28 பிப்ரவரி, 2011

விமானப்படைத் தளபதியாக எச்.டி.அபேவிக்ரம பதவியேற்பு
இலங்கை விமானப்படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் எச்.டி.அபேவிக்ரம இன்று திங்கட்கிழமை காலை உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

கொழும்பிலுள்ள விமானப்படை தலைமையகத்தில் இந்த பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு முன்னர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக விமானப்படை தளபதியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

எச்.டி. அபேவிக்ரம கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார். 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி விமானப்படையில் இணைந்த இவர் 30 வருட அனுபவம் வாய்ந்தவராவார்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் வன்முறை சம்பவங்கள் 159 ஆக அதிகரிப்பு


வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட இறுதி தினத்திலிருந்து இதுவரையில் நாடளாவிய ரீதியில் 159 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறை சம்பவங்களினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் 31 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் வன்முறை சம்பவங்கள் மேலும் தொடரும் நிலைமையே தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வாகாது : ஜே.வி.பி. தெரிவிப்பு


இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமை தீர்வாகாது. கடந்த 25 வருடகால கொள்கையில் எவ்விதமான மாற்றமும் கிடையாது.

நாட்டை பிரிக்காமல் சமஷ்டியில் தீர்வு பெற்றுக்கொண்டுள்ள உலக நாடுகளை இலங்கை முன்னுதாரணமாகக் கொள்வதே சிறந்தது என்று ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாடு அடைந்த சுதந்திரமோ, சமாதானமோ எவரையும் சென்றடையவில்லை. தங்கத்தையும் பணத்தையும் திருடியவர்கள் இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை திருடுகின்றனர் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், உலக நாடுகளில் சமஷ்டி முறை ஒரு நாட்டை இரண்டாக பிரிப்பதற்கும் பிரிக்காமல் இருப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பி. வலியுறுத்தும் சமஷ்டி முறைமை இலங்கையை துண்டாடுவதற்கல்ல. மாறாக பல்வேறு சமூக, அரசியல் காரணிகளால் பிரிந்துபோயுள்ள தமிழ், சிங்களம் என்ற இரு சமூகத்தை இணைப்பதற்கே ஆகும்.

1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பி.யின் ஸ்தாபகரும் தலைவருமான றோஹண விஜேவீர இலங்கையின் தேசியப் பிரச்சினை தொடர்பாக நூல் ஒன்றை வெளியிட்டார். அந்நூலில் நேரடியாகவே பெடரல் என்ற சமஷ்டி முறைமை தேசியப் பிரச்சினைக்கான தீர்வு ஆகாது. ஏனெனில் அத்தீர்வினால் அதிகாரப் பகிர்வு பொதுமக்களிடையே சென்றடையாது என்று தெரிவித்திருந்தார்.

அதே கொள்கையையே ஜே.வி.பி. கடந்த 25 வருடகாலமாக கொண்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் பொதுமக்கள் எதிர்பார்த்த நிவாரணங்களோ அபிவிருத்தியோ கிடைக்கவில்லை. மாறாக வறுமை மேலோங்கி பொதுமக்கள் பாரியளவு பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஜே.வி.பி.யின் வருடாந்த சம்மேளன மாநாட்டில் உரையாற்றிய அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணமுடியும் என்று கூறியிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

எரிபொருள் நிரப்பும் நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கை

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் நவீனமயப்படுத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமன்றி இதர தரப்பிற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் நவீனமயப்படுத்தப்படும் என்று பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் பெற்றோலியத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி மீண்டும் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாக்கப்பட்ட 107 எரிபொருள் நிரப்பும் நிலையங்களையும் நவீனமயப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட ஏற்பாடுகளின் பிரகாரம் பிணையாளர்கள் வசம் இருக்கின்ற எரிபொருள் நிரப்பும் நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்கும், அதற்காக அவர்களுக்கு நிதிவசதிகள் தேவையேற்படின் அதனை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரதேச சபைகளுக்குள்ள நிறைவேற்று அதிகாரம் வேண்டும்: மாவை சேனாதிராஜா


பாராளுமன்ற உறுப்பினர்களைவிட பிரதேச சபைகளுக்கு அதிக நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது. பிரதேச சபைகளின் ஊடாக மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எனவே எமது மக்களின் அடிப்படைத் தேவைகளை மக்களின் பிரதிநிதிகளே நிறைவேற்றக் கூடிய இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியடையும் வகையில் வேட்பாளர்கள் செயற்பட வேண்டும் என வவுனியா மாவட்ட பிரதேச சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் மத்தியில் உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வவுனியா நெல்லி ஸ்டார் விடுதியில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் வவுனியா நகரசபைத் தலைவருமாகிய ஜி.ரி.லிங்கநாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டத் தலைவர் டேவிட் நாகநாதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அங்கு மேலும் தெரிவித்ததாவது:

பல்வேறு சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் அரசு இப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றது. முதலில் மாதம் இருதடவைகள் பேச்சுக்கள் நடத்தப்படும் என கூறினார்கள். ஆனால் அதன்படி நடக்காவிட்டாலும் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பேச்சுக்களில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் அர்த்தமுள்ளதாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதற்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படுவதற்கும் இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூடிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பாதுகாப்புத் தொடரணி வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

பொலிஸ் ஜீப் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி, பின்னர் வீதியோரத்திலிருந்த கடையொன்றிலும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள் மூவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பெல்மதுளை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கதிர்காமம் பிரதேசத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த சேவா வனிதா பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த பொலிஸ் வாகனமே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மேற்படி பொலிஸ் ஜீப் பெல்மதுளை, சன்னஸ்கம பிரதேசத்தில் வீதியால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதியதுடன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியோரத்திலிருந்த கட்டிடங்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். காயமடைந்த 3 பொலிஸ் அதிகாரிகளும் பொதுமக்கள் இருவரும் பிரதேசவாசிகளின் உதவியுடன் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

கருணாநிதி அத்துமீறி மீன்பிடிக்கையில் இந்தியாவிடம் கையேந்துகிறது இலங்கை

இலங்கை கடலில் கருணாநிதி அத்துமீறி மீன் பிடிக்கையில் இந்தியாவிடம் தேங்காய்க்கு கையேந்தி அரசாங்கம் காத்திருக்கின்றது. தேர்தலின் பின்னர் அனைத்து துறைகளிலும் விலை அதிகரிப்பு இடம் பெறும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

பொது மக்கள் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். சட்டவிரோத சுவரொட்டிகளைஅகற்ற பொலிஸாருக்கு நிதி வழங்கப்படவில்லை. ஆனால் அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுக அங்குரார்ப்பண நிகழ்வில் இடம் பெற்ற மயிலாட்டத்திற்கு ஒரு கோடியே 82 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று கொழும்பில் இடம் பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே விஜித ஹேரத் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

தற்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உட்பட போக்குவரத்து. மின்சாரம், பரீட்சைகள் கட்டணம். பதிவுக் கட்டணம் என பலவற்றிலும் அரசாங்கம் கட்டண உயர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எரிபொருள் நிலையங்கள் 5 ரூபாவால் கட்டண அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்படாது வீண் பிரச்சினைகளையே தோற்றுவித்து வருகின்றது.

இந்தியா இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்களை பிடித்துச் செல்கின்றது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ, கடல் வளத்தை பாதுகாக்கவோ செயற்படாது இந்தியாவிலிருந்து தேங்காய் கொள்வனவு செய்யப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. இதனை தெங்கு அபிவிருத்தி அமைச்சர் மறுத்து வருகின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டில் மீண்டும் ஒருமுறை வன் முறை ஏற்படவோ அல்லது பிரி வினை ஏற்படவோ ஒரு போதும் இடமளிக்கமாட்டேன்.


அனைவரும் தமக்கிடையிலான பேதங்களை மறந்து இலங்கை, பொருளாதாரத்திலும் சமூக ரீதியி லும் சுபீட்சமடைய ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் முதலாவது பாரா ளுமன்றத்தின் உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பி னர்களில் ஒருவருமான எச். ஸ்ரீ நிஸ்ஸங்கவின் ஞாபகார்த்த நிகழ்வு வெள்ளவத்தையில் உள்ள ஸ்ரீ நிஸ்ஸங்க மன்றத்தில் கடந்த சனிக் கிழமை நடைபெற்றது. இதில் கல ந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கூறிய வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி அவர்கள் மேலும் கூறியதாவது:- நாட்டில் வெவ்வேறு சமயங்களையும் இனப் பிரிவுகளையும் சேர்ந்துள்ள மக்கள் வாழுகிறார்கள். அவர்கள் அனைவரும் இலங்கைத் தாயின் பிள்ளைகளாவர்.

பிரிவினைகள் எம்மைக் கட்டுப்படுத்திவிட் டால் எமது உண்மையான ஆற்றலைத் தெரிந்துகொள்ள முடியாது. நாம் பிரிவினை மோதல் என 30 ஆண்டுகளைக் கழித்துவிட்டோம். இனிமேல் இலங்கையரான நாம் அனைவரும் அமைதியையும் இன ஒற்றுமையையும் தேட வேண்டும்.

தாய்நாட்டின் தேவைக்கு ஏற்றவகையில் செயற்பட வேண்டியது அனைத்து இலங்கையர்களினதும் பொறுப்பாகும்.

கடந்த காலத்தில் தேசாபிமானிகள் மிகுந்த அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் செயற்பட்டனர். அவர்கள் சென்ற பாதையில் நாட்டை இட்டுச்செல்ல வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

எமக்கு உள்ள சவால்களையிட்டு நாம் தளர்ந்து விடக்கூடாது. மிகவும் கஷ்டத்துடன் கிடைத்த ஜனநாயகத்தையும் மக்கள் உரிமைகளையும் சுதந்திரத்தையும் இழக்க முடியாது. சவால்களுக்கு முகம்கொடுத்து நாட்டை நிரந்தர சமாதானம் மற்றும் சுபீட்சத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும்.

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒன்றுசேர்ந்து உதவ வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் அங்கு குறிப்பிட்டார்.

எச். ஸ்ரீ நிஸ்ஸங்க பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அவர் நாட்டை நேசித்த அரசியல்வாதி என்றும் மக்கள் ஆதரவையும் மதிப்பையும் பெற்றவராக அவர் திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார்.

அமரர் ஸ்ரீ நிஸ்ஸங்கவின் வீட்டிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆரம்பிப்பது தொடர்பான முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் அங்கு ஞாபகமூட்டினார்.

இந்த நிகழ்வையடுத்து ஸ்ரீ நிஸ்ஸங்க நூதனசாலையை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் மாயா மாவத்தையை எச். ஸ்ரீ. நிஸ்ஸங்க மாவத்தை என்று பெயரும் மாற்றினார்.

ஸ்ரீ நிஸ்ஸங்க ஞாபகார்த்த உரையை முன்னாள் பாராளுமன்ற செயலாளர் ஆற்றினார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் அத்துமீறல் எல்லை தாண்டினால் படகு உரிமம் ரத்தாகுமென இந்தியா எச்சரிக்கை

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் சம்பவங்கள் தொடர்வதாக யாழ் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக யாழ். மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்தார்.

எனினும், முன்னர்போன்று அதிக எண்ணிக்கையான தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது சற்றுக் குறைவடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தியக் கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் எரி பொருள் மானியம், படகு உரிமம் என்பன இரத்துச்செய்யப்படும் என இந்தியக் கடற்படையினர் எச்சரித்து ள்ளனர்.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதா பட்டினத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இந்தியக் கடல் எல் லையைத் தாண்டிச் சென்றுள்ளனர். இதனை ராடர் கருவிகள் மூலம் கண்காணித்த இந்தியக் கடற் படையினர் எல்லைதாண்டிய மீன் பிடிப் படகுகளின் உரிமையாளர் களை அழைத்துப் பேச்சுவார்த்தை யொன்றை நடத்தியிருந்தனர்.

இந்தியக் கடற்படை கொமா ண்டர் பிஜாரானியா தலைமையில் இந்தியக் கடற்படைத் தளத்தில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றதா கவும், எல்லைதாண்டும் மீனவர்க ளுக்கு அரசாங்கத்தால் வழங்கப் படும் எரிபொருள் மானியம், படகு உரிமம் என்பன இரத்துச்செய்ய ப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள் ளதாகவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

லிபியாவில் மேலும் பதற்றம்; உயிரிழப்புக்கள்: ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்: பல நகரங்கள் கிளர்ச்சியாளர் வசம்

லிபியாவுக்கு எதிராகப் பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளும் ஏகமனதாக வாக்களித்திருக்கும் நிலையில் லிபியாவிலி ருந்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் துனீசியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாத்திரம் 10 ஆயிரம் பேர் துனீசியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர் களில் பல பெண்கள் கைக்குழந்தைகளுடன் சென்றிருப்பதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. லிபியாவில் பல நகரங்களில் போராட்டம் விஸ்தீரனமடைந்திருக்கும் நிலையில் இதுவரை போராட்டங்கள் நடைபெறாதிருந்த திரிபோலி நகரை நோக்கியும் வன்முறைகள் பரவிவருகின்றன.

தொடரும் வன்முறை களால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. தேவைப்படும் பட்சத்தில் தனது ஆதரவாளர்களுக்கும் ஆயுதங்களை வழங்கத் தயார் என கடாபி அறிவித்திருக்கும் நிலையில், வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. லிபியத் தலைவர் கடாபி நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான சூழ்நிலை தோன்றியிருப்பதாக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துள்ளன.

எனினும். தமது ஆட்சி தொடர்ந்தும் நீடிக்கும் என்று லிபியத் தலைவர் கடாபியின் மகன் சய்வ் தெரிவித்துள்ளார். லிபியாவில் தற்பொழுது காணப்படும் நிலை சுமூகமாக்கப்பட்டு தமது ஆட்சி நீடிக்குமென்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, லிபியாவில் தோன்றியிருக்கும் வன்முறைகளைப் கட்டுப்படுத்தி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு லிபியாவின் முன்னாள் நீதி அமைச்சர் தலைமையில் பெங்காசியில் உருவாக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசாங்கத்துக்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டக் காரர்கள் தமது ஆர்ப்பாட்டங்களைக் கைவிட எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை கடாபியும் கைவிடாதநிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப் பட்டுள்ளது. இதற்கிடையில் லிபிய நகரங்கள் யாவும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பெங்காசியில் உருவாக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு இராணுவத்தினரின் ஆதரவுடன் செயற்படும் கிளர்ச்சியாளர்கள் திரிபோலி நகரிலிருந்து 30 மைல் தொலைவில் உள்ள சாவியா நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்திற்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத் திற்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை தூத்துக்குடியில் இருந்து ஆரம்பமாகின்றது. 500 பயணிகளை அவர்களின் பொதிகளுடன் மிகவும் சிறந்த முறையில் ஏற்றிச் செல்லக் கூடிய வசதிகளைக் கொண்ட இந்த கப்பலை இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகின்றது.

தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள பாரிய களஞ்சிய சாலையொன்றை பயணிகளின் தங்குமிடமாக மாற்றியமைத்துள்ளார்கள். இங்கு பொதிகளை சோதனையிடல், சுங்க பரிசோதனைகள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கரும பீடங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இப்போதைக்கு கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் நடைபெறும் கப்பல் சேவை விரைவில் இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் 2 வது கப்பல் சேவையாக விஸ்தரிக்கப்படும். பல்லாண்டு காலமாக இராமேஸ்வரத்துக்கும் தலை மன்னாருக்கும் இடையில் நடைபெற்று வந்த பயணிகள் கப்பல் சேவை 80 ஆம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் பயணிகள் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டது.

கொழும்பு துறைமுகத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான இடைவெளி 282 கிலோ மீற்றர் ஆகும். இது 152 கடல் மைல்களாகும். கொழும்பிலிருந்து தூத்துக்குடி செல்ல 10 முதல் 12 மணித்தியாலங்கள் எடுக்கும். ஆரம்ப கட்டத்தில் இரு தேசங்களுக்கும் இடையில் வாரத்திற்கு 2 கப்பல் சேவைகள் இடம்பெறும். பின்னர் வாரத்திற்கு 3 ஆக அதிகரிக்கப்படும்

இலங்கை கப்பல் போக்குவரத்து கூட்டுத்தாபனம் 500 முதல் 600 வரையிலான பயணிகளையும் பயணிகள் ஒவ்வொருவரின் 100 கிலோகிராம் பொதிகளையும் உடன் எடுத்துச் செல்வதற்கான வசதிகளையும் கொண்ட கப்பல்களை வாங்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

பயணிகள் போக்குவரத்திற்கான கப்பல் கட்டணங்கள் விமான கட்டணங்களை விட கணிசமான அளவு குறைவாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

235 சபைகளுக்கு குறிப்பிட்ட திகதியில் தேர்தல்: 22க்கு பின் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தேர்தலின் பின் பரிசீலனை


235 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் குறிப்பிட்ட அதே தினத்தில் நடைபெறும் என வும் எக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாதென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களுக் கான நியமனப் பத்திரம் தொடர்பாக 22ம் திகதிக்கு பிறகு தாக்கல் செய்யப் பட்ட வழக்குகள் தேர்தல் நடைபெற்றதன் பின்னரே பரிசீலிக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். தேர்தல்கள் திணைக்களம் சுயாதீனமற்ற முறையில் சில கட்சி களுக்கு சார்பாக செயற் படுவதாகவும் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றது என்ற கருத்தை ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பியினர் கூறும் போலியான கூற்றுக்களை முற்றாக நிராகரிப்பதாக தேர்தல்கள் செயலகத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.

தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல்கள் சட்டத்திற்கு அமைவாகவே செயற்படு கின்றார்.

எதிர்காலத்திலும் தேர்தல் சட்டத்திற்கு அமைவாகவே முடிவுகள் எடுக்கப்படும் எனவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினம் மார்ச் மாதம் 8-9 ம் திகதிகளில் நடைபெறுவதற்காக விண்ணப்பங்கள் இம்மாதம் 25ம் திகதி அனுப்பப்பட்ட தாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல்கள் சட்டம் தொடர்பாக சகல கட்சிகளின் செயலாளருக்கும் வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்பாகவும் அதன் பின்னரும் கடிதம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளளோம். எனினும், 35 க்கு குறைந்த வயதுடைய இளைஞர்கள் தொடர்பாகவும் தேர்தல் சட்டம் தொடர்பாகவும் பல தடவைகள் அவர்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளோம். அவ்வாறான நிலையில் தேர்தல்கள் ஆணையாளர் சில கட்சிகளுக்கு சார்பாக செயற்படுகின்றாரென்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாததென அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...