இலங்கையில் அரசாங்க மாற்றமொன்றை ஏற்படுத்த அமெரிக்கா விரும்புகிறதென்று வெளிவந்துள்ள அறிக்கைகள் ஆதாரமற்றவையென்று இங்கு வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் திட்டவட்டமாக அறிவித்துள் ளார். ஒசாமா பின்லேடன் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரே உலகிலிருந்த மிகக் கொடிய பயங்கரவாத தலைவர்கள் என்றும் அவர் அறிவித்தார்.
இலங்கைக்கு மீண்டும் விஜயம் செய்வதற்கு தமக்கு கிடைத்த இந்த வாய்ப்பினால் தான் தன்னுடைய பழைய நண்பர்களை சந்திக்கக்கூடியதாக இருந்ததாக தெரிவித்த ரொபட் ஓ பிளேக், தாம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், எதிர்க்கட்சி அங்கத்தவர்களையும், சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக கூறினார்.
தமக்கு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கு முதல் தடவையாக நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பை இந்த இலங்கை விஜயம் பெற்றுக் கொடுத்தது என்று தெரிவித்த அவர், கிளிநொச்சியில் அமெரிக்காவின் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை தாம் நேரில் சென்று பார்த்ததாகவும், இவ்விரு மாவட்டங்களும் தாம் இலங்கையின் தூதுவராக இருந்த போது எல்.ரி.ரி.ஈயின் கட்டுப்பாட்டில் இருந்ததென்றும் அவர் ஞாபகப்படுத்தினார்.
கிளிநொச்சியில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 4,000 நீர் இறைக்கும் இயந்திரங்களை அன்பளிப்புச் செய்த நிகழ்விலும் தாம் கலந்து கொண்டதாகவும் இந்த நீர் இறைக்கும் இயந்திரங்கள் அங்குள்ள 17,000 விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயத்தை வாழ்வாதாரமாக மேற்கொள்வதற்கு பேருதவியாக அமையுமென்று கூறினார்.
இங்கு தாம் இலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் நடத்திய உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க அரசாங்கம் நீண்டகாலம் இலங்கையுடன் பங்காளியாக இணைந்து இலங்கையின் மேம்பாட்டுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறதென்றும் உறுதியளித்ததாக அவர் கூறினார்.
எனவே, அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் இன்றிருக்கும் அரசாங்கத்தை மாற்றும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்றது என்ற அறிக்கை ஆதாரமற்றது என்று மறுப்புத் தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் அழிவுகளில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கும் தமது அரசாங்கம் உதவி செய்யும் என்று தெரிவித்த அவர், மக்களிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி சமாதானமான ஐக்கிய ஜனநாயக இலங்கையை வலுவடையச் செய்வதற்கு அமெரிக்கா என்றும் துணை நிற்கும் என்று கூறினார்.
ரொபட் ஒ பிளேக் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் யதார்த்தபூர்வமான முன்னேற்றத்தை நாட்டில் ஏற்படுத்தியிருக்கிறதென்று பாராட்டுத் தெரிவித்து, இந்த முன்னேற்றத்தை நிலைத்திருக்க செய்ய வேண்டுமென்று கூறினார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இப்போது ஒரு பிரதான பணியை ஏற்படுத்துவதற்கு சிறந்த பணியை மேற்கொண்டு வருகின்றது என்று தெரிவித்த அவர், இந்த ஆணைக்குழுவின் முன் இலங்கையர் பெரும்பான்மையானோர் சகல பிரதேசங்களில் இருந்தும், இனங்களின் பின்னணியில் இருந்தும் சாட்சியமளித்துருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறினார்.
இந்த ஆணைக்குழு அநீதியை தனிப்பட்டவர்கள் பகிரங்கப்படுத்தி, தங்களுக்கு யுத்த காலத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட துயரங்களையும், இழப்புகளையும் எடுத்துரைப்பதற்கு சிறந்த மேடையாக அமைந்ததென்று தெரிவித்தார். இந்த யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் இழைக்கப்பட்ட தவறுகளை திருத்திக் கொள்வதற்கான சிறந்த சிபாரிசுகளை செய்யுமென்று ரொபட் ஓ பிளேக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் உள்ளூரில் இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் பேரில் பெரும்பான்மையானோர் அவர்கள் பல மாதங்களாக தங்கியிருந்த முகாம்களில் இருந்து வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், இன்னும் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் 2011ம் ஆண்டு முடிவடைவதற்குள் மீள் குடியேற்றப்படுவதற்கான ஒழுங்குகள் செய்யப்படுமென்று தெரிவித்தார்.
ரொபட் ஓ பிளேக் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவம் பல சர்வதேச தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் அமைப்புகள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் அனுசரணையைப் பெற்று ஏற்கனவே ஐந்து மில்லியன் சதுர மீற்றர் பரப்பளவை உடைய பிரதேசத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பணியை வெற்றிகரமாக இலங்கையின் வடமாகாணத்தில் நிறைவேற்றியிருக்கிறதென்று கூறினார். முல்லைத்தீவு பிரதேசத்தில் தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் பணி விரைவில் முடிவடைந்தவுடன் இன்னும் முகாம்களில் தங்கியிருக்கும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீளக்குடியமர்த்த முடியுமென்று நம்பிக்கை தெரிவித்தார்.
முல்லைத்தீவுக்கு சென்றிருந்த தாம், அமெரிக்க அரசாங்கம் அன்பளிப்பு செய்த பல்லாயிரக்கணக்கான மீன் குஞ்சுகளை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட மீனவர்களையும், மீனவப் பெண்களையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததென்றும், இதன் மூலம் வடக்கிலுள்ள மேலும் பலருக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக கிடைக்குமென்றும் கூறினார்.
இலங்கை அரசாங்கம் பல்வேறு இடங்களில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்திய பிரதேசங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும், இதனால் யுத்ததத்னால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பி வாழ்வாதாரங்களை ஆரம்பிப்பதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
அரசாங்கத் தலைவர்களுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையில் பல சந்தர்ப்பங்களில் உரையாடல்கள் நடைபெற்றிருக்கின்றது என்று தெரிவித்த அவர், மே மாதம் 12ம்திகதி இவ்விரு தரப்பினர்கள் மீண்டும் சந்தித்து கலந்துரையாடுவார்கள் என்று தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு பாரிய இணக்கப்பாட்டு உடன்பாட்டை ஏற்படுத்தி யுத்தத்தினால் அனைத்து இலங்கையருக்கும் ஏற்பட்ட வடுக்களை சுகமாக்கி அனைவரும் சம உரிமையுடன் எதிர்காலத்தை நம்பிக்கையோடு முன்னெடுத்துச் செல்வதற்கு சாதகமான ஒரு சூழ்நிலை உருவாகுமென்றும் அவர் கூறினார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிப்பேன் என்று தமக்கு தெரிவித்த கருத்து குறித்து தாம் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் இதன் மூலம் ஐ.நா. செயலாளர் நாயகத்துடனும் அவரது குழுவினருடனும் நல்லுறவை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள் ளதை தாம் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐ.நாவின் அறிக்கை ஒரு நிலையான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்தை வலியுறுத்தி அதன் மூலம் வளம்மிக்க வினநாயக சுதந்திரத்தையுடைய ஐக்கிய இலங்கையொன்றை ஏற்படுத்த முடியுமென்று வலியுறுத்துகிறதென்றும், எனவே, இது விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்குமிடையில் நல்ல உறவுகள் நிலைத்திருப்பது அவசியமென்று கூறினார்.
இறுதியாக உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை தோல்வியடையச் செய்து அமெரிக்கா அடைந்த வெற்றி குறித்து தமக்கு தெரிவித்த நல்லாசிகளை தாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதாகவும், இந்த பயங்கரவாதியின் மறைவு சமாதானமான பாதுகாப்பான சுயகெளரவத்தையுடைய வாழ்க்கையை மேற்கொள்வதில் விருப்பமுடைய அனைத்து மக்களுக்கும் கிடைத்த ஒரு பெரு வெற்றியென்றும் கூறினார். இந்த பயங்கரவாதியின் மறைவு இறுதியில் உலகை நாம் வாழும் ஒரு பாதுகாப்பான இடமாக மாற்றுமென்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...