இலங்கை
யில் இருந்து 'சன் சீ' கப்பல் மூலம் கனடாவுக்கு வந்துள்ள 490 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என இலங்கை அரசாங்கம் கனடாவிடம் கோரியுள்ளது. இலங்கையின் கனேடிய உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வர இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். கனடாவுக்கு வந்த கப்பலில் தலைவராக செயற்பட்ட வினோத் என்பவர் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட தலைவர் என்பதுடன் ஆயுதக் கடத்தல்களுடன் தொடர்புபட்டவர் என சித்திராங்கனி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே வேளை சன் கீ கப்பல் மூலம் கனடாவுக்கு வந்தவர்கள் ஆட்கடத்தல் நடவடிக்கையாளர்களால் அழைத்து வரப்பட்ட அகதிகள் என கனடா தெரிவித்துள்ளது. எல்லை பாதுகாப்பு அலுவலக அதிகாரி ரொப் ஜோன்ஸ்டனின் தகவல்படி இவர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கூடாரங்களுக்கு பயன்படுத்தப்படும் துணிகளைக் கொண்டு கப்பல் விஸ்தரிக்கப்பட்டிருந்தது. அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களை ஏற்றி வரும் பொருட்டே அவ்வாறு செய்யப்பட்டிருந்தது.
அதே நேரம் கப்பலில் பயணித்தோரின் சுகாதார பணிகள் தொடர்பில் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஒரு பகுதியிலும் ஆண்கள் வேறு பகுதிகளிலும் இருந்தே கப்பலில் பயணித்துள்ளனர்.
இதேவேளை குறித்த கப்பலில் வந்த இலங்கை அகதிகள் அப்பாவிகளாக தென்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அகதிகளில் 350 ஆண்களும் 50 பெண்கள் மற்றும் 50 சிறுவர்களும் இருந்துள்ளதாகவும் ரொப் ஜோன்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து சென்றுள்ள 490 அகதிகள் தொடர்பில் கனடாவில் எழுந்துள்ள எதிர்ப்பு அலைகளை தமக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள கனடாவில் உள்ள சிங்கள அமைப்புகள் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே தமிழ் அகதிகள் வருகையை எதிர்த்து பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள மக்கள் தமக்கு தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி வருவதாக அந்த மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.
முன்னர் 2000 பேர் வருவதாக கூறப்பட்ட போதும் பின்னர் 490 அகதிகள் தமது மாநிலத்திற்கு வருவதை கேள்வியுற்ற நிலையிலேயே இந்த எதிர்ப்பை அவர்கள் வெளியிட்டதாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கனடாவில் இயங்கும் பிரண்ட்ஸ் ஒப் கனடா (கனடாவின் நண்பர்கள்) என்ற சிங்கள அமைப்பின் அறிக்கை ஒன்றில், இலங்கை அகதிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அதில் இலங்கையில் தற்போது போர் நிறைவடைந்து இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கை தமிழர்களுக்கு கனடா, அகதி அந்தஸ்தை வழங்கக்கூடாது என அந்த அமைப்பு கோரியுள்ளது. ஆட்கடத்தல் நடவடிக்கையின் அடிப்படையிலேயே இலங்கை அகதிகள் கனடாவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்த இலங்கை தமிழ் அகதிகளுக்கு அரசியல் அந்தஸ்து வழங்குவது, தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு உரமூட்டுவதாக அமையும் என குறித்த சிங்கள அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.