21 அக்டோபர், 2010

இலங்கையின் மிக விருப்பத்திற்குரிய முதற்தர தமிழ் இணையத்தளமாக வீரகேசரி


இணையத்தளம் தெரிவாகியுள்ள அதேவேளை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் யாழ் மண் இலாப நோக்கமற்ற இணையத்தளங்களுக்கான வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இலங்கையின் ங்கூ. ஆள்களப் பதிவகம் ஏற்பாடு செய்திருந்த மிக விருப்பத்திற்குரிய இணையத்தளத்தைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு கடந்த ஒருமாதகாலமாக நடைபெற்று வந்தது.

முடிவுகள் :-

வாக்கெடுப்பின் அடிப்படையிலும் நடுவர் குழுவின் தீர்மானத்தின் பிரகாரமும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்ப்பேசும் சமூகத்திற்காக, 80 வருடங்களாக தமிழ்ச் சமுதாயப் பணியாற்றிவரும் வீரகேசரியானது நடைமுறை உலகில் இணையத்தள வாசகர்களின் நலன் கருதி செயற்பட்டதுடன் இணைய உலகில் தனித்துவமான இடத்தையும் தக்கவைத்துள்ளது.

இலங்கையில் பக்கசார்பற்ற செய்திகளை வெளியிடுவதிலும் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களை, குறிப்பாக காணொளிகள் மூலம் உலகுக்கு உரைப்பதிலும் வீரகேசரி இணையத்தளம் தன்னிகரற்றுத் திகழ்கிறது.

அதேபோன்று யாழ்ப்பாணத்து மண் வாசனையை உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் நுகரும் வண்ணம் 'யாழ் மண்' இணையத்தளம் வாசகர்களின் மனம் கவர்ந்து முன்னணியில் திகழ்கின்றது.

இனிவரும் காலங்களிலும் வாசகர்களின் நல்லாதரவு எமக்குக் கிடைக்கும் என்ற எதிபார்ப்புடன் எமது சேவையை மேலும் தரமாக வழங்குவோம் என்பதையும் உறுதிபட கூறிக் கொள்வதில் பெருமையடைகின்றோம்.

இந்தத் தேர்வில் எமக்கு வாக்களித்து, வெற்றி இலக்கை அடைய வைத்த அனைத்து வாசகர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்மக்கள் சித்திரவதை செய்யப்பட்டமைக்கு அரசியல் தலைவர்கள் மன்னிப்புக்கோர வேண்டும்:கிழக்கு மாகாண முதலமைச்சர்





தொண்ணூறுகளில் கிழக்கில் அப்போதைய இராணுவத்தினர் மக்களை சித்திரவதை செய்தனர். பலர் காலில் விழுந்தபோதும் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டனர். எனவே அன்று இவ்வாறான சம்பவங்களை இயக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அன்று மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூர சம்பவங்களே நான் புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு காரணமாக அமைந்தன என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மேலும் நாட்டில் நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் சுயாதீனமாக இயங்க வைக்கப்படவேண்டும்.

இந்த விடயத்தில் நல்லிணக்க ஆணைக்குழு பாரிய வகிபாகத்தை வகிக்க முடியும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு அதன் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. ஆணைக்குழுவின் தலைவருடன் ஆறு உறுப்பினர்கள் ஆணைக்குழு சார்பில் கலந்துகொண்டிருந்தனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது

யுத்தம் முடிந்ததன் பின்னர் இவ்வாறான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவேண்டும் என்று தீர்மானித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மற்றும் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன். சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் பிரதமர் ஆட்சி முறை வந்த நிலையில் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளும் புரிந்துணர்வின்மையும் ஏற்பட்டன. கல்லோயா குடியேற்றத் திட்டம் இதன் ஆரம்பம் எனலாம்.

அன்று செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். அதனையடுத்து பண்டா செல்வா உடன்படிக்கை வந்தபோது அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தன அதனை எதிர்த்தார். அதன் காரணமாக பண்டாரநாயக்க குறித்த உடன்படிக்கையை கிழித்தெறிந்தார். அதாவது தமிழ் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் கிடைக்கப்போகின்றன என்று எண்ணியே ஜே.ஆர். அதனை எதிர்த்தார். பின்னர் டட்லி செல்வா உடன்படிக்கை வந்தபோது அப்போதைய எதிர்க்கட்சி அதனை எதிர்த்தது. அந்த உடன்படிக்கை மூலம் மாவட்ட அபிவிருத்தி சபைகள் முன்வைக்கப்பட்டன. எனவே அந்த விடயமும் இல்லாமல் போனது. அந்த நேரத்தில் தமிழ் மக்கள் தனிநாடு கேட்கவில்லை. ஆனால் அந்த விடயத்தை எதிர்க்கட்சிகள் வேறுவிதமாக காட்டின. அதன் பின்னர் தமிழ் மக்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் அரசியல் மாற்றத்துடன் தமிழரசுக் கட்சி வீழ்ச்சிகண்டது. எனவே தமிழரசு கட்சியை கட்டியெழுப்புவதற்காக 1976 ஆம் ஆண்டு அவர்கள் வட்டுக்கோட்டை பிரகடனத்தை கொண்டுவந்தனர். இதனால் தமிழரசுக் கட்சி நாட்டின் எதிர்க்கட்சியாகவும் வந்தது. எனினும் அவ்வாறான ஒரு நகர்வை மேற்கொள்ள அப்போதைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆளுமை இல்லாமையினால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். பல ஆயுத குழுக்கள் உருவாகின. பல முரண்பாடுகள் ஏற்பட்டன. அதனால் சகோதர படுகொலைகள் இடம்பெற்றன. இறுதியாக தமிழீழ விடுதலை புலிகள் தமிழீழத்தை பெறக்கூடிய அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆயுதங்களை வழங்கி குழப்பினார்

அதனையடுத்து ஜே.ஆர். ஜயவர்த்தன பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்தார். தொடர்ந்து இந்தியா இந்த விடயத்தில் தலையிட்டு மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்தியது. அன்று பண்டா செல்வா உடன்படிக்கையை எதிர்த்த ஜே.ஆர். ஜயவர்த்தன இறுதியில் அதனைவிட கூடிய அதிகார முறைமைக்கு இணங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. எனினும் மாகாண சபை முறைமையை எதிர்த்த பிரேமதாச பதவிக்கு வந்தார். அவர் விடுதலை புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி பிரபாகரனுடன் இணைந்து மாகாண சபை முறைமையில் குழப்பத்தை ஏற்படுத்தினார்.

தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டன

அதன் பின்னர் 90 களில் புலிகளுக்கு எதிராக பிரேமதாச படையினரை அனுப்பினார். அதனால் அழிவுகள் ஏற்பட்டன. அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு நான் புலிகள் அமைப்பில் இணைந்தேன். அதன்படி பார்க்கும்போது முன்னாள் தலைவர்களான ஜே.ஆர். ஜயவர்த்தனவும் பிரேமதாசவும் துரோகமிழைத்தனர். அதாவது பிரேமதாச புலிகளைக் கொண்டு தந்திரமாக மாகாண சபை முறைமையை குழப்பினார். அதனால் அன்று இளைஞர்கள் கல்விமான்கள் சிறுவர்கள் என பலர் பாதிக்கப்பட்டனர். தமிழ் மக்களுக்கு தனிநாடு தேவை என உணர 90 களில் இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாகின. கொலைகள் கடத்தல்கள் என்பன இடம்பெற்றன. கிழக்கு பல்கலைக்கழத்திலிருந்து 90 களில் 174 பேரை அழைத்து சென்றனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. மேலும் அன்றைய நிலையில் படையினர் முஸ்லிம் மக்களின் பெயர்களை கூறியே தமிழ் மக்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இதனால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. இந்நிலையில் புலிகள் வளர்ச்சி பெற்றனர். 16 வயதில் நானும் புலிகள் அமைப்பில் இணைந்தேன். புலிகள் ஆயுத ரீதியில் சாதித்தனர். பயங்கரவாத நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

பிரபாகரன் தவறிழைத்தார்

இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அப்போது புலிகளுக்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டன. ஏற்கனவே வட மாகாண கிழக்கு மாகாண பிரச்சினை இருந்தது. வட பகுதி அரசியல்வாதிகள் மேட்டுக்குடி ரீதியான தீர்மானங்களை எடுத்து தவறிழைத்ததைப்போன்றே பிரபாகரனும் தவறிழைத்தார். மேலும் உலக ஒழுங்குகளை புரிந்துகொள்ளவும் பிரபாகரன் தவறிவிட்டார். மீண்டும் யுத்தம் ஒன்றுக்கு தயாரானார். அத்துடன் அவரது பாணியிலேயே எம்மீதும் தாக்குதல் நடத்தினார். வெருகல் ஆற்றில் போர் இடம்பெற்றது. அத்துடன் மட்டக்களப்பில் புத்தி ஜீவிகளான கிங்ஸ்லி ராசநாயகம் ராஜன் சத்தியமூர்த்தி ஆகியோரை கொலை செய்தனர். அதனால் நாங்களும் ஆயும் ஏந்தினோம். பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்றார். புலிகளுடன் பேச்சு நடத்த முயற்சித்தார். ஆனால் போர் நிறுத்த உடன்படிக்கை முறிந்தது. நாங்கள் அரசுடன் இணைந்தோம். கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டது. அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது. நாங்களும் அரசியல் கட்சியாக வந்து மாகாண சபை முறைமைக்குள் சென்றோம்.

தற்போது இந்த நல்லிணக்க ஆணைக்குழு திறம்பட விசாரணைகளை நடத்தி யோசனைகளை முன்வைக்கவேண்டும். அதிகாரப்பகிர்வு முறைமை யோசனைக்கு செல்லலாம். மேலும் மாகாண சபை முறைமை பலப்படுத்தப்படவேண்டும். அனைத்து மக்களும் நம்பிக்கைகொள்ளும் வகையில் மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்படவேண்டும். எனவே தற்போது கையில் உள்ள அதிகாரப்பகிர்வு முறைமை அமுலுக்கு வரவேண்டும். கடந்தகால அரசியல் தலைவர்கள் செய்த தவறு காரணமாக ஆயுத ஏந்திய தலைவர்கள் வந்தனர். தற்போது அனைத்தும் முடிந்துவிட்டன. எனவே மக்கள் உரிமைகளை உணரக்கூடிய வகையில் நாட்டை உருவாக்கவேண்டும். தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கம் உள்ளது.

கேள்வி: கிழக்கில் கடத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் எங்களிடம் முறைப்பாடுகள் வந்துள்ளன. அது தொடர்பில் ? பதில்: சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கூறினால் நான் விளக்கமளிக்கலாம். இதுபோன்ற சம்பவங்கள் அனைத்து மாகாணங்களிலும் இடம்பெறுகின்றன. எமது சட்டத்துக்குட்பட்ட வகையில் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம். 2002 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை காணிப்பிரச்சினைகள் பல வகைகளில் உள்ளன. அதாவது பல்வேறு காலங்களில் பேர்மிட் ஆவணங்களுக்கு காணிகள் கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்டன. எனினும் யுத்த காலத்தில் அவற்றை விட்டு மக்கள் வெளியேறியிருக்கலாம். அவ்வாறானவர்களுக்கு மாற்றுக்காணி வழங்கியிருந்தால் பழைய காணியை எவ்வாறு வழங்க முடியும்? உண்மையான உறுதி இருப்பின் காணிகளை வழங்கலாம். எனினும் இந்த பிரச்சினையை நான் இயன்றளவு தீர்த்து வருகின்றேன். சில இடங்களுக்கு நான் நேரில் சென்று பிரச்சினைகளை தீர்க்கின்றேன். எமது மாகாணத்தில் சமூக மட்டத்தில் முரண்பாடுகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன். முறைப்பாடுகள் கிடைப்பின் தீர்வுகளை நாங்கள் வழங்குவோம்.

சமூக ரீதியான பிரச்சினைக்கு விடமாட்டோம்

கேள்வி: யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் விரட்ட பட்டமை தொடர்பில் ?

பதில்: கிழக்கில் அவ்வாறான பிரச்சினைகள் இல்லை. யாழ்ப்பாண விடயங்களில் நான் தலையிட்டதில்லை. எனினும் கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு வேண்டுமானால் நான் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கலாம். மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எமது மாகாணத்தில் எந்தவகையிலும் சமூக ரீதியான பிரச்சினைகள் ஏற்பட விடமாட்டோம். காணி விடயத்தில் கவனமாக செயற்பட்டுவருகின்றோம்.

இதேவேளை சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்த ஆறாயிரம் மக்கள் இன்னும் முகாம்களில் உள்ளனர். சம்பூரில் அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இந்தியாவின் உதவியுடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கடல் ஆழம் 17 மீற்றர்களாகும். ஆனால் சம்பூர் கடற் கரை பகுதியில் ஆழம் 23 மீற்றர்களாகும். எனவே பொருளாதார ரீதியில் முக்கியத்தும் பெறுகின்றது.

ஆனால் குறித்த ஆறாயிரம் மக்கள் தாங்கள் சம்பூர் பகுதியிலேயே குடியேறவேண்டும் என்று கூறுகின்றனர். எனினும் அவர்கள் விரும்புகின்ற வேறு இடத்தில் அதே பிரதேச செயலக பிரிவில் அவர்களை குடியமர்த்த நாம் தயாராக இருக்கின்றோம். இல்லை அவர்கள் அதே இடத்தில் குடியமர வேண்டும் என்றால் அது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானிக்கவேண்டும்.

கேள்வி: கிழக்கில் அன்று 600 பொலிஸார் கொல்லப்பட்டமை தொடர்பில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நீங்கள் கருதவில்லையா?

பதில்: இது நல்ல கேள்வியாகும். கிழக்கில் 600 பொலிஸார் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை விடயத்தில் நான் அந்த அமைப்பில் இருந்தவன் என்ற வகையில் மன்னிப்பு கோரலாம். ஆனால் 1990 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 11 ஆம் திகதி பொலிஸார் கொலை செய்யப்பட்டனர். நான் புலிகள் அமைப்பில் 1991 ஆம் ஆண்டு 2 மாதம் நான்காம் திகதியே இணைந்துகொண்டேன். எனவே இந்த விடயத்தில் நான் மன்னிப்பு கேட்பது பொருத்தமாக அமையுமா? இது விடயத்தில் அப்போது புலிகள் அமைப்பின் தலைவர்களுள் ஒருவராக இருந்த கருணாவை கேட்கலாம்.

இதேவேளை 90 களில் படையினர் மேற்கொண்ட விடயங்களையே என்னை புலிகள் அமைப்பில் இணைய வைத்தது. எரிக்கப்பட்ட சடலங்களை பார்த்துள்ளேன். 1990 களில் வெட்டுப்பாட்டி என்று ஒன்று இருந்தது. எனது வகுப்பு மாணவர்கள் மூவரை பிடித்துச் சென்றனர். பல பேர் காலில் விழுந்து கோரிய நிலையிலும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். எனவே அப்போதைய கால கட்டத்தில் அவ்வாறான சம்பவங்களை இயக்குவித்த அன்றைய அரசியல் வாதிகள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கருதுகின்றேன்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸி. பயணித்த 85 இலங்கையர் இந்தோனேசிய துறைமுகப் பொலிஸாரால் மீட்பு




லங்கையிலிருந்து படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த

இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிட கோரிக்கையாளர்களை இந்தோனேசிய துறைமுக பொலிஸார் தடுத்து மீட்டுள்ளனர்.

இவர்கள் பயணித்த படகு எரிபொருள், உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக பனாயிட்டான் தீவில், இடைநடுவில் நின்ற போதே துறைமுக பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 15 பெண்களும் 18 குழந்தைகளும் அடங்குவர். இவர்களில் பல குழந்தைகள் சுகயீனமுற்றிருந்ததாகவும், பலர் பல நாட்கள் ஒழுங்கான உணவின்றி தவித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பயணத்தின் போது ஒரு பெண் மற்றும் ஆண் உட்பட இருவர் மரணமடைந்துமுள்ளனர்.

மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் கூறப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் இப்பயணத்திற்காக சிபா என்ற கடத்தல்காரருக்கு சுமார் 2000 அமெரிக்க டொலர்கள் வரை பணம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.

தற்போது இவர்கள் ஜகார்த்தாவிலுள்ள இந்தோனேசிய குடிவரவு தடுப்புமுகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





மேலும் இங்கே தொடர்க...

ராமேஸ்வரத்தில் இலங்கைப் படகு : மர்ம நபர்கள் குறித்து விசாரணை

ராமேஸ்வரம் வடகாடு கடல் பகுதியில் இலங்கை படகில் சென்றிறங்கிய, மர்ம நபர்கள் குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் இலங்கை படகுகள் கரை ஒதுங்குவதும், படகில் வந்தவர்கள் தலைமறைவாவதும் வழக்கமாக உள்ளது.

கடந்த காலங்களில் தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், சேரான்கோட்டை, வடகாடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கை படகுகளை, கடற்படை, சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸா ர் கைப்பற்றினாலும், படகில் வந்தவர்கள் மட்டும் அகப்படுவதில்லை.

நேற்று முன்தினம் நள்ளிரவில், வடகாடு கடற்கரை பகுதியில், இலங்கை மன்னாரை சேர்ந்த பைபர் கிளாஸ் படகு ஒன்று கரை ஒதுங்கியது. 22 அடி நீளம் கொண்ட படகில் 15 குதிரை சக்தி கொண்ட சுசிகி இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது.

படகில் வந்தவர்கள் எங்கே சென்றார்கள் எனத் தெரியவில்லை. இலங்கை மன்னார் மாவட்ட மீன்பிடி பதிவு எண் இருந்த போதும், படகில் எவரும் இருக்கவில்லை. படகில் வந்தவர்கள் மீனவர்களாக இருந்தால், தாமாகவே பொலிஸ் ஸ்டேஷன் சென்றிருப்பார்கள்.

படகில் வந்து தலைமறைவானவர்கள் இலங்கையைச் சேர்ந்த கடத்தல் நபர்களா, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை.

இதனிடையே, நேற்று முன்தினம் தனுஷ்கோடி கடல் பகுதியில், இலங்கை படகில் தனியாக ஒருவர் பயணம் செய்து வந்ததை, ஹெலிகாப்டரில் ரோந்து சென்ற கடலோர காவல் படையினர் பார்த்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்கா, நார்வேயிலுள்ள புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சி



அமெரிக்கா, நார்வேயிலுள்ள புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சி செய்து வருகின்றனர் என்று இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரத்ன கூறினார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு ஜெயரத்ன பேசியதாவது:

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் ராணுவம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் நார்வேயில் உள்ள புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சித்து வருகின்றனர்.

அமெரிக்கா, நார்வேயிலுள்ள புலிகள் படை தலைவர்கள், புலிகள் புலனாய்வுப் பிரிவை மீண்டும் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆயுதப் பிரிவையும் ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இலங்கையில் தனியாக ஒரு மாநிலத்தை அமைக்கும் அவர்களது திட்டத்துக்காக இதைச் செய்து வருகின்றனர்.

நார்வே, அமெரிக்காவிலுள்ள புலிகள் பிரிவின் 2 தலைவர்களும் இந்த காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் புலிகள் பயன்படுத்தி வந்த வெடிபொருட்கள் அடங்கிய ஜாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சாதாரணமாக புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் இந்த ஜாக்கெட்டுகளை அணிந்துகொண்டு மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவர்.

இந்த வெடிகுண்டு ஜாக்கெட்டுகளை சமீபத்தில் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து செயலிழக்கச் செய்துள்ளனர். தோற்கடிக்கப்பட்ட புலிகளின் தலைவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.

ஆனால் புலிகள் அமைப்பை ஒருங்கிணைக்க முயற்சித்து வரும் தலைவர்களின் பெயர்களை அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடவில்லை.

கடந்த ஆண்டு நடந்த போருக்குப் பின்னர் புலிகள் எந்தவிதத் தாக்குதலையும் நடத்தவில்லை. இந்த நிலையில் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

அவசர நிலை பிரகடன சட்டத்தை இலங்கை அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த சட்டத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு இருந்தும்கூட அதை அரசு அமல்படுத்தி வருகிறது.

எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை பயமுறுத்துவதற்காக இதை ஆளும் கட்சி பயன்படுத்தி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ராசியில்லாத எண் 4 நம்பர் பிளேட் : தடை செய்தது சீனா


சீனாவில் வாகன ஓட்டிகள் "4' என்ற எண்ணை ராசியில்லாததாகக் கருதுவதால், அந்த எண் கொண்ட நம்பர் பிளேட்டை வழங்குவதை அந்நாட்டு அரசு நிறுத்தியுள்ளது.

கம்யூனிச நாடான சீனாவில், மூட நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால், சமீப காலமாக அந்நாட்டு மக்கள் மூடப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். 10-10-10 என்ற எண்ணில் வரும் தேதியன்று திருமணம் செய்து கொள்வதை அரிய வாய்ப்பாகக் கருதுகின்றனர். இதே போல அங்குள்ள வாகன ஓட்டிகள், நம்பர் பிளேட்டில் 4 என்ற எண் இடம் பெறுவதை விரும்புவதில்லை. இந்த எண்ணை புறக்கணித்து வந்தனர். இதனால், எந்த நம்பர் பிளேட்டிலும் 4ம் எண் வராதவாறு பதிவு செய்யும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையை பீஜிங் போக்குவரத்து நிர்வாகம் உடனடியாகச் செயல்படுத்தியுள்ளது. இந்த நடைமுறையை பலரும் வரவேற்றுள்ளனர். இருப்பினும் 4ம் எண்ணை ராசி எண்ணாகக் கருதுவோரும் அங்கு இருக்கத்தான் செய்கின்றனர். இது குறித்து குய் வென்(24) என்பவர் குறிப்பிடுகையில், "நான் 4ம் தேதி பிறந்தேன்; எனவே, எனக்கு ராசியான எண் 4. இந்த எண்ணை நம்பர் பிளேட்டிலிருந்து நீக்கிய அரசின் நடைமுறை ஏற்கத்தக்கதல்ல' என்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி சபைகள் மற்றும் உள்ளூராட்சி


உள்ளூராட்சி சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு இணக்கம் தெரிவித்து கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையின் இணக்கத்தைப் பெறுவதற்காக பாராளுமன்றத்திலிருந்து கிழக்கு மாகாண சபைக்கு சட்டமூலப் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

திருத்தச் சட்டமூலத்துக்கு இணக்கம் தெரிவிக்கும் பிரேரணை மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 18 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஏழு வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன. 11 மேலதிக வாக்குகளால் சட்டமூலத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினருமான தயாகமகே மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஜவாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த தீர்மானத்தை மீறி பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து வாக்களித்தார்.

இதே போன்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) உறுப்பினர் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே சபையை விட்டு வெளியேறினார்.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.40 மணிவரை நடைபெற்றது.

இரவு 10.40 மணிக்கே வாக்கெடுப்பு நடைபெற்றது. கிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இரவு 10.40 மணிவரை கூட்டம் நடைபெற்றது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல் மாத்தறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை


ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுசிறித் மெண்டிஸ் நேற்றுக்காலை பல் கலைக்கழக மாணவர் குழுவொன்றி னால் தாக்கப்பட்டுள்ளார். மக்கட் பண்பியல் பீடத்தைச் சேர்ந்த இரு மாணவ குழுக்களிடையே நேற்று இடம்பெற்ற மோதலை சீர்செய்வதற்காக உபவேந்தர் அவ்விடத்துக்கு சென்றிருந்த போதே குறித்த மாணவக் குழு உபவேந்தரை தாக்கியுள்ளது.

காயமடைந்த உபவேந்தர் மாத்தறை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சிரேஷ்ட மாணவ ஆலோசகரான சமன் சந்தன என்பவரும் சில மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக உபவேந்தர் மாத்தறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். அண்மைக்காலமாக ருஹுணு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடர்ச்சியாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக் குமிடையிலான மாணவ ஒன்றியமும் விஞ்ஞான பீட மாணவர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்டதில் ஏழு பட்டதாரி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் எம். என். ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் பத்மசிறியின் மேற்பார்வையில் விசேட பொலிஸ் குழுவொன்று இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது 110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு



இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளிடமிருந்து 110 கிலோ கிராம் தங்கத்தை இராணுவத்தினர் மீட்டெடுத்ததாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் தொடக்க நிகழ்வின் போது குருநாகல் மாவட்ட ஐ.தே.க. எம்.பி தயாசிறி ஜயசேகர கேட்டிருந்த வாய் மூல விடைக்கான வினா வுக்கு பதிலளிக்கும் வகையி லேயே அமைச்சர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் சார்பில் ஆளும்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இக்கேள்விக்கு பதிலளித்தார்.

அமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளின் 110 கிலோ கிராம் தங்கத்தை இராணுவத்தின் 58வது படைப் பிரிவும் இராணுவ பொலிஸ் பிரிவும் இணைந்து மீட்டெடுத்தன. அத்தங்கத்தின் பெறுமதி 490 மில்லியன் ரூபாய் ஆகும்.

இத்தங்கம் தொடர்பாக நியமிக்கப் பட்டுள்ள சபையினர் சட்டப்படி அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைத்து வருகின்றனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

2011 ஒக்டோபருக்கு முன் குடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்


யாழ். குடாநாட்டின் சகல பிரதேசங் களுக்கும் எதிர்வரும் 2011 ஒக்டோபருக் கிடையில் மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.என்.சி. பேர்டினண்டோ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கையில் மின்வலு எரிசக்தி அமைச்சு அடுத்தடுத்து பல வாக்குறுதிகளை வழங்கியுள்ள போதும், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டினார்.

இது விடயத்தில் ஜனாதிபதி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சின் செயலாளர் பேர்டினண்டோ இவ்வாறு தெரிவித்தார். தற்போது யாழ். குடாநாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரம் சம்பந்தமான விபரங்களை அவர் ஜனாதிபதிக்கு விபரமாக தெரிவித்தார்.

மேலும் குடாநாட்டின் சகல பிரதேசங் களுக்கும் எதிர்வரும் ஒரு வருட காலத்திற்குள் முழுமையாக மின்சாரம் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

எவ்வாறெனினும் இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும், 20 வருடம் மக்கள் பட்ட கஷ்டம் போதும்.

இனியும் அவர்களுக்கான நன்மைகளில் தாமதம் வேண்டாம் எனவும் ஜனாதிபதி கூறினார்.

வவுனியாவில் நடைபெற்ற வட மாகாண அபிவிருத்தி மீளாய்வு நிகழ்வின் போது இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் பேர்டினண்டோ மேலும் குறிப்பிடுகையில்,

யாழ். குடாநாட்டின் அரைவாசிப் பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் பெருமளவு பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்க முடியும்.

மின்சார விநியோகத்துக்கு உபயோகப்படுத்தும் சில உபகரணங்கள் பழுதடைந்தமையே தாமதத்துக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும் பெருமளவு பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் இதுவரை வழங்கப்படவில்லை என சம்பந்தப்பட்ட பிரதேச அதிகாரிகளால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி உள்ளூர் இணைப்புகளில் தாமதம் ஏற்படுமானால் தேசிய மின் தொகுதியிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

மின்சாரம் சம்பந்தமான மேற்படி விடயத்தில் அமைச்சர் டக்ளசுக்கு ஆதர வாக யாழ். குடாநாட்டிற்கு விரைவில் மின் சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அழுத்தமாக வலியுறுத்தினார்
மேலும் இங்கே தொடர்க...

புரோட்லண்ட் நீர் மின் திட்டம் சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து நவம்பரில் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்



35 மெகா வோட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய புரோட்லண்ட் நீர் மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக இலங்கை மின்சார சபைக்கும் சீன தேசிய உதிரிப்பாக கூட்டுத்தாபனத்திற்குமிடையில் நேற்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மின்சார சபை சார்பாக அதன் தலைவரும் சீன கூட்டுத்தாபனம் சார்பாக பொது முகாமையாளரும் கைச்சாத்திட்டனர்.

களனி கங்கையினூடாக மேற்கொள்ளப் படும் இறுதி நீர் உற்பத்தி நிலையமான புரோட்லண்ட் திட்டம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதோடு 2014ஆம் ஆண்டில் தேசிய மின் கட்டமைப்புடன் 35 மெகா வோட் மின்சாரம் இணைக்கப்பட உள்ளது.

புரோட்லண்ட் நீர் மின் திட்டத்திற்கு 102 மில்லியன் டொலர் மதிப்பீடு செய்யப்பட்ட போதும் சீன கம்பனி 82 மில்லியன் டொலருக்கு இதனை நிர்மாணிக்க முன்வந்ததாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார். மொரகொல்ல மற்றும் கிங்கங்கை நீர்மின் நிலையங்களும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் சொன்னார்.

அது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், புரோட்லண்ட் மின் உற்பத்தி நிலையம் கிதுல்கலையில் நிர்மாணிக்கப்படும். 114 மீட்டர் நீளமும் 24 மீட்டர் உயரமும் கொண்டதாக இது அமைக்கப்பட உள்ளதோடு 3.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப் பாதை நிர்மாணிக்கப்படும்.

எரிபொருள் ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு அலகிற்கு 25 ரூபா செலவாகிறது. நீர் மின் உற்பத்திக்கு ரூ. 2.50 தான் செலவாகிறது. எனவே நீர் மின் உற்பத்தித் திட்டங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தவும் முன்னர் அமைக்கப்பட்ட நீர் மின் உற்பத்தி நிலையங்களை திருத்தியமைக்கவும் உள்ளோம்.

புதிய லக்ஷபான உற்பத்தி நிலையம் 14 மெகாவோட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 6970 மில்லியன் ரூபா செலவில் திருத்தவும் பழைய லக்ஷபானவை 3.2 கெமாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 4200 மில்லியன் ரூபா செலவிலும் திருத்தப்படும்.

இது தவிர உக்குவலை, போவதென்ன ஆகிய நிலையங்கள் திருத்தப்படுகிறது. உமா ஓயா திட்டம் ஈரான் உதவியுடன் திருத்தப்படும். கட்டம் கட்டமாக நீர் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி அளவு அதிகரிக்கப்படும்.

சமனலவெவ நீர் திட்டமும் விரைவில் திருத்தப்பட்டு உற்பத்தி அதிகரிக்கப்படும்
மேலும் இங்கே தொடர்க...

வட மாகாணத்தில் 1990ம் ஆண்டு



வட மாகாணத்தில் 1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் 94 முஸ்லிம் மத வழிபாட்டுத்தலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.

வன்னி மாவட்ட எம். பி. நூர்தீன் மஸணூர் பிரதமரும், புத்த சாசன மற்றும் மதவிவகார அமைச்சரிடம் வாய்மூல விடைக்கென கேட்டிருந்த வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மஸணூர் சபையில் இல்லாத தால் அவரது வினாவுக்கான பதிலை பிரதமர் சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் சமர்ப்பித்தார்.

அந்த பதிலில் குறிப்பிடப்பட்டிருப்பதா வது, வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 1990ம் ஆண்டு ஒக்டோபர் 31ம் திகதி வரையும் 94 முஸ்லிம் மத வழிபாட்டுத் தலங்கள் இருந்ததாக முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்திலும், வக்பு பிரிவிலும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மன்னார் மாவட்டத்தில் 57 முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களும், யாழ். மாவட்டத் தில் 18 முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களும், வவுனியா மாவட்டத்தில் 18 முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5 முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களும் என்றபடி பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - ஈராக் கூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில்

இலங்கை- ஈராக்குக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலைமையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த அமர்வில் ஈராக் வர்த்தக அமைச்சர் கலாநிதி சபா அல்-தீன் அல்-சாபி உட்பட இரு நாட்டு உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இலங்கைக்கும், ஈராக்குக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளன.

சுமார் எட்டு வருடங்களுக்கு பின்னர் மேற்படி அமர்வு இடம்பெறவுள்ளது. இந்த கூட்டு ஆணைக்குழுவின் ஆறாவது அமர்வு 2002ம் ஆண்டு ஈராக்கின் தலைநகரான பக்தாத்தில் இடம்பெற் றுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

பாடசாலை மட்ட உதைபந்தாட்டம்


இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தி னால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட ரீதியிலான 15 வயதிற்கு கீழ்ப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டித் தொடரின் களுத்துறை மாவட்டப் போட்டிகள் 11ம், 12ம் திகதிகளில் களுத்துறை புனித சிலுவைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டித் தொடரில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 12 அணிகள் பங்குபற்றின. இத் தொடரின் சிறந்த அணியாகத் தெரிவு செய்யப்பட்ட களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணி 2-0 என்ற அடிப்படையில் தர்கா நகர் அல்ஹம்ரா அணியை வெற்றி கொண்டதன் மூலம் அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதியைப் பெற்றது.

இறுதிப் போட்டியின் போது களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் சம்சாத் இரண்டு கோல்களைப் போட்டு அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியதுடன் வெற்றிக் கிண்ணமும் அணிக்குக் கிடைத்தது. இப்போட்டியின் அடுத்த கட்ட போட்டிகளில் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சிறந்த முதல் அணிகள் மட்டுமே பங்குகொள்ளும் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்கள் திருகோணமலை நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.

இதன் போது இலங்கையின் சிறந்த 15 வயதுக்கு கீழ்ப்பட்ட பாடசாலை களுக்கு இடையிலான அணி தேர்ந்தெடுக்கப்படும்
மேலும் இங்கே தொடர்க...

21 வயதுக்கு உட்பட்டோருக்கு கசினோக்களில் தடை!




21 வயதுக்கு குறைவான இளைஞர், யுவதிகள் இரவு விடுதிகள், கசினோ நிலையங்களுக்கு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

21 வயதுக்குட்பட்டவர்கள் இரவு விடுதிகளிலோ கசினோ நிலையங்களிலோ வேலை செய்வதும் தடை செய்யப்பட்டுள் ளதாக தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப் பாட்டுச் சபையின் தலைவர் லெய்ஷா டி சில்வா சந்திரசேன தெரிவித்தார்.

போதைப் பொருள் பாவனையிலிருந்து இளைஞர், யுவதிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல தலைமையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பேராதனை பல்கலை விஞ்ஞான பீடம் காலவரையின்றி மூடப்பட்டது


பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தை நேற்று (20) முதல் காலவரையின்றி மூடுவதற்கு பல்கலைக்கழக நிருவாகம் தீர்மானித்துள் ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் விஞ்ஞான பீட மாணவர்கள் சிலரை தாக்கிய போது மாணவர் ஒருவருக்கு ஏற்பட்ட பலத்த காயத்தினால் பல்கலைக்கழகத்தில் அமைதியற்ற நிலையொன்று ஏற்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிருவாகக் குழு மேற்கொண்டிருந்த முடிவினை யடுத்து குறித்த நிருவாகம் நேற்றுமாலை பல்கலைக்கழக உப வேந்தருடனான விசேட கலந்துரையாடலொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

கல்முனையில் சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் முற்றுகை

சட்டவிரோதமாக கல்முனையில் இயங்கி வந்த ஒளிபரப்பு நிலையம் கல்முனை பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டது. இங்கு பெறுமதி மிக்க உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக இந்திய அலைவரிசையிலிருந்து மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த இந்த நிலையம் நற்பிட்டிமுனையில் இயங்கி வந்துள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் நிலையத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த இலத்திரனி யல் உபகரணங்களையும் கைப்பற்றி யுள்ளனர்.

இவ்வொளிபரப்பு நிலையம் ஊடாக விளம்பரங்கள் இடம்பெற்றதாகவும், இந்திய திரைப்படங்கள், நாடகங்கள் மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நிலையத்தின் உரிமையாளரும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு ள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் ஜனநாயகம் ரீதியான பிரதிநிதிதுவம் கிடைக்காது: ஜே.வி.ப

முறையான நிர்வாக முறைமையோ அல்லது ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவமோ உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டங்களின் மூலம் கிடைக்கப் பெறாதென நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கத் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத் திருத்தத்தில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுவதாகவும், இந்தத் திருத்தச் சட்ட மூலம் முழுக்க முழுக்க அரசியல் காரணிகளை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருத்தச் சட்டம் தொடர்பில் முழுமையாக விளங்கிக் கொள்ளாத சில மாகாணசபைகள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை எனவும் அரசாங்கம் தன்னிச்சையாக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலத்திற்கு ஜே.வி.பி கட்சி ஆதரவளிக்கப்பட மாட்டாது என மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்களை வெளியிட முடியாது: அரசாங்கம்



தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்களை வெளியிட முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த போது ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி குமரன் பத்மநாதனின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதனை மறுத்து வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளராக கடமையாற்றிய குமரன் பத்மநாதன் பெருமளவு சொத்துக்களை வைத்திருப்பதாக ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளுராட்சி திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவளித்தவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்: துரைரெட்ணம்

கிழக்குமாகாண சபையில் இருப்பவர்கள் உள்ளுராட்சி திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் அது சிறுபான்மை மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் சபையில் தெரிவித்தார்.

ஜனாதிபதி 10 நாளைக்குள் இத் திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றி அனுப்பிவைக்குமாறு பணித்தார் என்பதற்காக ஆதரவாக வாக்களிக்கப் போகும் ஆளும் தரப்பிற்கு சவால் விடுகின்றேன் என தெரிவித்தார்.

அனைவராலும் ஏற்றுக்கொண்டு ஜனாதிபதியின் அனுமதிக்காக ஆளுனரிடம் வழங்கிய கிழக்கு மாகாண சபைக் கொடிக்குரிய அனுமதியை ஜனாதிபதியிடம் இருந்து 10 நாட்களுக்குள் பெற்றுக் காட்டுங்கள் என சாவல் விடுத்துள்ளளேன். உள்ளுராட்சி திருத்தச் சட்டம் நேற்று செவ்வாய் கிழமை கிழக்குமாகாண சபையில் நிறைவேற்றப் பட்டது.

மாகாணசபையில் உள்ள 37 உறுப்பினர்களில் ஆளும் தரப்பில் உள்ள 20 பேரில் 18 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன் (2 பேர் சமூகமளிக்வில்லை) எதிர் தரப்பில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் நடுநிலை வகித்ததுடன் 6 பேரில் 5 தமிழ் உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்க எதிர்கட்சித் தலைவர் தயாகமகே சபையில் இருந்த போதும் வாக்களிக்கவில்லை.

இவ் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், சட்டத் திருத்தத்தை சபாநாயகர் சபையில் வைக்கையில் ஜனாதிபதி 10 தினங்களுக்குள் பரிசீலித்து நிறைவேற்றி அனுப்பிவைக்குமாறு தெரிவித்து சமர்ப்பித்தார்.

இது தொடர்பாக 14 நாள் அறிவித்தலோ, 7 நாள் அறிவித்தலோ வழங்கப்படவில்லை. இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் ஊடாக முதலமைச்சர் உட்பட ஆளும் தரப்பினர் சிறுபான்மை மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர். சட்டம் சபையில் முன்வைக்கப்பட்ட போது முதலமைச்சர் உட்பட ஆளும்தரப்பினர் இது சிறுபான்மை சமூகத்திற்கு செய்யும் துரோகம் என தெரிவிக்கின்ற போதும் எதையும் செய்யமுடியாது ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்றார்கள். இதே சட்டமூலம் முன்பு சபைக்கு வந்தபோது 37 உறுப்பினர்கள் எதிர்த்து திருப்பி அனுப்பப்பட்டது. ஆளும் தரப்பினர் மக்களிடம் வாக்கு கேட்டுப்போகும் போது திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்து வாக்களிப்போம் என்று கேட்டுவிட்டு தற்போது ஆதரவாக வாக்களித்தது சிறுபான்மை மக்களுக்கு செய்யும் துரோகம். என சபையில் சுட்டிக்காட்டியதுடன் 10 நாட்களுக்குள் நிறைவேற்றித்தருமாறு ஜனாதிபதி பணித்தார் என்பதற்காக ஆதரவளிக்கும் ஆளும் தரப்பால் இரண்டுவருடம் ஜனாதிபதியின் அங்கிகாரத்திற்கு ஆளுனரிடம் சமர்ப்பித்த திருத்தப்பட்ட கிழக்கு மாகாணசபைக் கொடியை பெற முடியாமல் உள்ளீர்கள். முடியுமானால் ஆதரவளிக்கும் தரப்பு 10 நாட்களுக்குள் கொடிக்குரிய அங்கிகாரத்தை பெறுமாறு சவால் விடுகின்றேன் என சபையில் சவால் விடுத்துள்ளேன்.

இவ்விவாதத்தின்போது பின்வரும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எனது விவாதத்தில் தெரிவித்துள்ளேன். 1. தேசியரீதியான நிர்ணய ஆணைக்குழுவில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம், மலையகத்தினர் உள்ளடக்கப்பட வேண்டும்.

2. 5வீத வெட்டுப்புள்ளி நீக்கப்பட வேண்டும். 3. மாநகரசபை வரவுசெலவுத் திட்டம் (இரண்டுதடவை) தோலிவியுறும் பட்சத்தில் மாநகரசபை கலைக்கப்பட்டு ஆணையாளரின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக மாகாணசபையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். 06 மாதங்களுக்குள் மீள்தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.

4. 70 : 30 வீதாசாரம் தொடர்பாக தெளிவின்மை காணப்படுகின்றது. திருத்தியமைக்கப்பட வேண்டும். 5. வட்டார எல்லைகள் பிரிக்கும் போது அங்குள்ள சிறுபான்மையினரின் நலன் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். என்பன உள்ளடங்கலாக 10 திருத்தங்களை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்நாட்டில் அமைச்சர் டக்ளஸ் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு



1986ஆம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான வழக்கு நாளை வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை சென்னை 4ஆவது மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை 4ஆவது மேல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரஞ்சோதி அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையை நீதிபதி அக்பர்அலி வாசித்தார்.

அதில் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கில் கடந்த 1994ஆம் ஆண்டு தேடப்படும் குற்றவாளி என அறிவித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது உண்மைதான் என்பது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு டக்ளஸ் சார்பில் ஆஜரான வக்கீல் வஜ்ரவேலு எதிர்ப்பு தெரிவித்து, விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்துச் செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிமன்ற விசாரணை நாளைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாளையதினம் அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...