29 ஜூன், 2011

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் ஆயுதங்கள் மீட்பு


மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவக்குடிச்சேனை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

5 கிலோ கிராம் நிறையுடைய ஒரு கைகுண்டு, சீ 4 ரக வெடிபொருள் 1.8 கிலோ கிராம், ரீ 56 ரக மெகஸின் 5, ரீ 56 ரக ரவைகள் 107, ரீ 56 ரக டுல் கிட் 1, 20 மீற்றர் நீளமுடைய வயர் ரோல், 3 சயனட் குப்பிகள், 4 கைக்குண்டு மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தகடு ஒன்று உள்ளிட்ட சில வெடிபொருட்கள், ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் வவுணதீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாலியலுக்கான மனிதக் கடத்தலில் ஒரு மூலமாக இலங்கை உள்ளது: அமெரிக்காவின் ஆண்டறிக்கை

மனிதக் கடத்தல்களை தடுப்பதற்கான குறைந்தபட்ச தராதரங்களுக்குரிய கடப்பாடுகளை இலங்கை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவும் ஆனால் இதில் குறிப்பிடத்தக்களவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மனிதக் கடத்தல்கள் தொடர்பான அமெரிக்காவின் 2011 ஆம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் கட்டாய வேலை வாங்கல் மற்றும் பாலியலுக்காக கடத்தப்படுவதில் இலங்கை ஒரு மூலமாக இருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் இலங்கையை கண்காணிப்புப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ள அமெரிக்கா, இரண்டாம் மட்டத்தில் குறித்துள்ளது. அதன் பொருள், கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை இலங்கை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால் அதை செய்வதற்கு குறிப்பிடத்தக்களவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பதாகும்.

மனிதக் கடத்தல்களை குறிப்பாக பெண்கள், சிறார்களை கடத்துவதை தடுக்கும், ஒடுக்கும் தண்டிப்பதற்கான ஐ.நா.வின் 2000 ஆம் ஆண்டு ஷரத்தை இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை என அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அறிக்கையில் இலங்கை தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் ஆண்கள், பெண்கள் சிறார்கள் (16 17 வயதானோர்) குவைத், ஜோர்டான், சவூதி அரேபியா, கட்டார், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், பஹ்ரெய்ன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு நிர்மாணத் தொழிலாளர்களாக, வீட்டுப் பணியாளர்களாக அல்லது தொழிற்சாலை ஊழியர்களாக செல்கின்றனர்.

அத்தொழிலாளர்களில் சிலர், நடமாட்டக் கட்டுப்பாடு, கடவுச் சீட்டை தடுத்து வைத்தல், அச்சுறுத்தல் உடல் ரீதியான அல்லது பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றின் மூலம் கட்டாய வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அண்மையில் வெளியான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் ஜோர்தானில் பணியாற்றும் இலங்கை வீட்டுப் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் அதிகமானோர் அவர்களின் எஜமானர்களால் உடல் ரீதியாக துஷ்பிரயோகப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனவும் 11 சதவீதமானோர் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகுவதாகவும் 60 வீதமானோர் சம்பளம் வழங்கப்படாதிருப்பதாகவும் 60 சதவீதமானோர் கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இருப்பதாகவும் 80 சதவீதமானோர் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் சவூதி அரேபியா, குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகளில் இலங்கை பணியாளர்கள் உடலில் 20 ஆணிகள் ஏற்றப்பட்டமை அல்லது 9 ஆணிகளை உட்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டமை உட்பட உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுவதாக செய்திகள் வெளியாகின. இலங்கை வேலைவாய்ப்பு முகவர்கள் ஒப்பந்தங்களை மாற்றுதல் ஒரு வேலைக்கு வாக்குறுதி வழங்கி விட்டு (தொழில் புரியும் இடங்களை) அடைந்த பின் வேலை, தொழில் தருநர், வேலை சூழல், சம்பளம் ஆகியவற்றை மாற்றுதல் உட்பட மோசடிகளில் ஈடுபடுவதாகவும் அறிக்கைகள் வெளியாகின. இது கட்டாய வேலை வாங்குதல் மற்றும் கடன் பிணைகளுக்கான அச்சுறுத்தல் காரணிகளாகின்றன.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐ. அ. எமிரேட்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைத்தங்கல் நாடாக இலங்கை உள்ளது. அவர்களில் சிலர் கடத்தலால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கலாம். பல சந்தர்ப்பங்களில் வேலை வாய்ப்பு முகவர்களால் ஆண்கள் இலங்கையில் நிர்க்கதியாக்கப்பட்டனர்.

இலங்கைப் பெண்கள் பலர் ஏனைய நாடுகளில் வீட்டுப் பணிப் பெண் போன்ற வேலைகளுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டு ஆனால் அங்கு வந்து சேர்ந்த பின் விபசார நிலையங்கள் போன்றவற்றில் (அதிகமாக சிங்கப்பூரில்) பணியாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். சொற்ப எண்ணிக்கையான பெண்கள் மாலைதீவில் பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த நாட்டிற்குள் பெண்களும் சிறார்களும் விபசார விடுதிகளுக்கான பாலியல் கடத்தல்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக வடக்கிற்குச் செல்லும் இலங்கை படையினரின் முக்கிய இடைத்தங்கல் நிலையமாக விளங்கும் அநுராதபுரம் பகுதியில் சிறுமிகளை விட சிறுவர்கள் விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். குறிப்பாக கரையோரப் பகுதிகளில் பாலியல் சுற்றுலாவுக்காக இது நடைபெறுகிறது. சுமார் 1,000 சிறார்கள் இலங்கையில் பாலியல் சுரண்டல்களுக்குள்ளாவதாக 2009 ஆம் ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மதிப்பிட்டிருந்தது. எனினும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த எண்ணிக்கை 10,000 இற்கும் 15,000 இற்கும் இடைப்பட்டதாகும் எனத் தெரிவித்திருந்தன.

யுத்தத்தின் பின்னர் வறுமையான கிழக்குக் கரையோரத்தில் அண்மையில் ஏற்பட்ட சுற்றுலா அதிகரிப்பானது சிறுவர் பாலியல் சுற்றுலாவுக்கான கேள்வியை அதிகரிக்கக் கூடும்.

உலர் வலயங்களில் பெருந்தோட்ட பண்ணைப் பகுதிகள், பட்டாசு, கருவாட்டு தொழிற்றுறை போன்றவற்றில் சிறார்கள் கொத்தடிமையாக அல்லது கட்டாய வேலை வாங்கலுக்கு உள்ளாவதாக அறிக்கைகள் வெளியாகின. சிறார்கள் சிலர், பொதுவாக தமிழ் தேயிலைத் தோட்டத் துறையை சேர்ந்தோர் கொழும்பில் வீட்டுப் பணியாளர்களாக உள்ளனர். அவர்கள் உடல், உள, பாலியல் துஷ்பிரயோகம், சம்பளம் வழங்கப்படாமை, நடமாட்டம் கட்டுப்படுத்தப்படல் போன்றனவற்றுக்கு உள்ளாகின்றனர்.

பெண்கள் மற்றும் சிறார்கள் சிலர் ஆடைத் தொழிற்சாலையில் தொழில் வழங்கப்படும் என முகவர்களால் வாக்குறுதி அளிக்கப்பட்டு, விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். தாய்லாந்து, சீனா, தெற்காசியா, ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த சொற்ப எண்ணிக்கையான பெண்கள் இலங்கையில் விபசாரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சனல்4 படங்கள் போலியானவை என்பதை சரியாக உற்று நோக்கினால் தெரியும்: ஜனாதிபதி

அரசாங்கம் ஏற்கனவே இரண்டு அறிக்கைகளை தயாரித்துள்ளது. அமுலாக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது என்ன நடந்தது என்பது குறித்து இந்தவாரம் அல்லது அடுத்த வாரம் எனக்கு ஒப்படைப்பார்கள், இதேவேளை பொதுமக்களை புலிகள் எவ்வாறு சுட்டுக் கொன்றார்கள் என்பது குறித்து நான் ஆளில்லாத விமானங்கள் எடுத்த படங்களைப் பார்த்திருக்கிறேன். அதனை அனைத்து தூதுவர்களும் பார்த்துள்ளார்கள். பாதுகாப்பு தேடி வந்த மக்களை புலிகள் சுட்டுக் கொல்வதை அவை படம் பிடித்துள்ளன. இந்த சனல்4 படங்கள் போலியானவை என்பதை சரியாக உற்று நோக்கினால் தெரியும். அதாவது சுடப்பட்டு விழுபவர் கவனமாகவே விழுகிறார். இது ஒரு திரைப்படத்தை தயாரிப்பதைப் போன்றே அமைந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் படையினர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உண்மையில் இறுதி மோதலில் உள்ளவர்கள் வாழ்வா? சாவா என்ற போராட்டத்திற்கு மத்தியிலேயே இருந்தனர். எனவே அவர்களால் இத்தகைய துஷ்பிரயோகங்களில் ஈடுபட முடியுமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். இவ்வாறு கூறினார்.

இதனிடையே இந்த சனல்4 வீடியோவை நாம் ஒருபோதும் நம்பவில்லை. இது ஒரு திரைப்படமாகவே உள்ளது. எனினும் பொதுநலவாய அமைப்புக்கள் இதனை உண்மை என்று கூறுகின்றனவே என பத்திரிகை ஆசிரியர் ஒருவர் வினவியபோது ஜனாதிபதி பதிலளிக்கையில்:

நாம் அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். இது தவறு என்பதை. பாலித கோஹன, சவேந்திர சில்வா ஆகியோர் இது போலி என்பதை எடுத்துக் கூறியுள்ளனர். இறுதிக் கட்டத்தில் அங்கு இருந்தவர் என்பதால் சவேந்திர சில்வா இது குறித்து சவால் விட்டுள்ளார். அத்துடன் மூன்று பேருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன என்றார்.

இதேவேளை, கடந்த காலங்களில் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில் நாம் பலரை கைது செய்துள்ளோம். திருகோணமலை சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்தோம். ஒரு படைப்பிரிவை பல மாதங்களாக தடுத்து வைத்திருந்தோம். எனினும் அவர்களுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுக்களும் இருக்கவில்லை. இறுதியாக நாம் அவர்களை விடுவித்தோம். சாட்சியம் இருந்தால் வந்து கூறுங்கள் என நான் திரு. சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டேன். இவ்வாறானவர்களைத் தண்டிக்க உதவி புரியுமாறும் நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

எல்லோரும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பத்திரிகை மூலம் அறிக்கை விடுவதிலேயே குறியாக உள்ளனர் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளினதும் விபரங்களை வெளியிட்டு அவர்களின் விடுதலையை காலதாமதமின்றி அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்தும் முகமாக நாளை வியாழக்கிழமை கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்வதற்கான இயக்கம் அறிவித்துள்ளது.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இலங்கையில் ஏராளம் உண்டு. அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் அப்புறப்படுத்தப்பட்டு ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் அரசு தவறிழைத்துள்ளது என்றும் அவ் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்வதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சமீர கொஸ்வத்த கூறுகையில் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் இன்று வரையில் இழுபறி நிலையிலேயே உள்ளன. 10 தொடக்கம் 15 வருட காலமாக எவ்விதமான விசாரணைகளும் இன்றி பெரும் தொகையான அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையானது பாரிய மனிதாபிமான மற்ற செயலாகவே அமைகின்றது.

அரசியல் கைதிகளின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. எத்தனைபேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்களின் பெயர் விபரங்கள் கூட இதுவரையில் வெளியிடப்படவில்லை. சிறைச்சாலைகள் அமைச்சர் 12 ஆயிரம் பேர் சிறையில் உள்ளதாகவும் 3 ஆயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறுகின்றார். அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவாவில் வைத்து 4 ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார். பாராளுமன்றத்தில் 639 பேர் மாத்திரமே உள்ளதாக கூறுகின்றனர்.

எனவே இதில் எந்த தரவு உண்மையானது இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு அரசின் வெளிப்படையற்ற தன்மையே காரணமாகின்றது. தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்கான போராட்டத்தில் அனைத்து இன மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தனியார் பஸ்களில் கமெரா பொருத்துவதற்கு ஏற்பாடு

தனியார் பஸ்களில் கமெராக்களை பொருத்துவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பஸ்களில் ஒட்டப்பட்டிருக்கின்ற அரசியல் வாதிகளின் படங்களை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி ரத்னாயக்க தெரிவித்தார்.

தனியார் பஸ்களுக்குள் இடம்பெறும் ஊழல் மோசடிகளை கண்டுபிடிப்பதற்கும் பெண்கள் மீதான துன்புறுத்தல்களை இனங்காண்பதற்குமே கமெராக்களை பொருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தனியார் பஸ்களில் பல்வேறான முறைகேடுகள் இடம்பெறுவதாக தனியார் போக்குவரத்து அமைச்சுக்கு பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவ்வாறான முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டே தனியார் பஸ்களில் கமெராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சாதாரண பஸ் மற்றும் அரைசொகுசு பஸ்களை பயணிகள் இலகுவாக இனங்கண்டுகொள்வதற்கு அரைசொகுசு பஸ்ஸை சுற்றி விசேட ஸ்ரிக்கர் ஒன்றும் ஒட்டப்படும். அதுமட்டுமன்றி மக்களுக்கு சிறந்ததொரு சேவையை வழங்குவதற்காக தனியார் பஸ்களில் ஒட்டப்பட்டிருக்கின்ற அரசியல்வாதிகளின் படங்களை அகற்றுமாறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் புதிய வாடகை கார் சேவையினால் 40 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் செயலிழக்கும்: ஐ.தே.க



அரசாங்கத்தினால் தலைநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நனோ டெக்ஸி (வாடகைக் கார்) திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் செயலிழப்பதுடன் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தொழில்களை இழக்கவேண்டிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முஜிபுர் ரஹ்மான் இங்கு மேலும் கூறுகையில், கொழும்பில் மாத்திரம் சுமார் 40 ஆயிரம் முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றன. இன்னும் முழு நேர தொழில்களுக்கும் இந்த முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அது மட்டுமல்லாது, உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்வோர் விற்பனையில் ஈடுபடுவோர் என மொத்தத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இத் திட்டத்தினால் தொழில் இழக்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தின் இத் திட்டத்தின் மூலம் தலைநகரில் முச்சக்கர வண்டிகளை இல்லாது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இது ஒரு பாரதூரமான விடயமாகும். எனவே நனோ டெக்ஸி திட்டத்தை கைவிடுமாறும் முச்சக்கர வண்டித்தொழிலாளர்களை சங்கடத்தில் தள்ளிவிட வேண்டாம் என்றும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

இதேவேளை, தலைநகரை அழகு மயப்படுத்தப் போவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடுகின்ற அரசாங்கம் நகர்ப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எண்ணுவதாகத் தெரியவில்லை.

கொழும்பு நகர சபைக்கு சொந்தமான 140 மில்லியன் ரூபாவை செலவிட்டு பம்பலப்பிட்டியிலிருந்து அலரி மாளிகை வரையிலான மூன்ற கிலோமீற்றர் பாதையை திருத்தியமைக்கின்ற அரசாங்கம் தலைநகர் குடியிருப்புப பகுதிகளில் கழிவுகளை அகற்றுவதற்கான இயந்திர வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்காதிருக்கின்றது. அது மட்டுமல்லாது, வடிகான்களை துப்புரவு செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் இல்லை. இவ்வாறு பலதரப்பட்ட குறைபாடுகள் இருக்கின்ற நிலையில் காலி வீதியையும் கருவாத்தோட்ட வீதிகளையும் திருத்தியமைப்பதற்கு அரசு முன் நிற்கின்றது. இதன் மூலம் தலைநகரை அழகுபடுத்தி விட முடியாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசிய பிரச்சினைக்கான தீர்வில் அதிகாரப் பகிர்வு இடம்பெறக் கூடாது: ஜா.ஹெ.உ


தேசிய பிரச்சினைக்கான தீர்வில் அதிகாரப் பகிர்வு இடம்பெறக் கூடாது. வடக்கு கிழக்கிற்கு ஏனைய மாகாண சபைகளுக்குள்ள நிர்வாக முறையையும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுமே வழங்க வேண்டும். மேலதிகமாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமேயானால் அதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் அநாவசியமான தீர்வுத் திட்டங்களை தேசிய அரசியலுக்குள் உட்புகுத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. இன்று தமிழர்கள் எவ்விதமான பிரச்சினையும் இன்றி இலங்கையில் வாழ்கின்றார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க கூறுகையில்: இலங்கையில் 30 ஆண்டு கால யுத்தம் முடிவடைந்து இரண்டு வருட காலமாகின்றது. இன்று வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழர்கள் நாட்டில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லக்கூடிய அச்சமற்ற சூழல் பிறந்துள்ளது. எவ்விதமான பிரச்சினைகளும் அசம்பாவிதங்களும் இன்றி மூவின மக்களும் வாழ்கின்றனர். இதுவே யுத்தத்தின் பின்னர் இலங்கை அடைந்த மிகப் பெரிய வெற்றியாகும்.

இதனை சீர்குலைக்கும் வகையில் முடிவுற்ற பிரச்சினைக்கு தீர்வுக் காண அதிகாரப் பகிர்வுகளை விஸ்தரிப்பது படுமோசமான செயலாகும். அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசி தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை ஆராய்வதில் எவ்விதமான தவறும் இல்லை ஆனால் புலிகளின் கோரிக்கைகளையே முன் வைக்கும் கூட்டமைப்பு போன்றவர்களிடம் அதிகாரப் பகிர்வு குறித்து பேசுவது ஆபத்தான விடயமாகும்.

எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரப் பகிர்வு ஒன்றுக்கு ஜாதிக ஹெல உறுமய இடமளிக்காது. நாட்டை மீண்டும் பின்னகர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். அரசாங்கம் தமிழ் மக்களின் உண்மையான அடிப்படைப் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை முன் வைக்க வேண்டும்.பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை கிடையாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்றின் தீர்மானமே அரசியல் தீர்வு: ஜனாதிபதி

பாராளுமன்றின் தீர்மானத்திற்கமைய அரசியல் தீர்வை வழங்கத் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், பொதுச் சேவை கட்டமைப்பின் கீழ் இரண்டு லட்சம் ரூபா ஊதியம் வழங்க முடியாது என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு ஊதிய அதிகரிப்பை வழங்க முடியாதுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

2031 இல் வேற்றுக்கிரகவாசிகளை சந்திக்கலாம்: ரஸ்ய விஞ்ஞானி எதிர்வுகூறல்

மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார்.

இதனை எதிர்வு கூறியுள்ளவர் 'ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்' இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார்.

வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை.

இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார்.

வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...