5 ஜனவரி, 2010

வெள்ளமுள்ளிவாய்க்காலில் பெருந்தொகை ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் ரொக்கட் லோஞ்சர் பொருத்தப்பட்ட எம்.16 ரக துப்பாக்கி, அவர் அணிந்திருந்ததாகக் கருதப்படும் கவச அங்கி, 250 குதிரை வலுகொண்ட படகுகளுக்குப் பொருத்தப்படும் 2 வெளியிணைப்பு என்ஜின்கள், 2000 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து, தற்கொலை தாக்குதலுக்கான அங்கிகள் 88 உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் என்பன வெள்ளாம் முள்ளிவாய்க்காலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வவுனியா பொலிசார் நடத்திய தேடுதலின்போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வடபிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
படையினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் நடத்திய விசாரணைகள், மற்றும் அவர்களால் வழங்கப்பட்ட தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.
அதியுயர் நிலையில் உள்ளவர்கள் பயன்படுத்தும் சக்தி வாய்ந்த துப்பாக்கியையே பிரபாகரன் பயன்படுத்தி வந்தமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றரை கோடி பெறுமதியான 250 குதிரை வலு கொண்ட படகுகளுக்கான வெளியிணைப்பு இயந்திரங்களை அதிவேகக் கடல் போக்குவரத்திற்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியமையும் இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தெரியவந்துள்ளது.
இவற்றுடன் பெருந்தொகையான மிதிவெடிகள் கண்ணி வெடிகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

அவசரக் காலச்சட்டம் மேலும் ஒரு மாதம்வரை நீடிப்பு

அவசரக் காலச்சட்டம் 97 வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து 18 வாக்குகள் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்தது. ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன வாக்களிக்கவில்லை. இதனையடுத்து மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரக் காலச்சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழருக்கு அரசியல் தீர்வு கிடைத்தால்தான் சந்திரசேகரனின் ஆன்மா சாந்தியடையும் - திருமாவளவன்

அமைச்சர் சந்திரசேகரனின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால் இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைத்தாக வேண்டும்" என தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
மறைந்த அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் இறுதிக் கிரியைகள் நேற்று தலவாக்கலையில் நடைபெற்றன. நேற்றைய அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"இன்று அவரது அஞ்சலிக் கூட்டத்தில் ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் சந்திரசேகரனின் நோக்கம் பற்றிப் பேசுவது பொருத்தமானதாகும்.
மக்கள் மனதில் எப்போதும் நீங்காத இடம்பிடித்துக் கொண்ட அமைச்சர் சந்திரசேகரன் மலையக எம் உறவுகள் மீதும் பூர்வீக தமிழர்கள் மீதும் இணையில்லாத பற்றுக் கொண்டிருந்தார். எமது மக்களுக்கு விடிவு வேண்டும் என எப்போதுமே கூறிவந்தார்.
நாம் இலங்கை வந்திருந்தபோது அமைச்சர் சந்திரசேகரனையும் சந்தித்தோம். அப்போது இலங்கைத் தமிழ் மக்களது நலன் பற்றி அக்கறையுடன் பேசினார்.
இலங்கை மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தி வந்த அமைச்சர் சந்திரசேகரனின் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும்.
மலையக மக்களின் அபிவிருத்திக்காகவும் பூர்வீக தமிழர்களின் விடிவுக்காகவும் இந்திய அரசாங்கம் உதவ வேண்டிய தேவை உள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான பயண கட்டுப்பாட்டை நீக்கியது பிரித்தானியா

இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை பாரியளவில் தனது பிரஜைகளுக்கு தளர்த்தியிருக்கும் பிரிட்டன், கிழக்கின் சகல பகுதிகளுக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் தற்போது செல்ல முடியுமென தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹெயிஸ் தெரிவித்திருப்பதாவது; இலங்கைக்கு வருகை தரும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை நான் தளர்த்தியுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறேன். கிழக்குப் பகுதிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் சமீபத்தில் நான் மேற்கொண்ட விஜயத்தின் அடிப்படையில் நான் மேற்கொண்ட கணிப்பீட்டின் பிரகாரம் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலைவரத்தில் ஏற்பட்ட மேம்பாடு காரணமாக இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதேசமயம் அண்மையில் மோதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு சூழ்நிலையில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதால் அப்பகுதிகளுக்கு பிரிட்டிஷ் உல்லாசப் பயணிகளை செல்ல வேண்டாமென அறிவுறுத்துகிறோம். கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு பயணம் செய்ய வேண்டாமென தொடர்ந்தும் கூறுகிறோம்.
யாழ்ப்பாணத்திற்கு செல்ல விரும்புபவர்கள் அனுமதி வழங்கப்பட்ட மார்க்கத்திலேயே செல்ல வேண்டும் என்ற ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஏ9 வீதி அல்லது விமானத்தின் மூலம் பயணம் செய்ய முடியும். பிரிட்டிஷ் பிரஜைகள் உட்பட வெளிநாட்டுப் பிரஜைகள் யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டு வங்கிகளில் இலங்கையர் இப்போது கணக்குத் திறக்க முடியும் மத்திய வங்கி அறிவிப்பு

வெளிநாட்டு வங்கிகளில் இலங்கையர்கள் கணக்கைத் திறக்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளைத் திறந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. பங்குகளில் முதலீடு செய்ய முடியும். அல்லது வெளிநாட்டுக் கம்பனிகளில் குறுகியகால கடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
அதேசமயம், உள்நாட்டுக் கம்பனிகளில் ரூபா நாணய அடிப்படையில் வெளிநாட்டவர்கள் முதலிட முடியும் என்றும் மத்திய வங்கியின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இலங்கைக்கு உல்லாசப் பயணிகளாக அல்லது வர்த்தக அலுவல்களுக்காக வருகைதரும் வெளிநாட்டவர்கள் இலங்கை ரூபா நாணயத்தில் கணக்குகளைத் திறக்க முடியும்.
ஒழுங்கு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட சில தளர்வுகளின் ஓரங்கமாகப் பட்டியலிடப்பட்ட கம்பனிகள் இப்போது வெளிநாட்டுப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட சில வெளிநாட்டுக் கம்பனிகள் இலங்கையில் வர்த்தகத்தை ஆரம்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், இறக்குமதிக்கான முற்பணக்கொடுப்பனவு மட்டம் அதிகரிக்கப்படும் என்றும் இறக்குமதிக் கொடுப்பனவுக்கான முற்கொடுப்பனவுக் கட்டுப்பாடு அகற்றப்படும் எனவும் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, முற்பணக் கொடுப்பனவுகளின் கீழுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதிகளுக்குத் தேவைப்படும் அதி உச்ச வரையறை அகற்றப்படுவதாகவும் நடைமுறை மற்றும் மூலதனப் பரிவர்த்தனைக்காக வெளிநாட்டு நாணய ஒப்பந்தங்களில் அதிகளவு தளர்வுப் போக்கை கடைப்பிடிப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஆறாத சோகத்துடன் மலையகம் சந்திரசேகரனுக்கு இறுதிவிடை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி

ஆறாத சோகத்துடன் மலையகம் சந்திரசேகரனுக்கு இறுதிவிடை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி மலையகத் தமிழர்களின் உரிமைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் மூன்று தசாப்த காலமாக போராடிய மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் பூதவுடல் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கதறியழ அக்கினியுடன் சங்கமமாகியது. அமைச்சர் சந்திரசேகரனின் இறுதிக்கிரியைகள் தலவாக்கலையிலுள்ள இல்லத்தில் இடம்பெற்ற பின்னர் தலவாக்கலை பொது மைதானத்தில் அரச மரியாதையுடன் தகனக்கிரியை இடம்பெற்றது.
அமைச்சர் சந்திரசேகரன் சுகயீனம் காரணமாக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை காலமானார். அன்னாரின் பூதவுடலுக்கு கடந்த இரு தினங்களாக அரசியல், தொழிற்சங்க பிரமுகர்கள், சர்வமத தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அமைச்சரின் பூதவுடல் நேற்று முன்தினம் தலவாக்கலை லிந்துலை நகரசபை மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அன்றைய தினம் மாலை தலவாக்கலை ஹேமசந்திர மாவத்தையிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று 1.30 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தாங்கிய பேழை இல்லத்திலிருந்து தலவாக்கலை பொது மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண மற்றும் நகரசபை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினர்.
அரசு சார்பில் அமைச்சர் டி.எம்.ஜயரட்னவும் எதிர்க் கட்சித் தலைவர் சார்பில் ரவீந்திர சமரவீர எம்.பி.யும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனும் மலையக மக்கள் முன்னணி சார்பில் பிரதியமைச்சர் பீ.இராதாகிருஷ்ணனும் பொதுச் செயலாளர் விஜயகுமாரும் இரங்கலுரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து தகனக் கிரியை இடம்பெற்றது. மறைந்த அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சர் தி.மு.ஜயரட்ண, இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான திகாம்பரம், உதயகுமார், கணபதி கனகராஜ், சதாசிவம் உட்பட 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தலவாக்கலை, அட்டன், பொகவந்தலாவை, நுவரெலியா போன்ற பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர். பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன் அன்னாரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்தும் சோக கீதங்கள் இசைக்கப்பட்டவண்ணமாக மலையகம் காணப்பட்டது. அத்துடன் மலையகப் பகுதிகளில் நேற்று விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஜே. வி. பிக்கு 24 மணிநேர காலக்கெடு

சரத் பொன்சேகா எந்தவொரு ஆயுதக் கொள்வனவு, மோசடிகளிலும் சம்பந்தப்படவில்லை என்று ஜே. வி.பி. நிரூபிக்கவும் அல்லது, மோசடி வேட்பாளர் ஒருவருக்கு அக்கட்சி ஆதரவு வழங்கியது என்பதை ஏற்றுக்கொள்ளவும் அரசு 24 மணிநேர அவகாசத்தை வழங்கு வதாக மின்சக்தி அமைச்சர் மஹி ந்தானந்த அளுத்கமகே நேற்று சபையில் அறைகூவல் விடுத்தார்.
25 மில்லியன் ரூபாவுக்கு குறைந்த ஆயுதங்களை கொள்வனவு செய்வது தொடர்பான கேள்விப் பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் சபைக்கு, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி என்ற ரீதியில் சரத் பொன்சேகாவே தலைவராக இருந்தார் என்று கூறிய அமைச்சர், சரத் பொன்சேகாவினால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான ஆவணம் ஒன்றையும் சபையில் முன்வைத்தார்.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழுத் தலைவரான அநுர குமார திஸாநாயக்கவுக்கு அதனை வாசித்து பார்க்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
இதனை வாசிப்பதற்கு உங்களுக்கு 24 மணிநேர கால அவகாசம் வழங்குகிறோம். அதனை வாசித்து பின் நீங்கள் ஆதரிக்கும் வேட்பாளர் முழுமையாக ஊழலை ஆதரிப்பவர் என்றோ அல்லது நீங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பதாக கூறிக்கொள்வதனால் பொன்சேகாவை ஆதரிக்கும் பிரசாரத்திலிருந்து விலகிக்கொள்வதா என்பதை அந்த 24 மணி நேரத்திற்குள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கள்வர் கூட்டம் என்றே நீங்களும் அழைக்கப்படுவீர்கள்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னைநாள் இராணுவ தளபதியும் தற்போதைய எதிர்கட்சிகளின் பொது வேட்பாளருமாகிய சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்றைய கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியாக இன்றும் நடைபெறவுள்ள கூட்டத்தின் பின்னர் சரத் பொன்சேகாவுக்கான ஆதரவினை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிடும் என்றும் உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இதேவேளை நேற்றைய கூட்டத்திற்கு ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிவிங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், தெரியவருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் தலைவரின் முயற்சியால் இடம்பெயர்ந்த மக்களுக்கு துவிச்சக்கர வண்டி!

அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம்,அப் பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் குறைந்தது தமது போக்குவரத்துக்கு ஒரு துவிச்சக்கர வண்டியாவது பெற்றுத்தருமாறு கோரியிருந்தனர்.
இது விடயமாக அரசின் கவனத்திற்கு தலைவர் சித்தார்த்தன் கொண்டு வந்திருந்தார். அதன் பலனாக அண்மையில் மன்னார் மாவட்டத்தில் குடியேற்றப்பட்ட மக்களில் ஒரு தொகையினருக்கு இலவச துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்ட நிலையில், தற்போது கிளிநொச்சி முல்லை மாவட்டங்களில் குடியேறிய மக்களுக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படும் என வடக்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட இரண்டாயிரம் குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள தாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்தும் நோக்குடன் “வடக்கின் வசந்தம்” வேலை த்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. நேற்றைய தினம் 600 குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டதாக வும் அவர் தெரிவித்தார்.
புதுமாத்தளன் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த துவிச்சக் கர வண்டிகள் படையினர் மூலம் திருத்தி யமைக்கப்பட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒரு குடும்பத்திற்கு ஒரு துவிச்சக்கர வண்டி வீதம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்
மேலும் இங்கே தொடர்க...

தனிநபர் வருமானத்தை 6 ஆயிரம் டொலராக அதிகரிப்பதே இலக்கு-ஜனாதிபதி

கடந்த நான்கு வருட காலத்தில் இலங்கையரின் தனிநபர் வருமானத்தை 2200 அமெரிக்க டொலர்கள் வரை அதிக ரிக்கச் செய்துள்ளேன். இவ்வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கச் செய்வதே எனது இலக்கு என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களுடனான (மருத்துவ மாதுகள்) சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், மருத்துவ மாதுகள் இந்த நாட்டுக்கு சிறந்த சேவை செய்து வருகின்றார்கள். அவர்கள் வீடு, வீடாகச் சென்று தங்களது சேவையை மக்களுக்கு வழங்கி வருகின் றார்கள். இவர்களது சேவையின் பயனாக இந்நாட்டில் தாய் - சேய் மரணம் பெரிதும் குறைந்துள்ளது. இதனையிட்டு அவர்களை நான் கெளரவப்படுத்துகின்றேன்.
நான் 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் வரையும் இந்நாட்டினரின் தனிநபர் வருமானம் ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே இருந்தது.
ஆயினும் 2005 ஆம் ஆண்டு முதல் பின்வந்த நான்கு வருடங்களிலும் நாம் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்நாட்டினரின் தனிநபர் வருமானம் 2200 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் தனிநபர் வருமானம் இவ்வாறான அதிகரிப்பைப் பெற்றிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
இருந்தபோதிலும் இந்நாட்டினரின் தனிநபர் வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கச் செய்வதே எனது இலக்காகும். இதற்குத் தேவையான சகல வேலைத்திட்டங்களும் இங்கு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப் படுகின்றன.
நாட்டு மக்களுக்கு வளமான சுபீட்ச வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கவே நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதனை எனது கடமையாகவும், பொறுப் பாகவும் கருதுகிறேன்.
நாட்டில் அபிவிருத்தி இல்லாமல் சமாதானம் இல்லை. சமாதானம் இன்றி அபிவிருத்தியும் இல்லை. இதனை நாம் தெளிவாக உணர்ந்திருக்கிறோம். இதனைக் கருத்தில் கொண்டுதான் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையையும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கின்றோம்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிலப்பகுதியில் அமைக்கப்பட்டு கடலுடன் இணைக்கப்படுகின்றது. இவ்வாறான துறைமுகம் டுபாய் நாட்டுக்கு அடுத்தபடியாக இப்பிராந்தியத்தில் இலங்கையில்தான் இருக்கின்றது.
இத்துறைமுக நிர்மாணப் பணிகள் பூர்த்தியானதும் ஹம்பாந் தோட்டைக்கு அருகில் கடலில் பயணம் செய்யும் பல சரக்குக் கப்பல்கள் இத்துறை முகத்திற்கு வந்து செல்லும். இது இந்நாட்டுக்கே அந்நிய செலாவணியைத் தேடித்தரும்.
இதேநேரம் கொழும்பு, காலி, ஒலுவில், மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களும் ஒரே நேரத்தில் அபிவிருத்தி செய்யப்படு கின்றன. ஒரே நேரத்தில் ஐந்து துறைமுகங்கள் இந்நாட்டில் முன்னொரு போதுமே அபிவிருத்தி செய்யப்படவில்லை.
மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே கெரவெலப்பிட்டி, நுரைச்சோலை, மேல் கொத்மலை மின்னுற்பத்தி திட்டங்களை ஆரம்பித்திரு க்கின்றோம்.
வீதிகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டி ருக்கின்றன. நாம் நாட்டினதும் நாட்டு மக்களி னதும் எதிர்கால நலன்களைக் கருத்தில்கொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
நாம் உலக உணவு நெருக்கடி, எண்ணெய் நெருக்கடி என்பவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டோம். எவரும் பட்டினி கிடக்க நாம் இடமளிக்கவில்லை. அரச துறைகளுக்கு ஆட்சேர்ப்புகளையும் மே ற்கொண்டோம். மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களையும் தொடர்ந்தும் வழங்கி வருகின்றோம்.
நான் பதவிக்கு வரும்போது நாட்டின் பொருளாதாரம் சீரழிந்திருந்தது. அந்தப் பொருளாதாரத்தை திட்டமிட்ட அடிப்படையிலான வேலைத் திட்டங்களின் ஊடாக மேம் படுத்தியுள்ளோம் என்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கெஹெலிய ரம்புக்வெல, டாக்டர் ராஜித சேனாரட்ன, எம். பி. விமல் வீரவன்ச உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...