30 ஜூன், 2011

மலேசிய கடத்தல் கும்பலிடம் இருந்து 6 இலங்கையர்கள் மீட்பு

மலேசியாவில் மனிதக் கடத்தல் கும்பல்களிடமிருந்து 6 இலங்கையர்களை மீட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜாலன் வோங் அஹ் பூக் நகரிலுள்ள ஹோட்டலொன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டபோது இலங்கையர்களான 6 ஆண்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கைது செய்யப்பட்ட மனிதக் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூரைச் சேர்ந்த முகவரான இந் நபர் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்காக மேற்படி இலங்கையர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 5000 மலேசிய ரிங்கிட் பணம் அறவிட்டதாக பிரதி உதவி குடிவரவுப் பணிப்பாளர் கஜேந்திரா பஹதூர் கூறியுள்ளார்.

இந்த இலங்கையர்கள் சட்டபூர்வமாக மலேசியாவுக்கு வந்த போதிலும் அவர்களின் கடவுச்சீட்டு காலாவதியாகியுள்ளதாக அவர் கூறினார். மேற்படி இலங்கையர்கள் மலாக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்: ஹக்கீம்

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் சட்டவிரோத குடியேற்றங்களையும் காஸா மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் பலஸ்தீனர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களையும் சர்வதேச நீதிகளையும் ஐ.நா. மாநாட்டு தீர்மானங்களை மீறிச் செயல்படுவதையும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் பல உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வன்மையாக கண்டித்து கருத்து வெளியிட்டதை தாம் கவலையோடு செவி மடுத்ததாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டுமெனவும் பிரஸ்தாப அமைப்பின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் மூன்றாம் நாள் அமர்வு கொழும்பு கிராண்ட் லேக்சைட் ஹோட்டலில் நேற்று நடைபெற்றபோது பலஸ்தீனர்களை வெளியேற்றுதலும் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் யூதக் குடியேற்றங்களை மேற்கொள்ளுதலும் என்ற தலைப்பில் இடம்பெற்ற செயலமர்வை முடித்து வைத்து உரையாற்றும்போதே நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.

காஸா பிரதேசத்தில் சர்வதேச நீதி, நியாயங்களை மீறி பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் விதித்துள்ள தடை காரணமாக அப்பாவி பலஸ்தீன பொது மக்கள் உணவுப் பொருட்கள், மருந்து, எரிபொருட்கள் போன்றவை கிடைக்கப் பெறாது பாரிய இன்னல்களுக்கு முகங் கொடுத்துள்ளதாகவும் பலஸ்தீன நீதியமைச்சர் சுட்டிக் காட்டியதை போன்று பலஸ்தீனத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் 45 வீதமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்து ஜப்பான், ஈரான், கட்டார், எகிப்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்களின் தலைவர்கள் இந்த செயலமர்வின்போது உரையாற்றினர்.

பலஸ்தீனம் சுதந்திரமான தன்னாதிக்கமுடைய நாடாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டுமெனவும், அதன் தலைநகராக ஜெருசலம் விளங்க வேண்டுமெனவும் முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸா பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் 1967 ஆம் ஆண்டுக்கு முந்திய எல்லைகளுக்கு இஸ்ரேல் பின்வாங்க வேண்டுமெனவும் காஸா மக்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் முற்றாக அகற்றப்பட வேண்டுமெனவும் அவர்கள் தமது உரைகளின் போது வலியுறுத்தினர்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வு தொடர்பிலான ஜனாதிபதியின் கூற்றுக்கு இந்தியாவே பதிலளிக்க வேண்டும்: மாவை

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் தெளிவுபடுத்தல்கள் மற்றும் அவரது நிலைப்பாடு ஆகியவற்றுக்கு இந்தியாவே பதிலளிக்க வேண்டுமே தவிர அதற்கான தேவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது என்று கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

உள்நாட்டின் தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்பின் போது அரசியல் தீர்வு விவகாரம் குறித்து வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாவை எம்.பி. மேலும் கூறுகையில்:

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் தமிழர்களால் எதிர்பார்க்கப்படுகின்ற நிரந்தரமான அரசியல்தீர்வு உள்ளிட்ட தமிழர் தரப்பு விடயங்கள் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு ஏற்கனவே அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் அறிவித்தாயிற்று. இதனை ஊடகங்களும் வெளிப்படுத்தியிருந்தன.

இந்நிலையில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது அல்லது அத்திருத்தத்துக்கும் அப்பால் செல்வது குறித்து இந்தியா தமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பதும் பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பிலான தமது நிலைப்பாடு சம்பந்தமான கூற்றுக்களை அவர் வெளியிட்டிருப்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலட்டிக் கொள்ளவில்லை.

மேலும் பாராளுமன்றத் தெரிவுக்கு அமைப்பதான நோக்கம் குறித்தும் நாம் எடுத்துக் கூறியிருக்கிறோம். எனவே ஜனாதிபதியின் மேற்படி கூற்றுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடோ அல்லது அவசியமோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது.

இலங்கைத் தமிழர் விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் மற்றும் கடைப்பிடிக்கவேண்டிய அணுகு முறைகள் குறித்து இந்தியா இலங்கைக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை என்று ஜனாதிபதி கூறியிருப்பதற்கு இந்தியாவே பதிலளிக்க வேண்டும், கூட்டமைப்பு அல்ல.

மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை பேசிக் கொண்டிருக்கவும் எமக்கு நேரமில்லை. ஜனாதிபதியின் கூற்று குறித்து ஊடகங்கள் இந்தியாவிடமே கேள்வியெழுப்ப வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய மீனவர்கள் 23பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை மன்னார் நீதிமன்றம் இன்றைய தினம் விடுதலை செய்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து கைதான நபர்களை பொலிஸார் இலங்கை கடற்படையிடம் நாளை ஒப்படைக்கவுள்ளனர். அதேவேளை இலங்கை கடற்படையினர் நாளை மாலை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...