7 ஜனவரி, 2010

10 பிரதான அம்சங்களுடன் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம் சமர்ப்பிப்பு

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம், 'நம்பிக்கைமிக்க மாற்றம்' என்ற தொனிப் பொருளில் 10 பிரதான அம்சங்களை உள்ளடக்கியதாக இன்று முற்பகல் கொழும்பு இன்டர் கொன்டினெண்டல் ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
01. ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்பி சமாதானத்தை முறையாகப் பேணல்
02. ஊழல்,விரயங்களை முற்றாக இல்லாதொழித்தல்
03. நெருக்கமான உறவுகளைப் பேணி அனைத்து குடும்பங்களுக்கும் தேவையானவற்றை செய்தல்
04. வாழ்க்கைச் செலவை குறைத்தல்
05. நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல்
06. சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தல்
07. பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் கௌரவமான நிலைமையைத் தோற்றுவித்தல்
08. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல்
09. காத்திரமானதும் வினைத்திறன் மிக்கதுமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அடித்தளம் அமைத்தல்
10. நாட்டின் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்தல்
மேற்கண்ட 10 அம்சங்களையும் அவற்றுக்கான விளங்கங்களையும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதுடன் ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் துரித மாற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளவுள்ள 7 படிமுறைகள் குறித்தும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரனின் தந்தை காலமானார்

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை இன்று மரணடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார அறிவித்துள்ளார். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ஒய்வு பெற்றிருந்த அரச உத்தியோகத்தரான வேலுப்பிள்ளை, இன்றையதினம் இயற்கையெய்தியுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் வன்னியில் இடம்பெற்ற உக்கிரம மோதல்களின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த பிரபாகரன் பெற்றோரை இராணுவத்தினர் விசாரணைக்காக கொழும்பு கொண்டுவந்திருந்த நிலையிலேயே இன்றையதினம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கையெய்தியதாக இராணுவம் அறிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி தேர்தலின் பின்னரே கைதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் - புத்திரசிகாமணி

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் குறித்து தீர்வு காண புதிதாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே இவர்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்புப் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்தார்.
அவர் மேலும், "புதிய மகசின் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அவசர காலச் சட்டம், மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவு என்பவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட சுமார் 700க்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண குறித்து சட்டமா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்.

எனினும் இவர்களுக்கு முழுமையான விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியாது. அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும். அதுவும்இ ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆயிரம் புலி உறுப்பினர்கள் நாளை மறுதினம் விடுதலை

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிச்சந்தேக நபர்களில் சுமார் ஆயிரம் பேர். நாளை மறுதினம் விடுவிக்கப்படுவர். இந்தத் தகவலை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று மாலை யாழ். உரும்பிராய் ஊரெழுப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். சட்டமா அதிபரின் ஆலோஅனைகளுக்குளுக்கு அமைய முதல் கட்டமாக ஆயிரம் பேர் 9ஆம் திகதி விடுவிக்கப்படுவர் என்றார் அவர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு-கிழக்கை ஒருபோதுமே இணைக்கபோவதில்லை- ஜனாதிபதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் வடக்குக் கிழக்கை இணைக்கப் போவதில்லை என மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் செவ்வாய்க்கிழமை தேசிய கவிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பௌத்த மதப் பாடசாலை ஆசிரியர்கள், கைப்பணிப்பொருள் கலைஞர்கள் ஆகியோர் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் தமது ஆட்சிக் காலத்தில் வடக்குக் கிழக்கு இணைக்கப்படும் என யாழ்ப்பாண மக்களுக்கு உறுதியளித்துள்ளதுடன் தேர்தலில் அவர்களது ஆதரவையும் கோரியுள்ளனர் என ஜனாதிபதி அப்போது தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் தேர்தலுக்காகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. எனினும் தன்னால் அவ்வாறு செயற்பட முடியாது என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கியத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் ஊக்கு விக்கவும், நாட்டை மீளக்கட்டியெழுப்பவும் தான் தயாராகவுள்ளதாக அங்கு மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

உண்ணாவிரதப் போரில் குதித்துள்ள 9 கைதிகளின் உடல்நிலை பாதிப்பு

உண்ணாவிரதப் போரில் குதித்துள்ள 9 கைதிகளின் உடல்நிலை பாதிப்பு மகஸின் சிறைச்சாலையில் உண்ணா விரதப் போராட்டத்தை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளில் 9பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும். தேவதாசன் என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உண்ணாவிரதத்தைத் தொடரும் தமிழ்க் கைதிகள் நீதியமைச்சர் மிலிந்த மொற கொட தங்களை நேரில் வந்து சந்தித்து, தமக்கு உறுதி வழங்கினால் மட்டுமே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்; இல்லையேல் சாகும்வரையான தமது போராட்டம் கைவிடப்பட மாட்டாது என்று அரசியல்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளைஇ தங்களை விடுவிக்கக் கோரி இலங்கை முழுவதிலுமுள்ள அரசியல் கைதிகள் நேற்றுப்போராட்டத்தில் குதித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. நேற்றையதினம் ஐக்கிய தேசியக்கட் சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயலத் ஜயவர்த்தனா, மேல்மாகாண சபை உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோர் மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவரும் 98 தமிழ் அரசியல்கைதிகளையும் சென்று சந்தித்ததுடன் அவர்களின் நிலைமையையும் கோரிக்கையையும் நீதியமைச்சரிடமும், சட்டமா அதிபரிடமும் முன்வைத்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையைப் பற்றி தேவையான விதத்தில் ஐ.நா. சபை அறிக்கைகளை வெளியிட முடியாது

இறைமைமிக்க தனித்துவ நாட்டைப்பற்றி அறிக்கை விடுவதை எதிர்க்கிறோம் - ஜனாதிபதி

இலங்கை இறைமை மிக்க தனித்துவமான நாடு. எமது நாட்டைப்பற்றி தமக்குத் தேவையான விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைகள் வெளியிட முடியாது.
அதனை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எமது இராணுவத்தினர் நேர்மையானவர்கள். எவருக்கும் எப்படியும் பொய் சாட்சி கூறமுடியும். எனினும் எமது பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை எம்முடன் கலந்துரையாடியே முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
‘செனல் 4’ விவகாரம் தொடர்பாக நேற்றைய தினம் 10.00 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையொன்றை வெளியிட முடிவு செய்திருந்ததையடுத்து அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று அம்பாந்தோட்டை மெதமுலனவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எமது இராணுவத்தினர். ஒழுக்கமுடையவர்கள், குற்றமிழைக் காதவர்கள். வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த எவரையும் அவர்கள் சுடவுமில்லை; சுடுவதற்குத் தயாராகவுமில்லை. இது எமது இராணுவத்திற் கெதிரான பெரும் அவதூறாகும்.
பிரபாகரனின் பெற்றோர், தமிழ்ச் செல்வனின் குடும்பத்தினர், தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றோர் இன்னும் உயிருடன் வாழ்கின்றனர். அவர்களைப் படையினரே பாதுகாத்தனர். எமது படையினர் அத்தகைய கொடூரமானவர்களாக இருந்தால் இவர்கள் மிஞ்சியிருக்க மாட்டார்கள்.
ஆட்சியைப் பிடிக்கும் சுயநலத்தில் சரத் பொன்சேகா செயல்படுகிறார். எமது மக்கள் இத்தகைய பொய்களுக்குச் சோரம் போபவர்களல்ல, என்ற நம்பிக்கை எமக்குண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை மெதமுலனவில் ‘சணச’ கூட்டுறவுத்துறை விருது வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, நிருபமா ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு எம்.பி. நேற்றுத் தமிழில் வெளியிட்ட அறிக்கை பெரும் அச்சுறுத்தலானது. உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் மீள்குடியேற்றம், தனித்துவமான நிர்வாகம், புலிச்சந்தேக நபர்கள் அனைவரையும் விடுதலை செய்தல் போன்ற நிபந்தனைகளை முன்கொண்டதாகவே இந்த அறிக்கை அமைந்திருந்தது.
எனக்கு இதுவொன்றும் புதுமையான தாகப் படவில்லை. ஏற்கனவே தனியான நிர்வாக அதிகாரத்தை எழுத்து மூலம் வழங்கியவர்களே இத்தகைய நிபந்தனைகளுக்கு அடிபணிந்துள்ளனர். நாம் இன்றைய இலங்கையைப் பற்றி மட்டு மன்றி எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தே செயற்படுகின்றோம். 2020 ல் இந்நாடு எவ்வாறு உயர்வடைந்திருக்கவேண்டும் என்ற இலக்கை முன்கொண்டே எமது திட்டங்கள் அமைந்துள்ளன.
இந்த நாட்டைத் துண்டாடுவதற்குத் துணைபோன ரணில் விக்கிரமசிங்க, மனோ கணேசன் ஆகியோரோடு சம் பந்தன், பிரேமச்சந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் தற்போது சரத் பொன்சேகாவோடு இணைந்து கொண்டுள்ளனர்.
நேற்று திருகோணமலை எம்.பி. ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவோடு ஏற்படுத்திக்கொண்ட நிபந்தனைகளை வெளிப்படுத்தினார். அவர் தமிழ் மொழியில் தொலைக் காட்சியில் பகிரங்கமாக அதனை வெளிப்படுத்தியதனால் பெரும்பாலானோருக்கு அது புரிந்திருக்காது. அவ் வெளிப்பாடானது நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலைத் தரக்கூடியது என்பதை சகலரும் உணரவேண்டும்.
நான் பிரதமராக பதவி வகித்தபோது புலிகளின் பகுதிக்கு போக முடியாத நிலை இருந்தது. சீருடையுடன் எமது படையினர் அங்கு செல்ல முடியாத நிலையே காணப்பட்டது. கச்சேரி, பொலிஸ், நீதிமன்றம் என அனைத்தும் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன.
இதற்கெதிராக செயற்படுவதற்காகவே மக்கள் என்னை நியமித்தனர். பயங்கரவாத த்தை ஒழித்து நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை மக்கள் எனக்கு வழங்கினர். நான் அதனை முழுமையாக நிறைவேற்றி யுள்ளேன்.
நாட்டை மீட்டு அபிவிருத்தியில் கட்டியெழுப்பியுள்ளதுடன் அரச துறை மேம்பாடுஇ அரச ஊழியர்கள் சம்பள உயர்வுடன் சுமார் 5 இலட்சம் பேருக்குத் தொழில் வாய்ப்புகளையும் வழங்கியுள்ளேன்.
நுரைச்சோலை, மேல் கொத்மலை, கெரவலபிட்டிய உட்பட மின் உற்பத்தி திட்டங்கள் பாடசாலைகள், வீதிகள், மருத்துவமனைகள் என சகல பிரதேசங் களிலும் நாம் நிர்மாணித்துள்ளோம். இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளோம்.
இத்தகையவற்றை நிறைவேற்றிவிட்டே மக்கள் முன் வந்துள்ளேன். இந்த நாட்டை எமது எதிர்கால சந்ததியினருக்காகக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதே எமது அடுத்த இலக்கு.
எதிர்காலத்தைப் பாதுகாத்து நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் எனது பயணத்தில் சகலரும் கைகோர்த்துச் செயற்பட முன்வரவேண்டும். மக்கள் எம்முடனேயே உள்ளனர் என்ற பூரண நம்பிக்கை எனக்குண்டு எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சணச கூட்டுறவுத் துறையினருக் கான விருதுகளை இந்நிகழ்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ உரியவர்களுக்குக் கையளித்த மையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்ட சிறுவர் போராளிகளை விடுவிக்குமாறு புளொட் ஜனாதிபதியிடம் கோரிக்கை


புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் சுப்பிரமணியம் சதானந்தம், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) அணியின் செயலர் ஸ்ரீதரன் ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர் இன்றையதினம் காலை 9:00 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இன்றைய நிலைமைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் சரணடைந்த விடுதலை புலி உறுப்பினர்கள் மற்றும் சந்தேகநபர்கள் என கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 12,000 பேரில் புலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்ட பல சிறார்களும் இருப்பதால் அவர்களை மிகவும் குறுகியகால இடைவெளிக்குள் விடுதலை செய்யுமாறு புளொட் சித்தார்த்தன் தலைமையிலான மேற்படி தூதுக்குழு கேட்டுக்கொண்டதுடன், இவர்களை தத்தமது பெற்றோரிடம் கையளித்தால் பெற்றோரே தமது பிள்ளைகளுக்கு புனர்வாழ்வு செய்து நல்லநிலைக்கு கொண்டு வருவார்கள் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், அண்மையில் தாம் வன்னியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்றிருந்தபோது அங்குள்ள பெற்றோர்கள் பலர் இந்த சிறார்களை தம்மிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆகவே இவ்வாறு இந்த சிறார்களை பெற்றோரிடம் விடுவிப்பதன் மூலம் பெற்றோர் தமது குழந்தைகளை சரியானமுறையில் நல்வழிப்படுத்த pநற் பிரஜைகளாக்குவார்கள் என்றும் சுட்டிக்காட்டினர்..

இதனையடுத்து உடனடியாகவே ஜனாதிபதி அவர்கள், தனது செயலாளரிடமும், சிறுவர்களை புனருத்தாபனம் செய்யும் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருக்கும் இவர்களின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்ததுடன், வன்னியில் ஆரம்பமாகியுள்ள பாடசாலைகள் மற்றும் இந்தப் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான வசதிகள் அங்கு இருக்கின்றதா என்பது தொடர்பிலான ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை கிளிநொச்சி அரசாங்க அதிபர் வேதநாயகம் அவர்கள், மக்கள் மத்தியில் மிகவும் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றவர் என்றும், ஒரு சிறந்த அதிகாரியான அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மேற்படி தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கேட்டபோது, இவ்விடயம் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி உடனடியாகவே உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் இருக்கின்ற மக்களுடைய தேவைகள் குறித்தும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மிகவும் விரிவாக ஜனாதிபதிக்கு மேற்படி தமிழ்க்கட்சித் தலைவர்கள் இதன்போது எடுத்துக் கூறினர். இவைகளை அவதானமாகக் கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள், இது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...