1 நவம்பர், 2010

அரசாங்கத்தின் செயற்பாடு தமிழ் மக்கள் மீதான அக்கறையீனத்துக்கு எடுத்துக்காட்டு:த.தே.கூ



தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற நியாயமான அரசியல் தீர்வு தொடர்பில் இன்றைய அரசாங்கத்திடமிருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. இது தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறையீனத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மீள்குடியேற்றம் உட்பட தமிழர் தரப்பின் எந்தவொரு விடயத்திலும் அரசாங்கத்திடம் ஆக்கபூர்வமான திட்டங்களோ நடவடிக்கைகளோ கிடையாது. ஆனாலும் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் வெளியாருக்கு அரசாங்கம் பாசாங்கு காட்டி வருகின்றது என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்துவதற்கு தயாராகி வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்து கேட்டபோதே கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஜூன் மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியது. அதன் பின்னர் எமது அமைப்பின் தலைவருடனும் அரசு பேச்சுக்களை நடத்தியது.

இந்த பேச்சுக்களின் போது எமது மக்களின் இடம்பெயர்வு, மீள்குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான சகவாழ்வு ஆகியவற்றில் அரசாங்கத்தின் நேர்மைத்தன்மையை வெளிக்காட்டுமாறு வற்புறுத்தி வந்துள்ளோம்.

இன்றும்கூட இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றவர்கள் துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். மீள்குடியேற்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரதிநிதிகளை அறிவிக்குமாறு அரசாங்கம் எம்மிடம் கேட்டிருந்தது. அதனை நாம் ஏற்றுக் கொண்டதுடன் பிரதிநிதிகளின் பெயர்களையும் அறிவித்திருந்தோம்.

ஆனாலும் இந்த திட்டம் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து எந்த முன்னேற்றத்தையும் காண முடியாதிருக்கின்றது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பிலோ அல்லது அங்குள்ள மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களது நிம்மதியான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கோ அரசாங்கத்திடம் ஆக்கபூர்வமான திட்ங்கள் எதுவும் இல்லை. அக்கறையும் இல்லை.

பேச்சுக்களை மட்டுமே நடத்தி வருகின்ற அரசாங்கம் கூட்டமைப்பின் கோரிக்கையின்ஒஅடி, தமிழ் மக்களின் அபிலாஷைகளின் பிரகாரம், தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிரந்தரமானதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு தொடர்பில் வாய் திறந்திருக்கின்றதா என்பதே எமது கேள்வியாக இருக்கின்றது. அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்படுகின்ற விடயங்கள் எதுவும் நடந்தபாடில்லை. தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றதே தவிர துன்பப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உண்மையான அக்கறையோ சிந்தனையோ அறவே இல்லை என்பதே உண்மையாகும். ஜனாதிபதி தலைமையில் வட மாகாண அபிவிருத்திக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. வடக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டத்தில் அந்த மாகாண மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாம் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். இது உண்மையில் கசப்பான நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.

இதுவரையிலும் அரசாங்கம் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே செயற்பட்டு வந்துள்ளது. எமது மக்களின் குறைகளைக் கண்டறிவதற்குக் கூட திட்டங்களை வகுக்கத் தவறியிருக்கின்றது.

இதற்கு முன்னர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையொன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருமாறு பல தடவைகளில் கேட்டிருந்த போதிலும் அதற்கான நேரத்தை ஒதுக்கித் தருவதற்கு அரசு முயற்சிக்கவில்லை. இந்நிலையிலேயே தற்போது எம்முடன் பேசுவதற்கு தயாராகி வருவதாகத் தெரிய வருகின்றது. இது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்காகவா அல்லது அரசாங்கத்தின் தேவைகளுக்காகவா என்பது தெரியாது. எது எவ்வாறிருப்பினும் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் அரசிடம் இல்லை. அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ரிஸானாவுக்கு கருணைகாட்டுமாறு சவூதியை பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கோரும் சாத்தியம்

தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலைசெய்து விட்டதாக சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக் விடயத்தில் கருணைகாட்டுமாறு பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ், சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுக்கும் சாத்தியமிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவூதி அரேபியாவில் ஆளும் அரச குடும்பத்தினருடன் தொடர்புகளைக்கொண்டிருந்த இளவரசர் சார்ள்ஸ், ரிஸானா நபீக் விவகாரத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவருகின்றார். இந்நிலையிலேயே இவ்விடயத்தில் அவர் தலையிடக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன ரிஸானா நபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி ஏற்கனவே கோரியுள்ளன. அத்துடன் ரிஸானாவுக்கு கருணை காட்டுமாறு கோரி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சவூதி மன்னருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இந்நிலையிலேயே இவ்விவகாரத்தில் பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசரும் தலையிட்டு, கருணை வழங்குமாறு கோரலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறிருந்தபோதிலும், இச்செய்தி தொடர்பில் விளக்கமளித்துள்ள பக்கிங்ஹாம் மாளிகை பேச்சாளர் ஒருவர், இவ்வாறான தகவலை என்னால் உறுதிப்படுத்தவோ அல்லது மறுத்துரைக்கவோ முடியாது. ஏனெனில் அரச குடும்பத்தின் விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவளை, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய உயரதிகாரி ஒருவர் கூறுகையில், அரச குடும்பத்தின் விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கான அனுமதி தூதுவராலயத்திற்கு கிடையாது. நாம் பிரித்தானிய அரசாங்கத்தையே இலங்கையில் பிரதிநிதித்துவம் செய்கின்றோம்; அரச குடும்பத்தையல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பக்கிங்ஹாம் மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் இதுபற்றிய தகவல் எதுவும் நேற்றுவரை வெளியாகியிருக்கவில்லை. இந்நிலையில், ரிஸானா விவகாரம் தொடர்பான சவூதியின் நிலைப்பாடு இவ்வாரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

தொலைபேசிகள் மூலம் ஆபாச படங்களை பார்வையிடும் 300 இணையத் தடைசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு



கையடக்கத் தொலைபேசியூடாக ஆபாசப்படங்களைப் பார்வையிடும் இணையங்கள் 300 ஐத் தடைசெய்ய அல்லது அவற்றைப் பார்வையிடமுடியாத வாறு தடுப்புக்களை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்கும் படி பத்தரமுல்லை சிறுவர் மற்றும் மகளிர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொலைத் தொடர்புகள் ஒழங்குபடுத்தல் ஆணைக் குழுவிற்கு இவ்வாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இது வரை மொத்தம் 547 இணையங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அவற்றுள் 185ல் இலங்கை இளைஞர் யுவதிகள் மற்றும் சிறுவர்கள் இதில் பங்கெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

யானை தந்தங்களை விற்க முயன்ற நால்வர் கைது

குருணாகல் மாவட்டத்தின் அம்பன்பொல பிரதேசத்திலிருந்து எடுத்துவரப்பட்டு பத்து இலட்சத்திற்கு விற்க முயன்றதாகச் சொல்லப்படும் இரண்டு யானைத் தந்தங்களுடன் நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக கொபேஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

கொபேஹேன பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று காலை வித்திகுளி சந்தியில் வைத்து இந்த யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை எடுத்து வந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொபேஹேன பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் குறித்த யானைத் தந்தங்களைக் கொள்வனவு செய்பவர்கள் போல வேடமிட்டு குறித்த இடத்திற்குச் சென்றுள்ளதுடன், சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டியில் யானைத்தந்தங்களை அவ்விடத்திற்கு எடுத்து வந்துள்ளனர். சுமார் மூன்றரை அடி நீளமும் ஒன்பது அங்குல அகலமும் கொண்ட இந்த தந்தங்கள் இரண்டும் ஏழு கிலோ எடை கொண்டவையாகும் எனத் தெரிவித்த பொலிசார், கடந்த குறுகிய காலத்தினுள் கொபேஹேன பொலிஸாரினால் இவ்வாறு யானைத்தந்தங்கள் கைப்பற்றப்பட்டமை இது மூன்றாவது தடவையாகும் எனவும் தெரிவித்தனர்.

வடமேல் மாகாண உதவி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிரி குணவர்தன, நிக்கவெரட்டிய பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விதான பத்திரன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் பண்டுவ வீரசிங்க கொபேஹேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அத்துல அபேரத்ன ஆகியோரின் ஆலோசனைக்கமைய கொபேஹேன பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

கண்டியில் இயங்கும் இரத்தின தீபம் அமைப்பு 15 ஊடக வியலாளர்களுக்கு ஊடக மாமதி, ஊடகத் தாரகை, நிழற்படவேந்தன், காட்சி ஊடகச் செம்மல் போன்ற கௌரவ விருதுகளை வழங்கி கௌரவித்தது.

பாராளுமன்ற அங்கத்தவர் வீ.இராதா கிருஷ்ணன் பிரதம அதிதியாகக் கலந்து இவ்வீருதை வழங்கி வைத்தார்.

வருடா வருடம் இரத்தின தீபம் அமைப்பு பல்வேறு கலைஞர்களையும் ஊடக வியலாளர்களையும் ரத்ன தீபம் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம் . இம்முறை ஊடகம் சார்ந்தவர்களுக்கு இவ்வாறு ஊடக மதி, ஊடகத்தாரகை, காட்சி ஊடகச் செம்மல் முதலான விருதுகளை வழங்கியது.

அவ்வாறு விருது வழங்கப் பட்ட ஊடக வியலாளர்கள் பின்வருமாறு-

ஏன்எம்.ராஜா, ஸ்டார் ராஸீக், எம்.எல்.எம்.லாபிர், அலியார் இக்பால், மொகமட் இர்பான், எஸ்.முகுந்தன், எஸ்.ராமானுஜம். ஜே.எம்.ஹாபீஸ், மர்லின் மரிக்கார், எஸ்.கே.சமரநாயக, ஜே.ஏ.எல்.ஜயசிங்க, காமினி ராமநாயக்க, காமினி சந்திரசேகர ஆகியோர்களாகும்.
மேலும் இங்கே தொடர்க...

6 -1/2 கோடி ரூபாயில் 52 உழவு இயந்திரங்கள் வடபகுதி மக்களுக்கு வழங்கவென இன்று இந்தியாவினால் இலங்கைக்கு அன்பளிப்பு






வட மாகாண விவசாய நடவடிக்கைகளுக்கென சுமார் ஆறரை கோடி ரூபா பெறுமதியான 52 உழிவு இயந்திரங்களை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குகின்றன.

வட மாகாணத்துக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷவிடம் 52 உழவு இயந்திரங்களையும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்த் உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இந்த உழவு இயந்திரங்களை இலங்கை அரசின் சார்பில் பொறுப்பேற்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வடமாகாண ஆளுநரிடம் கையளிக்கவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

70 கைபேசிகளை உடலில் ஒட்டிவந்த இலங்கைப் பெண் சென்னையில் கைது




கொழும்பில் இருந்து சென்னைக்கு உடலில் கையடக்கத் தொலைபேசிகளை மறைத்து கடத்தி வந்த இலங்கை பெண்ணை இந்திய சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து சென்ற விமானப் பயணிகளை இந்திய சுங்க பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது இலங்கையை சேர்ந்த ரீஸ்வியா (வயது 20) என்ற பெண்ணின் உடைகள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் அவரை இந்திய சுங்க பிரிவு பெண் அதிகாரிகள் தனியறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது உடல் முழுவதும் கையடக்க தொலைபேசிகளை வைத்து செலோ டேப் மூலம் ஒட்டி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரது உடலில் இருந்து 70 கையடக்கத் தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவருடைய பொதியில் இருந்து உயர்ரக 3 செய்மதி கையடக்க தொலைபேசிகளையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பில் இந்திய விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரி பெரியசாமி கூறியதாவது;

இலங்கை பெண் 3 செய்மதி கையடக்க தொலைபேசிகளை கடத்தி வந்து உள்ளார். இது தீவிரவாதிகள் பயன்படுத்துவதாகும். இந்த கையடக்க தொலைபேசிகளை யாருக்காக கடத்தி வரப்பட்டது.

இதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி விசாரணை நடத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 27ஆம் திகதி புறநகர் பொலிஸார் ரூபாய் 2 கோடி இந்திய மதிப்புள்ள நவரத்தின கற்களை பிடித்தாக கூறி எங்களிடம் ஒப்படைத்தனர். இந்த கற்களின் மதிப்பு ரூபாய் 49 இலட்சம் இந்திய மதிப்பு தான் என்பது தெரிய வந்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...

றிசானாவுக்கு விடுதலை வேண்டி மூதூரில் கண்ணீர் மல்க பிரார்த்தனை

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் றிசானா நபீக்கிற்கு விடுதலை வேண்டி மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (31) மாபெரும் பிரார்த்தனை, ஸலாதுல் ஹாஜா தொழுகை, பிரசார நிகழ்வும் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்கள் றிசானா நபீக்கின் விடுதலைக்காக ஒன்று கூடிய மைதானத்தில் பாடசாலை மாண வர்கள், மத்ரஸா மாணவர்கள், சமய, சமூக தலைவர்கள், பொது மக்கள் என எல்லோரும் மைதானத்தினுள் அமர்ந்திருந்தனர். ஆரம்பமாக அஷ்ஷேஹ் எம்.எம். முனாஸ் (ரஸாதி)யினால் சொற்பொழிவு நிகழ்த்தப் பட்டது. இதனை அடுத்து தனித்தனியாக ஸலாதுல் ஹாஜா தொழுகையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தொழுதனர்.

இதேவேளை, எழுதப் பட்டிருந்த சுலோ கங்களில் இரு புனித தலங்களின் பணி யாளரே எங்கள் ஏழைச் சகோதரி றிசானா நபீக்கை உங்கள் பெரும் தன்மையினால் மன்னியுங்கள்.

“அன்புத் தாயே எங்களது சகோதரியை மன்னியுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் அருள் புரியட்டும்” என்றும் எழுதப்பட்டிருந்தன. அல்லாஹ்விடமே இந்த நிலையை வேண்டுகின்றோம். மன்னிக்கும் பனப்பான்மை கொண்ட மனங்களே மன்னித்து விடுங்கள்; விடுதலை செய்யுங்கள் எனவும் சிறுவர்கள் முதல் கூடிய மக்கள் இறைவனிடம் அழுது பிரார்த்தனை செய்தனர். மக்கள் ஒன்றுகூடி றிசானா நபீக்கின் விடுதலைக்காக கண்ணீர் மல்கி அழுது புலம்பிய காட்சி மக்கள் எல்லோ ரையும் மனம் உருகச் செய்தது.

இதேவேளை, சவூதி தூதரகம், சவூதி மன்னர் மற்றும் பணிப்பெண்ணாக பணிபுரிந்த குடும்பத்தார்கள் உள்ளிட்ட வர்களுக்கான கையெழுத்து விடுதலைக்கான மகஜர்களையும் அனுப்புவதற்கான நட வடிக்கை இடம்பெற்றன.

றிசானா நபீக்கின் விடுதலைக்காக எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் விடுதலைக்காக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

றிசானா நபீக் விடுதலை செய்யப்பட வேண்டுமென தந்தை நபீக் சவூதி நாட்டு மன்னர், தனது பிள்ளை பணிபுரிந்த குடும்பத்தார்களிடமும் விடுவிப்புக்கான வேண்டுகோளை விடுப்பதாகக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பாடசாலைகளுக்கு நீர்க்கட்டணம் அறவிடுவதில்லையென அரசு தீர்மானம்


நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நீர் விநியோகக் கட்டணத்தை அறவிடுவதில்லை யென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சிற்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய பாடசாலைகளின் நீர்க் கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாகாண பாடசாலை, தேசியப் பாடசாலை கள் அனைத்திற்கும் இத்திட்டம் நடைமுறைப்படுத் தப்படும். இதன் காரணமாக நாட்டில் உள்ள சுமார் 9,800 பாடசாலைகள் நன்மையடையவுள்ளன
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தீர்வை முன்வைக்க திட்டம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசவும் முடிவு


இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான திட்டவரைவொன்றைத் தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முன்வைக்கவிருப்பதாக அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர், என். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை மறுதினம் 3ஆம் திகதி கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் கூடவுள்ளது.

இது தொடர்பாகத் தினகரனுக்குக் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம்;

இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பான திட்டவரைவொன்றை டிசம்பருக்கு முன்னர் தயாரிக்கவுள்ளோம். புத்திஜீவிகள் குழு ஏற்கனவே சில தீர்வுத் திட்டங்களை அரங்கத்திடம் முன்வைத்துள்ளது. இவைபற்றி நாம் ஆராய்வோம். தீர்வுத் திட்டமொன்றை தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்க வுள்ளோம்.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த ஜுலை மாதம் 28ஆம் திகதி சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்தமையால் எமக்குப் பதில் எதுவும் வழங்கப்படவில்லை. தற்பொழுது அவர் நாடு திரும்பியுள்ளார். அவருக்கு அனுப்பின கடிதத்தின் பிரதியை செவ்வாய்க்கிழமை மீண்டும் அனுப்ப வுள்ளோம்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் பிரதிநிதிகள் சந்திப்பதற்கான இடம், நேரம், திகதி என்பவற்றை அவர்களிடமிருந்து கேட்கவுள்ளோம்.

தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என சம்பந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

13 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியென்பதால் அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கே நாமும் விரும்புகிறோம். இதுவிடயத்தில் அவர்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.

அத்துடன், நாம் ஏற்கனவே கூறியதைப் போன்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இரண்டாம் கட்டமாக மலையகக் கட்சிகளை இணைப்பது பற்றியும் நாம் ஆராயவுள்ளோம்.

மலையக மக்கள் முன்னணி அரங்கத்தில் இணைந்துகொள்ள ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்டமாக முஸ்லிம் கட்சிகளையும் இணைத்துக் கொள்ளவுள்ளோம்
மேலும் இங்கே தொடர்க...

நேபாள ஜனாதிபதி யாதவ்வுடன் ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேச்சு




நேபாள அரசியல் நெருக்கடி தொடர்பாக இரு தலைவர்களும் ஆராய்வு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (30) நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவை சீனாவின் சங்ஹாய் நகரில் சந்தித்து பேசினார்.

நேபாளத்தில் தற்போது இடம்பெற்று வரும் அரசியல் நெருக்கடி தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல சமயங்களில் நேபாளத்துக்கு சென்று அந்த நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண உதவியதாகவும், நேபாளத்தின் அரசியல் நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதிக்கு நன்கு தெரிந்திருப்பதாகவும் கூறிய நேபாள ஜனாதிபதி, அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கு இலங்கை ஜனாதிபதியின் ஆதரவினை எதிர்பார்ப்பதாகவும் நேபாள ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன், லும்பினியை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு நேபாள ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

இதற்கு முன் தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது லும்பினியின் அபிவிருத்திக்கு இலங்கை பங்களிக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் கூறி வந்த போதிலும் நான் ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னரே அதனை நிறைவேற்ற முடிந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைவூட்டினார்.

இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில் கல்வி பரிமாற்ற திட்டங்கள் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் விரிவாக ஆராய்ந்தனர். நேபாள மாணவர்களுக்கு இலங்கையில் கல்வி வாய்ப்புகளை வழங்க முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அதற்கேற்ப எதிர்காலத்தில் நேபாளத்துக்கும் இலங்கைக்கும் இடையே தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பாக கல்வி பரிமாற்ற திட்டங்கள் இடம்பெறும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில் சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

இரு நாடுகளுக்கிடையிலும் சுற்றுலாக் கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதென இரு தரப்பினருக்குமிடையில் இணக்கம் காணப்பட்டது.

இலங்கை அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், விமல் வீரவன்ச, ஜனாதிபதியின் வெளிநாட்டலுவல்களின் தொடர்பால் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் வாஸ் குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாதிலக அமுனுகம, சங்ஹாயில் உள்ள இலங்கை கொன்சியூலர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.

அன்றைய தினம் மாலை ரிகீஜிலி 2010 சர்வதேச கண்காட்சியின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அதிதியாக கலந்துகொண்டதுடன் சீன பிரதமரையும் சந்தித்து பேசினார்.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் சர்வதேச கிளைகளின் மாநாடு-




புளொட் அமைப்பின் சர்வதேசக் கிளைகளின் மாநாடு நேற்றும், இன்றையதினமும் ஜெர்மனியின் ஸ்ரூட்காட் நகரில் நடைபெற்றுள்ளது. இதன்போது கழகத்தின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் புளொட்டின் அனைத்து கிளைகளையும் சேர்ந்த அமைப்பாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். நேற்றையதினம் ஆரம்ப நிகழ்வாக மௌன அஞ்சலி, வரவேற்புரை, கிளைப் பொறுப்பாளர்களின் உரை என்பவற்றைத் தொடர்ந்து கழகத்தின் செயற்பாடுகளில் வெளிநாட்டுக் கிளைகளின் பங்களிப்பு, அரசாங்கத்தின் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் கழகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. நேற்றைய நிகழ்வின்போது விசேட அதிதியாக ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) இன் முன்னைநாள் வடக்குக் கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு.வரதராஜப்பெருமாள் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். இரண்டாம் நாளான இன்றைய இந்நிகழ்வின்போது புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் செயலர் திரு.எஸ்.சதானந்தம், புளொட் மத்தியகுழு உறுப்பினர்களான திரு.பவன், திரு.ராகவன் ஆகியோர் தொலைபேசி ஊடாக கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர். இன்றைய மாநாட்டின்போது தற்போதைய தள அரசியல் நிலைமைகள், தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் உதவிகள், வெளிநாட்டுக் கிளைகளின் செயற்பாடுகள், நாட்டில் கழகத்தின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஆராயப்பட்டது. இதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவடைந்தது.
மேலும் இங்கே தொடர்க...