29 செப்டம்பர், 2010

காலி, களுத்துறை மாவட்ட தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயம்


பரவலாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக காலி, களுத்துறை மாவட்டங்களின் சில தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மழை மேலும் தொடருமாயின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களும் நீரில் மூழ்கக் கூடிய வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

நாடெங்கிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரமழை வீழ்ச்சி பதிவில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சி மன்னாரில் 70.5 மி.மீட்டர்களாகப் பதிவாகியுள்ளது என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை நேற்றுக் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையுமான காலப்பகுதியில் காலி மாவட்டத்திலேயே அதிக மழை வீழ்ச்சியாக 50.7 மி.மீ. மழை பெய்துள்ளது எனவும் அவர் கூறினார்.

அடை மழை காரணமாக காலி மாவட்டத்தின் பலப்பிட்டி, எல்பிட்டி, கரந்தெனியா போன்ற பிரதேசங்களின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் உள்வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் காலி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் அசித ரணசிங்க கூறினார்.

எல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் திடீர் மண்சரிவு காரணமாக இரு வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளரான ஜயசிங்க ஆராய்ச்சி மேலும் கூறுகையில், தற்போதைய மழைக் காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்க முடியும்.

இன்று பிற்பகல் அல்லது மாலை வேளையில் இடி, மின்னலுடன் நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்ய முடியும். இச்சமயம் கடும் காற்றும் வீசலாம். அதனால் இடி, மின்னல் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இதேவேளை இடைப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி அடுத்த வாரத்திற்குள் ஆரம்பமாகலாமென எதிர்பார்க்கின்றோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக