்கிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனரல் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் இன்று அல்லது நாளை ஆஜர்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இராணுவ குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தன்னைக் கைதுசெய்யவோ படுகொலை செய்யவோ திட்டமிட்டுள்ளதாக பொன்சேகா ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்த வேளையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தைப் பதவி கவிழ்க்கும் சதிப்புரட்சிகளைத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிப்பதற்காக எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படக் கூடுமென அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஜனாதிபதித் தேர்தலின் போது, தனது வெற்றிக்காகப் பாடுபட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை காலை கலந்துரையாடுகையில், அதிகாரிகள் தெரிவிப்பது போன்று தான் சதித் திட்டம் தீட்டியது உண்மையானால் அரசாங்கம் தன்னைக் கைதுசெய்ய வேண்டும். தன்னைக் கைதுசெய்யத் தவறுவதிலிருந்து தம்மீதான குற்றச்சாட்டுக்கள் வதந்திகள் என்பது தெளிவாகின்றது என்று ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தமை



குளறுபடிகளை ஒப்புவிக்கும் பொறுப்பை திணைக்களம் தட்டிக் கழித்து விடக்கூடாது:கபே


தேர்தலில் வாக்கெண்ணப்பட்ட முறைமையில் காணப்பட்ட குளறுபடிகளை ஒப்புவிப்பதற்கான பொறுப்பு மற்றும் கடமை உங்களுக்கும் திணைக்களத்திற்கும் உண்டு என்பதனை நீங்கள் தட்டிக்கழிக்க மாட்டீர்கள் என எமது நிறுவனம் நம்பிக்கை கொள்கின்றது என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அந்நிறுவனம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனாதிபதி தேர்தலில் வாக்கெண்ணப்பட்ட முறைமையில் குளறுபடிகள் காணப்பட்டதாக எதிர்க்கட்சிகள் உங்களுடைய திணைக்களத்திற்கு பல்வேறு வகையிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றன.

இந்நிலையில்,வாக்கெண்ணும் மத்திய நிலையங்களிலிருந்து வெளியான தேர்தல் பெறுபேறுகளின் காபன் பிரதிகளை பெற்றுக்கொள்வது குறித்து உங்களுக்கு கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. அது மட்டுமன்றி அவ்விடயம் தொடர்பில் தொலைபேசியிலும் கலந்துரையாடினோம்.

ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளின் காபன் பிரதிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் கோரிக்கை விடுத்து ஒருவார காலம் கடந்து விட்டபோதிலும் உங்களிடமிருந்து எவ்விதமான பதில்களும் கிடைக்கவில்லை.

வாக்கெண்ணும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு கபே அமைப்பு அனுமதியை கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அதனால் பெறுபேறுகளின் பிரதான ஆவணத்தை எம்மால் சோதனைக்கு உட்படுத்துவதற்கு இயலாமல் போய்விட்டது.

வாக்கெண்ணப்பட்ட முறைமையில் காணப்பட்ட குளறுபடிகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் உங்களுடைய திணைக்களத்திற்கு பல்வேறு வகையிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றன. நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சி தொடர்பில் தேர்தலுக்கு முன்னர் கபே நிறுவனம் விசுவாசத்துடன் இருந்தது.

எனினும் வாக்கெண்ணும் நடவடிக்கை மற்றும் அது தொடர்பிலான ஆவணங்கள் தொடர்பில் உங்களால் பின்பற்றப்பட்ட கொள்கையை எங்களுடைய நிறுவனத்தினால் சந்தேக கண் கொண்டே பார்க்க வேண்டியிருக்கின்றது.

வாக்கெண்ணப்பட்ட முறைமையில் காணப்பட்ட குளறுபடிகளை ஒப்புவிப்பதற்கான பொறுப்பு மற்றும் கடமை உங்களுக்கும் திணைக்களத்திற்கும் உண்டு என்பதனை நீங்கள் தட்டிக்கழிக்க மாட்டீர்கள் என்று கபே நிறுவனம் நம்புகின்றது



அராஜக அரசியல் செய்கின்றவர்களுக்கு பொதுத்தேர்தலில் மலையகத் தமிழ் பதிலடி கொடுப்பர் : திகாம்பரம்



மலையகத்தில் மக்கள் செல்வாக்கை இழந்து வருகின்ற அரசியல் தொழிற்சங்க அமைப்புக்கள் அராஜகத்தில் ஈடுபட்டு தமது பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன.இவ்வாறான அமைப்புகளுக்கு மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபையின் உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

பொகவந்தலாவை வெம்பா தோட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தக்கூட்டத்தில் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :

"நடைபெற்று முடிந்த ஜனாதிபதித்தேர்தலில் பொகவந்தலாவைப்பிரதேச மக்களும் அன்னம் சின்னத்திற்கு அதிகமாக வாக்களித்தமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எந்தத்தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் மலையகத்தமிழ் மக்கள் தெளிவுடன் இருக்கின்றார்கள்.அதேபோல் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எவரிடமிருந்து சிறந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதையும் நடைபெற்று முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலிலும் இந்த மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.இதேபோல எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் மலையகத்தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிப்பதற்கு தயாராகிவருகின்றனர்.

கடந்த காலங்களில் மலையகத்திலிருந்து பல்வேறுபட்டவர்களைப் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்துள்ள போதும் இவர்களால் இந்த மக்களுக்கு உருப்படியான சேவைகள் கிடைக்கவில்லை.

எனவே எதிர்வரும் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் நானும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான உதயகுமாரும் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.எந்தச்சின்னத்தில் யாருடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிடுவது தொடர்பாக எமது கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவொன்றை எடுப்போம். நாம் மலையகத்தமிழ் மக்கள் மனமறிந்து சேவை செய்வதால் தான் மத்திய மாகாணசபைத்தேர்தலின் அமோகமாக வெற்றிப்பெற்றோம்.

அதேபோல எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் நுவரெலியா மாவட்ட மக்களின் அமோக ஆதரவுடன் பாராளுமன்றத்துக்குச் செல்வது உறுதியாகிவிட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்படுகின்ற பட்சத்தில் எம்மால் மலையக மக்களுக்குப் பல்வேறு சேவைகளை செய்ய முடியும்.தோட்டத்தொழிலாளர்களின் பல்வேறு விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக்கொண்டுவர முடியும்.

கடந்த காலங்களில் மலையகத் தோட்டப்பகுதி மக்களின் அபிவிருத்திக்காக மலையக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி உரிய வகையில் செலவிடப்படாததால் திறைச்சேரிக்கு திரும்பிச்சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமையை மலையகத்தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை.

தோட்ட மக்களின் பிரச்சினைகளை அனுபவத்தில் உணராதவர்களைப் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியதால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.எனவே இவ்வாறான நிலைமையைத் தொடரவிடக்கூடாது." எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி நாடு திரும்பினார்




ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 10.50 மணியளவில் நாடு திரும்பியுள்ளார்.

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானமொன்றின் மூலம் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்


மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேக்கா கைது






முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க் கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளருமான சரத் பொன்சேக்கா இராணுவ பொலிஸாரினால் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

இராணுவ குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே விசாரணைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இராணுவ சேவையிலிருந்தபோது அரசியல் தொடர்பாக கலந்துரையாடியமை, அரசாங்கத்திற்கெதிராக சூழ்ச்சிகளை மேற்கொண்டமை மற்றும் அரசியல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படை யாக வைத்தே விசாரணைகளை முன் னெடுப்பதற்காகவே இராணுவ பொலி ஸாரினால் சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவதற்காக கைது செய்யப்பட்டி ருக்கும் சரத் பொன்சேக்கா அவரது அலுவலகத்தில் வைத்தே கைது செய்யப் பட்டதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.



மன்னார் மீன்பிடித்தடை முற்றாக நீக்கம்




மீள் எழுச்சித் திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ. 12 கோடி ஒதுக்கீடு
மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்பொழுது முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.

மீனவ தொழிலாளர்களுக்கு இதுவரை அமுலில் இருந்த பாஸ் நடைமுறை மற்றும் கெடுபிடிகளும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் இந்த மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட கடற்படைத் தளபதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்தே கெடுபிடிகள் இன்றி மன்னார் மாவட்ட மக்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மீனவர்கள் தங்களது அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்துவிட்டு பாஸ் ஒன்றை எடுத்தே இதுவரை சென்றுவந்தனர் என்று குறிப்பிட்ட அமைச்சர் பாஸ் நடைமுறையும் முற்றாக நீக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் மீள் எழுச்சி திட்டத்தின் முதற்கட்டத்திற்கு என 12 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மன்னார் மாவட்டத்தின் மீள் எழுச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 கிராமங்களுக்கே இந்த முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தேச மீள் நிர்மாண அமைச்சு இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை மன்னார் மாவட்ட மக்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் அரசாங்கம் மன்னார் பி. எம். சி. சோதனைச் சாவடியில் அமுலில் இருந்த சோதனை நடவடிக்கைகளும் நேற்று முதல் அகற்றப்பட்டுள்ளது என்றார்.

இதற்கமைய இந்தப் பிரதேசத்தின் ஊடாக செல்லும் மக்கள் குறித்த சோதனைச் சாவடியில் இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.



யுத்தத்தால் பிரிந்துள்ள மனங்களை ஒன்றிணைத்து இலங்கையில் சொர்க்கத்தை உருவாக்க உதவுங்கள்




உலக நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

யுத்தத்தினால் பிரிந்துள்ள மனங்களை மீள ஒன்றிணைத்து இலங்கையை சிறிய சொர்க்கமாக உருவாக்கும் நடவடிக்கைக்கு உலக நாடுகள் தம்முடன் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்ய பல்கலைக்கழக நிகழ்வொன்றில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு கல்விமான்கள் மத்தியில் உரைநிகழ்த்திய போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு அழைப்பு விடுத்தார். உலகம் முழுவதிலும் சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை ஒழித்து இலங் கையில் சமாதானத்தையும் அபிவிருத்தி யையும் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில் ரஷ்யாவுடன் இலங்கை கொண்டுள்ள நட்புறவை மேலும் பலப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மொஸ்கோ மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகமான பெட்ரிக் லுமும்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-

பிரசித்திபெற்ற இலக்கியவாதியான என்டன் செகோவ் ஒருமுறை இலங்கையை சிறிய சொர்க்கமென வர்ணித்துள்ளார். அந்த சொர்க்கம் அங்கு மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.

உலகின் பொருளாதார ஆய்வாளர்கள் இலங்கையை அபிவிருத்தி வேகத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாகவும் சுற்றுலாப் பயணத்திற்கான முதல்தர நாடாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பயங்கரவாதம் காரணமாக பிரிந்துள்ள மனங்களை மீண்டும் இணைக்கும் நடவடிக்கையில் ரஷ்யா மட்டுமன்றி முழு உலகமும் இணைய வேண்டுமென ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இலக்கியம் மற்றும் கலாசார ரீதியில் இலங்கையும் ரஷ்யாவும் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தன. மீண்டும் அத்தகைய நெருக்கமான நல்லுறவினை ஏற்படுத்தி இரு நாடுகளுக்குமிடையிலான கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மொஸ்கோ மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் பிலிப்போவ், உலகில் சமாதானத்திற்கு முன்னுதாரணமாகத் திகழும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தமையை பெரும் கெளரவமாகவும் வெற்றியாகவும் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விஜயமானது கடந்த 50 வருடங்களுக்கு முன் இரு நாடுகளுக்குமிடையில் நிலவிய நல்லுறவு மேலும் வலுப்பட உறுதுணையாக அமைந்ததாகவும் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியின் இவ்விஜயத்தைக் கெளரவப்படுத்தும் வகையில் இலங்கைக்கு வழங்கும் புலமைப் பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உலக சமாதானத்திற்கு முன்னுதாரணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறப்பு ஞாபகார்த்த விருதொன்றும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட ரஷ்ய விஜயத்திற்கான தூதுக் குழுவில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கல்விமான்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.



யுத்தத்தினால் பாதிப்புற்ற
வடக்கில் அரசாங்க கட்டடங்களை புனரமைக்க ரூ. 175 மில்லியன் ஒதுக்கீடு


இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றப்படு வதற்கு முன்னர் யுத்தத்தினால் சேதமடைந்த சகல அரச கட்டடங்களையும் புனரமைத்து மீள இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தகவல் தெரிவித்த அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களி லுள்ள அரச கட்டடங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம் பெறுவதுடன், பெரும்பாலான அரச அலுவலகங்கள் தற்போது இயங்குவதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மாவட்டங்களில் அரச நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டு தற்போது இயங்கி வருவதுடன் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சேதமடைந்த அனைத்து அலுவலகங்களையும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

யுத்தத்தினால் சேதமடைந்த வடக்கின் 5 மாவட்டங்களிலுமுள்ள அரச நிறுவனங்களை இயங்க வைப்பதற்கான செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. 180 நாள் அவசர புனரமைப்பு, இரண்டு வருட செயற்றிட்டம் என இரண்டு கட்டங்களாக இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

முதற்கட்டமான 180 நாள் வேலைத் திட்டம் நிறைவுற்றுள்ளதுடன், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் கணிசமான அரச அலுவலகங்கள் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

இதன்படி மன்னாரில் 5 பிரதேச சபைப் பிரிவுகளில், முல்லைத்தீவில் 3 பிரதேச சபைப் பிரிவுகளில், கிளிநொச்சியில் 4 பிரதேச சபைப் பிரிவுகளில் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒரு பிரதேச சபைப் பிரிவில் அரச அலுவலகங்கள் தற்போது இயங்கி வருகின்றன.

இந்த 180 நாள் அவசர புனரமைப்புச் செயற்திட்டத்திற்கென 175 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், 158 மில்லியன் ரூபா செலவிலான திட்டங்கள் முடிவ டைந்துள்ளன. ஏனையவை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் புனரமைப்புச் செய்து இயங்க வைக்கப்படுமென பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விமலேந்திர ராஜா நேற்று தெரிவித்தார்.



அமைச்சர் சமரசிங்க ஜெனீவா பயணம்
பொன்சேகாவின் குற்றச்சாட்டு குறித்து நவநீதம்பிள்ளைக்கு இன்று விளக்கம்



இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவுபடுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடங்கலான குழு நேற்று (08) ஜெனீவா பயணமானதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சு தெரி வித்தது. சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஐ. நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து உண்மை நிலைமையை தெளிவுபடுத்த உள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த புலிகள் இயக்கத் தலைவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஆங்கில வாராந்தப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டு காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்குப் பல்வேறு அழுத்தங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

இந்த நிலையில் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் ஐ. நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளருக்கும் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் நெதோனியோ குட்டரயையும் சந்தித்து உரையாட உள்ளார்.

தனது விஜயத்தின்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அடுத்த மாத முதல் வாரத்தில் நடைபெற உள்ள ஐ. நா. மனித உரிமை விசேட செயலமர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்துரையாட உள்ளார்.

ஐ. நா. மனித உரிமை பேரவை விசேட செயலமர்வில் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பில் விவாதிக்கப் படலாம் என அறியவருகிறது. இந்த அமர்வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துகொண்டு இலங்கை அரசாங்கம் சார்பாக உத்தியோக பூர்வ அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

ஜெனீவாவில் இரு நாட்கள் தங்கியிருக்கும் அமைச்சர் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகரை சந்தித்து இடம்பெயர்ந்த மக்கள் வெற்றிகரமாக மீள்குடியேற்றப்படுவது குறித்தும் தெளிவுபடுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது-

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரத் பொன்சேகா தெரிவித்தது போன்ற எதுவித சம்பவமும் இடம்பெறவில்லை என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மறுத்திருந்தது தெரிந்ததே




அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்த 45 பேர் கைது


சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முனைந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தெளிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தைக் கோரியுள்ளது.

இது தொடர்பில் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல் தருகையில்;

அவுஸ்திரேலிய எல்லைப் படை யினரால் கைது செய்யப்பட்டுள்ள மேற்படி 45 பேரும் இலங்கையர் கள் தானா என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ளும் வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சரியான தகவல்களை இலங்கைத் தூதரகம் பெற்றுத் தரவேண்டுமென கோரியுள்ளதாகவும் தெரிவித்தது.

அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முனைந்த 45 இலங்கையர்கள் அந் நாட்டுப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடந்த இரு தினங்களாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இது தொடர்பில் வினவிய போதே வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முனைந்த மேலும் 45 பேரை அவுஸ்திரேலிய படையினர் வழிமறித்து கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த 45 பேரும் நான்கு நாட்களாக உணவு மற்றும் தண்ணீரின்றி இருந்துள்ளரென அவுஸ்திரேலியாவின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைப்பு தெரிவிக்கின்றது.

வெளிவிவகார அமைச்சு இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்; அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் 45 பேரும் இலங்கையர்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே வெளிவிவகார அமைச்சு அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடரும் எனவும் அதற்கான பணிப்புரைகளை அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதுவருக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது
மேலும் இங்கே தொடர்க...