24 மே, 2010

வடக்கிற்கு நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் CDB --- சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ்

ஃபினான்ஸ் லிமிட்டட் நிறுவனமானது, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட இரு புதிய சேவை நிலையங்களை அண்மையில் திறந்துவைத்ததன் மூலம் வடக்கிற்கு தனது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளது.

இலக்கம் 208, ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள யாழ். சேவை நிலையமானது 14 ஊழியர் பலத்தைக் கொண்டுள்ள அதேநேரம் இலக்கம் 79, கந்தசுவாமி கோவில் வீதியிலுள்ள வவுனியா சேவை நிலையம் 10 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இஈஆ இன் சேவைகளை வடபகுதி மக்களுக்கு வழங்குவதற்காக இவ்விரு நிலையங்களும் தற்போது தயார் நிலையிலுள்ளன.

யாழ். சேவை நிலையமானது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் திரு. கே.ஜி.டீ.டீ. தீரசிங்க, மத்திய வங்கியின் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. எஸ். எஸ். ரத்னாயக்க, ஜனாதிபதியின் வங்கியியல் தொடர்பான ஆலோசகர் திருமதி. ராணி ஜெயமஹா மற்றும் மத்திய வங்கியின் உயரதிகாரிகள், பணிப்பாளர்கள், இஈஆ இன் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் இந்நிகழ்வில் பிரசன்னமாகி இருந்தனர்.

இந்நிகழ்வில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய மத்திய வங்கி ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால் கூறுகையில், வட குடநாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு மிகவும் அவசியமான விடயம் என்னவெனில், இங்குள்ள சமூகம் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளத் தேவையான உறுதியான கடன் வழங்கல் வசதிகளாகும் என்றார். இந்த முயற்சியில் ஒரு பங்காளியானதன் மூலம், இஈஆ நிறுவனமானது மிகவும் பயன்தரவல்ல முன்மாதிரி திட்டங்களை முன்னெடுத்தமையை வரவேற்ற ஆளுநர், வட குடாநாட்டின் அபிவிருத்தியுடன் ஒட்டுமொத்தமான இலங்கைப் பொருளாதாரமும் வளர்ச்சியடையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

வடக்கிற்கான விரிவாக்கல் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, தொழில்முயற்சியாளர்களின் வர்த்தக செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு புதிய குத்தகை வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் உரையாற்றிய இஈஆ இன் பொதுமுகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு.மகேஷ் நாணயக்கார கூறுகையில், யாழ். பிராந்தியத்தில் எமது பிரசன்னத்தின் ஊடாக, புத்தாக்கமான நிதியியல் தீர்வுகளை வழங்கி இப்பகுதியிலுள்ள வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்களுக்கு உதவுவதில் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். அத்துடன், இந்த சமூகத்தின் நிதிசார் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும் நாம் கவனம் செலுத்துவோம். இஈஆ ஆனது இலங்கையின் வங்கியியல் மற்றும் நிதியியல் சேவைகள் துறையில் முக்கிய நிறுவனமாக முன்னேறியுள்ளது. அத்துடன் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இஈஆ நிறுவனமானது, நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 07 முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

இஈஆ இன் திறப்பு விழா தினத்தில் பெருந்திரளான வடபகுதி வாடிக்கையாளர்கள் ஒன்றுதிரண்டிருந்தனர். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் உறவுப்பாலத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, யாழ். சேவை நிலையத்தின் திறப்பு விழாவுக்கு, நாட்டின் ஏனைய பிரதேச கிளைகளைச் சேர்ந்த சில ஊழியர்களையும் இஈஆ அழைத்து வந்திருந்தது. அந்த ஊழியர்களில் அதிகமானவர்களுக்கு வட குடாநாட்டு விஜயமானது, அவர்களது வாழ்க்கையில் முதல் தடவையாக கிடைத்த வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்பட விளக்கம்: இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் திரு.கே.ஜி.டீ.டீ. தீரசிங்க, யாழ் வாடிக்கையாளர் ஒருவருக்கு முச்சக்கர வண்டி குத்தகை தொடர்பான ஆவணங்களை கையளிப்பதைப் படத்தில் காணலாம். இஈஆ இன் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. மகேஸ் நாணயக்கார, மத்திய வங்கியின் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. எஸ். எஸ். ரத்னாயக்க மற்றும் ஜனாதிபதியின் வங்கியியல் தொடர்பான ஆலோசகர் திருமதி ராணி ஜெயமஹா ஆகியோரும் அருகில் உள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு சூரிய மின்சாரம் : வவு. அரச அதிபர்

மீள் குடியமர்த்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி வவுனியாவில் கல்மடு மற்றும் கனகராயன் குளம் பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் 570 வீடுகளுக்கு சூரிய சக்தி மூலமான மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

கல்மடுவிலுள்ள 320 வீடுகளுக்கும் கனகராயன் குளத்திலுள்ள 250 வீடுகளுக்கும் இலவசமாக சூரிய சக்தி மூலமான மின்சாரத்தை வழங்க சீட் நிறுவனம் முன்வந்துள்ளது.

அதேவேளை, மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்திற் கொண்டு வவுனியாவிலுள்ள ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டினார்
மேலும் இங்கே தொடர்க...

ரயில்சேவைகள் வழமைபோல் : வெசாக்கை முன்னிட்டு விசேட ஏற்பாடுகள்

ரயில்சேவைகள் வழமைபோல் : வெசாக்கை முன்னிட்டு விசேட ஏற்பாடுகள் நாட்டின் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பி உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவிக்கின்றது.

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நாட்டின் போக்குவரத்துச் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதன்படி பல ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பி உள்ளதாகவும் ரயில் சேவைகள் அனைத்தும் வழமை போல் இடம்பெறுவதாகவும் ரயில்வே திணைக்கள ஊடகப் பேச்சாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

அதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் நடத்தப்பட இருப்பதாகவும் ரயில்வேத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில் குறிப்பிட்ட ரயில்சேவைகள் கோட்டை, மருதானை ரயில் நிலையங்களில் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக களுத்துறை, அனுராதபுரம் தாம்போதிகளுக்குச் செல்லும் பௌத்த மக்கள் நலன்கருதி விசேட ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக ரயில்வேத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வாகனங்களைத் தேடும் வன்னி மக்கள்
யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சியில் கொண்டுவந்து குவிக்கப்படும் நிலையில் தமது வாகனங்களைத் தேடி மக்கள் அலையாய் அலைகின்றனர்.

கடந்தவாரம் வரையில் 6250 மோட்டார் சைக்கிள்களும் 11ஆயிரம் சைக்கிள்களும் 45 ஏனைய ரக வாகனங்களும் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்திற்கு எதிர்புறமாக திருநகர்செல்லும் வீதிக்கு அருகேயுள்ள வளாகத்தில் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளன.

தற்போது உள்ள வாகனங்களை விடவும் மேலும் பத்தாயிரம் மோட்டார் வண்டிகளும் ஏனைய வாகனங்களும் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் இதற்கான திகதி குறித்து தெளிவாக கூறமுடியாது என வாகனங்கள் கொண்டு வந்து இறக்கப்படும் வளாகத்தில் பணிபுரிபவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது வாகனத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்காக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்கள் முகாம்களில் இருந்தும் வவுனியா யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் இருந்தும் கிளிநொச்சி வந்து வாகனங்களை தேடிவருகின்றனர்.

குறித்த திகதியில் வாகனங்கள் கையளிக்கப்படும் என எத்தனையோ திகதிகள் குறிக்கப்பட்டு அவை கடந்து போயுள்ள நிலையில் தற்போது இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்திக் கொண்டு பிள்ளைகளைத் தேடுவது போன்று தமது வாகனங்களின் படங்களுடன் தேடுதல் நடவடிக்கையில் மக்கள் அலைந்து திரிகின்றனர். கொண்டுவரப்பட்டுள்ள வாகனங்களில் அநேகமானவற்றின் பெறுமதி மிக்க பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில் அன்றேல் இல்லாத நிலையிலேயே கிளிநொச்சியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வாகனங்களைத் தேடும் சிலர் கவலை வெளியிட்டனர்.

இப்படியான நிலையில் வாகனங்களைப்பார்த்து நொந்து போவதைவிட தம் உயிராக கருதிய வாகனங்களை காணமல் இருந்திருந்தால் பரவாயில்லை என அங்கலாய்க்கும் மக்களையும் கிளிநொச்சியில் வாகனங்கள் கொண்டுவந்து குவிக்கப்படும் இடத்தில் காணமுடிகின்றது.

தற்போதும் வவுனியா மெனிக் பாம் முகாமில் இருக்கின்ற 46வயதுடைய ஒருவர் கருத்து வெளியிடுகையில், கடந்த வாரத்தில் கிளிநொச்சிக்கு வந்து தமது வாகனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் கருத்துவெளியிடுகையில்,

"என்னிடம் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரு ட்ரக்டரும் இருந்தன ஆனால் தற்போது எதுவுமே இல்லை இங்கே ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ள போதும் என்னுடைய வாகனங்கள் எதனையும் காண முடியவில்லை. என்னுடைய வாகனத்தை என்னால் இனங்காண முடியும் பிள்ளைகளைப் போன்று பராமரித்த வாகனம் பலவருடங்களாக நான் பராமரித்த வாகனம் அதனை என்னால் இனங்காணமுடியும்.

ஆனால், இங்கு காணவில்லை. இங்குள்ள வாகனங்களைப் பார்க்கும் போது என்னுடைய வாகனத்திற்கு என்னவாகியிருக்குமோ எனக் கவலை ஏற்படுகின்றது. நாங்கள் மாங்குளம் அம்பகாமம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் தொடர்ந்தும் வவுனியா மெனிக் பாம் முகாமிலேயே வைக்கப்பட்டுள்ளோம் எமது பகுதியில் இன்னமும் மீள் குடியேற்றம் இடம்பெறவில்லை ஏன் என்று எமக்கு புரியவில்லை" என்றார்.

யுத்தத்திற்கு முன்பாக வன்னிப்பகுதியில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களைச்சேர்நத மூன்று லட்சம் மக்கள் வாழ்ந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் குறைந்தது இரண்டு சைக்கிள்கள் காணப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி வன்னியில் மொத்தமாக ஒருலட்சத்திற்கு அதிகமான சைக்கிள்கள் இருந்திருக்கக் கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனைத்தவிர வன்னியில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் ஆயிரக்கணக்கான உழவு இயந்திரங்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குரிய கரிசனையை இந்தியா காட்ட வேண்டும் : ததேகூ

தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு தொடர்பில் சர்வதேச நாடுகள், விசேடமாக இந்தியா தனது கரிசனையை உரியமுறையில் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தினால், அதனை பரிசீலிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இலங்கை தள்ளப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தீர்வுத்திட்டங்கள் இதுவரைகாலம் சறுக்கிச் சென்றமைக்கு பிரதான காரணம், இனவாத சிந்தனையேயாகும் என்று கூறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வதேச மும் இந்தியாவும் சரியானமுறையில் அழுத்தங்களை பிரயோகிக்குமானால் இனவாத சிந்தனைகள் களையப்படுவதுடன் தீர்வுக்கான வழியும் பிறக்கும் என்றும் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்து.

இலங்கை இந்திய உடன்படிக்கையை மீண்டும் அமுல்படுத்துமாறும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் இந்திய ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருப்பதாக சிங்கள ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

"தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முற்றுப் பெறாதிருப்பதற்கும் தசாப்த காலங்களாக அது இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கும் இனவாத சக்திகளின் போக்குகளே காரணமாக அமைந்திருக்கின்றன.

இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் அது சீரான முறையில் முன்னெடுக்கப்பட்டிருக்குமானால் பிரச்சினை இன்றைய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்காது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களை இனவாதம் கொண்ட பெரும்பான்மைக் கட்சிகள் வலுவாக எதிர்த்து வருகின்றன.

தமது சிந்தனைகளை நியாயப்படுத்துகின்ற வகையில் தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் இனவாத அமைப்புக்கள் அதிகாரப் பகிர்வுடனான தீர்வு என்ற விடயத்தில் சிங்கள மக்களிடத்தில் இனவாதத்தை விதைத்து வருகின்றன.

சம உரிமையே தேவை

ஜே. வி. பியும் இவ்விடயத்தில் அதே போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெரும்பான்மை சமூகத்திற்கு வழங்கப்படுகின்ற உரிமைகள், சலுகைகளையே கேட்டு நிற்கின்றனர்.

பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாதிருப்பதற்கு விடுதலைப் புலிகளும் யுத்தமும் மாத்திரமே இதுவரையில் காரணங்களாக முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனாலும் யுத்தம் நிறைவடைந்து புலிகள் அழிக்கப்பட்டதாகக் கூறி ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது.

இந்தச் சந்தர்ப்பத்திலாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டி விடும் என்று எதிர்பார்த்த ஒட்டுமொத்த மக்களும் ஏமாற்றத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் தற்போது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீண்டும் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தரப்பில் வலியுறுத்தியிருப்பதானது வரவேற்க வேண்டிய விடயமாகும்.

இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் உலக நாடுகள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் உலக நாடுகள் விசேடமாக அண்டைய நாடாகவும் தமிழர் பிரச்சினையில் உரிமையுடன் தலையிடக் கூடிய நாடாகவும் இருக்கின்ற இந்தியாவின் வலியுறுத்தல்கள், அழுத்தங்கள் மேலெழுந்த வாரியாக அல்லாது பலமானதாக அமையும் பட்சத்தில் அதிலிருந்து இலங்கை அரசாங்கத்தினால் விடுபடக் கூடியதாக இருக்காது. மாறாக அந்த அழுத்தங்களுக்கு ஆட்பட்டே தீர வேண்டிய நிலை ஏற்படும்.

நல்ல தீர்வே வேண்டும்

எனவே வரலாற்று ரீதியாக ஏமாற்றப்பட்டு வருகின்ற எமக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் உந்து சக்தியும் மிகமிக அவசியம் என்பதுடன் இனியும் அரசாங்கம் இனவாதிகளின் கருத்துக்களை கவனத்திற் கொள்ளாது ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்த எதிர்காலத்திற்கு துணையாக அமையும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் நாம் இனவாதப் போக்கை கடைப்பிடிக்கவில்லை. எமது மக்களின் உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் பெரும்பான்மை சமூகம் அனுபவிக்கின்ற அந்தஸ்து எமக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதற்கான குரலாகவே நாம் இருக்கின்றோம்.

எனவே அரசாங்கம் என்ற வகையில் இழுத்தடிப்புகளுக்கு முன்னுரிமை வழங்காது இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஏற்ற வழிவகைகளை உருவாக்க வேண்டும என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.

இவ்விடயத்தில் ஜனாதிபதியின் பங்கு அளப்பரியது என்பதை நினைவுபடுத்துவதற்கும் விரும்புகின்றோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டனில் தமிழரை கொன்ற மூன்று பேருக்கு சிறை தண்டனை

லண்டன் : பிரிட்டனில் தமிழரை கொலை செய்த மூன்று பேருக்கு தலா ஒன்பதாண்டு காலம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் நார்போக் பகுதியில் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தவர் சரவணகுமார் செல்லப்பன்(24). கடந்த ஆண்டு அக்டோபரில் பெட்ரோல் பங்க்கில் வேலை முடித்து திரும்பி கொண்டிருந்த செல்லப்பனை ஆர்மீனியாவைச் சேர்ந்த சேம்டோவ்(18) ஈரான் நாட்டைச் சேர்ந்த ஜெகீர் அகமதி(20) அவாத் முராதி(18) ஆகியோர் சூழ்ந்து கொண்டு அவரிடமிருந்த, "பிளாக்பெர்ரி' ரக மொபைல்போனை பறிக்க முயன்றனர்.

இதை தரமறுத்ததால் அவரை கண்மூடித்தனமாக அடித்து போட்டு விட்டு மூவரும் ஓடிவிட்டனர். இந்த மொபைல் போனை விற்று கோழிக்கறி வாங்கி சாப்பிட்டுள்ளனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் முதலுதவி பெற்று வீடு திரும்பிய செல்லப்பன் தன் பெற்றோரிடம், படிகட்டில் இருந்து விழுந்து விட்டதாக கூறியுள்ளார். தான் தாக்கப்பட்ட விஷயத்தை போலீசில் தெரிவிக்கவில்லை.

வீடு வந்து சேர்ந்த சில மணி நேரத்தில் செல்லப்பன் இறந்து விட்டார். பிரேத பரிசோதனையில் அவர் தலையில் பலத்த காயம் பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவர் தாக்கப்பட்ட இடத்தில் இருந்த ரகசிய கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை பார்த்து போலீசார் மூவரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஈரான் மற்றும் ஆர்மீனிய இளைஞர்களுக்கு தலா ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மைக்கேல் மெட்இயர் தீர்ப்பு கூறினார். செல்லப்பன் அவரது பெற்றோருக்கு ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தமிழர்களில் மூன்று பிரிவு: கருணா தகவல்


"நாடு கடந்த அரசை ஏற்படுத்துவது தொடர்பாக வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழர்களிடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூன்று பிரிவாக செயல் பட்டு வருகின்றனர்' என,இலங்கை அமைச்சர் கருணா கூறியுள்ளார்.

இலங்கை புனரமைப்புத்துறை இணை அமைச்சரும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவருமான கருணா அம்மன் கூறியதாவது: இலங்கைக்கு வெளியில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் சிலர், நாடு கடந்த அரசை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களுக்குள் கடுமையான கருத்து வேறுபாடு உள்ளது. இவர்கள் மூன்று பிரிவாக செயல்படுகின்றனர்.ருத்திரகுமார் தலைமையில் அமெரிக்காவை மையமாக கொண்டு ஒரு பிரிவும், நெடியவன் தலைமையில் நார்வேயை மையமாக கொண்டு ஒரு பிரிவும், லண்டனை மையமாக கொண்டு ஒரு பிரிவும் செயல்பட்டு வருகின்றன.

இலங்கையில் வாழும் தமிழர்களின் ஆதரவு இல்லாமல், இவர்களால் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்ற கேள்வி எழுகிறது.விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் முன்னர்நடைமுறைக்கு ஒவ்வாத தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்தார்.இத்திட்டம் இறுதி வரை நிறைவேறவில்லை. நாடு கடந்த அரசு என்ற தற்போதையை திட்டமும் இதுபோல் தான் இருக்கும். இந்த திட்டமும் நிறைவேற வாய்ப்பு இல்லை. இவ்வாறு கருணா கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 19-05-2010 புதன்கிழமை ஆட்சிக்குழு உறுப்பினர் டபிள்யூ. எஸ். செந்தில்நாதனின் தலைமையில் நடைபெற்ற அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் சட்டத்தரணி யசோதரா கதிர்காமத்தம்பி “இந்தியாவிலுள்ள புலம்பெயர் இலம்பாடுடையேர்க்கான உதவிகளும் உரிமைகளும்” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இவர் 1999ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைக் கல்வியை முடித்த பின் பங்களூர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றார். சட்டத்தரணி யசோதரா ஆற்றிய உரையின் சுருக்கம்)

2007- 2009 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் பங்களூரில் பயின்ற போது இறுதி அரையாண்டு ஆய்வுக்கு நான் எடுத்துக் கொண்ட தலைப்பு மனித உரிமைகள் பற்றியதாகும்.

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பங்களூரில் இருந்தபடியால் அந்த மக்கள் பற்றி நேரடியாக சென்று ஆராய முடிந்தது. புலம்பெயர்ந்த மக்களை அகதிகள் என்று சொல்வது அவர்களைப் புண்படுத்துவது போல் இருக்குமென்று பலரும் கருதியதால் ‘இலம்பாடுடையோர்’ என்ற சொல்லை இங்கே பிரயோகிக்கின்றேன்.

இந்தியாவில் மனித நேயம்...

இலம்பாடுடையோர்க்கான சட்ட அந்தஸ்து என்ன? மனித உரிமைகள் பற்றிய கருத்துருவம் மேலைத்தேசத்தில் தான் தோற்றம் பெற்றதென்ற ஒரு கருத்துண்டு. பாரதத்தில் புராண, உபநிடத காலங்களிலிருந்தே இக் கருத்துருவம் நடைமுறையிலிருந்து வந்துள்ளது. நாம் ஒருவரையொருவர் நண்பனாக உற்று நோக்குவோம். அப்போது தான் மனித நேயம் வளரும் என்று யசுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

இலம்பாடுடையோருக்கு எவ்வாறு உதவலாம் என மேலைத்தேசங்களில் சிந்தித்தனர். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் இது ஆவணவடிவமாகக் கொண்டுவரப்பட்டது. 1955ம் ஆண்டு இது பற்றிய நிறுவன ரீதியான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

இலங்கையிலிருந்த புலம்பெயர்ந்த இலம்பாடுடையோருக்கான இந்தியாவின் பங்கு, கடப்பாடு என்ன? பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவுக்கு அதாவது 1983ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு போர் உச்சக்கட்டம் அடைந்தது வரை தமிழ் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இவர்களின் நிலை என்ன? இவர்களுள் பலர் 1983ம்ஆண்டு சென்ற போதிருந்த அதே நிலையில்தான் இன்னும் உள்ளனர். சிறுவர்கள் நிலை என்ன? பெண்கள் நிலை என்ன? இவர்களுக்கென தமிழ்நாட்டில் இதுவரை எதுவித விசேட சட்டமும் ஆக்கப்படவில்லையா? கிட்டத்தட்ட 120000 க்கு மேற்பட்ட மக்கள் பல முகாம்களிலும் பரந்து காணப்படுகின்றனர்.

உதவி, உரிமை

இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவி, உரிமைகளை நோக்கும் போது சிறுவர்களுக்கென ஒரு தொகையும் நடுத்தர வயதினருக்கு ஒரு தொகையும் வளர்ந்தோருக்கு ரூபா 280ம் வழங்கப்படுகிறது. மானிய அடிப்படையில் அரிசி, மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றன. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சமையல் உபகரணம் வழங்கப்படுகின்றது.

முதலாவது பிரிவில் ஒரு குடும்பம் தங்க சிறிய அறை. இரண்டாவது தலா 100 குடும்பங்களை தங்கவைக்க ஒரு மண்டபம், அடுத்ததாக அரசியல் ஈடுபாடு கொண்டோரைத் தங்க வைக்கும் விசேட முகாம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

திட்டங்கள்

மகப்பேற்றுத் திட்டம் உண்டு. சிறுவர் பராமரிப்புத் திட்டமும் உண்டு. நடமாடும் உரிமைக்குக் கட்டுப்பாடுண்டு. முன் அனுமதி பெற்றே வெளியிடங்களுக்குச் சென்று வர முடியும். இவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் நாளாந்த தேவைக்கு போதுமா? இல்லை.

இதற்குரிய மாற்றுவழி என்ன? அரசாங்க தொழிலைத் தவிர தொழில் செய்யும் உரிமை உண்டு. கூலித் தொழிலாளர்களாகத்தான் அநேகர் வேலை செய்கின்றனர். முதலாளிமாரின் தொழில் சுரண்டலுண்டு. இதைத்தடுக்க சட்டம் இல்லை. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோருக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் மு.

கருணாநிதி அவர்கள் ஒரு முறை அறிவித்திருந்தார்.அது அறிவித்தலுடன் நின்றுவிட்டது. இந்த நிலையில் புலம்பெயர்ந்த இலம்பாடுடையோர் தமது நாட்டுக்கு திரும்புவதுதான் வினைத்திறனுடையதாகவிருக்கும். 1987ல் ஒரு சுமூக நிலை ஏற்பட்ட போது சுமார் 40000 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

திருப்பி அனுப்பப்படும் போது அரசுகளின் அறிக்கை அரச சார்பற்ற நிறுவனங்களின் சரியான அறிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலம்பாடுடையோருக்கான தூதுவராலயம் மக்களின் விருப்பத்தைப் பெற வேண்டும். இதன் பின்னரே திருப்பி அனுப்பப்படலாம்.

1991ம்ஆண்டு பங்களூரில் இந்திராகாந்தி கல்லூரியில் ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை அனைவரும் அறிவர். அப்பாடசாலைக்கு நான் நேரில் சென்று பார்த்தேன். ஒரு அறையில் 32 பிள்ளைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலம், கன்னடம், தமிழ் மொழி மூலம் கல்வி போதிக்கப்படுகின்றது. சிறுபிள்ளைகளை விட்டு விட்டு பெற்றோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றுள்ளனர்.

மனித உரிமைகள் என்னும் போது சிறுவர் பெண்கள் என ஏன் வித்தியாசம் காட்ட வேண்டும்? அது எல்லோருக்கும் பொதுவானது.

மாற்றாந்தாய் மனப்பாங்கு....

இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கும் திபேத்திலிருந்து வந்தவர்களுக்குமிடையில் பாரிய வேறுபாடுண்டு. திபேத்தியர் தமது நாட்டிலிருந்தது போலவே ஒரு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்களுக்கென தொழிற்சாலைகள், விவசாயம் செய்யவென பல ஏக்கர் காணி என்பன வழங்கப்பட்டுள்ளன. தமது கலாசாரத்தை அப்படியே பேணி வருகிறார்கள்.

ஆனால் எமது மக்களின் கலாசாரம் மாற்றமடைகிறது. சினிமா மோகம் அதிகம். நடிப்பவர்கள் போன்ற நடை உடையை பின்பற்றும் ஆசை காணப்படுகிறது. கலாசாரத்தில் பாரிய மாற்றம் இல்லாவிட்டாலும் சில தவிர்க்கமுடியாமலுள்ளன. இவ்வளவு பெருந் தொகையான மக்களை 27 வருடம் வைத்துக் காப்பாற்றுவது என்பது ஒரு பெரிய விடயம்தான்.

பெற்றோர் மீண்டும் தாயகம் செல்ல விரும்புகிறார்கள். ஆனால் அங்கு பிறந்து வளர்ந்தவர்கள் திரும்பி வர விரும்புகின்றார்களில்லை. தமிழ் நாடு அரசு நிதி உதவியை அதிகரித்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவுகின்றன.

கல்வி வசதி

எம். ஜி. ஆர். முதலமைச்சராக இருந்த வேளை புலம்பெயர்ந்த மாணவர்கள் வைத்தியத்துறையில் பயில ஏற்பாடு செய்திருந்தார். பின்னர் அது கைவிடப்பட்டுள்ளது. பிளஸ் யியி (ஜிங்சீஙூ யியி) வரை எல்லோரும் இலவசமாகப் படிக்கலாம். ஆனால் அதனால் பயன் இல்லையென்று அதில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

தீர்வு

தமிழக அரசு சட்ட ரீதியான அந்தஸ்து எதுவும் வழங்கப்படாத போதும் நிர்வாக ரீதியான சில நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். இலங்கை அரசுக்கு தமது மக்கள் பற்றிய ஒரு கடப்பாடு உண்டு. இரு நாடுகளும் இணைந்து ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். பிரஜாவுரிமை வழங்குவதா? திருப்பியனுப்புவதா? என சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் விழிப்பாக இருக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் தம்மை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக உணவு மற்றும் நீர் விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெள்ளம் வடிந்து வரும் பிரதேசங்களில் டெங்கு மற்றும் வயிற்றோட்டம் போன்ற நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதால் மக்கள் கொதித்தாறிய நீரையே பருக வேண்டும் என்று சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்புப் பிரிவு பணிப்பாளர் பபா பலிஹவர்தன தெரிவித்தார்.

அதேவேளை, சுற்றாடலில் நீர் தேங்கி நிற்கும் பொருட்களைத் துப்புரவு செய்து சூழலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பதன் மூலம் நோய்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமெனவும் அவர் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொதித்து ஆறிய நீர், நன்கு சமைத்த உணவுகளையே உபயோகிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்க ப்பட்ட மாணவர்களுக்குப் பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கவும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலயக் கல்விப் பணிப்பாளருக்கூடாக கல்வியமை ச்சிலிருந்து தமக்கான பாட நூல்கள் மற்றும் சீருடைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். தேசிய பாடசாலை அதிபர்கள் நேரடியாக கல்வியமைச்சுடன் தொடர்பு கொண்டு பாடப் புத்தகங்களையும் சீருடைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்
மேலும் இங்கே தொடர்க...

நிவாரணப் பணிகளுக்கு ரூ. 9 கோடியே 70 இலட்சம் ஒதுக்கீடு: பாதிக்கப்பட்டோரின் தேவைகளை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் கடும் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நட வடிக்கைகளுக்காக 9 கோடியே 70 இல ட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச்.எம். பெளஸி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறைபாடுளை ஆராயும் நடவடிக்கைகள் தற்போது மேற் கொள்ளப்பட்டு வரு வதாகத் தெரிவித்த அமைச்சர், அவ்வப் பகுதி கிராமசேவகர் களின் சிபாரிசுகளுக் கமைய பாதிக்கப் பட்டவர்களின் தேவை களைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவித்தார்.

அதேவேளை; வெள்ளம், கடும் காற்று காரணமாக முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கென தலா 50,000 ரூபாவை வழங்கவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் பகுதி பகுதியாகச் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் உதவிகள் வழங்கப்படு மெனவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தமது பொறுப்புக்களை முறையாக மேற்கொள்ளத் தவறுவார்களாயின் அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதில் பின்னிற்கப் போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக நாடெங்கிலும் பெய்த மழை, வெள்ளம் காரணமாக ஆறரை இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பதினையாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மாவட்டங்களிலேயே மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். வெள்ளத்தினால் சுமார் இரண்டாயிரம் வீடுகள் முற்றாக பாதிப்படைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

செட்டிக்குளம் நிவாரணக் கிராம விவகாரம்: முறையாக முன் அனுமதி பெறாததனாலேயே கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு


“பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றால் சென்றுவர மீண்டும் ஏற்பாடு”
செட்டிக்குளம் நிவாரணக் கிராமங் களுக்குள் செல்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறையாக முன்அனுமதி பெறாததன் காரணமாகவே அவர்க ளுக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜென ரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

“நிவாரணக் கிராமங்களுக்குள் செல் வதற்கென ஒரு நடைமுறையிருக்கிறது. அதன்படி, பாதுகாப்புத் தரப்பில் அனுமதி பெற்றால் எவ்வித சிரமமுமின்றி முகாமுக்குள் உட்செல்லமுடியும்” எனவும் இராணுவ பேச்சாளர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பாதுகாப்பு அமைச்சிடம் உரிய முறையில் முன்அனுமதியை பெற்றுக்கொள்வார் களாயின் அவர்கள் நிவாரணக் கிரா மங்களுக்குச்சென்றுவர அனுமதிக் கப்படுவார்கள். அதற்கான அனுமதியை வழங்குவதில் வேறு எவ்வித பிரச்சி னைகளும் இல்லையெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

‘அவர்கள் மீண்டும் உரிய முறையில் விண்ணப்பித்தால் நிவாரணக் கிராமங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என்கிறார் இராணுவப் பேச்சாளர்.

கூட்டமைப்பைச் சேர்ந்த 12 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்ற ப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் செய்த இந்தக் குழுவினர் அங்கிருந்து ஒட்டுசுட்டான், தண்ணீர் ஊற்று, முல்லைத்தீவு போன்ற பகுதி களுக்கும் சென் றனர்.

வவுனியா வடக்கு நெடுங் கேணி பிரதேச செயலகப் பிரிவு க்குச் சென்றிருந்த இவர்கள், அங்கே மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் குறை, நிறைகளை கேட்டறிந்து கொண் டனர்.

அதனைத் தொடர்ந்து செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களை பார்வையிடு வதற்காக சென்றிருந்தபோது நிவாரணக் கிராமத்துக்குள் செல்வதற்கான அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டது.

அது தொடர்பாக இராணுவப் பேச்சாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாதுகாப்பு அமைச்சிடம் உரிய முறையில் முன் அனுமதி பெறாமை மாத்திரமே இவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான காரண மென குறிப்பிட்ட இராணுவப் பேச் சாளர், இவர்களது வருகை குறித்து ஏற்கனவே அமைச்சுக்கு அறிவித்தி ருப்பார்களாயின் இதில் எவ்வித சிக் கல்களும் எழுந்திருக்காது எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...