10 அக்டோபர், 2009

தமிழகத் தலைவர்களின் பதில்களே தேசிய நல்லிணக்கத்திற்கு வழிகாட்ட முடியும் - மனோ கணேசன் எம். பி


தமிழ் மக்களின் மீதான பாரிய மனித உரிமை மீறல்களுக்கு தமிழகத் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தரக்கூடிய பொறுப்புள்ள பதில்களே இலங்கையில் தேசிய நல்லிணக்கத்திற்கு வழிகாட்ட முடியும் என தமிழ் மக்களாகிய நாம் நம்புகிறோம்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு அழைக்கப்பட்டதையும், அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர்கள் தூதுக் குழுவினராக இலங்கைக்கு வருகை தந்ததையும் நாங்கள் வரவேற்கின்றோம்.

ஆனால் இங்கு வருகை தரும் தமிழக அரசியல் தலைவர்களிடம் நற்சான்றிதழ் பெறுவதற்காக தமது ஆட்சியின் அலங்கோலங்களை மறைத்து புதிய காட்சிகளை அரங்கேற்றி காட்டுவதற்காக கடந்த ஒரு வாரகாலமாகவே இலங்கை அரசாங்கம் பாரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது என்பதை தமிழக தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றோம்.

என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மனித உரிமைகள் தொடர்பிலான மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு: ஜெயலலிதா அதிருப்தி



சென்னை, அக். 10: இலங்கைக்கு செல்லும் திமுக அணி எம்.பி.க்கள் குழு குறித்து அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்தப் பயணம் தொடர்பாக அவர் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கைத் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய எம்.பி.க்கள் குழு இலங்கை செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்குழுவில் எதிர்க்கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் இடம்பெறவில்லை. சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் யாரும் இந்தக் குழுவில் இல்லை. இந்தக் குழுவின் பயணம் குறித்து இந்தியப் பிரதமர் எதுவும் தெரிவிக்கவில்லை. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரோ, உள்துறை அமைச்சரோ, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரோகூட இது குறித்து எதுவும் கூறவில்லை.இந்த நாடாளுமன்றக் குழு இலங்கை சென்று திரும்பியதும், முதல்வரிம் அறிக்கையை அளிக்குமா? இந்திய நாடாளுமன்றத்திடம் அறிக்கையை அளிக்குமா? இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களை யார் தேர்வு செய்தது? இந்தக் குழுவின் சுற்றுப்பயணத்தை யார் அனுமதித்தது? உண்மையான முகாம்களுக்கு சென்று பார்வையிட இந்தக் குழு அனுமதிக்கப்படுமா?இலங்கையிலிருந்து வரும் அனைத்துச் செய்திகளும் தணிக்கை செய்யப்படுகின்றன. மனித உரிமை நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுக்கூட அனுமதியில்லை. இந்த நிலையில், இத்தகைய குழுவை அனுப்புவது ஒரு கேலிக்கூத்து நாடகமே.இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
யாழ்ப்பாணத்தில் 'உள்ளூராட்சி மாநாடு 2009' : அரசாங்கம் ஏற்பாடு


வசந்தம் திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி ஆளுகையை அபிவிருத்தி செய்வதற்கான தளமொன்றை உருவாக்கும் நோக்குடன் யாழ். நகரில் உள்ளூராட்சி மாநாடு ஒன்றை அரசாங்கம் நடத்தவுள்ளதாக அரச இணையத் தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'உள்ளூராட்சி மாநாடு 2009' என்ற தலைப்பில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் நடத்தப்படவுள்ள இம்மாநாடு எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் நடைபெறும்.

18ஆம் திகதி யாழ். மத்திய கல்லூரியிலும் 19ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்திலும் மாநாடு நடைபெறும்.

மாநாடு நான்கு அம்சங்களைக் கொண்டதாக நடத்தப்படும். கருத்தரங்குகள், வடமாகாண உள்ளூராட்சி, மாகாண சபை நிர்வாகங்களினால் நடத்தப்படும் கண்காட்சிகள், கலாசார நிகழ்வுகள், பரிசுகளும் விருதுகளும் வழங்கல் என்பனவே அவை.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த சுமார் 730 பேர் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

வெளிமாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...
அவுஸ்ரேலியா . கடற்பரப்பில் மற்றுமொரு சட்டவிரோத படகு மீட்பு


அவுஸ்திரேலியாவில் நேற்றும் சட்டவிரோத படகு ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டது.

இந்தப்படகில் இலங்கையர்களும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. சட்டவிரோத குடியேறிகளுடன் நாட்டுக்குள் நுழைய முற்பட்ட படகு ஒன்றை அவுஸ்திரேலிய கடற்படையினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு வடக்கே உள்ள அஸ்மோர் தீவுக் கடற்பரப்பில் வைத்து இந்த சட்டவிரோத படகு கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சர் பிரன்டன் ஒ கோனர், சட்டவிரோத படகில் பயணித்தோர் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் அவர்கள் வருகை தந்த நோக்கம் மற்றும் உடல்நலம் தொடர்பில் கண்காணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
இந்திய நாடாளுமன்றக் குழுவின் கிழக்கு விஜயம் இறுதி நேரத்தில் ரத்து



இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை கொழும்பை வந்தடைந்தவுடன் இக்குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு நேரடியாக விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தினால் செய்யப்பட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட பிரதேசமான வாகரைக்கு இவர்கள் விஜயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் இந்திய உதவியுடன் தற்போது பொலன்னறுவைக்கும் மட்டக்களப்புக்குமிடையில் சேவையில் ஈடுபட்டுள்ள ரயில் பஸ் சேவையை பார்வையிடவும் திட்டமிட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபை மாலையில் இவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடனான சந்திப்பொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்திற்கான இவர்களது விஜயம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக நேற்றிரவே தனக்கு அறிவிக்கப்பட்டதாக மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இன்று முழுநாளும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை இவர்கள் மேற்கொள்ளவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, குறிப்பிட்ட நாடாளுமன்ற குழுவினருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் இன்று மாலை சந்திப்பு ஒன்று இடம்பெறவிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

தற்போது கொழும்பில் தங்கியுள்ள கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

10 பேர் கொண்ட தமிழக பாராளுமன்றக் குழு இன்றுஇலங்கை வருகை

டி. ஆர். பாலு, கனிமொழி, திருமாவளவன் உட்பட 10 பேர் பங்கேற்பு

இன்று திருமலை, மட்டு விஜயம் ஜனாதிபதியையும் சந்திக்க ஏற்பாடு

இலங்கை நிலைவரம் குறித்து ஆராயவென தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இன்று இலங்கை வருகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழக உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரே இன்று இலங்கை வரவுள்ளனர். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பணிப்பிற்கமைய குழுவினர் இலங்கை வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினரான அமைச்சர் டி. ஆர். பாலு தலைமையில் வரும் இக்குழுவில் 10 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைச்சர் டி. ஆர். பாலு, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புதல்வியும், இலங்கை விவகாரம் தொடர்பாக கலைஞரின் ஆலோசகருமான கனிமொழி, எம்.பிக்களான ரி. கே. எஸ். இளங்கோ, ஏ. கே. எஸ். விஜயன், கெலன் டேவிட்சன் ஆகியோரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் என். எஸ். வி. சித்தன், என். சுதர்ஷன நாச்சியப்பன், ஏ. கே. எஸ். அழகிரி, ஜே. எம். ஹருண் ஆகியோரும்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் இன்று இலங்கை வருகின்றனர்.

இன்று காலை இலங்கை வரும் இவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுடன் திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

நாளை மேற்படி குழுவினர் யாழ். மற்றும் வவுனியா பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிவர். நாளை மறுதினம் இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் முக்கியஸ்தர்களுடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது-

இன்று காலை 8.50க்கு பண்டார நாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் இல. 1 x 621 ரக ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தமிழக குழுவினர் வருகின்றனர்.

அங்கிருந்து கிழக்கு மாகாணம் செல்லும் குழுவினர் வாகரையில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதியை பார்வையிடுகின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களை சந்தித்து பேசவுள்ளனர்.

மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரனுடனான சந்திப்பு இடம்பெறுவதுடன் இந்திய உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட ரயில், பஸ் திட்டப் பகுதிக்கும் விஜயம் செய்வர். இன்று திருகோணமலையில் தங்கியிருக்கும் மேற்படி தமிழக குழுவினர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ். நகர் செல்லவுள்ளனர்.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரையும் தமிழக குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் விஜயம் செய்யும் குழுவினர், மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களையும் சந்தித்து பேசுவர்.

தமிழகத்திலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகளையும் சந்திக்கும் இக்குழுவினர் யாழ். மாநகர சபையின் புதிய மேயர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளனர்.

யாழ். பொது நூலகம், விளையாட்டரங்கு, யாழ். பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளுக்கும் தமிழக குழுவினர் விஜயம் செய்வர். யாழ். பல்கலைக்கழக துணை வேந்தருடனான சந்திப்பின் பின்னர் நிவாரணக் கிராமங்களிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வந்த மாணவர்களையும் சந்தித்து உரையாடவுள்ளனர்.

இலங்கை புறப்படுவதற்கு முன்ன தாக ரி. ஆர். பாலு தலைமையிலான தமிழக குழுவினர் கலைஞர் கருணா நிதியை நேற்று மாலை சந்தித்து உரையாடினர். இலங்கைக்கு புறப்ப டுவதற்கு முன்னதாக முதல்வர் கலை ஞர் கருணாநிதியின் ஆலோசனையை பெறுவதற்காகவே இவர்கள் முதல் வரை சந்தித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இன்று தென் மாகாண சபைத் தேர்தல்

53 உறுப்பினர்களை தெரிவு செய்ய 1091 பேர் களத்தில்

தென்மாகாண சபைத் தேர்தல் இன்று சனிக்கிழமை 10ம் திகதி நடைபெறுகிறது.

காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும்.

இரு போனஸ் உறுப்பினர்கள் அடங்களாக 55 பேரைத் தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்தத் தேர்தலில், 18 அரசியல் கட்சிகளிலும் 13 சுயேச்சைக் குழுக்களிலுமாக 1,091 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 17 இலட்சத்து 61 ஆயிரத்து 859 பேர் வாக்களிக்கவென 1479 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடாத்துவதற்கென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு மேலதிகமாக சுமார் ஏழாயிரம் பொலிஸார் கடமையில் அபமர்த்தப்பட்டுள்ளனர்.

சூழ்நிலைகளைப் பொறுத்து வாக்குச்சாவடிகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமென பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு தெரிவித்தது. தேர்தல் கடமைகளில் பத்தாயிரம் அரச ஊழியர்கள் அமர்த்தப்பட் டுள்ளனர். வாக்குச் சாவடிகளுக்கு நேற்றுக் காலையே வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. வாக்குச் சாவடிகளுக்குக் கையடக்கத் தொலைபேசிகள் கமராக்கள் கொண்டு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களை நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். சிறு சிறு சம்பவங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய, அமைதியான தேர்தலை நடத்தும் பொருட்டு, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய, அம்பலாங்கொடை, கரந்தெனிய, பெந்தர-எல்பிடிய, ஹினிதும, பத்தேகம, ரத்கம, காலி, அக்மீமன, ஹபராதுவ ஆகிய 10 தொகுதிகளில் 761,815 பேர் 670 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.

மாத்தறை மாவட்டத்தின் தெனியாய, ஹக்மன, அகுரஸ்ஸ, கம்புறுபிட்டிய, தெவிநுவர, மாத்தறை, வெலிகம ஆகிய தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 578,858 பேர் 436 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.அம்பாந்தோட்டை மாவட்டத்தின் முல்கிரிகல, பெலியத்த, தங்காலை, திஸ்ஸமஹராம ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 421,186 வாக்காளர்கள் 373 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 31,158 அரச ஊழியர்கள் 85% வாக்களித்துள்ளனர்.

காலி மாவட்டத்தில் 23 உறுப்பினர்களும், மாத்தறை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 12 உறுப்பினர்களும், இரண்டு போனஸ் உறுப்பினர்களுமாகத் தென்மாகாணத்தில் 55 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வாக்குகளை எண்ணுவதற்காக 168 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுவதற்காகப் 15 நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


மேலும் இங்கே தொடர்க...