3 ஜனவரி, 2010

வவுனியாவில் பொது சுகாதார பிரிவுகள்தோறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வடமாகாண ஆளுனர் நிதியில் இருந்து ஐந்து மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருவதாக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.


டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழித்து துப்பரவு செய்வது குறித்து பொதுமக்கள், மாணவர்கள், திணைக்களங்கள், நிறுவனங்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், இது குறித்த பயிற்சியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கைக்கென மாவட்டம் தழுவிய அளவில் செயலணி குழுவொன்று ஆளுனரினால் அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. இந்த செயலணி குழுவின் தலைவராக டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெங்கு நோயினால் இதுவரையில் வவுனியாவில் 22பேர் உயிரிழ்ந்துள்ளதாகவும், 1100 இக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் வவுனியா பிரதேசத்தில் உள்ள 9 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளும் 9 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் தகுதிவாய்ந்த அதிகாரிகள் பொறுப்பாக நியமிக்கப்பட்டு, டெங்கு நோய்த்தடுப்பு பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனநாயகத்தையும், நீதியையும் மலரச் செய்யவே ஜே.வி.பியுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம் - ரணில் விக்கிரமசிங்க


நாட்டில் ஜன நாயகத்தை நிலை நாட்டவும் அரசியல் ரீதியாக இனப்பிரச்சினை உட்பட நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினை களைத் தீர்க்கவும் ஐ.தே.கவும் ஜே.வி. பியும் இணைந்து செயற்படுவதற்கான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக எதிர் காலத்தில் ஜனநாயகத்தையும் நீதியையும் மலரச்செய்ய முடியும்.


இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரம சிங்க நேற்று நடைபெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு: மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளை ஏற்கனவே நாம் ஆரம்பித்துவிட்டோம். இதற்காக புதிய தோர் அரசமைப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது தொடர்பாக தொடர்ச்சி யான கலந்துரையாடல்களை பல்வேறு கட்சிகளுடனும் நடத்தி வருகின்றோம். குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகல கட்சிகளுடனும் இத் தகைய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணப்படும். இதுநாள் வரையும் காலத்தை இழுத்தடிப்பதற்கே இத்தகைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை புதிய அரசமைப்பின் கீழ், சக்திமிக்க நாடாளுமன்றக் குழுவை அமைத்து மிக விரைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்.


சர்வாதிகார ஆட்சி புரியும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை அகற்றி சரத் பொன்சேகாவை ஜனாதியாக்க நாம் முயற்சிப்பது ஜனநாயகம், நீதி, கருத்துச் சுதந்திரம் என்பவற்றை நாட்டில் மீண்டும் நிலைநாட்டுவதற்கே. இதற்காகத் தான் எதிரும் புதிருமாக இருந்த ஐ.தே.கவும், ஜே.வி.பியும் இணைந்து செயற்படுகின்றன.

இதேபோல வருங்காலத்திலும் இனப்பிரச்சினை உள்ளிட்ட சகல பிரச்சினைகளையும் ஏனைய கட்சிகளுடனும் இணைந்து செயற்பட்டு தீர்வுகாண்போம். மீண்டும் ஒரு தடவை தமது உரிமைகளுக்காகத் தமிழ் மக்கள் போராடுவதற்குத் தேவையற்ற வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமைந்திருக்கும். இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடனும் விரிவாக ஆராய்ந்துள்ளோம்.


மஹிந்த ஆட்சியின் விளைவாக இன்று வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் கூட அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தலைநகரில் பல இடங்களில் இத்தகைய பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றன. இதுதவிர தெனியாயவிலும் குருநாகலிலும் மஹிந்த குடும்பத்தின் சொத்துக்கள் உள்ள இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக மாறி வருகிறன்றன. யுத்தம் நிறைவடைந்து விட்டதாக அரசு அறிவித்து பல மாதங்கள் கடந்த பின்னரும் இன்னமும் அவை விலக்கிக்கொள்ளப்படவேயில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தோழனே! வரலாறு உன் வாழ்வை மீட்டுத்தரும்- (தோழர் சுந்தரம் நினைவாக)

‘தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், விடுதலை அமைப்புக்களுக்கிடையேயான கருத்து முரண்பாடுகளுக்கும், ஆளுமைப்போட்டிக்கும் சகோதரப் படுகொலைகளே தீர்வு‘ என இனத்தின் அழிவு யுத்தத்திற்கு முதல் அத்திவாரமிட்ட நாள் 02.01.1982. ஆம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும், அதன் முதல் படைத்தளபதியும், "புதியபாதை" ஆசிரியருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(தோழர் சுந்தரம்) புலிகளின் தலைவர்(பின்னாள்) பிரபாகரனால் கோழைத்தனமாக படுகொலை செய்யப்பட்டு இன்று 28 வருடங்கள்.

70க்களின் முற்கூறுகளில் சிங்களப் பெருந்தேசியவாதம் தமிழர்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தோழர் சுந்தரம் "ஆற்றல்மிகு கரங்களிலே ஆயுதமேந்துவதே மாற்றத்திற்கான வழி, மாற்றுவழி ஏதுமில்லை"என கண்டார். விடுதலைப் போராட்ட வரலாறுகளைத் தேடித்திரிந்து கற்றார். அன்றிருந்த பொதுவுடமை தலைவர்களிடம் பழகி, பொதுவுடமை கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டார்.

தமிழீழ விடுதலையை வேண்டிநின்ற தோழர் சுந்தரம், "தனிமனித பயங்கரவாதமும், வெறும் வீரதீர சம்பவங்களும் அடக்கியொடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் விடுதலையைப் பெற்றுத் தந்துவிடாது. மாறாக, போராட்டமானது முழு மக்களையும் இணைத்ததாக, எதிரிகளை சரியாக இனங்கண்டு நட்பு சக்திகளுடன் கைகோர்த்து முன்னெடுக்கப்பட வேண்டியது. தமிழீழ விடுதலையென்பது வெறும் மண் மீட்பு அல்ல. அது, எமது மக்களின் சமூக-பொருளாதார விடுதலையையும் குறித்ததானது" என்ற கருத்தியல் அடிப்படையில் கழகத்தை வளர்த்த தோழர்களில் தோழர் சுந்தரம் முதன்மையானவர்!


தொலைநோக்கு அரசியல், அசாத்திய துணிவு, நேர்மை, கடின உழைப்பு, தன்னலங்கருதாத தியாகம், இவற்றிக்குமப்பால் மனித நேயம், தோழமை இவையெல்லாம் ஒருசேர்ந்த மக்களை நேசித்த மகத்தான, சமூக போராளி சுந்தரம்.


கருத்து முரண்பாடுகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் பிளவுண்டு கலைந்தபோதும் தமிழ் மக்களின் உண்மையான விடுதலையை வேண்டி முற்போக்கு சிந்தனை கொண்ட போராளிகளுடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை நிறுவி அதன் படைத் தளபதியாகவும், அதேவேளை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உத்தியோகபூர்வ ஏடான "புதியபாதை"யின் ஆசிரியராகவும் இறுதிவரை உழைத்தார். புதியபாதையில் அன்று அவர் தவறுகின்ற தமிழ் தலைமைகளையும், பிற்போக்குவாத சக்திகளையும் தயவுதாட்சண்யமின்றி விமர்சனத்திற்குள்ளாக்கினார். மக்கள் விரோதிகளை அம்பலப்படுத்தினார். அதேவேளை "புளொட்"டின் படைத்தளபதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலாக ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தை முற்றாக தாக்கியழித்து வரலாறு படைத்தார். ஒரு தொலைநோக்குள்ள பத்திரிகையாசிரியராகவும், சிறந்த படைத்தளபதியாகவும், மனித நேயமிக்க போராளியாகவும், பல்வேறு பரிமாணங்களை கொண்ட தோழர் சுந்தரம் மரணம்வரை மக்களின் வாழ்வை நேசித்தார்.


02.01.1982அன்று "புதியபாதை" பணி தொடர்பாக யாழ்.சித்திரா அச்சகத்தில் முகாமையாளருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, பாசிஸ்ட் பிரபாகரனால் கோழைத்தனமாக மறைந்திருந்து தோழர் சுந்தரம் படுகொலை செய்யப்பட்டார். "புதியபாதை" அச்சிட்ட அதே சித்திரா அச்சகத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அழிவுவரலாற்றுக்கான முதல் எழுத்தும்
எழுதப்பட்டதென்பதை தவிர வேறு என்ன சொல்ல...?


"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மறுபடியும் தர்மம் வெல்லுமெனும் மருமத்தை நம்மால் உலகம் கற்கும்."

எங்கள் பெருமதிப்பிற்குரிய தோழனே! வரலாறு உன் வாழ்வை மீட்டுத்தரும்.

மேலும் இங்கே தொடர்க...