நாட்டு மக்களின் உயிரோடு விளையாடும் டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கான பி.ரி.ஐ. பக்டீரியாவை உடனடியாகக் கொள்வனவு செய்து மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.
நோய் அறிகுறிக்கான இரத்தப் பரிசோதனைகளை
நடத்துவதற்கான அவசரப் பிரிவுகளை அனைத்து வைத்தியசாலைகளிலும் ஏற்படுத்த வேண்டுமென்றும் அவர் கூறினார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ரோசி சேனாநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
டெங்குக் காய்ச்சலால் இதுவரையில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோயினால் பாதிக்கப்பட்டுமுள்ளனர்.
ஆனால் அரசாங்கம் மக்களை உயிராபத்திலிருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது.
மக்கள் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் வீசுவதாலேயே டெங்கு நுளம்புகள் பரவுகின்றன என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டுகிறார். அத்தோடு மக்களிடமிருந்து தண்டப் பணம் அறவிடப்படுகிறது. இன்று கொழும்பு மாநகர சபை செயலிழந்துள்ளது. பல்வேறு நகர சபைகள் பிரதேச சபைகள் மக்களுக்கு குப்பைகளை கொட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை.
மக்களுக்கு வசதிகளை வழங்காது மாறாக அவர்களிடமிருந்து தண்டப் பணம் அறவிடப்படுகிறது. எமது நாட்டில் 10 வருடங்களுக்கு மேலாக டெங்கு நுளம்புகளை ஒழிக்க முடியாதுள்ளது. பி.ரி.ஐ. பக்டீரியாவை கொள்வனவு செய்து ஹெலிகொப்டர் மூலம் விசுறுவதன் மூலம் இதனை ஒழிக்க முடியும். இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெறுமனே பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றது. செயலில் எதனையும் செய்யவில்லை. இந்த பக்டீரியாவை கொள்வனவு செய்வதற்கு ரூபா 18 கோடி செலவாகுமென்றும் அந்தளவு பணமில்லையென்றும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
ஐஃபா நிகழ்ச்சியை 100 கோடி ரூபா செலவழித்து அரசாங்கத்தால் நடத்த முடியுமென்றால் நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு 18 கோடி ரூபாவை ஏன் அரசாங்கத்தால் செலவழிக்க முடியாது. முழு நாட்டையும் காவு கொண்டுள்ள டெங்குக் காய்ச்சலை கண்டறிவது தொடர்பாக நடத்தப்படும் இரத்தப் பரிசோதனை அறிக்கைகள் நான்கு நாளைக்கு பிறகே வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்றன. இதற்குள் நோயாளி இறந்து விடுகிறார். டெங்குக் காய்ச்சல் 5 வயது தொடக்கம் 11 வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகளுக்கே அதிகமாகப் பரவுகிறது. பதுளையில் இரண்டு டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.
எனவே இந் நோயை கண்டறிவதற்கான மருத்துவ பரிசோதனைகளை உடனுக்குடன் மேற்கொள்வதற்கு அரசாங்க வைத்தியசாøலகளிலும் அவசர பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தோடு இந் நோயின் அறிகுறிகள் என்ன என்பதை தெளிவுபடுத்தும் விளம்பரங்களை அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் பத்திரிகைகளிலும் வெளியிட வேண்டும்.
மக்களை தெளிவுபடுத்தும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட வேண்டும். நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி விசேட செயலணியை அமைக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்திடம் அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை. எனவே இவற்றை மேற்கொள்ள வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்த மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். இத்தாலியில் வாழும் எமது நாட்டவர்கள் ஜூலை மாதம் விடுமுறையை கழிப்பதற்கு இலங்கைக்கு வருவது வழக்கம். ஆனால் இம்முறை டெங்கு தொற்று பீதி காரணமாக அவர்களது வருகை பாரியளவில் குறைந்துள்ளது.
அத்தோடு உல்லாசப் பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. மக்களின் உயிர்களைப் பறிப்பது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தையும் பின்னடையச் செய்யும் டெங்கு நுளம்புகளை ஒழிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.